“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”
என்ற முழக்கங்கள் மஹாராஷ்ட்ரா முழுவதும் கேட்கத்தொடங்கி விட்டன. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆரம்பித்து பதினான்காம் நாளான அனந்த சதுர்த்தசி வரையிலும் மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்தே பிள்ளையார் சதுர்த்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், வெகு காலத்திற்குப் பின் அது பொது மக்களும் கொண்டாடும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இவ்விதம் பொது மக்கள் கூடிக்கொண்டாடிய இவ்விழாவை, அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்ட பால கங்காதர திலகர் பயன்படுத்திக்கொண்டார். அதன் பின்னரே இது வெகுஜன அளவில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும், மராட்டிய மாநிலத்தில் தனிச்சிறப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது.
மராட்டிய மக்கள் “ஷ்ராவண்” மாதம் ஆரம்பித்ததுமே விரதமிருக்க ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் முறைப்படி அப்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கும். அம்மாதம் முழுவதும் புலால் ஒதுக்கி, விரதம் இருந்து, வசிப்பிடங்களைத்தூய்மை செய்து, பிள்ளையாரை வரவேற்கத்தயாராவார்கள். பிள்ளையார்கள் அரையடியிலிருந்து எழுபது அடி உயரம் வரை வெவ்வேறு அளவிலும், வண்ணங்களிலும், விதங்களிலுமாக கலைஞர்களின் கைவண்ணத்தில் தயாராக ஆரம்பிப்பார்கள். புதிது புதிதாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் கைவினைக் கலைஞர்களின் கற்பனை வானளாவும். இந்த வருடம் கணபதி “பாகுபலி” வேஷம் போட்டிருந்தார். கடைத்தெருவில் பிள்ளையாருக்கான ஆடை அணிகலன்களிலிருந்து மண்டப அலங்காரங்களுக்கான ஜிகினாக்கள், விளக்குகள், மற்றும் பூஜைப்பாத்திரங்கள் என எல்லாமும் விற்பனைக்கு வரும். போன வருடம் மூஞ்சூறும் தனியாகச்செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருந்தது. பிள்ளையார் அளித்த மோதகத்தைக் கையில் ஏந்தியபடி பவ்யமாக, பொன்னிறத்தில் பளபளவென்று நின்றிருந்த அதைக் கண்டவுடன் வாங்கி வந்தாயிற்று. வருடா வருடம் புதுப்புது அவதாரங்களில் வரப்போகும் பிள்ளையார்களை வரவேற்க எப்போதும் இதே இளமையுடன் காத்திருக்க வரமும் வாங்கி விட்டார் "உந்தீர் மாமா". மூஞ்சூறு உந்தீர் மாமா என்று மராட்டிய மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது.
தயாரான பிள்ளையார்கள் காட்சிக்கு வந்ததும், சதுர்த்திக்கு இருபது நாட்கள் முன்பிருந்தே மக்கள் தங்களுக்குப் பிடித்த பிள்ளையாரைத் தேர்ந்தெடுத்து முன்பணம் கொடுத்து பதிவு செய்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். தெரிவு செய்யப்பட்ட பிள்ளையார் செய்தித்தாள் மற்றும் பாலிதீன் உறையால் பொதிந்து பத்திரமாக தனியாக வைக்கப்படுவார். இவரை சதுர்த்தியன்று காலையில் சென்று முறைப்படி அழைத்து வந்து ஆவாஹனம் செய்வார்கள். சில சமயம் நெரிசலைத்தவிர்க்கும் பொருட்டோ, அல்லது பெரிய அளவிலான பிள்ளையார்களாக இருந்தாலோ முன்னிரவிலேயே அழைத்து வந்து விடுவார்கள். மிகவும் பெரிய வினாயகர்களாக இருந்தால் இரண்டு நாட்கள் முன்பே அழைத்து வந்து விடுவார்கள்.
அழைக்கச்செல்லும்போது அவரை அமர வைக்கும் தோதிலான மணைப்பலகை, பலகையில் விரிக்க சிவப்புத்துணி, துணியின் மேல் பரப்ப ஒரு பிடி அரிசி, வெற்றிலை பாக்கு, ஊதுவத்தி, மஞ்சள் குங்குமம், வாழைப்பழம், அட்சதை, மற்றும் மாலையுடன் செல்வார்கள். சிலர் பேண்ட் பாஜா எனப்படும் மேளதாளங்களுடனும் செல்வதுண்டு. முன்பதிவு செய்தபோது கொடுக்கப்பட்ட ரசீதைக் காண்பித்ததும் நம் பிள்ளையார் கொண்டு வரப்பட்டு மணையின் மேல் விரிக்கப்பட்ட சிவப்புத்துணியில் பரப்பப்பட்ட அரிசியில் அமர வைக்கப்படுவார். அவர் முன் வெற்றிலை பாக்கு பழம் முதலியவற்றைப் படைத்து, ஊதுவத்தி ஏற்றி வைத்து, நெற்றியில் குங்குமமிட்டு, அட்சதை தூவி, மாலையை அணிவித்த பின், இன்னொரு சரிகை ஆடை ஒன்றால் அவரது முகம் மூடப்படும். அதன்பின் ஆவாஹன் செய்யப்படும் இடத்திற்கு வந்து சேரும்வரை எக்காரணம் கொண்டும் அந்தத்திரை விலகக்கூடாது. குடும்பத்தலைவரோ அல்லது முக்கியமான நபரோ மணையுடன் சேர்த்துப்பிடித்துத் தூக்கிக்கொள்ள, நடந்தோ வாகனத்திலோ ஊர்வலமாகக் கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கொண்டு வந்து அமரச்செய்வார்கள்.
அதன்பின் முறைப்படி கலசம் வைத்து, பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து, அகண்ட தீபமும் ஏற்றி வைக்கப்பட்ட பின் பூஜைகள் ஆரம்பமாகும். இந்த அகண்ட தீபமானது பிள்ளையார் கரைக்கப்பட்ட மறு தினம் வரைக்கும் அணையாமல் அவ்வப்போது நெய்யூற்றி கவனித்துக்கொள்ளப்படும். கணபதியை 21 விதமான பூக்கள், 21 விதமான இலைகளால் அர்ச்சிப்பது விசேஷம். பூஜையில் ஆரத்திப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் “Sukhakarta Dukhaharta” என்று தொடங்கும் மிகவும் முக்கியமான பாடல் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமர்த் ராம்தாஸ் என்ற துறவியால் இயற்றப்பட்டது. பிள்ளையாருக்கு தேங்காய்ப்பூரணம் வைத்த மோதகம் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது. மஹாபோக் எனப்படும் நைவேத்தியத்தில் பூரி, பருப்பு, சாதம், கறி வகைகள், இனிப்பு என அனைத்தும் அடங்கும். பிள்ளையார் சதுர்த்தி முடியும் வரை இனிப்பகங்களில் மோதக வடிவிலான பேடாக்கள் கிடைக்கும். அவற்றையும் பிரசாதமாகக் கொடுப்பதுண்டு. பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வீடுகளிலும், குடியிருப்புகளிலும் குடும்ப மற்றும் மக்கள் நலனுக்காக சத்யநாராயண பூஜையும் செய்யப்படுவதுண்டு. சத்யநாராயண பூஜைக்கு நைவேத்தியமாக செய்யப்படும் ஷீரா இங்குள்ள மக்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.
ஆவாஹன் செய்யப்பட்ட தினத்திலிருந்து தினமும் இரண்டு வேளையும் ஆரத்தி எனப்படும் தீபாராதனை பூஜை நடக்கும். ஆரத்தியின்போது பிள்ளையாருக்கு தீபாராதனை காட்ட அனைவருக்குமே வாய்ப்பு வழங்கப்படும். பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலிருந்து ஆரம்பித்து மூன்றாம், ஐந்தாம், ஏழாம் என ஒற்றைப்படை எண் வரும் தினங்களில் பிள்ளையார் விசர்ஜன் செய்யப்படுவார். சில வீடுகளில் ஒன்றரை நாள் மட்டும் இருந்து விட்டு ‘போய் வருகிறேன்’ என்று கிளம்பி விடுவார். அவரை புனர்பூஜை செய்தபின் பத்திரமாக வழியனுப்பி வைக்க வேண்டும்.
வழக்கம்போல் ஆரத்தி எடுத்து, தூப தீபாராதனைகள் முடிந்ததும் வீடு தேடி வந்தமைக்கு நன்றி தெரிவித்து, பூஜையில் ஏதேனும் குறைகள் இருந்திருந்தால் பொறுத்தருளும்படி வேண்டியபின், பிள்ளையாரை லேசாக நகர்த்தி வைத்து விட்டு கலசத்திலிருக்கும் தேங்காயைத் தனியாக எடுத்து வைப்பார்கள். பின், பிள்ளையாரின் கையில் சிறிது தயிரும், அதன் மேல் சிறிதளவு அரிசி மணிகளும் வைப்பார்கள். இப்படிச்செய்தால் பிள்ளையார் அடுத்த வருடமும் வீட்டுக்கு வருவார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. செல்லும் வழியில் பசியெடுத்தால் சாப்பிட வேண்டுமே.. பத்து நாளும் விதவிதமாகச் சாப்பிடக்கொடுத்து விட்டு இப்போது வெறும் கையோடு அனுப்ப முடியுமா? பிள்ளையார் பாவமல்லவா?! அதனால் ஒரு கொப்பரைத்தேங்காயில் சிறிது அரிசியை இட்டு அதன் மேல் ஒரு துண்டு வெல்லத்தையும் வைத்து, ஒரு துணியில் கட்டுச்சோற்று மூட்டையாகக் கட்டி பிள்ளையாரின் கையில் கட்டித்தொங்க விடுவார்கள்.
அதன்பின் குடும்பத்தலைவர் பிள்ளையாரை கவனமாகக்கையில் எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாகச் சுற்றி வந்த பின், பிள்ளையாரின் திருமுகம் வீட்டை நோக்குமாறு மிகக் கவனமாக பின்னோக்கி அடியெடுத்து வைத்து வெளியேறி நிற்பார். அவர் பின்னாடியே இன்னொரு நபர் கலசத்திலிருக்கும் தீர்த்தத்தை வீடு முழுவதும் மாவிலையால் தெளித்துச்செல்வார். பிள்ளையாருக்கு தேங்காயால் திருஷ்டி கழித்து, அதைச் சிதறுகாயாய் உடைத்தபின் அருகிலிருக்கும் நீர்நிலையை நோக்கி ஊர்வலம் தொடங்கும். திருஷ்டி கழித்து உடைக்கப்பட்டது ஆகையால் இந்த சிதறுகாய்த் துண்டுகளை யாரும் எடுக்க மாட்டார்கள். நீர் நிலையை அடைந்ததும் மறுபடியும் பிள்ளையாருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, அவருக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள், மாலைகள், மற்றும் வஸ்திரங்கள் களையப்படும். இப்பொழுதெல்லாம் மாவிலை, பூ மாலைகள் போன்றவை நிர்மால்ய கலசத்தில் சேகரிக்கப்படுவதால் நீர் மாசு படுவது ஓரளவு குறைக்கப்படுகிறது.
விசர்ஜன் செய்யுமிடத்தில் அதற்கென்று இருக்கும் ஆட்கள் பிள்ளையார்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட ஆழம் வரை சென்ற பின் இரண்டு தடவை நீருக்கு மேலே கொண்டு வந்து திருமுக தரிசனம் காட்டியபின் மூன்றாவது முறை முழுவதுமாக மூழ்க விட்டுக் கரைப்பார்கள். இதை ஒரு சேவையாகச் செய்பவர்களைத் தவிர வருமானத்துக்காகச் செய்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகக் கொடுத்து விட வேண்டும். கலச நீரை குளத்திலேயே விட்டு விட்டு குளத்து நீரை சிறிதளவு கலசத்தில் நிரப்பித்தருவார்கள். அதை வீட்டிற்குக் கொண்டு வந்து செடிகளுக்கோ துளசிக்கோ ஊற்றி விட வேண்டும் என்பது சம்பிரதாயம். ஒரு பிடி குளத்து மண்ணையும் மணைப்பலகையின் மேல் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் வைத்துத் தருவார்கள். அவற்றையெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வந்தபின் மணைப்பலகையும் பிடி மண்ணும் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டு ஆரத்தி எடுக்கப்படும். பின் கலசத்திலிருக்கும் தேங்காயை அந்தத்துணியில் வைத்து முடிந்து வீட்டின் முகப்பில் தொங்க விடுவார்கள். இதனால், அவ்வீட்டிற்கு வரும் இன்னல்கள் நீங்கி விடும், நலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை.
மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே !!
கணபதி பப்பா.. மோர்யா...
7 comments:
அருமையாகச் சொல்லி இருக்கீங்க.
என்னால் பிள்ளையாரை தண்ணீரில் கரைப்பதைத்தான் தாங்க முடியாது. பேசாம அவர் வீட்டுலேயே இருக்கட்டுமேன்னுதான் நினைப்பேன்.
சென்னையில் களிமண் பிள்ளையார் வாங்கி ஒரு அஞ்சாறு மாசம் கூடவேதான் இருந்தார். சுத்தமான கடல் வேணுமுன்னு காத்துக்கிட்டு இருந்தேன்... கடைசியில் மஹாபலிபுரம் போகும் வழியில் கோவளம் பீச் கிடைச்சது.
பூனா வாழ்க்கையில் பிள்ளையார் பார்க்கன்னே பேட்டைபேட்டையா சுத்துவோம். அதிலும் சில மண்டலிகளில் பொம்மலாட்டம் ஏற்பாடு செஞ்சுருப்பாங்க. அங்கே போயிட்டால் அம்புட்டுதான்... நகரமாட்டேன். என்ன ஒரு ஒய்யாரமா ஆடுங்கறீங்க!!!
அருமை. நானும் கலந்து கொண்ட உணர்வு.
வாங்க துள்சிக்கா,
பத்து நாட்களோ, சில நாட்களோ.. கரைத்து விட்டு வந்ததும் வீடே வெறுமையாகத்தோன்றுகிறது. அலங்கரித்து நிரந்தரமாக பூஜையில் வைத்தாலோ அல்லது ஹாலில் வைத்தாலோ அம்சமாகத்தான் இருக்கும்.
இந்தத்தடவை, விசர்ஜனத்தின் பொழுது, கரைப்பவர் பிள்ளையாரை ரங்க்ஸின் கையில் இருந்து வாங்கும்போது ரங்க்ஸின் கழுத்துச்செயின் பிள்ளையாரின் கையில் மாட்டிக்கொண்டு விட்டது. விடுவித்து, பிள்ளையாரை வாங்கிச்சென்றார் அந்த நபர். பாவம், ரங்க்ஸ் ரொம்பவே செண்டியாகி விட்டார். "சின்னப்புள்ளைங்க தாய் தகப்பனைப் பிடிச்சுக்கிட்டு, என்னை விட்டுட்டுப்போகாதேன்னு கெஞ்சுற மாதிரியே தோணுச்சு" என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
வருகைக்கு நன்றி.
வாங்க வெங்கட்,
மிக்க நன்றி.
எவ்வள்வு செய்திகள்!. நம்பிக்கைகள் நெகிழ வைக்கின்றன
எல்லோருக்கும் எல்லா இன்னல்களை நீக்கட்டும் பிள்ளையார்.
படங்களுடன் அறியாத, சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.
பல செய்திகள் தெரிந்து கொண்டேன்.நன்றி
நானும் இதே தலைப்பில்......http://chennaipithan.blogspot.com/2015/09/blog-post_17.html
Post a Comment