Monday, 20 July 2015

நாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி

இட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்கென்று குப்புறத்தட்டி, சூடாக இருக்கும் இட்லித்துணியை மெல்லெனப்பிரித்து, கண் சிமிட்டும் நம் தென்னிந்திய “அரிசி நூடுல்ஸ்”.. அதாவது இடியாப்பத்தை ஒரு தட்டிலோ, வாழையிலையிலோ விளம்பி மாம்பழப்புளிசேரியையும் விட்டு அம்மாக்களோ பாட்டிகளோ கொடுக்க வேண்டும். வாங்கிக்கொண்டு, சாரல் தெறிக்கும் தாழ்வாரத்திலோ திண்ணையிலோ அமர்ந்து, சிறுபிள்ளை கையிலகப்பட்ட நூல்கண்டாய் எக்கச்சக்க சிக்கல்களுடன் இருக்கும் இடியாப்பத்தை ஓர் ஓரமாகப்பிய்த்து மாம்பழப்புளிசேரியுடன் புரட்டி வாயிலிட்டு, சூடு தாங்காமல் வாயில் ஓர் ஓரமாக ஒதுக்கி லேசாக வாயைத்திறந்து காற்றை உஃப் உஃப் என்று உள்ளிழுத்து ஆறவிட்டு பல்லுக்குப்பதமாக ஆனபின் மெல்ல அசை போட்டு விழுங்கினால், சொர்க்கம் “நான் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறேன்” என்று குரல் கொடுக்கும்.

சாம்பார், சைவ/அசைவ குழம்புகள், நீர்க்கத்தாளித்த தேங்காய்ச்சட்னி என்று பலவும் இருந்தாலும் ஆனியாடிச்சாரல் பொழியும் நாட்களில் ஒரு நாளேனும் மாம்பழப்புளிசேரியுடன் இடியாப்பம் சாப்பிடாவிடில் நாஞ்சில் மக்களுக்கு மனம் நிறையாது. மாம்பழப்புளிசேரி பாலக்காட்டைப்பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் நாஞ்சில் பகுதியிலும் அதிகம் செய்யப்படுகிறது. இடியாப்பத்துக்கு மட்டுமன்றி சாதத்தில் ஊற்றிச்சாப்பிடவும் உகந்த இக்குழம்பு இனிப்பும் புளிப்பும் லேசான காரமுமாக அமர்க்களப்படும். ஊரில் இதற்கென்றே குட்டிக்குட்டியாக மாம்பழங்கள் கிடைக்கும். 

சர்க்கரைக்குட்டி மாம்பழங்கள் கிடைக்காவிடில், ஜகத்தையெல்லாம் அழிக்கப்புறப்பட வேண்டாம். கிடைக்கும் மாம்பழத்தையே பெரிய துண்டுகளாக நறுக்கி புளிசேரி செய்தால் நாக்கு நம்மை ஊரை விட்டுத்தள்ளி வைத்து விடுமா என்ன? இப்பொழுது மும்பையில் லங்கடாவும், தோத்தாபுரி எனும் கிளிமூக்கு மாம்பழமும் மலியும் காலம். எத்தனைதான் பழுக்க வைத்தாலும் அதிகம் இனிக்காத தோத்தாபுரியை தீர்த்துக்கட்ட வேறென்ன செய்வது?.. அன்னத்தைப் பழிக்கவோ வீணாக்கவோ கூடாதல்லவா? ஆகவே மாம்பழப்புளிசேரி செய்தேன். 
இரண்டு மாம்பழங்களை தோலுடன் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். நீலம் மாம்பழமும் நன்றாகவே சுவை கூட்டுகிறது என்பதை இன்று கண்டு கொண்டேன். ஒரு கப் தேங்காய்த்துருவலுடன் கால் ஸ்பூன் சீரகம், சிறிதளவு மஞ்சள்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்றிரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். இடியாப்பத்திற்கென்று ஸ்பெஷலாகச் செய்யப்படுவதானால் மிளகாய்த்தூளுக்குப் பதிலாக பச்சை மிளகாயைச் சேர்த்தரையுங்கள். ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பிலேற்றி இரண்டு ஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டுச்சூடாக்கி, கொஞ்சம் கடுகும் அதே அளவு வெந்தயமும் போட்டு வெடிக்க விட்டு, கறிவேப்பிலையும் போட்டுப் பொரிய விடவும். அதனுடன் இரண்டு சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து லேசாக சிவக்க விட்டபின் நறுக்கிய மாம்பழத்துண்டுகளைச் சேர்க்க வேண்டும். 

பழத்துண்டுகள் மூழ்கும் அளவிற்குத்தண்ணீர் விட்டு வேக விட வேண்டும். அரை வேக்காடு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவையும் ருசிக்கேற்ப உப்பையும், ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து குழம்பு கூட்ட வேண்டும். குழம்பில் கட்டக்கடைசியாக கடைந்த தயிரைச்சேர்க்க வேண்டியிருப்பதால் தற்சமயம் கொஞ்சம் கெட்டியாகவே குழம்பைத்தயார் செய்து கொள்வது நல்லது. ஊரில் தண்ணீர் செழிப்பாக இருக்கிறதென்று அதிகம் சேர்த்தால் இலையில் குழம்பாறு ஓடி, பாத்தி கட்டியிருக்கும் சாதம் உடைப்பெடுக்கும் வெள்ள அபாயமுண்டு.

லேசாகக் கொதித்து மணம் வந்ததும் இறக்கி சிறிது ஆறியபின், ஒரு கப் தயிரை நன்றாகக் கடைந்து சேர்க்கவும். ஊற்றிச்சாப்பிடும் பதத்தில் குழம்பு இருப்பது முக்கியம். தயிர் அல்வாத்துண்டு போல் கெட்டியாக இருக்கிறதென்றால் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்வது உத்தமம். 

நூடுல்ஸ் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத்தள்ளி வைத்து விட்டு, இடியாப்பத்திற்கு ஆரத்தி எடுத்து நம் உணவு மேசையில் இருத்தி மாம்பழப்புளிசேரியால் மகுடாபிஷேகம் செய்வோமாக :-))

14 comments:

ஸ்ரீராம். said...

எரிசேரி தெரியும். புளிசேரி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். சி.வெ அரைக்கவும் வேண்டும், தனியாகவும் போட வேண்டுமா? ஓகே ஓகே. ஆனால் இனிப்புக்கும் காரத்துக்கும் சேருமா என்று சந்தேகமாக இருக்கிறது. செய்து பார்த்தால்தான் சந்தேகம் தீரும். நாங்கள் மாம்பழப் பச்சடி செய்வோம். அது வேற மாதிரி.

துளசி கோபால் said...

ஓக்கே.... நாளைக்கு நம்மூட்டுலே ஆப்பிள் புளிசேரியும் ரெடிமேட் இடியப்பமும். வெந்நீரில் ஒரு நிமிட் முக்கி எடுத்தால் ரெடி.. கேரளாவிலிருந்து வருது டபுள்ஹார்ஸ் ப்ராண்ட்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

செஞ்சு சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க. அட்டகாசமா இருக்கும்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

மாதுளை முத்துகளை உபயோகித்துச் செய்யலாமா என்றும் ஒரு யோசனை தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது :-)

ரெடிமேட் சேவையை நனைத்து விட்டு துணியில் சுற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கலாம் என்றும் நம் ரோஷ்ணிம்மா பகிர்ந்திருந்தார்கள். செய்து பார்த்துவிட வேண்டியதுதான் :-))

கோமதி அரசு said...

சாந்தி, எரிசேரி ஆசையை தூண்டி விட்டீர்கள். நீல மாம்பழம் இன்னும் வரவில்லை கிளிமூக்கு வந்து இருக்கு அதை வைத்து செய்து விடுகிறேன்.
சொர்க்கத்தை பார்க்க ஆசை வந்து விட்டது. கைகெட்டும் தூரம் என்று சொல்லிவிட்டீர்களே!

கோமதி அரசு said...

மாம்பழப் புளி சேரி செய்து விடுகிறேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வா.....வ் ....இப்பவே சாப்பிடனும் போல இருக்குப்பா. எங்கம்மா சேவை பண்ணும் போதெல்லாம் மோர்க்குழம்பு பண்ணுவா. மாம்பழ சீசன்ல மாம்பழ புளிசேரிதான். காரம், உப்பு, புளிப்பு, இனிப்புன்னு கலந்து கட்டி செவியோட சேர்த்து சாப்பிடும் பொது ஆஹா... சீசன் முடியறதுக்குள்;ல பண்ணிட்டுதான் மறுவேலை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

கிளிமூக்கு, நீலம் இரண்டையும் கலந்து செய்தேன். ருசி அள்ளிக்கொண்டு போயிற்று. நீங்களும் செய்து ருசியுங்கள்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யாஜி,

ஆஹா!!.. மழை ஆரம்பித்து விட்டதால் இன்னும் சில நாட்களுக்குள் சீசன் முடிந்து விடும். அதற்குள் செய்து ருசியுங்கள். மானசீகமாய் ஊர்ப்பக்கம் போய்வந்த திருப்தி உண்டாகும். உணவு உட்பட நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கடமையும் நமக்கு இருக்கிறதே. நாளை நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் இவற்றையெல்லாம் நினைவு கூர வேண்டாமா ;-)

வரவுக்கு நன்றி.

Sivi said...

தங்களின் மாம்பழபுளிசேரியும், பதிவும் மிகவும் இரசிக்கும் படி உள்ளது :)

வெங்கட் நாகராஜ் said...

பச்சடி சாப்பிட்டதுண்டு.... புளிசேரி.... சாப்பிட்டதில்லை!

'பரிவை' சே.குமார் said...

புளிச்சேரி இப்பத்தான் அக்கா கேள்விப்படுறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

இப்படி நம்ம ஊரு சமையலா போட்டு அசத்தறீங்களே....நீலன் தான் சுவை...நாகர்கோவிலில் நீலன் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் நீலன் வைத்துத்தான் செய்வதுண்டு...ஸ்ஸ்ஸ்ஸ் பா..நாக்குல தண்ணீர்...இங்கும் செய்வதுண்டு...சென்னை மக்கள் என்றாலும் நம்ம ஊரு சமையல செய்வதுண்டு...விட்டுட முடியுமா..

கீதா

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails