Monday, 27 July 2015

சாரல் துளிகள்


இப்பொழுதோ அப்பொழுதோ என்றிருக்கும் கருமேகம் போல் தொக்கி நிற்கிறது கண்ணீர், வாகனத்திற்காய் காத்து நிற்கும் பள்ளிக்குழந்தையின் தூக்கம் சொட்டும் கண்களில்..

தனக்குச் சாதகமான சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, தனக்குப் பலன் தருபவற்றை மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் சிலரது அறிவுத்திறன் அமையப்பெற்றிருப்பதுவும் கூட இறைவனின் திருவிளையாடலே.

கடமையைச் செய்தபின், கிடைத்த அனுபவம் மட்டுமே சில சமயங்களில் பலனாக எஞ்சுகிறது.

முயல்பவன் முன்னேறுவான், முயலாதவன் தலைவிதி மேல் பழி போட்டு முடங்கிக்கொள்வான்.

"புரிந்ததா?" என்று அழுத்திக்கேட்கப்படும்  கேள்வியில் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கட்டளையும் தொக்கி நிற்கிறது.

ஆகச்சிறந்த நாவல்கள் சில எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் அதற்குச் சற்றும் சுவாரஸ்யம் குன்றாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தன்னைச்சுடாத வரையில் நெருப்பானது, ஒளியாகவும் தீபமாகவும் வணங்கப்படுவதைப்போல், அவரவரைப் பாதிக்காத வரையில் எத்துன்பமும் மிகச்சாதாரணமானதாகவே எண்ணப்படுகிறது.

தான் விரும்பியவற்றை மட்டுமே தன் காதுகள் கேட்க வேண்டும், தனக்குப் பிடித்த சொற்களை மட்டுமே பிறர் பேச வேண்டும் என்றிருந்தால் இறுதியில் தனிமையின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க வாய்க்கும்.

வளர்ப்பவனை நம்பாமல் வெட்டுபனை நம்பிய ஆடுகளின் கடைசிக்கணத்தில் கொலைவாளில் பிரதிபலித்தன அவை இழந்த அத்தனையும்.

தின்னும் தனிமைக்கு எண்ணங்களை இறைத்தவன் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பிக்கிறான் இன்னொரு முறை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails