Monday 31 May 2010

காளான் வறுவல்...


நேத்துப்பெஞ்ச மழையில இன்னிக்கு முளைச்ச காளான் தானேன்னு இதை அலட்சியப்படுத்திட முடியாது. அவ்வளவு சத்து இதில் நிரம்பியிருக்கு. காளான் களில் மொத்தம் 14,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைகள் இருக்காம். இதில் சுமார் 3000 வகைகள் உண்ணத்தகுந்தவை. சுமார் 700 வகைகள் மருத்துவப்பயன்கள் உள்ளவை . ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வகைகள் விஷமுள்ளவை... ஆங்ங் .

பழங்காலத்திலேயே இதை சமையலுக்கு பயன்படுத்தியிருக்காங்க. போர்வீரர்களுக்கு வேண்டிய சக்தியை இது தருவதாக கிரேக்கர்கள் நம்பியிருக்காங்க. ரோமன்கள் இது கடவுளின் கொடைன்னு மனசார நம்பி , விழாக்காலங்களில் மட்டும் சமைத்து உண்பார்களாம். சீனர்களைப்பொறுத்தவரை இது ஒரு சுவையான, ஆரோக்யம் கொடுக்கும் உணவு வகை. அதனாலதான் சூப், மஞ்சூரியன், ஃப்ரைட் ரைஸ்ன்னு விதவிதமா வெளுத்துக்கட்டியிருக்காங்க.

மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க. அதைப்போல இத்துனூண்டு காளான்ல சத்தும், பலன்களும் நிரம்பியிருக்கு. இதுல சுமார் 80 லிருந்து 90% வரை நீர்ச்சத்து இருக்கு. கலோரி அளவு குறைவா இருக்கிறதால உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்களுக்கு ஏத்தது. சோடியம், கொழுப்பு ச்சத்துகள் குறைவாகவே இருக்கு. இதில் நிரம்பியிருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை குறைத்து, மாரடைப்பு வர்றதுக்கான ஆபத்தை குறைக்குது. ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸில் எவ்வளவு பொட்டாசியம் இருக்குமோ அதே அளவு ஒரு காளானிலும் இருக்கு.

பொதுவா மஷ்ரூம்ன்னு சொன்னா அது Agaricus bisporus ன்னு சொல்லப்படும் வெள்ளை பட்டன் மஷ்ரூமைத்தான் குறிக்கும் . இப்பல்லாம் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய காய்கறிக்கடைகளிலும் இது ஈஸியா கிடைக்குது. இப்பல்லாம் இது செயற்கைமுறைகளில் வளர்க்கப்படுது . நல்ல பால் வெள்ளை நிறத்தில் குண்டு குண்டா அழகா இருக்கும். லேசா கலர் மாறியிருந்தாலோ, கருமை படர்ந்திருந்தாலோ உபயோகப்படுத்தாதீங்க. கெட்டுப்போனதா இருக்கலாம் . இதை உபயோகப்படுத்தி சைனீஸ வகைகள் மட்டும்தான் செய்ய முடியும்ன்னு இல்லை. இந்திய வகைகளும் செய்யலாம்.
ஒரு குறிப்பு உங்களுக்காக.

மஷ்ரூம் - 1 பாக்கெட். (சுமார் 10 அல்லது 15 மஷ்ரூம்கள் இருக்கலாம்)

வெங்காயம் -2. (நீளமாக நறுக்கப்பட்டது.)

தக்காளி -1 (பொடியாக நறுக்கப்பட்டது.)

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை -4 ஸ்பூன் (பொடியாக நறுக்கப்பட்டது.)

இலவங்கப்பட்டை -2 இன்ச் நீளமுள்ளது.

கிராம்பு -2

ஏலக்காய் -2

அன்னாசிப்பூ -1(படத்தைப்பாத்துக்கங்க. அரை வட்டமா இருக்குதே அதுதான்)

பெருஞ்சீரகம்- 2 ஸ்பூன் அளவு.

தேங்காய்ப்பால் - 1 கப்.

தேங்காய் எண்ணெய் + சமையல் எண்ணெய் + நெய் - மூணும் சேர்ந்து மூணு ஸ்பூன் அளவு . அப்படீன்னா தனித்தனியா எவ்வளவு எடுத்துக்கணும்ன்னு கணக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க பார்க்கலாம் :-))

இஞ்சி -1 இஞ்ச் அளவு.
பூண்டு - 4 பற்கள்.
பச்சை மிளகாய் -3.

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -ருசிக்கேற்ப - சுமார் 1 டீஸ்பூன்.
மஞ்சள் - கால் டீஸ்பூன்.

காளானும் நண்பர்களும்..

எப்படி செய்றது :

மஷ்ரூம்களை கழுவி துடைத்து வைக்கவும். துடைக்கும்போது மேல்தோல் லேசா கழண்டு வரும். அப்புறம் அதை ரெண்டாவோ, நாலாவோ வெட்டிக்கணும்.

பட்டை+கிராம்பு+ஏலம்+பெருஞ்சீரகம்+அன்னாசிப்பூவை பொடிச்சுக்கோங்க. அது கூட இஞ்சி+பூண்டு+பச்சைமிளகாயை சேர்த்து அரைச்சு மசாலா ரெடி பண்ணிக்கோங்க.

அடுப்பில் வாணலியை காயவைத்து , எண்ணெய்கள் + நெய் கலவையை ஊற்றி சூடாக்கவும்.

சூடானதும் , இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மசாலா கலவையை அதில் போட்டு வதக்கவும். பச்சை வாடை போனதும் வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமா வறுக்கணும்.

அப்றம், தக்காளியை அதுல போட்டு தக்காளி வெந்து மென்மையாகும்வரை வதக்கணும். அதுகூட மஷ்ரூமை போட்டு லேசா கிளறிவிடுங்க. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கலாம். மூடி போட்டு வேகவுடுங்க. அரை வேக்காடானதும், கால்கப் தண்ணி சேர்க்கணும். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் வேகட்டும். அதுவரை, உங்க இடுகைக்கு பின்னூட்டம் ஏதாவது வந்திருக்கான்னு போய்ப்பாருங்க.

வலையிலேயே மூழ்கிட்டீங்கன்னா அப்றம் வறுவல், கருகலாயிடும் சொல்லிட்டேன் :-)) . எழுந்திரிச்சு வந்து , தேங்காப்பாலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள், கொத்தமல்லித்தூள்ன்னு சேருங்க. தூள் கிளப்பிட்டீங்கன்னு பின்னூட்டம் மட்டும்தான் போடணுமா?.. சமையலிலும் தூள் போடலாம் :-)

இப்ப இந்த கலவையை , மஷ்ரூம் கூட ஊத்தி கொதிக்க விடுங்க. மிதமான தீ இருக்கட்டும். இல்லைன்னா தேங்காப்பால் சீக்கிரம் திரிஞ்சுடும் . இது கூட கொத்தமல்லி , கருவேப்பிலையை சேர்த்துடுங்க. உப்பு, உறைப்பு சரியா இருக்கான்னு டேஸ்ட் பாத்து செக் பண்ணிக்கோங்க. எல்லாம் சேர்ந்து கூட்டு பதம் வரணும். வேணும்ன்னா இன்னும் கொஞ்சம் சுருள வதக்கிக்கலாம். குழம்புப்பதமும் ஓக்கேதான். எந்த உணவுக்கு இதை பக்கவாத்தியமா வெச்சுக்கப்போறீங்க என்பதைப்பொறுத்தது அது.

வறுவல் ரெடி.. சமையல் முடிஞ்சு போச்சு...

எண்ணெய் பிரிஞ்சு, லேசா மேலாக மிதந்துவரும். கரெக்டா அந்த டைமில் இறக்கிடுங்க. சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா , ப்ரெட்டுக்கு சரியான ஜோடி இது. கலந்த சாதங்களுக்கும் இந்த பக்கவாத்தியம் நல்லா இருக்கும்.



13 comments:

எல் கே said...

this is not my area :)

Ahamed irshad said...

useful...

வெங்கட் நாகராஜ் said...

இப்பதான் பசிக்க ஆரம்பிச்சு இருக்கு..... சீக்கிரமா ஒரு ப்ளேட் காளான் வறுவல் தில்லிக்கு பார்சல்ல்ல்ல்ல்.....

Easwaran said...

உங்களுக்கென்ன அம்மணி. சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டா எல்லாத்துக்கும் பக்க வாத்தியம், ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லி, படத்த வேற போட்டு புட்டீக. இன்னிக்கு சாயங்காலம், ஆபீஸ் விட்டு வீட்டுக்கு போனதும் காளான் - ல இருந்து அன்னாசிப்பூ வரைக்கும் வாங்கிகிட்டு போகலைன்ன, அண்ணாச்சிமார் முதுகில்ல பக்கா வாத்தியமாகிடும்.

அமைதி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு படிக்க, ஹிம், வீட்ல சொல்லிப் பார்க்கிறன்,சமைச்சுக் கொடுத்தா சாப்பிட்டிட்டு சொல்றேன்.

//நல்ல பால் வெள்ளை நிறத்தில் குண்டு குண்டா அழகா இருக்கும். லேசா கலர் மாறியிருந்தாலோ, கருமை படர்ந்திருந்தாலோ உபயோகப்படுத்தாதீங்க. கெட்டுப்போனதா இருக்கலாம்//

நல்ல தகவல்.
நன்றி.

Kousalya Raj said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம் காளான். போன வருடம் எங்க வீட்டில் காளான் வளர்த்து அப்படியே பிரெஷாக பறித்து சமைத்தது நினைவு வந்து விட்டது. நல்ல சத்தும் சுவையும் நிரம்பியது. இதை சமைத்து எங்களிடம் பகிர்ந்ததுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வெங்காயம்,பூண்டுதான் பிரச்சினைன்னா அது இல்லாமலும் செய்யலாம். பதிலாக ஏழெட்டு முந்திரிப்பருப்பை அரைச்சு விட்டுடுங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

உபயோகமாயிருக்கும்ன்னு நினைச்சுத்தான் இடுகை போட்டேன் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

பார்சல் அனுப்பியாச்சு.. வந்துச்சா இல்லியா :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈஸ்வரன்,

அண்ணி கையால, சமைச்சு கொடுத்து சாப்பிட்டப்புறம்... முதுகுல வாங்கினதெல்லாம் மறந்துடும் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

சாப்பிட்டாலும் நல்லாத்தான் இருக்கும்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,

உங்களுக்கு தோட்டக்கலையில் ஆர்வம் ரொம்ப உண்டா!!.. சந்தோஷம். உடனே தோட்டத்தில் காளான் பயிரிடுங்க.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

காளான் வறுவல் குழம்பு பார்க்க நல்லா இருக்கு. ஆனா அது கிட்ட என்னவோ ஒரு பயம்:)
இருங்க பின்னூட்டம் வந்திருக்கான்னு பார்த்துட்டு வந்து மீதியைச் சொல்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails