Thursday, 19 September 2013

பூந்தோட்டம்.. (19-09-2013 அன்று பூத்தவை)

மணிச்சிகை: கோலாகலமாய் அம்ச்சி மும்பைக்கு வந்த கணபதி அதே கோலாகலத்தோடு திரும்பிப் போயிருக்கிறார். குழுவினர் தங்கள் முழு பலத்தையும் காட்டி வாசித்த பாண்டு வாத்திய இசையைக் கேட்டவண்ணம் வந்தபோதே அடுத்து வரும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவருக்கான ஆசனத்தில் அமர்த்தி, மாலை மரியாதை செய்து, மோதகம் நிவேதனம் செய்து, காதுக்கினிமையாக ஆரத்திப் பாடல்களைப்பாடி அவரை மகிழ்வித்தனர். உபசாரங்களில் மகிழ்ந்து சற்றே ரிலாக்ஸாக இருந்த பொழுதில் திடீரென்று ஹைபிட்சில் ஒலித்த 'லுங்கி டான்ஸ்' பாட்டால் தூக்கி வாரிப் போட்டதன் காரணமாக கையில் வைத்திருந்த மோதகம் தெறித்து எங்கோ விழுந்து விட்டதாகக் கேள்வி. போன வருஷப் பிள்ளையார்கள் 'ஷீலா கி ஜவானி, சிக்னி சமேலி' போன்ற காலத்தால் அழியாக் காவியங்களைக் கேட்டு இன்புற்றதை இந்த வருஷப் பிள்ளையார்கள் அறியவில்லை.. பாவம்.

தினமும் ஆரத்தி முடிந்ததும் அடுத்து அனுபவிக்கப்போகும் இ(ம்)சையை எதிர்நோக்கி காதுகளை இறுக மூடிக்கொண்டதால் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குக் கூட சரியாக காதுகொடுக்க முடியவில்லையாம். "போனால் போகட்டும் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். வந்து நிம்மதியாக உட்கார்ந்து கொண்டார். ரெண்டு வகை மோதகங்கள், போளி எல்லாம் சாப்பிட்டு விட்டு, "அம்மாடி,.. இங்கே ஒண்ணரை நாள் நிம்மதியா இருந்தேன். அடுத்த வருஷமும் வாரேன்" என்றுவிட்டுப் போயிருக்கிறார்.
எங்க வீட்டுப்பிள்ளை..
"பாட்டா பாடுறீங்க?.. உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கறுவியர், மும்பையின் ஒரு மண்டலில் ட்ரெஸ் கோட் கொண்டு வந்துவிட்டார். தேசிய உடையான பெர்முடாஸில் வந்தவர்களை அலேக்காகக் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் பந்தலுக்கு வெளியே விடும்படி அமைப்பாளர்களின் மனதில் புகுந்து கொண்டு இவர் செய்த திருவிளையாடலை என்னவென்பது!!! "இருங்க,.. இன்னும் பதினஞ்சு நாளில் எங்கம்மா வருவாங்க. அவங்க கிட்ட உங்க விளையாட்டைக் காட்டினா தெரியும் சேதி" என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார். "ஹைய்யோ.. ஹைய்யோ.. புரியாத விளையாட்டுப் பிள்ளையா(ரா) இருக்கியே. அந்தம்மா வந்தாங்கன்னா பத்து நாளும் எங்களோட சேர்ந்து கும்மியடிப்பாங்க தெரியுமோ" என்று மக்கள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

உந்தூழ்(மூங்கில் பூ): புகைப்படப்பிரியனில் நான் எடுத்த இந்தப்படம் முத்துக்கள் பத்தில் ஒரு முத்தாக வெற்றி பெற்றது. தீர்ப்பு சொன்ன நாட்டாமைக்கு நன்றி :-)

எறுழம்பூ: வீட்டுக்கு வெளியே போனாலே சுவாரஸ்யமான அனுபவங்களுக்குக் குறைவிருக்காது. ஒரு சமயம் வண்டியை ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே பார்க்கிங்கில் சுவரையொட்டி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தால் பின்னால், பக்கவாட்டுகளில் என்று சகட்டு மேனிக்கு வண்டிகளை நிறுத்தியிருந்தார்கள். எந்த வகையிலும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தோம்.. ஹார்ன் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று முயற்சிக்கலாமென்றால் அதற்கும் பலனிருக்காது. அந்தச்சாலையில் ஓடும் எக்கச்சக்க வண்டிகளில் ஏதாவதொரு வண்டியின் ஹார்ன் என்று நினைக்கப்பட வாய்ப்பிருக்கிறதே. கடைசியில், வண்டியின் ஹெட்லைட்டுகள் மற்றும் பிற லைட்டுகளைப் போட்டு விடச்சொல்லி ரங்க்ஸிடம் சொன்னேன். லைட்டுகளைப் போட்டு விடுவதால் பாட்டரி டவுன் ஆகிவிடுமே என்று ரங்க்ஸுக்குத் தயக்கம். பயந்தால், தயங்கினால் காரியம் ஆகுமா என்ன?. "சும்மா வெறும் ரெண்டு செகண்டுக்குப் போட்டு விடுங்க. லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியறதைப் பார்த்தால் யாராவது வருவாங்க" என்று சொல்லிக்கொண்டே....... இருந்தேன். அது படியே ஆகிற்று :-). என் நச்சரிப்புத் தாங்காமல் விளக்குகளை எரிய விட்டார்.

முதல் தளத்திலிருந்த ஒரு கடைப்பையர் பார்க்கிங்கிலிருக்கும் வண்டியின் விளக்குகள் எரிவதைப் பார்த்து விட்டு உதவிக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், "அந்த வண்டியின் ஓனரின் ஆபீஸ் இங்கேதான் இருக்கு. விஷயத்தை அவரிடம் சொல்றேன்" என்று கூறிவிட்டு ஓனரை அழைத்து வந்தார். 'ஸாரி' கேட்டு விட்டு அந்த வண்டி நகர்ந்து வழியேற்படுத்திக் கொடுத்ததும், நாங்கள் கிளம்பினோம். "சொன்னாக் கேக்கணும்ன்னு இதுக்குத்தான் சொல்றது" என்று சொன்னபடியே அவரைப் பார்த்தேன். என்றுமில்லா முனைப்போடு சாலையைக் கவனித்துக் கூர்ந்து பார்த்தபடி கியரை மாற்றினார் அவர் :-))))))))

சுள்ளி(மராமரப்பூ): சாரல் துளிகளில் ஒரு துளியை "குங்குமம் தோழி" ஃபேஸ்புக்கின் முக வரி பகுதியில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தோழி.
கூவிரம் பூ: எல்லைப்பிரச்சினையென்பது அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவியிருப்பது என்னவோ உண்மைதான். என்றாலும் மின்சார ரயில்களிலும் அவை அதிகமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன போலும். எதையாவது விற்றுக்கொண்டு வருபவர்கள் அதைத் தீவிரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைச் சமீபத்திய ஒரு பயணத்தில் காண நேர்ந்தது. பத்து ரூபாய்க்குப் பதினைந்து எலுமிச்சம் பழங்கள் விற்கும் இரண்டு பசங்கள் ஒரே சமயத்தில் ரயிலில் ஏறி விட்டார்கள். அப்புறமென்ன வாய்த்தகராறுதான் இருவருக்கும். "இது என் ஏரியான்னு தெரியுமில்லே.. அப்புறம் ஏன் வண்டியில் ஏறினே?.." என்று கேட்டான் முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?" என்று கேட்டு விட்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான் இரண்டாமவன். முதலாமவன் திகைத்து நின்று விடவில்லை. "தஸ் கா லிம்பு லே லோ..(பத்து ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கிக்கோங்க)" என்று இரண்டாமவன் சவுண்ட் விடும்போதெல்லாம் "அச்சா,.. படாவாலா இதர் ஹை (பெரிய நல்ல பழங்களெல்லாம் இங்கே கிடைக்கும்)" என்று தன் கையிலிருந்த பழப்பொதிகளைக் காண்பித்துக்கொண்டிருந்தான். உண்மைக்குமே அவன் வைத்திருந்த பழங்கள் நல்ல தரமானவையாக இருந்தமையால் சட்சட்டென விற்றுத்தீர்ந்து கொண்டிருந்தன. முகம் சிறுத்துப்போன இரண்டாமவன் எந்த ஸ்டேஷனில் இறங்கி வெளியேறினான் என்று தெரியவில்லை :-)))

Friday, 23 August 2013

இலைகள்.. PIT போட்டிக்காக..

மலர்களுக்கு வாரி வழங்கிய வர்ணங்களையும் வடிவமைப்பையும் எந்த வித கஞ்சத்தனமுமில்லாமல், பாரபட்சமில்லாமல் இலைகளுக்கும் வழங்கியிருக்கிறாள் இயற்கையன்னை. பூக்களின் அழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்து விடாத "இலைகள்"தான் இம்மாத 'பிட்'போட்டிக்கான கருப்பொருள். கண்டதையெல்லாம் பிடித்துக்கொண்டு வந்ததில் இரண்டாவது படத்திலிருக்கும் க்ரோட்டன்ஸ் 'நான் போட்டிக்குப் போகிறேன்' என்று அடம் பிடித்ததால் அதை 'சென்று வா.. வென்று வா' என்று வீரத்திலகமிட்டு வாழ்த்தி அனுப்பியிருக்கிறேன். மீதமிருப்பவை எக்ஸிபிஷனில்..

நான் போட்டிக்குப் போறேனே..










 காடு மேடு எல்லாம் சுற்றினாலும் தோட்டத்து மூலிகையை மறந்து விட முடியுமோ!!.. எங்கள் வீட்டு வெற்றிலைகள் முகம் மறைத்து.. 

Monday, 19 August 2013

கிளைத்துச்செழித்த மரம்..

சிலரிடம் நேரிடையாகப் பேசும்போதுதான் அவர்களைப்பற்றி அதுகாறும் நாம் கொண்டிருந்த மதிப்பீடும் புரிதலும் மறுமதிப்பீட்டிற்குள்ளாகிறது.

ஒரு செயலில் இறங்கும்போது, அந்த ஆர்வத்திற்கு அணை போடுவதற்குக் காரணமாக அமைவது அழுக்காறா அக்கறையா என்பது அதைச்செய்பவர்களுக்கும் நமக்குமான உறவைத்தீர்மானிக்கிறது.

பயத்தைக் களைந்து, துணிச்சலை வார்த்து வந்தால் தன்னம்பிக்கை மரம் கிளைத்து வளரும்.

எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் ஒரு துளி உதவி கொடுக்கும் நிம்மதியைப் பெருஞ்செல்வம் கூட சில சமயங்களில் கொடுத்து விட முடிவதில்லை.

கடனே என்று கடமையைச் செய்வதை விட சும்மா இருப்பது மேலானது. சும்மா இருப்பதை விட மன நிறைவுடன் கடமையைச் செய்வது அதிமேலானது.

வியாபாரம் போன்ற தொழில்களில் உறவுகள் உருவானால் இரண்டும் செழிக்கும். அதுவே உறவுகளுக்கிடையே வியாபாரம் நுழைந்தால் இரண்டும் இல்லாமற்போய்விடும்.

நெல்லிடை வளரும் புல் களையெனக் கொள்ளப்படுகிறது. இருந்தும் கால்நடைகளுக்குத்தீவனமாய் பிறருக்குப் பயன்படும்படி அதன் வாழ்வு அமைகிறது. அவ்வாறே மனிதருக்கும் தத்தம் பிறவிப்பயன் என்று ஒன்றுண்டு.. கண்டறிவோம்.

பிரச்சினைகளைக் குறித்து வெறுமனே கவலைப்படுவது நம்மைக் கட்டிப்போடுகின்றது. அவற்றைத் தீர்க்கும் சிந்தனை ஒன்றே அதிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது.

இதழ்களில் ஏந்திக்கொள்ளும் சிறுபுன்னகை, மோசமான தினத்தைக்கூட ஓரளவு சீரமைக்கும் வல்லமை கொண்டது.

கடமை சமைக்கிறது.. அன்பும் பாசமும் ருசியைக்கலக்கின்றன.

Saturday, 17 August 2013

"என்னவோ போடா மாதவா.."

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் வாழ்வையும் ஈந்த எத்தனையோ தியாக உள்ளங்களைப்பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களையும் நம் வருங்காலத்தலைமுறையினருக்கு நம்மில் ஒருசிலரேனும் எடுத்துரைத்துக்கொண்டுதானிருக்கிறோம். என்றாலும் பிற பண்டிகைகளையும் காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு தினங்களையும் கொண்டாடும் அளவுக்கு நாம் குடியரசுதினத்தையும், சுதந்திரதினத்தையும் கொண்டாடுகிறோமா என்றால் வேதனைக்குரிய பதில்தான்  கிடைக்கிறது. அதிலும், "குடியரசுதினம் கொண்டாடப்படுமளவுக்குச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?.. இங்கே மட்டுந்தான் இப்படியா? அல்லது தேசம் முழுக்கவே இப்படியான மனோநிலைதான் நிலவுகிறதா!" என்பதில் எனக்கு என்றுமே சந்தேகமுண்டு..
மற்ற இடங்களில் எப்படியோ.. மும்பையில் குடியரசுதினம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. குடியிருப்புகளும் அரசாங்க அலுவலகங்களும், வீதிகளும் அன்று அட்டகாசமாக தேசியக்கொடியின் தோரணங்களாலும், வண்ணக்காகிதங்கள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையில் கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தேறும். அதன்பின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகளும் நடத்திப் பரிசளிக்கப்படும். அன்று நல்ல நேரத்தில் சத்ய நாராயணா பூஜை செய்யப்பட்டு தேச, மற்றும் மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடக்கும். மாலையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ‘ஹல்திகுங்கும்’ நிகழ்ச்சியுமுண்டு. குடியிருப்பில் அன்று லஞ்சோ அல்லது டின்னரோ கட்டாயமுண்டு.


இத்தனை அமர்க்களங்களும் வேண்டாம்.. அதில் ஒன்றிரண்டையாவது சுதந்திரதினத்தன்று கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அலுவலகங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில குடியிருப்புகளையும் தவிர மற்ற இடங்களில் கொடி கூட ஏற்றுவதில்லை. இப்படியிருக்கும் சுதந்திரத்தையும் அந்தச்சுதந்திர தினம்தானே நமக்கு வழங்கியிருக்கிறது. 

சென்ற சுதந்திர தினத்தன்று, வழக்கம்போல் புகைப்பட வேட்டைக்காகப் புறப்பட்டேன்.(வண்டிக்கருகில் வந்த விற்பனையாளர்களைத்தவிர சாலைக்காட்சிகளெல்லாம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குற்றம் குறை பொறுத்தருள்க). ஒன்றிரண்டு இடங்களிலாவது பொதுஇடங்களில் கொடியேற்றும் வைபவம் நடக்கும்.. பார்க்கலாம், காமிராவிலும் பிடிக்கலாம் என்று ஆசையோடு கிளம்பிய எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வழியில் தென்பட்ட ஒன்றிரண்டு மாண்டிசோரி நர்சரிப்பள்ளிகளில் மட்டும், மூவர்ணப்பலூன்களும் கொடிகளுமாக அலங்காரங்களும் தேசபக்திப்பாடல்களுமாகக் குழந்தைகள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏதோ.. குழந்தைகளாவது கொண்டாடுகிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதைத்தவிர தெருவில் சுதந்திரதினம் என்பதற்கான எந்த அடையாளமுமில்லை. அரசு அலுவலகங்களிலும்கூட பிரத்தியேகமான அலங்காரங்கள் எதுவும் தென்படவில்லை. போனால் போகிறதென்று கொடி மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. 



தொல்லைக்காட்சியின் முன் மக்கள் முடங்கி விட்டதால், அதிகம் ஆளரவமற்ற கடைத்தெருவிலும் சாலைகளின் சிக்னல்களிலும் கொடிகளை விற்றுக்கொண்டிருந்தவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்தியமாக இதுவும் இன்னொரு நாளாகத்தான் தெரிந்தது. வீட்டுக்குத்திரும்பும்போது வாங்கி வந்த காகிதக்கொடிகளில் ஒன்றைக் குடியிருப்பின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளியின் மேசையில் குத்தி வைத்து விட்டு வந்தேன். இப்படியாக, ‘எங்க குடியிருப்பிலும் கொடியேத்தியாச்..”

Wednesday, 14 August 2013

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்"

பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-)

நகர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்களுக்காக..




'இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

Monday, 12 August 2013

நினைவுச்சின்னங்கள் - என் காமிராப்பார்வையில்: 2 (சர்க்கா-மும்பை)

பறவைகள் வந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதோ, அல்லது கிளம்பிப் போகும்போதோ, அசுத்தப்படுத்தப் படுவதற்கும், நினைவு நாட்கள், விசேஷ நாட்களில் மாலை சுமந்து நிற்பதற்கும், எதிர்க்கட்சியினரால் உடைக்கப்படுவதற்கும் மட்டுமல்லாது, அவர்கள் வாழ்ந்த காலங்களையும் அவர்கள் செய்த செயல்களையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன அவர்களது நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்ட சிலைகள். இவ்வாறு சிலைகள் மட்டுமன்றி, ஒரு சில நிகழ்வுகளை என்றென்றும் நினைவு கூரும் வகையில் ஒரு சில கட்டிடங்களோ அல்லது அமைப்புகளோ கூட நினைவுச்சின்னங்களாக எழுப்பப்படுகின்றன.

இன்னும் சில, அப்படியெல்லாம் எந்தவொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமலே எழுப்பப்பட்டாலும் நாளடைவில் நினைவுச்சின்னங்களாக ஆகிவிடுகின்றன. மும்பையில் 'க்ராஸ் மைதான்' என்றழைக்கப்படும் சிலுவை மைதானத்திலிருக்கும் 'சர்க்கா' அப்படியானவற்றில் ஒன்று. மும்பையிலிருக்கும் 'கேட் வே ஆஃப் இந்தியா'வைப்போன்று இப்போது சர்க்காவும் மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது. இந்த சர்க்கா 'நூரு கரீம்' என்ற ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்டது. இவர் இதை, மும்பையில் டாடா ஸ்டீல் கம்பெனியும் I&Bயும் (Indian Architect and Builder) சேர்ந்து நடத்திய architectural and engineering design போட்டிக்காக வடிவமைத்திருந்தார். நாடு முழுவதுமிலிருந்து சுமார் நூறு பங்கேற்புகள் அந்தப்போட்டியில் இடம்பெற்றன. நூறையும் பின்னுக்குத்தள்ளி விட்டு நூரு கரீமின் படைப்பு போட்டியில் வென்றது. அப்படியென்ன சிறப்பு அந்தப்படைப்பில் இருக்கிறது?.
 நாட்டியமாடும் சர்க்கா..
இந்தியா என்றதுமே எப்பொழுதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காந்தியும், சர்க்காவுமாகத்தான் இருக்கும். அன்னியப் பொருட்களைப் பகிஷ்கரித்து அவர் உபயோகிக்கச் சொன்ன சுதேசிப்பொருட்களில் முக்கிய இடம் பெற்றது கதர்தானே. அதை நூற்க அவர் உபயோகித்த சர்க்காவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் நூரு கரீம் இதை உருவாக்கியிருந்தார். 'சமகாலத்திய அளவில் இந்தியாவிற்கான அடையாளம்' என்பதைத் தலைப்பாகக் கொண்டிருந்த போட்டியில், என்றுமே இந்தியாவிற்கு முக்கிய அடையாளமாக விளங்கும் சர்க்கா ஜெயித்ததில் ஆச்சரியமென்ன! நமது தேசியக்கொடியிலிருக்கும் அசோகச்சக்கரம் கூட ஒரு வகையில் சுழலும் சக்கரத்தைக்கொண்டிருக்கும் சர்க்காவைத்தானே நினைவு படுத்துகிறது.

வட்டத்துக்குள் கட்டம் கட்டப்பட்டிருப்பதுதான் மும்பையின் மேற்கு ரயில்வேயின் தலைமையகம்..
சுமார் 30 அடி அளவு உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த சர்க்கா மும்பைக்கு வந்த விதம் சுவாரஸ்யமானது. காந்தியின் கொள்கையைப் பிரதிபலிப்பதால் இதைக் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தின் காந்தி நகரிலும், அவர் ஒரு தடவை சிறை வைக்கப்பட்டிருந்த பூனாவிலும் நிறுவ இடம் பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் சரிப்படாமல் கடைசியில், க்ராஸ் மைதானத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த ஓவல் (Organisation for Verdent Ambience and Land (OVAL)) ட்ரஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இதை இங்கே நிறுவினார்கள். இதைத்தான் 'வரணும்ங்கறது வராம இருக்காது' என்று சொன்னார்களோ :-))
கடிக்க வரும் சுறாமீனை நினைவுபடுத்துகிறது இந்தக்கோணம்..
முப்பதடி உயர அளவில் கைமுறுக்கு மாதிரியும் ஜாங்கிரி மாதிரியும் முறுக்கித் திருகிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி காட்சி தருகிறது. சர்க்கா சுழலுவதையே இதன் திருகல்கள் குறிக்கின்றனவாம். காந்தியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் கடந்த 2011-ம் வருஷம், அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று டாடா ஸ்டீலின் வைஸ் சேர்மன் முத்துராமன் முன்னிலை வகிக்க இயக்குனர் R.K.கிருஷ்ணகுமார் திறந்து வைத்திருக்கிறார். இங்கே வரும் மக்கள் விவரம் அறிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாகக் கல்வெட்டும் இருக்கிறது. தஞ்சாவூரில்தான் கல்வெட்டு இருக்குமா என்ன? மும்பையிலும் இருக்கிறதாக்கும் :-)
வாஸ்து எதுவும் பார்க்காமலேயே இந்த சர்க்கா சரியான இடத்தில் அமைந்து விட்டது போலிருக்கிறது. ஒரு புறம் வி.டி ஸ்டேஷன், அடுத்த புறம் சர்ச் கேட் ஸ்டேஷன் என்று இரண்டு பிரபலமான ரயில் நிலையங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு மும்பையின் பிரபலமான ஃப்லோரா ஃபவுண்டனுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. வி.டி. மற்றும் சர்ச் கேட் நிலையங்களை இணைக்கும் பாதையாகவும் இந்த மைதானம் அமைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கும், பொழுதைப்போக்க வருபவர்களுக்கும் குறைவில்லை. இந்தப்பாதைதான் மும்பையின் சரித்திரப்புகழ் பெற்ற காவூ கலி(khau gali) என்று அழைக்கப்படுகிறது. மராட்டியில் காவூ என்றால் தின்பண்டம். gali என்றால் தெரு அல்லது சந்து என்று அர்த்தம். பேல்பூரி, சேவ்பூரி, வடாபாவ், ஆலு டிக்கி, போன்றவையும் மேலும், விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் எப்போதும் விற்பனையாகிக்கொண்டிருப்பதால் இரண்டு ஸ்டேஷன்களிலும் இருந்து வெளி வரும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குப்போகுமுன் இங்கு வந்து பேட்பூஜா அதாவது வயிற்றுக்கும் சிறிது ஈயாமல் செல்வதில்லை. பற்றாக்குறைக்கு கிரிக்கெட்டு விளையாடும் சிறுவர்களுக்கும் குறைவில்லை. எப்பொழுதும் ஜேஜேவென்று இருக்கும், புகழ்பெற்ற ஃபேஷன் ஸ்ட்ரீட்டும் இங்கேதான் இருக்கிறது.
புதுக்கோணம்.. புதுத்தோற்றம்..
சர்க்காவின் அருகிலேயே குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டுச் சாதனங்களடங்கிய பூங்காவும், வருபவர்கள் அமர்ந்து இளைப்பாற சிமிண்டுத்திண்ணைகளும் இருப்பதால் குடும்ப சகிதம் வருபவர்களும் உண்டு. வி.டி ஸ்டேஷனிலிருந்து டாக்சி மூலம் இங்கே வரலாம். ஆசாத் மைதான் அருகே என்று சொன்னால் நிறையப்பேருக்குப் புரியும். முதன் முதலில் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு எலும்புக்கூடு போன்று வினோதமாகத் தோன்றத்தான் செய்கிறது. இதற்காகவே மக்கள் இதன் முன் நின்று படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குழந்தைகளோ இதையும் ஒரு விளையாட்டுப்பொருளாக எண்ணி ஏணிப்படிகளில் ஏறுவதுபோல் கடகடவென்று ஏற ஆரம்பித்து விடுகின்றன. இதனருகில் செல்ல அனுமதியில்லை என்றாலும், வெள்ளை வெளேரென்று தந்தம் போல் மின்னும் இந்த அமைப்பு கிட்டே போய்த் தொட்டுப்பார்க்கத் தூண்டுவதென்னவோ நிஜம்.

Thursday, 8 August 2013

முதன்முதலாக... பரவசமாக..

முதன்முதலாகக் கம்ப்யூட்டரைப் பார்த்தபோதும், அதைக் கையாண்டபோதும் ஏற்பட்ட அனுபவங்களை எழுதச்சொல்லி ஆதி அழைத்திருக்கிறார். 

'விக்ரம்' படம் வந்தபொழுது, அந்தப்படத்தை மிகவும் ஆவலாக அனைவரும் போய்ப்பார்த்தமைக்கு கமலோ, அம்பிகாவோ, வசனமெழுதிய சுஜாதாவோ ஒவ்வொரு வகையிலும் காரணமென்றாலும், 'கம்ப்யூட்டரெல்லாம் காட்டறாங்கப்பா." என்ற காரணம்தான் அதிமுக்கியமானதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் ஆ.. ஊ என்றால் எதற்கெடுத்தாலும், எந்தப்பொருளையாவது விற்கவேண்டுமென்றாலும் அதைக் கம்ப்யூட்டருடன் சம்பந்தப்படுத்தினால் போதும். மார்க்கெட் பிய்த்துக்கொண்டு போகும். டிஸ்கோவுக்கும் நதியாவுக்கும் அடுத்தபடியாக கம்ப்யூட்டரின் பெயரைச்சூட்டிக்கொண்டிருந்த பொருட்கள் எத்தனையெத்தனையோ. 'கம்ப்யூட்டர் சேலை' என்று ஒன்று பிரமாதமாக வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதுவே டிசைன் செய்ததாம். ராக்கெட் விடும் கம்ப்யூட்டருக்கு சேலை நெய்யுமிடத்தில் என்ன வேலை என்று நினைத்தாலும், ஆளுக்கொன்று வாங்கத்தவறவில்லை நாங்கள்.

இப்படியாகத்தானே பெயருடன் முதலில் பரிச்சயம் ஏற்பட்டாலும் நேரில் அதைத் தரிசனம் செய்யும் வாய்ப்பென்னவோ கன காலம் கழித்துத்தான் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டர் என்பது நவீன முறையிலான டைப்ரைட்டர் என்ற எண்ணம் மாறி, அது என்னவெல்லாம் செய்யுமென்று ஓரளவு தெளிவு வந்திருந்தது. விண்டோஸ் 3.1 கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில்தான் விண்டோஸ்-95வை அறிமுகப்படுத்துவதற்காக NIITயினர் தொலைக்காட்சியில் தொடராக கேள்வி பதில் முறையில் ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து பார்த்ததில் 'இதான்,.. இப்படித்தான்' என்று புரிதல் ஏற்பட்டிருந்தது. நாமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆரம்பித்து, ரங்க்ஸ், "மைக்ரோசாப்ட் ஆபீஸ் கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும்' என்றதில் வகுப்பில் சேர்வதில் முடிந்தது.

தேடிப்பிடித்து, இன்ஃபொடெக்கின் franchise நடத்திக்கொண்டிருந்த ஒரு வகுப்பிலும் சேர்ந்தேன். அப்பொழுதெல்லாம் மைக்ரோசாப்ட் ஆபீசில் வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட் மட்டுந்தான் இருந்தது. அதிலும் வீட்டில் வெட்டி ஆபீசராய் இருந்த காரணத்தாலோ என்னவோ 'ஆபீஸ் கத்துக்கறேன்' என்று சொல்லிக்கொள்வதே ஒரு பெருமையாகவும் இருந்தது. கி..கி..கி.. முதல் நாள் வகுப்பில் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்ததும் ஏதோ தெய்வத்தின் முன் அமர்ந்திருந்தது போலிருந்தது. கர்சர், மௌஸ் என்று ஒவ்வொன்றையும் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரியும் ஆகவே ஃபிங்கரிங் பிரச்சினை இல்லை. டைப்ரைட்டரில் அடுத்த வரி டைப் செய்ய வேண்டும்ன்றால் ஒரு லீவரை நகர்த்த வேண்டும். இதில் தானாகவே நகர்ந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த வகுப்பு முடியுமுன்பே அதெல்லாம் சலித்து விட்டது :-) என்றாலும் அவர்கள் நடத்திய தேர்வில் ஒவ்வொரு தாளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மொத்தமாக 96% எடுத்தேன். 

வகுப்புக்குப் போய்க்கொண்டிருந்த சமயம், ரங்க்சின் ஆபீசில் ஒவ்வொரு செக்ஷனுக்கும் மேம்பாட்டுக்காக ஒரு தொகை ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். ரங்க்சிடம் நான் ஆபீசுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிப்போடச்சொன்னேன். அதான், மைக்ரோ சாப்ட் ஆபீஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து அது ஆபீஸ் வேலைகளை எப்படியெல்லாம் எளிதாக்குகிறது என்பது நான் வகுப்புக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து புரிய ஆரம்பித்திருந்ததே. ரங்க்ஸின் வேலைப்பளு குறையுமே என்ற நல்லெண்ணம்தான். ஆபீசில் கம்ப்யூட்டர் வாங்கியபிறகு, அடிக்கடி போன் செய்து சந்தேகம் கேட்டுக்கொள்வார். 

ஆபீசில் வாங்கிய கம்ப்யூட்டரைப் பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களையெல்லாம் அழைத்துச்சென்றார். குழந்தைகள் கேம்சில் மும்முரமாகிவிட நான் எனக்குத் தெரிந்ததை ரங்க்சிற்கு வகுப்பெடுத்தேன். முக்கியமாக எக்செலும், வேர்டில் மெயில் மெர்ஜும் கற்றுக்கொண்டார். அதன் பின் அடிக்கடி நாங்கள் ஆபீசுக்குப் போவது வழக்கமானது. குழந்தைகள் கேம்சை விட்டுவிட்டு பெயிண்ட் ப்ரஷ், வேர்ட் போன்றவற்றில் பழக ஆரம்பித்தனர். நானோ வகுப்பில் கற்றுக்கொண்டதை இங்கே பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பேன். 
இந்தச்சமயத்தில்தான் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கலாமென்று முடிவெடுத்தோம். குழந்தைகளின் படிப்புக்கும், ரங்க்சின் வேலைக்கும் உதவியாய் இருக்குமென்று முடிவெடுத்து, வாங்கி வீட்டினுள் அது வலது காலெடுத்து வைத்து நுழைந்தபோது ஏதோ சாதித்து விட்ட பெருமிதமும் ஏற்பட்டது. குழந்தைகள் விளையாடிய நேரம் போக என் கைக்கும் எப்பவாவது கிடைக்கும் :-)) பாட்டுக்கேட்பது, சினிமா பார்ப்பது என்று அது ஒரு மினி டிவியாகவும் ரேடியோவாகவும் உருவெடுத்தது.

கற்றுக்கொண்டாலும் வேலைக்குச்செல்ல நான் முயற்சிக்கவில்லை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாத சூழ்நிலையில் இரண்டொரு சமயம் குழந்தைகளையும் வகுப்புக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை அங்கே ஆபீஸ் ரூமில் உட்கார வைத்து விட்டு நான் வகுப்புக்குப் போன சம்பவங்களுமுண்டு. இந்த நிலையில் வேலைக்கு எங்கே முயற்சி செய்ய?.. எம்மெஸ் ஆபீசைத்தவிர வேறு கோர்ஸுகள் கற்றுக்கொள்ள நான் முயற்சிக்கவுமில்லை. இதனாலேயே பக்கத்துப் பள்ளியில் கிடைக்கவிருந்த கம்ப்யூட்டர் டீச்சர் வேலை கைவிட்டுப்போனது. அதற்கு basic-க்கும் கற்றிருக்க வேண்டுமாம். இந்த பேசிக் நாலெட்ஜ் இல்லாததால் ஒரு நல்ல டீச்சரை அந்தப் பள்ளி இழந்தது (யாருப்பா அங்கே கல்லெடுக்கறது?.. உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும். ஓக்கே? :-) ). ஆனாலும் கற்ற வித்தை கை கொடுத்தது. எங்கள் குடியிருப்பில் காஷியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்ததால் வரவு செலவு இத்யாதிகளை வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் அழகாகக் கணக்கிட்டு, ப்ரிண்ட் எடுத்து ஒவ்வொரு wing-ன் நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டச்செய்தேன். இது அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. 

சினிமா பார்க்கவும் சாலிடெர், ஃப்ரீசெல் போன்ற ஒலிம்பிக் தரமுள்ள விளையாட்டுகளை விளையாடுவதையும் தவிர எப்பவாவது வேலையும் செய்யும் கம்ப்யூட்டரில் அப்பொழுதெல்லாம் சில சமயங்களில் மட்டும்தான் எதையாவது வாசிப்பேன். அதுவும் தமிழ் வாசிப்பது அபூர்வம். தமிழிலும் இருக்கிறதென்று தெரிந்தால்தானே வாசிப்பதற்கு :-). அப்படியிருந்த நிலை மாறி இப்பொழுது கம்ப்யூட்டரே பழியாகக் கிடப்பதும், அதில் எழுத ஆரம்பித்திருப்பதும் எனக்கே ஆச்சரியமூட்டுகிற மாற்றம்தான். அதைப்பற்றியும் எழுத வேண்டும்தான். தம்பி குமாரும் அதைத்தான் எழுத அழைத்திருக்கிறார். எழுதி விடுவோம் :-))

விருப்பமிருப்பவர்கள் அனைவரும் இந்தத்தொடர்பதிவைத் தொடரலாம்..

LinkWithin

Related Posts with Thumbnails