Monday, 10 April 2017

18-வது அட்சக்கோடு(அசோகமித்திரன்) - புத்தக விமர்சனம்

இந்திய தேசிய விடுதலைப்போராட்டக் காலத்தின் ஒரு முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தைப் பற்றிய நூலே அசோகமித்திரனின், "பதினெட்டாவது அட்சக்கோடு". அப்போது, ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தைக் கதைக்களமாகக் கொண்ட இந்நூலில், இந்தியப் பிரிவினை சார்ந்த வரலாற்றுப் பூர்வமான இந்த இலக்கியப் பதிவில், சந்திரசேகரனும் அவன் வாழ்ந்து வந்த செகந்தராபாத் நகரமும் இந்திய சுதந்திரத்துக்குப்பின்னிருந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாகும் வரையிலான காலஇடைவெளியில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களையும், அந்நகரம் வன்முறையில் சிக்கி எப்படி அவதிப்பட்டது என்பதையும் அசோகமித்திரன் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார். பதின்ம வயது இளைஞன் சந்திர சேகரனின் பள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரை அவன் பார்த்த, அனுபவித்த செகந்தராபாத் வாழ்க்கை, அதில் போராட்ட காலத்தில் அவனது பங்கு, பள்ளியைப் பகிஷ்கரித்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவது, என அனைத்தும் அவனது கூற்றாகவும் படர்க்கைக் கூற்றாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப்பிரிவினைக்குப்பின் பிரிந்து கிடந்த குறுநாடுகளையும் சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து சர்தார் வல்லபாய் பட்டேல் இன்றிருக்கும் இந்தியாவை உருவாக்கினார். சிலர் உடனே இணைந்தாலும் சிலரை பெரும் பாடுபட்டு இணைக்க வேண்டியிருந்தது. இந்தியாவுடன் இணைய மறுத்த சமஸ்தானங்களை வலுக்கட்டாயமாக இணைக்க வேண்டியிருந்தது. அப்படித்தான் இந்திய ராணுவத்தின் துணையோடு ஹைதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது. தனித்தியங்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமுடன் ஏற்பட்ட சிக்கல் மதக்கலவரச் சிக்கலாக உருவெடுத்தது. அத்தனை நாள் எந்த மதவேறுபாடுமின்றி ஒற்றுமையாய்ப் பழகி வந்தவர்கள் கூட, பிறரை எதிரியாய்க்கருதி ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். பிறர் உடமைகளுக்குச் சேதம் விளைத்தனர். உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது.

நிஜாமின் அடியாட்களான ரஜாக்கர்களுக்கு அஞ்சியவர்கள் தம் குடும்பத்தாரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பத் தொடங்குகின்றனர். ஆனால் இந்திய ராணுவம் வந்திறங்கியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது. அதுவரை ஓடியொளிந்தவர்கள் ரஜாக்கர்களைத் திருப்பித்தாக்க ஆரம்பிக்கிறார்கள். அச்சமயம் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்படும் சந்திரசேகரன் அதை உறுதிப்படுத்திக்கொள்ள செகந்தராபாதின் சந்துக்களில் அலையும்போதுதான் தன் உயிரைக் காக்க ஒரு வீட்டுக்குள் புக நேரிடுகிறது. அச்சமும் பதற்றமுமாக அவ்வீட்டில் ஔிந்திருக்கும் ஒரு குடும்பத்தின் சிறுமி, தன்னை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்தை விட்டுவிடுமாறு வேண்டும்போது கலங்கிப் பதறுவது சந்திரசேகரன் மட்டுமல்ல நாமும்தான். தன்னை ஒரு பெண் எதிரியாய்க்கருதி மானத்தை இழந்தாவது தன் குடும்பத்தைக் காக்க நினைக்கும்படி அமைந்துவிட்டதே என்ற மனக்கசப்பை அவன் வாந்தியாய் துப்புவதோடு நாவல் முடிகிறது.

ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படும் காலம் வரையிலான நாவல் நிகழ்வில் செகந்தராபாத் நகரின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், கடைவீதிகள், வீதி அமைப்புகள், மக்களின் இயல்புகள், அவர்களின் குரூரம், சுயநலம், மூர்க்கமான குழுமனப்பான்மை முதலியவைகளை சாவதானமாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவரலாறும் மக்களின் சாமான்ய வரலாறும் ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து ஒரே இழையாய் சொல்லப்படுகின்றன. கலவரம் முளைவிட்டு வளரத்தொடங்கும் பொழுதுகளிலும் அம்மக்கள் கேரம், கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடிக்கொண்டு, 'வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்ற மனப்பாங்கிலேயே இருக்கின்றனர். சந்திரசேகரனைச்சுற்றிலும் ஆங்கிலோ இந்தியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் நிரம்பியிருக்கின்றனர். மதவேறுபாடு கலவரத்தில் கொண்டு விட்டபோதுதான் அம்மக்கள் தனித்தனித் தீவுகளாகி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மதம் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இருந்த சந்திரசேகரனும் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு மதசார்புள்ளவனாகக் கருதி, பிறரை எதிரியாய்க் கொண்டு இறுதியில் தெளிவுறுகிறான்.

சந்திரசேகரன் என்னும் சிறுவனுக்குள் இருக்கும் வெறுப்புணர்வுடன் நிகழ்வுகளையும் மனிதர்களையும் முன் வைத்துக் கதையை நகர்த்தும் அசோகமித்திரன் அதன் வழியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பண்பாட்டுக் கூறுகளால் பிளவுண்ட மனிதர்களுக்கிடையே உருவாகும் மனமுறிவுகள், ஐயங்கள், பயம், பதற்றம் என்பனவற்றைச் சித்திரித்துக் கொண்டே போகிறார்
இந்நாவலில் குறிப்பிடத் தக்க அம்சமாக அநேகமாக உரையாடல்களாலேயே இது உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இந்த உரையாடல்கள் மூலம் பாத்திரங்களின் குண விசேஷங்களும், பண்புகளும் பிரசன்னமாவதைக் கூர்ந்து நோக்கினால் காணமுடியும். நாவலில் அங்கங்கே இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் காட்சிகளை மிகத்துல்லியமான விவரங்களோடு, நுண்தகவல்களோடு அதே சமயம் அதிக அலங்காரமில்லாமல் விவரித்திருப்பது இந்நாவலை விட்டு சற்றேனும் விலக முடியாதவாறு நம்மைக் கட்டிப்போடுகிறது. ஒரு தனிமனிதனின் அனுபவங்களின் ஊடாகவே காட்சிகள் விவரிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடைய ஆன்மாவின் மௌன ஓலத்தை இதில் கேட்க முடிகிறது.

Saturday, 8 April 2017

"சிலிர்ப்பு" - புத்தக விமர்சனம்.

மனிதர்களைப்பற்றி, அவர்களின் அழகுகள், ஆசாபாசங்கள், பலம், பலவீனம் என அத்தனையையும் பற்றி எழுதியவர் தி.ஜானகிராமன். தஞ்சை மண்ணைச் சொந்தமாகக்கொண்ட அவரது கதைகளில் பெரும்பாலும் அம்மண்ணும் மண் சார்ந்த கலாச்சாரமுமே பெருமளவில் பிரதிபலிக்கின்றன. அதிக அலங்காரமில்லாத அம்மன் சிலையின் அழகைப்போன்ற எளிமையான அவரது எழுத்தில் இதுதான்..இப்படித்தான் எனப் பட்டவர்த்தனமாக கனமான விஷயங்களை நம்முன் பரிமாறிவிட்டு ஒதுங்கி விடுகிறார். ஜானகிராமனின் சிறுகதைகளில் சிறந்தவை என தனக்குப் பட்டவற்றைத் தொகுத்து எழுத்தாளர் பிரபஞ்சன் வழங்கியிருக்கும் “சிலிர்ப்பு” என்ற சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அனைத்துமே முத்தும் ரத்தினமுமேயாகும்.

//தி.ஜானகிராமனின் கதைகள் யதார்த்த வகைப்பட்டவை. ஆனால் அவரது யதார்த்தம் வேறுவகைப்பட்டது. இருப்பதை, கண்டதை எழுதிக்கொண்டு போவதன்று அவர் யதார்த்தம். அவர், ‘வாழ்க்கை’ என்று எதை நம்பினாரோ அதை எழுதிய யதார்த்தம் அவரது கதைகள்.// என தனது முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிட்டிருப்பது சத்தியமான உண்மை. கதையை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே நதிச்சுழல்போல் அது வாசகனை தன்னுடன் இழுத்துக்கொள்கிறது. எவ்வித அசௌகரியமுமில்லாமல் அவனும் அத்துடனேயே பயணிக்கிறான். தன்னையும் கோடானுகோடி நீர்த்துளிகளில் ஒன்றாக உணர்கிறான். கதையின் மாந்தர்களோடு தன்னையும் ஒரு பாத்திரமாக உணர்ந்து பங்கெடுக்கத்துவங்கி விடுகிறான். கதையின் இறுதியில் அவர்கள் இறக்கி வைக்கும் சுமையைத் தாளமுடியாமல் தத்தளிக்கிறான். மேலோட்டமாக வாசிக்கும்போது ஜனரஞ்சகமாகவும் சற்றே உள்நோக்கி வாசிக்கும்போது அழகிய இலக்கிய நுண்மை மிக்கதாகவும் இருக்கின்றன அவரது கதைகள். அந்த அழகின் ஆழத்தில் மனிதனின் ஆதார உணர்வுகளனைத்தும் அமிழ்ந்து கிடக்கின்றன. இச்சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்குந்தோறும் அவை ஒவ்வொன்றாக மேலெழுந்து வருகின்றன.

ஜானகிராமன் எழுத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று உரையாடல் மூலமே கதையை நகர்த்திச்செல்வது. அவரது கதைகளில் தேவையற்ற விளக்கங்கள், வர்ணனைகள் என எதுவுமே இல்லை. உரையாடல் மூலமே பாத்திரங்களின் குணாம்சங்கள், அவர்களது உறவு முறைகள், மன ஓட்டம், பண்பு முதலிய அனைத்தையும் வாசகனுக்குப் புரிய வைத்து விடும் அபூர்வ எழுத்து அவருடையது. ஆண் பெண் உறவுகளைப்பற்றியும் அதிலிருக்கும் சிடுக்குகளைப்பற்றியும் அதிகம் எழுதிய ஜானகிராமன் தனது கதைகளில் பெண்களின் அசாத்திய ஆளுமையை அழகியலோடு பதிவு செய்திருக்கிறார். தன்னைப் போஷிக்கும் ஆணை, “எந்த நேரத்துலே பேசினாலும் எல்லாத்துக்கும் வரம்பு இருக்கு. பொம்மனாட்டி கொஞ்சம் பாக்கும்படியா இருந்திட்டா, இப்படிப் பைத்யம் புடிச்சுப் பாயைப் பிராண்டிக்கிட்டுப் பேத்திக்கிட்டுத் திரியணுமா?” என்று துரத்தும் ஆளுமை எப்பேர்ப்பட்டது!!. அப்படிப் பெண்ணின் ஆளுமை புரிந்த ஆணாக இருப்பதால்தான், “உள்ள போறியா இல்லையா?” என்று கபோதிக்கோபத்தில் கிழவியை விரட்டுகிறார் கிழவர். “என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே.. போயிட்டியேடி” என்று மனைவி வாலாம்பாளை நினைத்து உருகுகிறார் சாமநாது. 

ஜானகிராமனின் கதைகளில் வரும் பெண்கள் தங்களது இன்ப துன்பங்களில் வெளிப்படுத்தும் ஆளுமை அழகியல் மிக்கது. அந்த ஆளுமையே நம்மை அவர்கள் மீது மரியாதை செலுத்தத் தூண்டுகிறது. வயிற்றுப்பாட்டிற்காக தன் குடும்பத்தைப் பிரிந்து எங்கோ தொலைதூரத்திலிருக்கும் கல்கத்தாவிற்கு குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குப் புறப்பட்டிருக்கும் குஞ்சுவிற்கு வெறும் பத்து வயதுதான். குழந்தைத்தனம் மாறாத இச்சிறுவயதிலேயே முகம் தெரியாத ஏதோ ஒரு வீட்டிற்குப் பயணப்பட வேண்டியிருக்கும் அச்சூழலை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன!! பசியை வாயைத்திறந்து சொல்லக்கூட தயங்கி மறைப்பது சமர்த்தில் சேர்த்தியா? பட்டுப்பட்டு பாறையாய்க் காய்த்துப்போன உள்ளத்துக்குத்தான் அப்படி மறைக்க வரும். “எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு, எனக்கு இதுக்கு மேல வக்கில்லை” என மறுகும் சக பயணியரில் ஒருவர்தான் நாம். கண்ணீர் வழியக் கடந்து செல்வதைத்தவிர நாம் செய்யக்கூடுவது வேறொன்றுமில்லை.

மனித மனங்களின் உணர்வுகளை உளவியல் கலந்து சொல்லிச்சென்றவர்களில் தி.ஜானகிராமனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆண்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்த்திருக்கும் ஜானகிராமன், போட்டி மனப்பான்மை, பொறாமை, கலக்கம், குற்றவுணர்வு, கையாலாகாத்தனம் என உணர்வுகளால் ஆட்டி வைக்கப்படும் மனிதர்களை நம்முன் ரத்தமும் சதையுமாய் உலவ விடுகிறார். இச்சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “பாயசம்” சிறுகதையில் வரும் சாமிநாது தனது உளவியல் சிக்கல்கள் தன் மனதில் ஏற்படுத்திய வெறுமையைச் சமாளிக்க தனது உடல்பலத்தை தனது பெருமையாய் எண்ணி அவ்வெறுமையை நிரப்புகிறார். தனது அண்ணன் மகனான சுப்பராயனுக்குக் கிடைக்கும் நற்பெயர் ஏற்படுத்திய பொறாமைப்புகைச்சலே அவரை நகர்த்த நாலாள் தேவைப்படும் பாயச ஜோடுதவலையை ஒற்றையாளாய்க் கவிழ்க்கச்செய்கிறது. தனது எதிராளிக்கு வயல் கிடைத்துவிடக்கூடாது என்ற போட்டி மனப்பான்மைதான் ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டமடையச்செய்கிறது சுந்தர தேசிகரை. அத்தனை நாள் வலதுகையாய் இருந்தவரை நம்பாமற்போனதால்தான் ஆண்டவன் தன்னைத் தண்டித்து விட்டான் எனக்குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது. 

பெரிய மனிதர்கள், சின்ன மனிதர்கள், ஆண்கள், பெண்கள் என அத்தனை பேரையும் தன் பார்வையில் எழுதிச்சென்ற ஜானகிராமனின் எழுத்து பல பரிமாணங்களிலும் நீள்வது. புதிய வாசகனுக்கு அவரது கதைகள் மேம்போக்கான, எளிமையானவையாகத் தோன்றினாலும் வாசிக்குந்தோறும் அவரது கதைகளில் ஒளிந்திருக்கும் அசாதாரணம் சாதாரணமாக வளைய வருகிறது. “கண்டதுக்கெல்லாம் தவங்கிடந்தா மனசுதான் ஒடியும். தண்டனைதான் கிடைக்கும்” எனவும், “எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணி இந்த உடம்பையும் நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும் மனுஷன். இல்லாட்டா பாவம் பின்னாலே வந்து வந்து அறுக்கும்” எனவும் கூறும் இவரது மனிதர்களில் ஒருவனான காலதேவன் பசியின் வடிவாக உட்கார்ந்திருக்கிறான். பார்க்கத்தான் நமக்கு அகங்காரமில்லாத கண் வேண்டும்.

தி.ஜானகிராமன் எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 கதைகளைக் கொண்டு, "சிலிர்ப்பு" எனத்தலைப்பிடப்பட்ட இச்சிறுகதைத்தொகுப்பு, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களால் தொகுக்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.

Friday, 7 April 2017

சாபுதானா கிச்சடி.

மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை உபயோகப்படுத்திச் செய்யப்படும் உப்புமா மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காலை அல்லது மாலை டிபனாகவும் விரத நாட்களுக்கான உணவாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வடக்கர்களால் "சாபுதானா கிச்சடி" என்றழைக்கப்படும் இப்பண்டம் செய்வதற்கு மிகவும் எளிதானது. மேலும், மாவு மற்றும் ப்ரோட்டின் சத்து நிரம்பியது.

மளிகைக்கடைகளில் வற்றல் போட உபயோகப்படும் ஜவ்வரிசி எனக் கேட்டு வாங்கவும். நைலான் ஜவ்வரிசி கிச்சடி செய்ய உதவாது. ஒரு கப் ஜவ்வரிசியை இரண்டு முறை நன்கு தண்ணீரில் அலம்பி வடித்து விடவும். பின் ஜவ்வரிசியின் மேற்பரப்பில் ஒரு செ.மீ அளவே தண்ணீர் நிற்குமளவிற்கு நீரூற்றி ஊற விடவும். வாகைப்பொறுத்து ஜவ்வரிசி ஊற அரைமணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரம் வரைக்கும் ஆகலாம். காலையில் கிச்சடி செய்ய வேண்டுமானால் இரவே ஊற வைத்து விடலாம். மாலையில் வேண்டுமெனில் முற்பகலில் ஊற வைக்கவும். அத்தனை நீரையும் உறிஞ்சிக்கொண்டு நன்கு ஊறி உதிர்உதிராக வந்துவிடும். ஊறிய ஜவ்வரிசியில் ஒன்றை எடுத்து நசுக்கினால் மசிய வேண்டும். மசியவில்லையெனில் மேலும் சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அரை கப் வேர்க்கடலையை கருகாமல் வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். காரத்திற்கேற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைப் பொடியாக ஒரு தேக்கரண்டியளவு நறுக்கிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவராத்திரி, ஏகாதசி போன்ற விரத நாட்களில் செய்வதானால் வெங்காயம் சேர்க்க வேண்டாம்.

ஒரு அகன்ற வாணலியில் இரண்டு டேபி்ஸ்பூன் நெய்யைச்சூடாக்கி அதில் கால் தேக்கரண்டி சீரகத்தைப்போட்டு பொரிய விடவும். பின் நறுக்கி வைத்த மிளகாய், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றைப்போட்டு வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கியபின், அத்துடன் ஜவ்வரிசியையும் ருசிக்கேற்ப காலாநமக் அல்லது சாதாரண உப்பைச் சேர்த்துக்கிளறியபின் மூடி ஒரு நிமிடம் வேகவிட்டு, பொடித்த வேர்க்கடலை மற்றும் உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆகும்வரை மறுபடியும் மூடியி்ட்டு குறைந்த தீயில் வேக விடவும். அவ்வப்போது மூடியைத்திறந்து கிச்சடியைக் கிளறிக்கொடுக்கவும். உதிர்உதிராக நன்கு வெந்தபின் இறக்கி கொத்துமல்லித்தழையைத்தூவி சிறு எலுமிச்சைத்துண்டுடன் பரிமாறவும். சாப்பிடும்போது சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைப்பிழிந்து கிச்சடியுடன் கலந்து பின் சாப்பிடுதல் மரபு.

Friday, 31 March 2017

சாரல் துளிகள்

அந்திச்சூரியனுடன் அளவளாவி வழியனுப்பியபின் தேநீரருந்த யத்தனிக்கும்போது, இளம் பொன்னிறத்தில் கோப்பைக்குள் தளும்புகிறது கடல்.

நரியின் நயவஞ்சகம் 
ஔிரும் கண்களையுடையவன், 
தவளைகளுக்கு 
அகிம்சையைப் போதித்துக்கொண்டிருக்கிறான். 
பாம்பின் விஷமெனப் பரவும் 
அதன் வீரியத்தில் மயங்கி 
புற்கடிப்பதை விடுத்து நிற்கின்றன முயல்கள்.

அற்றைக்கும் இற்றைக்கும் ஒரு மௌனசாட்சியாய் நின்ற அக்கட்டடத்தின் விரிசல்களில் ஊன்றியிருந்த வேர்கள் வழி கசிந்த முணுமுணுப்புகள் வருங்காலத்தின் செவிகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

ஒரு நத்தையைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த வெயிலின் முதுகில் ஒட்டியிருக்கும் மகரந்தத்துகள்களினுள் ஔிந்திருந்து கூவுவது அக்காக்குருவியாகவும் இருக்கலாம்.

ஒரு பூனையைப்போல் மென்பாதம் வைத்துப் போய்க்கொண்டிருக்கும் இப்பனிக்காலத்தின் மேல் மெல்லக்கவியும் வேனிற்காலத்தின் முதல் குல்மொஹர் பூ ஒரு சூரியனாய் மலர்ந்திருக்கிறது.

ஒரு மெல்லிறகைப்போல் மிதந்து தரையிறங்கும் அவ்விமானத்தை ஆதுரத்துடன் தழுவும் மஞ்சுப்பொதியில் பன்னீர்ப்பூக்களின் வாசம் இருந்தது தற்செயலானதேயன்றி வேறென்ன?

அதி உக்கிரமாய்ப்பொழியும் வெயிலின் அன்பை, அதில் நனைவதை விட வேறெப்படி அங்கீகரித்து விட முடியும்!?

கடந்தகால இருளின் நிழல்கள் தற்காலத்தில் பேயுருக்கொள்ளும்போது, கூந்தல் பற்றியிழுத்து ஆணியுடனறைந்து முடக்கிப்போடுகிறான் சமயோசிதச்சித்தன்.

கொன்றையும் குல்மொஹரும் பூவிதழ்கள் உதிர்த்திருந்த அச்சாலையில் நடந்து செல்கின்றன சீருடையணிந்த லேவண்டர்ப்பூக்கள்.

ஆசிரியரின் குரலைச் செவி மடுக்கா கடைசி வரிசைப் பையனின் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது நேற்று பார்த்த சர்க்கஸ் புலி.

Monday, 6 March 2017

சாரல் துளிகள்


பெருமழையொன்றின் நீட்சியாய் அத்தனைத்துளிகளிலும் உருகி வழிகிறது விசும்பு.

தூக்கமற்றுப்புரளும் நோயாளியின் கனத்த இரவைப்போல் நீள்கிறது மழை கனத்துத்ததும்பும் இந்தப் பகலும்.

சற்றுமுன் வரை தன்னுள் கொண்டிருந்த அத்தனைக்கனவுகளையும் கரைத்துக்கொண்டு காலகாலமாய் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது ரத்தம். இன்னுமா தீரவில்லை ஆயுதத்தின் பசி?

ஒரு சாம்பற்புழுதிப் படலத்தைப்போல் நகரைக் கவிந்திருக்கும் மெல்லிய பதற்றத்தைச் சட்டை செய்யாது கூண்டுக்குள் தானியமணிகள் கொறிக்கும் தவிட்டுக்குருவிகளின் மேல், மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது காரிரவு.

அடுக்ககத்தின் ஒரு பக்கத்திலமர்ந்து விருந்தறிவிக்கிறது காகம். யார் வீட்டுக்கென்று அனைவரையும் குழம்ப வைத்து விட்டு.

தன்னம்பிக்கை என்பது..
மலை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் மரத்தின் நுனிக்கிளையில் கூடு கட்டும் பறவையிடம் இருப்பது.

சிறு பொறி பெருந்தீபமாய் ஔி பரப்பிக்கொண்டிருக்கிறது. இனி இருண்மைக்கிடமில்லை.

மீளாத்தூக்கமும் ஒரு விடுதலையே..

ஏதோவொரு கான்க்ரீட் வனாந்திரத்திலிருந்து கீச்சிடும் குஞ்சுப்பறவைக்கு, உச்சிவெயிலில் நகரத்தின் ஒரு தெருவில் ஒலிக்கும் குல்ஃபி வண்டி குளுமையைப் போர்த்தி விடுகிறது.

ஒரு கொக்கைப்போல் விண்ணேகும் இறகுப்பந்தின் முன் விரிந்திருக்கிறது முன்னெப்போதோ கோலோச்சிய சுதந்திர வானம். எனினும், வாய்த்ததென்னவோ மட்டையிலடிபடும் ரணகள வாழ்வுதான்.

Monday, 30 January 2017

குள்ராட்டி - புத்தக விமர்சனம்

இணையத்தின் படக்கொடைக்கு நன்றி
தான் வாழும் காலகட்டத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் படைப்பாளி, தன்னைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை, தன் மண்ணின் பெருமையையும் சேர்த்தேதான் பதிவு செய்கிறார். அந்த வகையில்  தான் பிறந்த நெல்லைச்சீமையின் கீழாம்பூரையும் அதன் சுற்று வட்டாரக் கிராமப்பகுதிகளையும் அங்கே நடமாடும் மனிதர்களையும் மண்ணின் மணத்தோடு ஏக்நாத் தன் சிறுகதைகளில் நம் கண் முன்னே கொண்டு வந்து "குள்ராட்டி" என்ற தொகுப்பாய் நிறுத்தியிருக்கிறார். இவர் "ஆடுமாடு" என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். கிராம வாழ்க்கையின் யதார்த்தம் தொட்டு எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் வாழ்வியலில் ஒரு புதிய தரிசனத்தை நமக்குக் கிடைக்கச்செய்கிறது. 

தெற்கத்திக் கிராம வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட இச்சிறுகதைகளில், அதற்கேயுரிய, பரம்சம், பத்தாடி மவன், ஆறுமாச்சி, நைன்த் பி முப்புடாதி பிள்ள, போன்ற பெயர்களோடு அவர்களுக்கேயுரிய மொழிவழக்குமாக கிராமிய மணம் வீசுகிறது. பொசுக்கென்று பொங்குவதும் அதே வேகத்தில் சட்டெனத் தணிவதுமான இந்த மனிதர்களின் ஈரமனசின் ஒரு துளிதான் “மூணு பொட்டுச் செவளை”. ஊர் வம்பெல்லாம் விலைக்கு வாங்கி வந்து தன்னைப் பாடாய்ப்படுத்தும் அந்த நாலு கால் ஜீவனை வாய்க்கு வாய் “அர்தலி” என்று திட்டித்தீர்த்தாலும், “விக்கதுக்காய்யா நான் மாடு வளக்கேன்?” என்று ஊர் மக்களிடம் சுள்ளென்று கோபப்படும் அதே கதை நாயகன்தான், இரவோடிரவாக கயிற்றை அறுத்துக்கொண்டு போகும் அந்த மாட்டை, “வந்தம்ன்னா முதுகு தொழிய பிச்சுருவேன்” என்று திட்டியபடி துரத்தியோடுகிறான். செய்வதையெல்லாம் செய்து விட்டு அப்பாவி போல் நிற்கும் அந்த வாயில்லா ஜீவனோடு அவன் படும் பாடு இருக்கிறதே.. கதை முழுக்க அங்கதச்சுவை தாண்டவமாடுகிறது.  ஒரு கட்டத்தில், அந்த செவளையைப் பார்த்து "க்க்கியே.. சொன்னவ்டி கேக்க மாட்டியா? என்னா செர படுத்துத" என நாமே அலுத்துக்கொள்வோம் போல் ஓர் உணர்வு :-)

கிராம மக்களைப்பொறுத்தவரை கால்நடைகளும் குடும்பத்தில் ஓர் அங்கம்தான். பாபநாசம் மலைக்கு மேலிருக்கும் “குள்ராட்டி” எனப் பெயர் மருவிய குளிர்ஆட்டிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட இடத்தில் சொந்தக்காரருக்குத் தெரியாமல் விற்கப்பட்ட பசுமாடு, எதிர்பாராமல் நடுச்சாலையில் தனது முன்னாள் சொந்தக்காரனை கண்டு கொண்டு தன் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் வாசிப்பவர் கண்களில் நிச்சயமாக ஈரம் படரச்செய்யும்.

உணர்வுகளால் பந்தாடப்படும் இந்த எளிய மனிதர்களின் அலைக்கழிப்பை இதை விட அற்புதமாகச் சொல்லி விட முடியாது. மந்திரமூர்த்தி கோயில் கொடையில் வேட்டி கட்டு முறையைத் திருப்பிச் செய்ய முடியாமல் கருக்கலில் மனைவியுடன் ஊரை விட்டுச் செல்லும் பூச்சிக்கண்ணனாகட்டும், பார்வதி தன்னைக்காதலிப்பதாகக் கனவில் திளைத்து நித்தம் அலையும் முனியசாமியாகட்டும், தன் குடும்பத்தில் செத்தும் கெடுக்கும் அந்தக் கன்னி யார்? என்ற கேள்விக்கு விடை தேடிக்குமையும் லட்சுமியாகட்டும், டிம்சனக்கா என்று அழைக்கப்படும் அம்பிகாபதியாகட்டும்,, ஒரு கணம் நம் முன் வந்து, “என்னா? கெதியாயிருக்கியளா?” என்று கேட்டு விட்டுப் போகிறார்கள். 

“தெரியாமச் சொல்லிட்டேன் விடுங்க” என்றால் கூட, ஏழு தெருவுக்குக் கேட்கிறமாதிரி, “அதெப்படி நீ தெரியாமச் சொல்லலாம்’ என்று அழிச்சாட்டியம் செய்கிற மக்களுக்கு, மச்சான் கொழுந்தியா என்ற உறவு முறையில் காதலித்துக்கொண்டிருக்கும் இளஞ்ஜோடிகளை, வேறொரு உறவு முறையில் அவர்கள் அண்ணன் தங்கை எனச்சொல்லி பட்டுக்கத்தரித்தாற்போல் பிரிக்கவும் தெரியும். ‘தாய் முறையோ.. நாய் முறையோ’ என நெல்லைச்சீமையில் சொல்வார்கள். அதாவது தாய் தந்தை என இருவரின் வழியிலும் ஒருவர் உறவினராக இருந்தால், தாய் வழியில் வரும் உறவு முறையைக் கணக்கில் கொள்ளாமல் தந்தை வழி உறவு முறைப்படிதான் அவரை அழைக்க வேண்டுமென்பார்கள். வீட்டினர் விரும்பாத காதலென்றால் அவர்களைப்பிரிக்க பிரிக்க தாய் வழி உறவு முறையையும் கொள்ளலாமென்பது “முறைகள்” மக்களின் கணக்கு. ஆனால், கும்பிடும் கடவுளான பூதத்தாராகவே இருந்தாலும், தன் தாத்தாவின் முகத்தை அணிந்து விட்டதால் இனிமேல் அவரும் சேக்காளிதான் என்பது ஒரு பேரனின் கணக்கு.

வாசிக்குந்தோறும் நம்முன் விரிந்து செல்லும் ஏக்நாத்தின் மண்ணிலிருந்து ஒவ்வொரு கதையாக முளைத்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் மிகச்சாதாரண சம்பவங்கள் அசாதாரணமாகவும் அமைந்து விடுகின்றன. எவ்விதமாகவும் அணி செய்து கொள்ளாமல் அவற்றை உள்ளது உள்ளபடி உரைத்துச்செல்லும் அவரது மொழியில், புதிய எளிய அழகில் சொல்லப்பட்டிருக்கிறது அவ்வுலக மாந்தர்களின் காதல், சூழ்ச்சி, அறியாமை, பாசம், கண்ணீர் நிரம்பிய வாழ்வியல். அவற்றின் தொகுப்பே “குள்ராட்டி”. 

ஆசிரியர் : ஏக்நாத்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை :50
ஆன்லைனில் வாங்க: உடுமலை.காம்,  New Horizon Media

Sunday, 29 January 2017

வரத விநாயகர் (அஷ்ட விநாயகர்-மஹட்)

பிள்ளையாரை இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ள மராட்டிய மக்கள், பூனாவின் சுற்றுப்புறப்பகுதிகளில் அமைந்திருக்கும் எட்டுப் பிள்ளையார்களை மிகவும் முக்கியமானவர்களாகக் கருதி விரும்பி வணங்குகின்றனர். அக்கோயில்கள் மஹாராஷ்ட்ர மண்ணில் “அஷ்டவினாயக்” எனக் குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் தம்பிக்கு அறுபடை வீடு எனில் அண்ணனுக்கோ மராட்டிய மண்ணில் எட்டு வீடுகள். இவற்றைத் தரிசனம் செய்ய இங்குள்ள மக்கள் குழுவாகவோ குடும்பத்தினருடனோ “அஷ்டவினாயக் யாத்ரா” செல்வது வழக்கம். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தாலும் கிளம்பி விடுவார்கள். இங்குள்ள ட்ராவல் ஏஜென்சிகளின் சுற்றுலா நிரல்களில் இந்த யாத்ராவிற்கு முக்கிய இடமுண்டு.
வரவேற்பு வளைவு
இளம் தொழிலதிபர்கள்
“மஹட்” என்னுமிடத்திலிருக்கும் வரத வினாயகர் அஷ்ட வினாயகர்களில் நான்காமவர் ஆவார். மஹட் பூனாவிலிருந்து 85 கி.மீ தொலைவிலும் மும்பையிலிருந்து 63 கி.மீ தொலைவிலுமிருக்கிறது. புதிய மும்பை-பூனா ஹைவேயில் பன்வெல்லைக் கடந்ததும் சற்றுத்தொலைவில் மஹடுக்கான பாதை பிரிகிறது. இச்சாலை மும்பை-பன்வெல்-கோப்போலி ரோடு எனவும் அறியப்படுகிறது. இரண்டு டோல் சந்திப்புகளைக் கடந்து பளிங்கு போன்ற வழவழப்பான சாலையில் பயணித்தால் சிறிது நேரத்தில் வலது புறம் அலங்கார வளைவு நம்மை மஹடுக்கு வரவேற்கிறது. கோவிலுக்கு முன்புறம் வாகனங்களை நிறுத்த மைதானம் இருக்கிறது. சிறு கட்டணம் செலுத்தி, வாகனத்தை நிறுத்தி விட்டு இருபுறமும் இருக்கும் கடைகளை வேடிக்கை பார்த்தபடியே இரண்டு நிமிடம் நடந்தோமானால் கோவிலின் முன்புறத்துக்கு வந்து சேர்ந்து விடலாம். காலணிகளைப் பாதுகாக்கவென்று லாக்கர் வசதி எதுவும் இங்கே காணப்படவில்லை. சிறு ஷெல்புகளில் வைத்து விட்டு கோவிலுக்குள் போக வேண்டியதுதான். 
கோவிலின் முன்வாயில்
கருவறையிலிருக்கும் பிள்ளையார், அருகில் தனிச்சன்னிதியில் இருக்கும் சிவன், அம்பாள் இவர்களைத்தவிர வேறு சன்னிதிகள் எதுவும் இங்கே கிடையாது. நவக்கிரகங்களையும் அன்னதானக்கூடத்தின் அருகேயிருக்கும் தத்தரையும் போனால் போகிறதென்று ஒத்துக்கொள்ளலாம். மூர்த்தி சிறிதானாலும் இக்கோயிலின் கீர்த்தி பெரிது. காலை ஆறுமணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு மக்கள் சாரிசாரியாக வந்து தரிசித்துச்செல்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் நெருக்கியடிக்கும் கூட்டத்தில் கம்பித்தடுப்பு வழியே ஊர்ந்து சென்று முதலில் அப்பனையும் அம்மையையும் வணங்கினோம். அம்மையப்பன் சன்னிதி வாசலின் வலது புறம் பிள்ளையாரும் இடது புறம் விஷ்ணுவும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு சிந்தூரத்தால் மெழுகி மூடப்பட்டிருந்தார்கள். சிற்பக்கலையின் நுட்பங்கள் எதுவும் இல்லாத,.. இருந்தாலும் நம் கண்ணுக்குப் புலப்படாத மொழுமொழு மூர்த்தங்கள் மராட்டியக்கோவில்களின் சிறப்பு.

அம்மையப்பனை வணங்கி இடது புறம் திரும்பினால் வரத வினாயகரின் தனிச்சன்னிதி. இதன் நான்கு புறமும் ஒவ்வொரு ஜோடி யானைகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவை காவல் புரிவதாக ஐதீகம். வெள்ளித்திருப்பணி செய்யப்பட்டிருக்கும் குறுகிய வாயிலைக் கடந்து உள்ளே போகிறோம். நம் வரதுக்குட்டி சித்தி புத்திகளுடன் கிழக்கு நோக்கி, இடஞ்சுழி தும்பிக்கையுடன் ஜம்மென்று வீற்றிருக்கிறார். அவர் முன் 1892-லிருந்து தொடர்ந்து ஒளிரும் அணையாவிளக்கொன்று இருக்கிறது. பக்தர்கள் தாம் கொண்டு வந்த மலர்மாலைகளை தம் கையாலேயே அவருக்குச் சூட்டலாம். மற்ற காணிக்கைகளான பேடாக்கள் மற்றும் தேங்காய்களை பண்டிட்டுகள் வாங்கிப் படைத்து விட்டு, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். நாங்களும் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டு, “எல்லோரையும் காப்பாத்து” என்ற வழக்கமான பிரார்த்தனையைச் சொல்லிக்கொண்டு கண்ணும் மனமும் நிறைய அவரைத் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தோம். பிரசாதம் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. முன்னெல்லாம் இங்குள்ள கோவில்களில் பேடா எனப்படும் பால் இனிப்புதான் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. தென்னாட்டுக்கோவில்களின் தாக்கமோ என்னவோ!!.. இப்பொழுது ஆறு லட்டுகள் கொண்ட பாக்கெட் பிரசாதமாக விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஷிர்டியிலும் இதே கதைதான். வெளிப்படி இறங்கியதும் இடது பக்கம் யாத்ரீகர் நிவாஸும் அன்னதானக்கூடமும் வலப்புறம் குடிநீர்க்குழாய்களும் திருக்குளமும் அமைந்துள்ளன. வெளியே வந்தபின்னும் சி.சி.டி.வி மூலமாக வரதுக்குட்டியின் தரிசனம் நமக்குக் கிடைப்பது விஞ்ஞான வளர்ச்சியின் பலனே.
கோவிலின் பின்புற வாயில்


திருக்குளம்
வரதவினாயகர் என்ற பெயருக்கேற்ப கேட்கும் வரங்களையெல்லாம் அள்ளியள்ளித் தரும் வரப்பிரசாதியான இந்தப்பிள்ளையார் சுயம்புமூர்த்தி. கோவிலையடுத்துள்ள குளத்தில் கி.பி.1690ல் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கி.பி. 1725ல் மராட்டிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் சுபேதார் ராம்ஜி மஹாதேவ் பிவள்கர் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் அக்குளத்தின் கரையிலேயே அமைந்திருக்கிறது.

கோவிலுக்குக் கதை இல்லாமல் இருக்குமா? இருக்கிறதே.. முன்னொரு காலத்தில் கௌடின்யபூரின் இளவரசரான ருக்மாங்கதர், வேட்டைக்குச் சென்றபோது வழியில் வசக்நவி முனிவரின் ஆசிரமத்தில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொண்டார். முனிவரின் மனைவியான முகுந்தா, இளவரசரின் அழகில் மயங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். இளவரசர் மறுத்துவிட, இதற்கென்றே காத்திருந்தாற்போல்.. யார் எவ்வளவு அடித்தாலும், அவமானப்படுத்தினாலும் தாங்கும் இந்திரன் ருக்மாங்கதரின் உருவெடுத்து வந்து முகுந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினான். பலனாக கர்ப்பமடைந்த அவள், க்ருத்ஸமத் என்றொரு மகனைப்பெற்றெடுத்தாள். அறிவிற்சிறந்த அவன், அறிஞர்கள் கூடியிருந்த சபையில் ஒரு சமயம் அவமானப்பட்டு, தன் தந்தை யார்? என அன்னையிடம் வினவியபோதுதான் தான் ருக்மாங்கதரின் மகன், வசக்நவி முனிவரின் மகனல்ல என்றறிந்தான். 
விதவிதமாய் வினாயகர்
தனது பிறப்பின் ரகசியமறிந்தவன் கோபமுற்று தன் அன்னையை, “நீ முட்கள் நிரம்பிய இலந்தை மரமாக மாறுவாயாக” எனச்சபித்தான். காட்டில் தானாக வளர்ந்து நிற்கும் இந்த இலந்தை மரத்தை மராட்டியர்கள் bhor என அழைப்பார்கள். “பெற்ற அன்னையை சபித்த உனக்கு ஒரு ராட்சசன் மகனாகப் பிறப்பானாக” என அவளும் சபித்தாள். அச்சமயம், ‘க்ருத்ஸமத் இந்திரனின் மகன்” என அசரீரி கூறியது கேட்டு இருவருமே தலையில் இடி விழுந்தாற்போல் அதிர்ந்து போனார்கள். அடக்கடவுளே!!.. இந்திரன் இப்படி மோசம் செய்வானென்று முகுந்தா அறிந்திருந்தாளா என்ன?. மகனின் சாபம் பலித்து அவள் இலந்தை மரமானாள். மகனோ பெற்றவளைச் சபித்த பாவம் நீங்க, இன்றைய மஹடான அன்றைய மணிபத்ர காட்டில், “ஓம் கண்கணபதயே நமஹ” எனும் மந்திரத்தை உச்சரித்தபடி பிள்ளையாரை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தார். தவத்திற்கு மெச்சிய பிள்ளையார், “வேண்டிய வரங்களை எந்த உச்சவரம்புமின்றிப் பெற்றுக்கொள்” என தாராள மனத்தோடு செப்ப, க்ருத்ஸமத்தும், தன் மேல் விழுந்த பழிச்சொல்லும் தனது பாவமும் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டதோடு கொசுறாக, “எக்காலமும் இங்கேயே எழுந்தருளியிருந்து மக்களுக்கு வேண்டிய வரங்களை அருள வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார். அந்தப்படியே அவர் இங்கே எழுந்தருளினார். தரிசிப்பவர் வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவதால் வரதவினாயகர் எனப் பெயரும் பெற்றார்.
குளத்தின்  அக்கரையிலிருந்து கோவிலின் தோற்றம்
மும்பை-பன்வெல்-கோப்போலி ரோட்டில் சற்று உள்வாங்கி அமைந்திருக்கும் இந்தக்கோயிலுக்கு ரயில் மார்க்கமாகச்செல்ல வேண்டுமென்றால் கர்ஜத் அல்லது கோப்போலி ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமோ அல்லது டாக்ஸி மூலமோ செல்லலாம். இந்த ஊரில் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதியான ஹோட்டல்கள் கிடையாது. கோவிலின் பின்பக்கம் அன்னதானக்கூடம் அருகே இருக்கும் நிவாஸில் தங்கிக்கொள்ளலாம். கோவிலின் வலதுபக்கமும் தங்குமிடமொன்று ,,,,,ஹோட்டல் என்ற பெயர்ப்பலகையைச் சுமந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கோப்போலி ரோட்டிற்கு வந்து விட்டால் கோவிலிலிருந்து இரண்டு கி.மீ தொலைவுக்குள் நல்ல ரிசார்ட்டுகள் இருக்கின்றன. கோவிலின் சார்பாக தினமும் அன்னதானமும் நடைபெறுகிறது. தவிர, முன்பதிவு செய்துகொண்டால் ஊர்மக்களும் சாப்பாடு ஏற்பாடு செய்து தருகிறார்கள் என அறியப்படுகிறது. வழக்கமான உணவு போதுமென்றால் ரிசார்ட்டுகளையும் ஹோட்டல்களையும் நாடலாம்.. அதுவே மராட்டிய மண்ணின் பாரம்பரிய உணவைச் சுவைக்க வேண்டுமானால் ஊர்மக்களிடம் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
அக்கரையிலிருக்கும் பாண்டுரங்கன் துணைவியுடன்
அஷ்டவினாயகர்களில் ஒருவரானதால் அருள் வழங்குவதில் வருடம் முழுவதும் பிஸியோ பிஸி. கூடுதலாக மராட்டிய மாதமான பாத்ரபத் (Bhadrapath - ஆகஸ்ட்-செப்டம்பர்) மற்றும் மாக்(Magha  - ஜனவரி-பெப்ரவரி) மாதங்களில் கோவிலில் விழாக்காலம். சனிக்கிழமை கோவிலுக்குச் செல்லும் வழக்கப்படி இன்று வரதரை சந்திக்கச்சென்றோம். வருகிற 31-ம் தேதி கணேஷ் ஜெயந்தி வருவதையொட்டி கோவில் புது அலங்காரம் கண்டிருந்தது. அடித்த பெயிண்ட் கூட இன்னும் காயவில்லை. முன்மண்டபத்தில் தம்பதியராக அமர்ந்து ஒரு ஜோடி பூஜை செய்து கொண்டிருந்தது. மாக் மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதி பிள்ளையாரின் பிறந்த நாளாக மராட்டியர்களால் கொண்டாடப்படுகிறது. இதை தில்குட் சதுர்த்தி எனவும் அழைப்பார்கள். மஞ்சள் அல்லது சிந்தூரத்தினால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜித்து நாலாம் நாளன்று நீரில் விசர்ஜன் செய்வார்கள். அன்று உணவில் எள்ளும் சேர்த்துக்கொள்ளப்படும். இந்த சதுர்த்தியையும் வழக்கமாக செப்டம்பரில் கொண்டாடப்படும் சதுர்த்தியையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. 

பார்வதி நீராடச்சென்றபோது பாதுகாவலனாக இருந்த பிள்ளையாரின் தலை, சிவனால் துண்டிக்கப்பட்டு மறுபடியும் யானைத்தலை பொருத்தி உயிர்பெற்ற நாளே செப்டம்பர் மாத சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. எல்லாம் ஒரே நாளில் நடந்தவைதானே, பிறகேன் இத்தனை மாத வித்தியாசம்? என ஆராய்தல் அறியாமை. நமது காலக்கணக்கும் கடவுளரின் காலக்கணக்கும் வெவ்வேறு எனத் தெளிவதே அறிவு. வேண்டுமானால் மாக் சதுர்த்தியை குளிர்கால வினாயகர் சதுர்த்தி எனக்கொள்ளலாம். செவ்வாயன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பு. இங்குள்ள மக்கள் விரதமிருந்து “அங்காரக சதுர்த்தி” எனக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். மும்பையிலிருக்கும் சித்தி வினாயக் போன்ற பெரு நகரங்களின் பெரிய கோவில்களில் எள் போட்டால் விழாத அளவுக்குக் கூட்டம் நெருக்கும். ஆகவே, அரச மரத்தடியில் காற்றோட்டமாக அமர்ந்து அருள் பாலிக்கும் பிள்ளையார்களை, கூட்ட நெரிசல் ஏதுமில்லாமல் நாமும் தரிசித்து அருள் பெறுவோமாக. 

கணபதி பப்பா.. மோர்யா.
மங்கள் மூர்த்தி.. மோர்யா.

LinkWithin

Related Posts with Thumbnails