Thursday, 12 July 2012

பூந்தோட்டம்.. (12-7-2012 அன்று பூத்தவை)


துளசி: உடல் எடை கூடிக்கிட்டே போகுதே!!.. எப்படிக்குறைக்கிறதுன்னு கவலைப்பட்டு ஜிம்மைத்தேடி இனிமே ஓட வேண்டாம். நல்லா காரமா சாப்பிட்டுக்கிட்டே எடையைக் குறைக்கலாம். ஆமாம்.. சிவப்பு மிளகாய்ல இருக்கற கேப்ஸைஸின் என்ற வேதிப்பொருள், கொழுப்பைக் கரைச்சு  உடல் எடையைக் குறைக்க உதவுதுன்னு மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துல இருக்கற உணவு விஞ்ஞானியான வைட்டிங் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்கார்.
இந்த கேப்ஸைஸினின் உதவியால் நம்ம உடம்பில் சூடு அதிகமாகி அதனால் அட்ரீனலின் சுரப்பு அதிகமாக்கப்பட்டு இறுதியில் மூளைக்கு கொழுப்பைக் கரைக்கும்படி உத்தரவு கிடைக்குது. தனக்குக் கிடைச்ச உத்தரவைச் செயல்படுத்தும் மூளை உடம்புல இருக்கற கொழுப்பு செல்களை அழிக்கும்படி அடுத்த கட்ட உத்தரவை தன்னோட பணியாட்களான உடலின் இதர இயக்கங்களுக்குக் கொடுக்குது. இதனால உடம்பின் எல்லாப் பாகங்கள்லயும் கொழுப்பு கரைக்கப்பட்டாலும் வயிற்றுப்பகுதியில் இருக்கற கொழுப்புத்தான் முக்கியமா கரைக்கப்படுதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. ஆகவே இனிமே உடம்பின் கொழுப்பையும் எடையையும் குறைக்கணும்ன்னா டயட்ங்கற பேர்ல பட்டினி கிடந்தோ, ஜிம்முக்குப்போயி உடம்பை வருத்திக்கவோ தேவையில்லை,.. நல்லாக் காரமாச் சாப்பிட்டே குறைக்கலாம்.

சோன் டக்கா: மும்பையை எப்படியாவது குப்பையில்லா நகரமாக்கியே தீரணும்ன்னு எங்க மாநகராட்சி கங்கணம் கட்டிக்கிட்டிருக்கு. நாளைக்கு நடக்கப்போற பொதுக்கூட்டத்துல, தங்களோட இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமா குப்பையில்லாம வெச்சுக்கற அபார்ட்மெண்டுகளுக்கும், என்.ஜி.ஓக்களுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும் சொத்து மற்றும் தண்ணீர் வரிகளில் சலுகை வழங்கப்படும்னு தீர்மானம் கொண்டு வரப்போறாங்க. இந்தத்தீர்மானம் மட்டும் நிறைவேறிடுச்சுன்னா, இன்னும் மூணு மாசத்துல இதை அமலுக்கும் கொண்டாந்துருவாங்க.

இன்னும் பத்தாயிரம் இடங்கள்ல புதுசா குப்பைத்தொட்டிகள் வைக்கப்போறதாவும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்குன்னு தனித்தனியா வெச்சு, மக்கும் குப்பைகளை உரத்துக்கும் மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கும் அனுப்பப் போறதாவும் சொல்லிட்டிருக்காங்க. கேக்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

மகிழம்பூ: “வல்லமை” மின்னிதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு படைப்பாளியை, வல்லமையில் எழுதப்பட்ட அவர்களோட படைப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் வல்லமையாளர் விருது திரு. இன்னம்பூரார் ஐயா அவர்களால் இந்த வாரம் எனக்கு வழங்கப்பட்டிருக்குது. வல்லமை இதழில் நான் எழுதி வெளிவந்த மந்திரச்சொல் என்ற கவிதைக்காக இந்த விருது கிடைச்சுருக்குது. மிக்க நன்றி இன்னம்பூரார் ஐயா. 

வேப்பம்பூ: நேத்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சி உண்மையிலேயே நிறையப்பேரை அதிர வெச்சுருக்கும். உ.பியில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவர் பார்க்க வேண்டிய தையல் போடுதல், மற்றும் இஞ்செக்ஷன் கொடுக்கறது போன்ற வேலைகளை ஒரு வார்டு பாய் செஞ்சுட்டிருந்த காட்சிகளைத்தான் சொல்றேன்.

அவங்கல்லாம் மருத்துவப் பயிற்சி பெற்றவங்கதான்னும், சுமார் பத்து வருஷங்களாவே வெளி நோயாளிகள் பிரிவில் அவங்க நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்காங்கன்னும் கொஞ்சம் கூட தயக்கமில்லாம இயல்பா அந்த மாநிலத்தோட அதிகாரிகளும் அமைச்சர்களும் சப்போர்ட்டாச் சொன்னது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லாம் சரி,.. அவங்கல்லாம் அந்தளவுக்கு மருத்துவ அனுபவம் இருக்கறவங்கன்னா, பிரதம மந்திரி, அமைச்சர்கள், முதலமைச்சர்களுக்கும் இதே மாதிரி மருத்துவச் சேவை செய்வாங்களா?ங்கற கேள்விக்குத்தான் பதிலில்லை. இந்தப் பாக்கியமெல்லாம் நம்மைப் போன்ற சாமான்ய மனுஷங்களுக்குத்தான் கிடைக்கும் போலிருக்கு.

எருக்கம்பூ: எத்தனைதான் சட்டங்கள் கொண்டாந்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறையற வழியைக் காணோம். பெண் சிசுக்கள் பிறந்தப்புறம் அழிக்கிறது பத்தாதுன்னு கருவிலேயேயும் அழிச்சுடறாங்க, ஆண் குழந்தை மோகம் அந்தளவுக்கு மக்களோட கண்ணை மறைச்சுருக்கு. இதுக்கு சில டாக்டர்களும், அல்ட்ரா சவுண்ட் என்ற அறிவியல் முன்னேற்றமும் துணை போறதுதான் வேதனை. இதைப்பத்தி விரிவா ஒரு பதிவே எழுதலாம். அந்தளவுக்கு விஷயமிருக்கு.
படங்கள் அளிச்ச கூகிளக்காவுக்கு நன்றி
இனிமே அப்படி, ஆணா பெண்ணான்னு கண்டறிஞ்சு பெண் குழந்தைகளை அழிக்கற பெற்றோர்களையும், அப்படிச் செய்யக் கட்டாயப்படுத்தற சுற்றத்தாரையும், கொலைக்குற்றம் சாட்டி, ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கலாம்ன்னு இ.பி.கோ செக்ஷன் 302ல் திருத்தம் கொண்டாரணும்ன்னு எங்க மாநில அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்போவதா எங்க சுகாதார அமைச்சரான சுரேஷ் ஷெட்டி சொல்லியிருக்கார். ஆண் குழந்தைகள்தான் பெத்தவங்களைக் காப்பாத்தும், பெண் குழந்தைகள் பெத்தவங்களுக்குச் சுமைங்கற இந்த மன நிலையிலிருந்து மக்கள் வெளி வரணும். அப்பத்தான் இதுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

Tuesday, 3 July 2012

மும்பைக்கு வந்த தாய்லாந்து

தாய்லாந்துலேர்ந்து நம்ம தாய்நாட்டுக்கு வந்துர்க்காங்க இவங்க. ஊரு முழுக்க பத்தடிக்கு ஒரு வெளம்பரம் ஒட்டியும், ரோட்டுல வெளக்குக் கம்பங்கள்ல எல்லாம் பேனர் கட்டியும்,.. "வாங்க.. வாங்க"ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. நாலு நாள்தான் எங்களுக்கு மும்பை வாசம், அதுக்கப்புறம் பொட்டியைக் கட்டிட்டுக் கிளம்பிட்டோம்ன்னா அடுத்த வருஷம்தான் வருவோம். அதனால அதுக்குள்ள வந்து கண்டுக்கிட்டுப்போங்கன்னு கூவிக்கூவிக் கூப்பிடறச்சே போய்த்தான் பார்ப்போமேன்னு தோணுச்சு.
இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே நல்லுறவை வளர்க்கறதுக்காகவும், பொருளாதார, வியாபார,  கலாச்சார இத்யாதி தொடர்புகளை ஏற்படுத்திக்கிறதுக்காகவும் வந்துருக்காங்க. இங்கே மும்பையின் கஃப பரேட் பகுதியில் இருக்கற உலக வர்த்தக மையத்துலதான் வருஷாவருஷம் கண்காட்சி நடக்கும். கண்காட்சியின் கடைசி நாள் வீக் எண்டாவும் அமைஞ்சுட்டதால் எங்களுக்கு வசதியாப்போச்சு. கண்டுக்கிட்டு வரலாம்ன்னு கிளம்பினோம்.

வீட்லேருந்து மின்சார ரயில்ல வி.டின்னு அப்பவும் சி.எஸ்.டி.ன்னு இப்பவும் அழைக்கப்படற எங்கூரு பெரிய ரயில் நிலையத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். சி.எஸ்.டிக்கு பக்கத்துல இருக்கற பஸ் நிலையத்துலேர்ந்து  2 அல்லது 138-ம் நம்பர் பஸ்ஸைப்பிடிச்சா, மும்பையைக் கொஞ்சம் இலவசமா சுத்திக் காமிச்சுட்டு உலக வர்த்தக மையத்துக்கு எதிரிலேயே இறக்கி விட்ருவாங்க. நாம ரோட்டைக் கடந்து வர்த்தக மையத்துக்கு வந்துரலாம். இல்லைன்னா டாக்ஸி பிடிச்சு சுருக்கு வழியிலும்  வரலாம்.

எல்லாக் கண்காட்சிகள்லேயும் நடத்தற சம்பிரதாயப்படி உள்ளே நுழையறப்ப படிவம் நிரப்பிக்கொடுத்ததும், ஒரு ஸ்டிக்கரை நம்ம கிட்ட தராங்க. நம்ம வசதிப்படி கையிலயோ, அல்லது பாட்ஜ் மாதிரி தோள்பட்டையிலயோ ஒட்டிக்கணும். அப்பத்தான் அனுமதி. 

இங்கே கிடைக்கும் பொருட்களெல்லாம் தாய்லாந்துலயே தயாரிக்கப்பட்டு, கப்பல்ல கொண்டு வரப்படுது. சுமார் எண்பது கம்பெனிகள் இந்தத்தடவை கடை விரிச்சுருக்காங்க. அழகு சாதனப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், வீட்டு உபயோகப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள், ஃபேன்ஸி நகைகள், செயற்கை மலர்கள், கலைப்பொருட்கள், தாய் மசாலா மற்றும் சாஸ் வகைகள், ஸ்பாவுக்கான பொருட்கள்ன்னு அத்தனையும் கொட்டிக்கிடக்குது. படம் எடுக்கத்தான் அனுமதி இல்லை. அலங்காரப் பூக்கள் வெச்சுருந்த ஒரு கடையில் மட்டும் அனுமதி கிடைச்சது. வெரைட்டி இருந்தாலும் ஃபேன்ஸி நகைகளுக்கான கடைகள் மட்டுமே அதிகம் இருக்கறதால சட்ன்னு சுத்திப்பார்த்து முடிச்சுட்டோம். மரச்சுள்ளிகளைக் குடைஞ்சு செஞ்சுருந்த பென்சில் ரொம்பவே அழகாருந்தது. வித்தியாசமாவும் இருந்தது. அலங்காரப்பொருளா வெச்சுக்கலாம். 
இந்தியச் சந்தையை உலக நாடுகளுக்காக இந்தியா திறந்து விட்டுருக்கறதால, இதைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தொடர்புகளை வலுவாக்கறதுக்காக, தாய்லாந்து அரசின் நிதித்துறையே இந்தக் கண்காட்சியை நடத்துதுன்னு ரிசப்ஷன்ல இருந்த ஒருங்கிணைப்பாளர் க்வாங் தெரிவிச்சாங்க. இவங்க  பூனாவில் ஒன்பது மாசம் வசிச்சுருக்காங்களாம். இந்தியாவை ரொம்பப் பிடிச்சுருக்குன்னு சொன்னாங்க. ஹிந்தியும் கூட "தோடா..தோடா" தெரியுமாம்.  இந்தியாவைத்தவிரவும் கிழக்கு ஆசிய நாடுகள்லயும் கூட இந்தக் கண்காட்சி நடக்குதுன்னு ஒரு பெரிய லிஸ்டே வாசிச்சாங்க. 
தாய்லாந்தின் கவுன்ஸ்லேட் ஜெனரல்
சரி,.. இந்தியாவில் மும்பையில் மட்டுந்தான் இந்தக் கண்காட்சி நடத்தப்படுதான்னு கேட்டா.. இல்லையாம். இங்கிருந்து கிளம்பி  வர்ற அஞ்சாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரைக்கும் சென்னையிலும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரைக்கும் பெங்களூரிலயும் நடக்குமாம். மும்பையில் நடந்த விழாவின்போது தாய்லாந்தின் கவுன்ஸ்லேட் ஜெனரல் வந்து சிறப்பிச்சார்.

தினசரி மதியம் ரெண்டு மணிக்கு உணவுத்திருவிழாவும், அஞ்சு மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கும். இருந்து கண்டுக்கிட்டுப்போங்கன்னு கேட்டுக்கிட்டாங்க. லோட்டஸ் ப்ளாஸம்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட்.  மும்பையில் பார்ட்டிகளுக்கான தாய் உணவைத்தயாரிச்சுத்தரும் கேட்டரிங் பிரிவை இப்ப புதுசா ஆரம்பிச்சுருக்காங்க. அதுக்கான அறிமுக விழாதான் இந்த உணவுத்திருவிழா. தினசரி புதுப்புது தாய் உணவுகளை செஞ்சு காமிச்சு, மக்களுக்கு ருசி காமிச்சுட்டிருக்காங்க. கூடவே அவங்களோட போன் நம்பரும், இமெயில் அட்ரஸும் சேர்த்து அச்சடிச்ச மெனு கார்டையும் விளம்பிட்டிருந்தாங்க. பார்ட்டிக்கு கேட்டரிங் செஞ்சு தரணும்ன்னா தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும் இல்லையா.
பூ செஞ்சு காமிக்கும் குமரேசன்
இந்தக் குழுவில் இருக்கும் குமரேசன், காய்கறிச் சிற்பங்கள் செதுக்கறதுல எக்ஸ்பர்ட். ஒரு வருஷ ஒப்பந்தத்துல தாய்லாந்துல வேலை பார்த்துட்டு, இப்ப தாய்நாடு திரும்பியிருக்கார். இந்த ஹைதராபாத்வாசி இனிமே மும்பை வாசியாம். அவரோட கை வண்ணத்துல பூசணிக்காயிலும், தர்பூசணியிலும் ரோஜாக்களும் தாமரையுமாப் பூத்துக்கிடந்தன. பத்தாக்குறைக்கு பார்வையாளர்களுக்காக வெள்ளரியில் இலையும், கேரட்டில் பூக்களும் செஞ்சு காமிச்சும் அசர வைச்சார்.
குமரேசனின் கைவண்ணம்
கண்ணுக்கு விருந்து கிடைச்சாப்போறுமா?.. அலைஞ்சு திரிஞ்சு அலுத்துப்போய் கடைசியில் காண்டீனுக்குப்போய் வடாபாவும் டீயும் வயித்துக்குள்ள தள்ளிட்டு, கொஞ்சம் பர்ச்சேஸும் முடிச்சுட்டுக் கிளம்பினோம். கடைசி நாளாப்போனதால் பாதி நாள் கழிஞ்சதும் ஒவ்வொரு கடையிலும் பொட்டியைக் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. பேரம் பேச நல்ல வாய்ப்பு தெரியுமோ. முதல் நாள் விலையை ஒப்பிடும்போது, கடைசி நாள்ல பாதி விலைக்கு கொடுத்துட்டிருந்தாங்க. சென்னை, மற்றும் பெங்களூர் வாசிகள் வாய்ப்பைத் தவற விடாம ஒரு எட்டு போயிட்டு வாங்க..

Tuesday, 26 June 2012

என் காமிரா க்ளிக்கியவை... கல்கி புகைப்படக்கேலரியில்

சிறந்த புகைப்படக்கலைஞர்களை அவர்கள் எடுத்த படங்களுடன் "புகைப்படக்கேலரி" என்ற பகுதியில் வாராவாரம் கல்கியில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.


அந்த வரிசையில், இந்த வாரக் கல்கியின் புகைப்படக்கேலரியில் என்னுடைய காமிரா பிடித்து வைத்த சில தருணங்கள் வெளியாகியிருக்கின்றன. 

எத்தனை ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்தாலும், ஒரு சில படங்கள் நமக்கு பிரத்தியேகமான விருப்பப் படங்களாக அமைந்து விடுவதுண்டு. அந்த வகையில் ஃப்ரூட்டி அருந்தும் குட்டிப்பாப்பாவின் இந்தப் புன்னகைப்படம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. ஏனென்று பேட்டியிலேயே சொல்லியிருக்கிறேன் :-)
அதே மாதிரி, என் தம்பியின் பெண் சார்மிஷாவின் இந்தப்படமும் ரொம்பப் பிடிக்கும். செம சுறுசுறு பார்ட்டி அவங்க. இந்தப்படம் எடுக்கும்போது, 103 டிகிரி காய்ச்சல். அதன் எந்த அறிகுறியாவது தெரிகிறதா பாருங்கள்.  சித்தப்பாவின் அரவணைப்பில் உற்சாகப்பூவாய்ச் சிரித்துக் கொண்டிருகிறாள்.
பத்திரிகையில் தன்னுடைய படத்தைப் பார்த்து விட்டு, காலையிலேயே போன் செய்து, "அத்தை,.. போட்டோல நான் ஈஈ..ன்னு சிரிச்சுட்டிருக்கேனே" என்று சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள் :-)

நமது உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை இன்னும் உற்சாகமாக இயங்க வைக்கும் என்பது மிகவும் உண்மை. அந்த வகையில் கல்கி கொடுத்திருக்கும் இந்த அங்கீகாரத்திற்கு மிக்க நன்றிகள்.

பேட்டியெடுத்து கல்கியில் வெளியிட்ட 'பிட்'ஆசிரியர் ஜீவ்ஸ் என்ற ஐயப்பன் கிருஷ்ணனுக்கும், பத்திரிகையில் பார்த்தவுடன் குழுமத்தில் பகிர்ந்து வாழ்த்திய வல்லமை குழும நண்பர் இளங்கோவனுக்கும், பத்திரிகை வெளியாகுமுன்பே ஆன்லைனில் பார்த்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பியும், குழுமத்தில் பகிர்ந்தும் வாழ்த்திய ராமலக்ஷ்மிக்கும் நன்றிகள்..

Thursday, 21 June 2012

ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா..

ரயில், கடல், யானை இதெல்லாம் மட்டுமல்ல இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் தெறிக்கும் அழகையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அவற்றில் சூரிய உதயாஸ்தமனங்களை ரசிப்பது போல் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. நிமிடத்துக்கு நிமிடம் சட்சட்ன்னு தன்னோட அலங்காரத்தை மாற்றிக்கொள்ளும் வானத்தின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதென்னவோ சூரியக்காதலனைப் பார்த்து விட்டால் மட்டும் எங்கிருந்துதான் இத்தனை வெட்கம் வந்து விடுமோ???.. நாணிக்கோணி சிவந்தே போய் விடுவாள் அந்த ஆகாயப்பெண்.. 

தனித்தனியாகவே அழகில் அசத்தும் இவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டால் கேட்கவா வேண்டும். என்றுமே பிரியாத இந்தக்கூட்டணியின் ஆட்சியில் வரையப்பட்ட அழகோவியங்களில் ரசித்தவற்றைப் பிடித்து வந்திருக்கிறேன். அவற்றில் சில ..

ஃப்ளிக்கரில் ரொம்பவே வரவேற்பு கிடைச்சது இந்தப் படத்துக்கு.
http://www.flickr.com/photos/66281151@N07/6286827116/in/photostream

பின்னி எடுத்துருக்குது அழகு..

இத்தனைப் படகுகளையும் பத்திரமாப் பார்த்துக்கணுமாம் நான் :-)

 நிறையப்பேருக்குப் பிடிச்சுப்போன இன்னொரு வானம்.. http://www.flickr.com/photos/66281151@N07/6754357891/in/photostream

இரவா.. பகலா..

ஜொலிக்கும் வைரம்..
http://www.flickr.com/photos/66281151@N07/7256788006

சூரியனுக்கே பன்னீர் தெளிக்கிறார்..
http://www.flickr.com/photos/66281151@N07/6231002675

மஞ்சள் பூசிக்கொண்ட மஞ்சுகள்..
http://www.flickr.com/photos/66281151@N07/6754357891/in/photostream

Friday, 15 June 2012

மும்பை ரயில் நிலையங்களில் ஆரம்பிச்சுருக்கும் புரட்சி..

"இனிமேல் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள்ல ப்ளாஸ்டிக் பையில் அடைத்த உணவுப்பொருட்களை விற்பது தடை செய்யப்படுவதால் யாரும் இந்த உத்தரவை மீறக்கூடாது. ஜூன் ஒண்ணாம் தேதியிலிருந்து இந்த தடையுத்தரவு அமலுக்கு வருகிறது" இப்படியொரு உத்தரவு வியாபாரிகளைக் கொஞ்சம் கலங்க வைத்திருக்கிறது.
இணையத்தில் சுட்ட படம்..
மும்பையின் ரயில் நிலையங்களில் ப்ளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட ஜங்க்ஃபுட், பிஸ்கட் மற்றும் துரித வகை உணவுப்பொருட்களின் விற்பனை, இந்த ஜூன் முதலாம் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் சமோசா, சாண்ட்விச், வடாபாவ் போன்றவற்றை ப்ளாஸ்டிக்கைத் தவிர்த்து பேப்பரில் சுற்றி வைத்து விற்றுக்கொள்வதானால் அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில், உணவுப்பொருட்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு உறைகளை ப்ளாட்பார்மிலோ அல்லது ரயில் தண்டவாளங்களிலோ வீசி விடுவதால் ரயில் நிலையங்கள் குப்பைக்கூடைகளாகக் காட்சியளிக்கின்றன. மட்டுமல்லாது ரயில் தண்டவாளங்களில் வீசப்படும் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக் கொள்வதால் மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்வதும் தடுக்கப்படுகிறது. இப்படித்தேங்கி நிற்கும் நீரில் தண்டவாளங்கள் மூழ்கிக் கிடப்பதும், அதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின் சில நாட்களில் மும்பையின் உயிரோட்டமான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமான ஒன்று. இனி வரும் காலங்களிலாவது இந்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் மட்டுமல்ல, நகருக்குள்ளும் வீசப்படும் ப்ளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து சில சமயம் சாக்கடைகளுக்குள்ளும் விழுந்து அடைத்துக் கொள்வதுண்டு. இப்படி அடைத்துக் கொண்டதன் விளைவாக 2005-ம் வருடம், ஜூலை 26-ம் தேதியிலிருந்து சில நாட்களுக்கு மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. மும்பையை ஷாங்காய் நகரைப்போன்று மாற்ற வேண்டுமென்ற அப்போதைய முதலமைச்சரின் ஆசைக்கு வருண பகவான் செவி சாய்த்து விட்டானோ என்று தோன்றுமளவுக்கு.

ப்ளாஸ்டிக்கின் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அது சுற்றுப்புறச் சூழலுக்கு உண்டாக்கும் கேடுகளையும் அதைத்தவிர்ப்பதையும் பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் மற்றும் சிறு கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்களைப் போட்டுக் கொடுக்கும் வழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. அப்படியே தவிர்க்க முடியாமல் பைகள் தேவைப்பட்டாலும் அதை விலை கொடுத்தே வாங்க வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தே பைகள் எடுத்துப் போவது அதிகரித்துள்ளது. இதுவே ஒரு நல்ல ஆரம்பம்.

மும்பையைப் பொறுத்தவரை 50 மைக்ரான்கள் அளவிற்குக் குறைவாக இருக்கும் பைகளுக்கு அனுமதி கிடையாது. எந்தக் கடையிலாவது அந்த அளவிற்குக் குறைவாக இருக்கும் பைகளைப் பயன்படுத்துவது தெரியவந்தால் உடன் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். ஏனெனில் 50 மைக்ரான்களுக்குக் குறைவாக இருக்கும் பைகள் எளிதில் மக்கிச் சிதைவதில்லை. புவியின் மேற்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் இவை, மழைநீர் புவியினுள் செல்லாதவாறு தடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பேற்படுகிறது. மற்றும் சில சமயங்களில் பைகளில் கெட்டுப்போன உணவுகள் இருந்து, அவை குப்பைத்தொட்டியில் வீசப்படும் பட்சத்தில், அவற்றைத் தின்னும் மாடுகளின் வயிற்றுக்குள் உணவோடு இந்தப்பைகளும் சென்று விடுகின்றன. இதனால் கால்நடைகள் உடல் நலம் குன்றி இறக்கவும் நேரிடுகிறது.

இவை தானாகவே அழிவதற்கு சுமார் ஆயிரம் வருஷங்களாம். எரித்து அழித்தி விடலாமென்றாலோ அது சுற்றுச்சூழலை இன்னும் மாசு படுத்துதும். ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும் போது வெளியேறும் நச்சுவாயுக்களால் புற்று நோய் ஏற்படும் அபாயமும் உண்டு. இந்த வாயுக்கள் தண்ணீரில் கரைந்தும், காற்றில் கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது.  இதையெல்லாம் சுவாசிப்பதால் நம் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இதையெல்லாம் யோசித்துத்தான் தன்னாலான முயற்சியாக மத்திய ரயில்வே தற்சமயம் மும்பையின் மத்திய ரயில் தடங்களில் வரும் நிலையங்களில் மட்டும் இந்தத் தடையுத்தரவை முதலில் அமல் படுத்தியது. ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் உணவுப்பண்டங்களை விரைவில் காலி செய்து விடும்படியும், ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் அவ்வாறான விற்பனை நடப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அபராதமோ அல்லது தண்டனையோ உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்கள் நின்று புறப்படும் சி.எஸ்.டி போன்ற சில நிலையங்களுக்கு முதலில் விதி விலக்கு அளிக்கப்பட்டு, கல்யாண், தானா, குர்லா, வடாலா போன்ற நிலையங்களில் இதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். போகப்போக மற்றும் சில நிலையங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்கள். ஆனால் சி.எஸ்.டியில் கடைகளையே எடுத்து விட்டார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்தது.

நவி மும்பையின் பன்வெல்லிருந்து, வாஷி வரைக்குமான துறைமுகத்தட ரயில் நிலையங்களில், உள்ளே ஒரு கடை கூடக் கிடையாது. நிலையத்தின் உள்வாயிலில் மட்டுமே ஒரு சில கடைகள் இருக்கும், அதுவும் டீ, காபி, சமோசா, வடாபாவ் போன்ற சிற்றுண்டிகள் மட்டுமே கிடைக்கும். மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களுடன் ஒப்பிடும்போது மும்பையின் துறைமுகத்தட நிலையங்களில் இருக்கும் நடைமேடைகளின் சுத்தம் திருப்திகரமானது. பெருமளவில் மக்கள் போக்குவரத்து இருந்தாலும் நன்றாகப் பராமரிக்க முடியும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு.

தொலைதூர ரயில்கள் நின்று புறப்படும் நிலையங்களிலும் இப்போது உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று ஆகி விட்டதால் அவசரத்துக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை வாங்கிப்பயனடையும் பயணிகள், முக்கியமாகக் குழந்தைகளுடன் வருபவர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்குமென்றாலும் அது சுத்தமான முறையில்தான் தயாரிக்கப்படுகிறதா என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடிவதில்லை. 

வரவேற்பு இருக்கும் அதே சமயத்தில் பெருமளவு அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது இந்த அறிவிப்பு. ரயில் நிலையங்களுக்கு வெளியே இருந்து இந்த உணவுப்பொருட்களைக் கொண்டு வருவது தடை செய்யப்படவில்லை, அப்படிக் கொண்டு வந்து, சாப்பிட்டு விட்டு வீசும் ப்ளாஸ்டிக்கால் மட்டும் ரயில் நிலையம் குப்பையாகாதா? ரயில் நிலையங்களில் குப்பைக்கூடைகள் வைத்து, அதில்தான் குப்பையைப் போட வேண்டும் என்று அறிவுறுத்துவதை விட்டுவிட்டு, வெறுமனே தடை செய்வதென்பது என்ன பலன் தரும்? என்பது அவர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகள்.

ஆனால், சுத்தமான சூழலை ஒரு தடவை உருவாக்கி விட்டால் அப்புறம் அதைப் பாழ்படுத்த மனம் வராது என்பதும், நல்லதொரு பழக்கத்தைக் கற்றுக்கொள்வதில் நாமே குழந்தைகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதும் சத்தியமான உண்மைகள்.

டிஸ்கி 1: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.
டிஸ்கி 2: இது என்னோட 202-வது இடுகை.

Friday, 8 June 2012

அரசாங்கத் துரோகத்துலேர்ந்து தப்பிச்சேன்..

எங்கூட்டு மரம் ஜனவரியில்.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்ன்னு அரசாங்கமே சொல்லுது. மீறினா அரசாங்கத்துக்குச் செய்யற துரோகமாயிடாதோ.. அதான் நம்மால முடிஞ்ச ஒண்ணை வளர்ப்போம்ன்னு ஆரம்பிச்சிருக்கேன்.

மும்பை வாசம் வாழையிலைச் சாப்பாட்டை மறக்கடிச்ச இத்தனை காலமா, அதை எப்பத்தான் கண்ணுல பார்ப்போம்ன்னு ஏக்கமா இருக்கும். புள்ளையார் சதுர்த்திக் காலம் நெருங்கியதும் மார்க்கெட்ல கண்ணுல தட்டுப்பட ஆரம்பிச்சுரும். ஒரு கட்டுல மூணோ நாலோ இலைகளை வெச்சுக் கட்டியிருப்பாங்க. ஒரே ஒரு இலை வேணும்ன்னாலும் தனியா வாங்கிக்கலாம். அதுக்குத் தனி ரேட்டு. நாஞ்சில் பகுதிகள்ல வாழையிலைக் கட்டுகளை 'பூட்டு'ன்னு சொல்லுவோம். ஒரு பூட்டுல அஞ்சுலேர்ந்து ஆறு இலைகளை வெவ்வேறு அளவுகள்ல வெச்சுக் கட்டியிருப்பாங்க. அதுவும் நல்ல இளம் இலைகளா தளதளன்னு இருக்கும். இங்கே கிடைக்கிறது கொஞ்சம் முத்தல்தான்.. இருந்தாலும் இதுவாவது கிடைக்குதேன்னு திருப்திப் பட்டுக்கிட வேண்டியதுதான்.

நம்மூட்லயே வளர்த்தா எப்ப வேண்ணாலும் இலை பறிச்சுக்கலாமேங்கற பேராசை இருந்தாலும் அபார்ட்மெண்டில் எங்கேயிருந்து அதுக்கு இடம் ஒதுக்கறது?.. பால்கனியில் வளர்க்க முடிஞ்சா நல்லாருக்குமேன்னு இருந்தேன். நம்ம துளசி டீச்சர் வீட்ல தொட்டியில் வளரும் வாழைமரம் பார்த்ததும் ஒரு நம்பிக்கை குருத்து விட்டுச்சு :-)

நர்சரியில் போய்ப் பார்த்தப்ப கட்டை, நெட்டை, செந்துளுவன்னு நாஞ்சில் பகுதியில் செல்லமா அழைக்கப்படும் சிவப்பு வாழை, நேந்திரம்ன்னு நாலஞ்சு வகைகள் இருந்துச்சு. இதுல நெட்டை ஆறடிக்கு மேல வளருமாம். பால்கனியில் வெச்சாத் தாங்காது. கொஞ்சம் பலமா காத்தடிச்சாலே முறிஞ்சுரும். ஆனா நாளப்பின்னே பழம் பறிக்கணும்ன்னா சுலபமா இருக்கும். படிக்கட்டுகளேறி மேல் மாடி வீட்டுக்குப் போயி அங்கேயிருந்து கையை நீட்டுனா, கை மேல் பழம் கிடைச்சுரும். அங்கே உட்கார்ந்து அரட்டையடிச்சுட்டே முழுங்கிட்டு வரலாம். நம்மூட்டு பழக்குலையை கவனமாப் பார்த்துக்கறதுக்காக அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துட்டாப் போச்சு. குட்டை ரகம் அஞ்சடி அளவுல வளரக்கூடியது. நம்ம வீட்டை விட்டுத் தாண்டாது. கஷ்டமோ நட்டமோ இங்கேயே இருந்து அனுபவிச்சுக்கறேன்னு சொல்ற வகை. தொட்டியில் வளரப் போவதால காத்துக்கும் தாங்கும். நமக்கு இதான் சரின்னுட்டு வாழைக்கன்னு, அதுக்கு வேண்டிய ஆர்கானிக் உரம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். செடி வளர்க்கத் தோதா நம்மூட்டு பழைய அரிசி டப்பா ரெடியா இருந்துச்சு.

வாழையை வளர்க்க ஆரம்பிச்சாச்சு. அதுவும் தளதளன்னு வளர ஆரம்பிச்சுருக்கு. வாழைப்பழம் கிடைக்குதோ இல்லியோ இலைக்கு ஆச்சுன்னுதான் வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன். சின்ன வயசில் தாத்தா வீட்டு வாழைத்தோப்புக்கு போனப்பல்லாம் "தாய்க்கன்னில் எப்பவுமே இலை அறுக்காதே. அது குலை தள்ளுவதை தாமசப்படுத்தும். எப்பவுமே பக்கக்கன்னில்தான் இலையறுக்கணும்"ன்னு சொல்லுவாங்க. அதை அப்படியே கேட்டுக்கிட்டு, பக்கக்கன்னுலதான் இலை நறுக்கிட்டு வந்த ஞாபகம். தொட்டியில் வளரும் வாழைக்கு ஏது பக்கக்கன்னு வரப்போவுதுன்னு கொஞ்சம் கவலையோட இருந்த எனக்கு சின்னதா முளைச்சு வந்துருக்கும் ரெண்டு குட்டிக்கன்னுகள் காட்சி கொடுத்து சந்தோஷப் படுத்தியிருக்கு. ஆனா, தாய்வாழை ஒரு குறிப்பிட்ட அளவு வளர்றவரைக்கும் பக்கக்கன்னுகளையும் நறுக்கி விட்டுரணுமாமே!!. பாவம்தான் குழந்தைகள்..

இங்கே நவி மும்பையில் முதல் தளத்துல இருக்கும் ஒரு வீட்டில் வாழைத்தோட்டமே வெச்சிருக்காங்க. மொதல்ல ஒரே ஒரு கன்னு வெச்சிருந்துருப்பாங்களா இருந்துருக்கும். அப்றம் அது வளர்ந்து வரச்சே பக்கக் கன்னுகள் முளைச்சு கிட்டத்தட்ட ஆறேழு மரங்கள் வளர்ந்து நிக்குது. கூட்டமா இருந்தா அது தோட்டம்தானேன்னு நானா மனசிலாக்கிக்கிட்டேன் :-). சிக்னல்ல நின்னுட்டிருந்தப்ப கார்லேர்ந்து எடுத்ததால மங்கலா இருக்கு, சிரமம் பார்க்காம கொஞ்சம் உத்துப்பார்த்துக்கோங்க ப்ளீஸ்.
வாழைத்தோட்டம்..
வாழையின் அடி முதல் நுனி வரைக்கும் எல்லாப் பாகங்களுமே ஏதாவதொரு வகையில் மனுஷனுக்குப் பயன் படுது. ஆனா, இது உண்மையில் மரம் கிடையாது, புல் வகையைச் சேர்ந்தது :-) இது விதையில்லாமல் வளரக்கூடிய தாவரங்களில் ஒண்ணு. கிழங்கின் துண்டை பூமிக்குள் புதைச்சு வெச்சாப் போதும், வளர ஆரம்பிச்சுரும்.

பூமிக்குள்ளே இருக்கும் பகுதிதான் வாழையின் உண்மையான தண்டுப்பகுதியாம். அப்ப வெளியே நம்ம கண்ணுக்குத்தெரியறது தண்டு இல்லையா?.. அது போலித்தண்டுன்னு சொல்றாங்க. இதுலயுமா அசல் போலின்னு ஆகிப்போச்சு?!!!. தண்டுலேர்ந்து வளர்ற இலையுறைகள் ஒண்ணையொண்ணு மூடிப்பொதிஞ்சு இருக்கறதால அதைப் பார்க்கறப்ப தண்டு மாதிரியான தோற்றம் தருது. இதில் தடிமனா இருக்கும் இலையுறைகளை வாழைமட்டைன்னும், அதையே காஞ்சு போச்சுன்னா வாழைத்தடைன்னும் சொல்லுவோம். கிராமங்கள்ல இந்த வாழைத்தடை ஒரு நல்ல எரிபொருள். மண்ணெண்ணெய் உபயோகப்படுத்த தேவையில்லாமலேயே சட்னு பத்திக்கும். இதைப் பதப்படுத்தி எடுக்கப்படும் நார்லேர்ந்து புடவையும் நெய்யப்படுதாம். வீட்ல வாழைமரம் இருந்தா பூக்கட்டறதுக்கும் அதுலேருந்தே நார் கிழிச்சுக்கலாம். நூல் வெச்சுக்கட்டறப்ப பூக்களோட காம்பு அறுந்து போகற மாதிரி இதுல ஆகாது. பூவும் ரொம்ப நேரம் வாடாம இருக்கும்.

வாழைத்தண்டுச் சாறையோ, பொரியலையோ அடிக்கடி சாப்பிட்டு வந்தா சிறுநீரகக் கற்கள் கரைஞ்சு போயிருமாம். டயாபடீஸ் நோயாளிகளுக்கும் நல்லது. வாழைத்தண்டை நறுக்கறப்ப லேசா நூல் மாதிரி வரும். தண்டை வட்ட வட்டமா நறுக்கறப்ப, ஒவ்வொரு முறையும் டக்ன்னு விரலைச்சுழற்றி அந்த நூலை விரல்ல சுத்தி வெச்சுக்குவாங்க. அப்றம் அதைத் திரியாக்கி விளக்கேத்தவும் பயன்படுத்தறதுண்டு.

வாழைப்பூ உசிலியின் அருமை பெருமைகளை அறியாத நாக்கு உண்டா?.. சுவை நரம்புகள்தான் உண்டா?. அதே மாதிரி வாழைக்காய் பஜ்ஜி பிடிக்காதவங்க இருக்க முடியுமா என்ன?.. பொண்ணு பார்க்கும் வைபவம் அன்னிக்கு இவங்கதானே உண்மையான வி.ஐ.பி :-) அந்த கல்யாணம் திகைஞ்சு வந்து நிச்சயம் செஞ்சுக்கறப்ப கொஞ்சம் மேக்கப் போட்டுக்கிட்டு வந்து, பரிசத்தட்டுல பழமா உக்காந்துருப்பாங்க. தினமும் சாப்பிட்டப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு வாழைப்பழம் சாப்பிட்டா நல்லதாம்.. யாருக்கு?. கடைக்காரருக்கும் நமக்கும் :-))

பொதுவா வாழைப்பூவுல முதல் சீப்புக்காய்கள் வந்த மூணு மாசத்துல முழுக்குலையும் காய்ச்சுத் தயாராகிரும். நல்லாக் காய்ச்சு அப்றம் மரத்துலயே பழுத்த பழத்தோட ருசியே தனி. ஆனா, அது வரைக்கும் விட்டு வெச்சா சந்தைக்கு வந்து வித்து முடியறதுக்குள்ளே எல்லாம் உதிர்ந்து போய் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நஷ்டமாகிரும்.. தாங்காது. அதனால முக்கால் விளைச்சல் வந்ததுமே வெட்டிருவாங்க. வயல்லேர்ந்து களத்து மேட்டுக்கு ஆட்கள் தலைச்சுமையாக் கொண்டாந்து சேர்ப்பாங்க. வந்து சேரும் ஒவ்வொரு வாழைக்குலையிலும் தண்டுப்பகுதியின் மேலும், விவசாயி ஏதாவதொரு அடையாளத்தோட தயார் செஞ்சு வெச்சுருக்கும் ஒரு இரும்புக்குழாயை வெச்சு ஒரு அழுத்து,.. சக்ன்னு அடையாளக்குறி பதிஞ்சுரும். அது வெட்டிய இடத்துலேர்ந்து வெளியாகும் வாழைச்சாறு கொஞ்ச நேரத்துல காய்ஞ்சதும், அடையாளம்" பளிச்சுன்னு தெரியும். பூக்கள், நட்சத்திரம், அதுவுமில்லைன்னா தன்னோட பெயர்ன்னு ஒவ்வொருத்தரும் ஒரு அடையாளம் வெச்சுருப்பாங்க. சிலர் அந்த இரும்பு அடையாளத்து மேல கருப்புச் சாயம் பூசிட்டு, அப்றமா மார்க் செஞ்சுக்குவாங்க. சந்தையில் வந்து சேர்ந்து விக்கிற வரைக்கும் நம்ம பொருள் பாதுகாப்பாவும் இருக்கும். இதை எழுதிட்டிருக்கும்போது எங்க குடியிருப்பில் விளைஞ்ச வாழைக்காய்களை வீட்டுக்கு ரெவ்வெண்டுன்னு கொடுத்துட்டுப் போனார் செக்யூரிட்டி :-)

முந்தியெல்லாம் வீடுகள்ல விசேஷம் வருதுன்னா சந்தையிலிருந்தோ, தங்களோட சொந்தத் தோட்டத்துலேர்ந்தோ வாழைக்குலையைக் கொண்டாந்து ஊத்தம் போடுவாங்க. அதுல நிறைய முறைகள் இருக்குது. வாழைக்காய்களை ஒரு பானையில் நிரப்பி, பானைக்குள் ஊதுபத்திக்கட்டை ஏத்தி வெச்சுட்டு தட்டு போட்டு நல்லா இறுக்கி மூடிரணும். ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா நல்லாப் பழுத்திருக்கும். இதுவும் ஒரு முறை. ஆனா, இப்பல்லாம் அதுக்கும் பொறுமையில்லாம ரசாயனம் வெச்சுப் பழுக்க வைக்கிறாங்க. சட்ன்னு பார்த்தாத் தெரியாதபடிக்கு ரசாயனப் பொட்டலங்களை வாழைச்சீப்புகளுக்கு உள்ளே மறைச்சு வைக்கிறாங்க. கண்டிப்பா உடலுக்குக் கேடுதான் தரும் இப்படிப்பட்ட வாழைப்பழங்கள்.

வாழைப்பழத்துல பழவகை, காய்வகைன்னு ரெண்டு இருக்காம். சில வகைகள் கறிக்கு நல்லாருக்குமாம். ஆனா பழம் ருசியா இருக்காதாம். இதுகளைக் காய்வகைன்னு சொல்றாங்க. நாஞ்சில் பக்கங்களில் அவியலுக்கு எல்லா வகை வாழைக்காயும் சேர்க்க மாட்டாங்க. பேயன் அல்லது சிங்கன்னு சொல்லப்படும் தனி வகைதான் உபயோகப்படுத்துவோம். பழ வகைகள்ல செந்துளுவனைத் தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புல புது ரத்தமே ஊறும், அவ்வளவு சத்து. அதே மாதிரி ஏத்தம்பழம்ன்னு சொல்லப்படும் நேந்திரம்பழம் காயா எரிசேரியிலும், பழமா 'பழம்பொரி'யிலுமாக ரெண்டு அட்டகாசமான ருசிகளைக்கொடுக்குது.
எங்கூட்டு மரம்.. ஜூனில்..
வாழையிலை நம்மூர்ல சாப்பாட்டுத்தட்டாப் பயன்படுத்தப்படுது. அதுவும் விருந்துச்சாப்பாடுன்னா அது வாழையிலையில்தான் பரிமாறப்படணும்ங்கறது சம்பிரதாயம். அதுல சாப்பிட்டா இருக்கற மணமும் ருசியும் தனியாச்சே. ஊர்லேருந்து வரப்ப கட்டுச்சோறு கொண்டாரதா இருந்தா, வாழையிலையில்தான் வேணும்ன்னு கண்டிப்பாச் சொல்லிருவேன். வாழையிலையில் சாப்பாட்டை அப்படியே வெச்சுக்கட்டாம, இலையைத் தணல்ல லேசா வாட்டிட்டு அப்றம் பேக் செஞ்சா இலையும் கிழியாது, சாப்பாட்டோட ருசியும் இன்னும் அருமையாயிருக்கும். எங்க வீட்லயும் இப்பத்தான் கொஞ்சம் பெரிய இலைகள் வர ஆரம்பிச்சுருக்கு. தளதளன்னு இருக்கறதைப்பார்க்கறப்ப நறுக்க மனசு வர மாட்டேங்குது... இலையப்பம் செஞ்சு சாப்பிடணுங்கற ஆசை வேற மனசுக்குள் அலையடிக்குது..

Monday, 4 June 2012

நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..


இணையத்தில் சுட்ட படம்..

சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் வள்ளுவர்.

அதெப்படி எல்லாப் பொழுதுகளிலும் சிரித்துக்கொண்டே இருக்க முடியும் என்பதாய்,
“துன்பம் வரும் வேளையில் சிரிங்க..
என்று சொல்லி வெச்சார் வள்ளுவரும்.. சரிங்க.
பாம்பு வந்து கடிக்கையில், பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு.. இது
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு” என்று கேட்ட கண்ணதாசனைப்போல் நாமும் கேள்வி கேட்கிறோம்.

ஒரு சின்ன தலைவலி வந்தாலே அமர்க்களப்படுத்தி வீட்டையே இரண்டாக்கி விடும் ஆட்களும் உண்டு. உயிர் போகும் வாதையிலும் அமைதியாக அதை எதிர்கொள்ளும் நபர்களும் உண்டு. ஆனால், தான் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அதை ரசித்து நகைச்சுவையுடன் வெளிப்படுத்துபவர்கள் நம் நாஞ்சில் கவிஞர் 
கவிமணி தேசிக விநாயகரைப்போன்று ஒரு சிலரே இருக்க முடியும்.

கவிமணியாருக்கு ஒரு சமயம் ‘சிரங்கு’ நோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். உடல் முழுவதும் ஏற்பட்ட சிரங்குப்புண்களின் நமைச்சல் பாடாய்ப்படுத்திற்று. தாங்காமல் தன்னையறியாமல் சொரிந்து விடவே, ஆறத்தொடங்கியிருந்த புண்களிலிருந்து மறுபடியும் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. வலியும் வேதனையும் தாங்காமல் இரவுத்தூக்கத்தையும் பறி கொடுத்தார். இந்நிலையில் கவிமணி முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இங்கே, மனிதர் வேண்டுவதைப்பாருங்கள்..

செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.

‘இன்னும் நாலைந்து கைகளைக்கொடு’ என்று வேண்டுவதைப்போல் தொனிக்கிறது அல்லவா.

தற்பொழுது தொலைக்காட்சிகளில் வரும் நிறைய விளம்பரங்களை ஊன்றிக் கவனித்தால், அதில் முகப்பருக்களை ஒழிக்கும், மற்றும் சிகப்பழகு க்ரீம்களுக்கானவை முன்னிலை வகிப்பதைக் காணலாம். இளம்பிராயத்தினரின் முகத்தில் ஒரு சிறிய பரு வந்தாலே, ‘ஐயோ.. உன் வாழ்க்கையே போச்சு, இனிமே இந்த உலகத்திற்கு உன் முகத்தை எப்படிக் காட்டுவே” என்று அலறி அவர்களின் தன்னம்பிக்கையை தங்களுடைய பொருட்களுக்கான விலையாக வாங்கும் சந்தையை அங்கே விரித்திருக்கிறார்கள். மாசுமருவற்ற அழகு என்பது வரவேற்கப்படக் கூடிய ஒன்றுதான். ஆனால், அது ஒன்றுதான் வாழ்க்கை என்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை இங்கே உருவாக்கி 
வைத்திருக்கிறார்கள்.

இங்கே கவிமணியாருக்கோ தன்னுடைய உடம்பில் இருக்கும் சிரங்குகள் எப்படித் தோற்றமளிக்கின்றன என்று அவரே சொல்லுகிறார் பாருங்கள்.

முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம் 
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம். 

முத்து,பவளம், வைரம்,மாணிக்கம் என்று சிரங்குகளை வர்ணித்தது போதாதென்று அவற்றையெல்லாம் தந்த வள்ளலுக்கு “சிரங்கப்பராயர்” என்று மேடை போடாமல், பொற்கிழி கொடுக்காமல், மாலை மரியாதை எதுவும் செய்யாமல், விழா நடத்தி பட்டமே சூட்டி விட்டார். இப்படியொரு பெரிய மனம் இவரைப்போன்ற பெரியவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. நாமாக இருந்தால் என்னவெல்லாம் சொல்லி அரற்றுவோம் என்பது நம் மனசாட்சிக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆரியக்கூத்தாடியானாலும் காரியத்தில் கண்ணாயிரு என்பது போல், தன்னுடைய வேதனையை ஒரு பக்கம் நகைச்சுவையால் மறக்க நினைத்திட்டாலும், தன் நோய்க்கான வைத்தியத்தையும் ஒரு பக்கம் செய்து கொண்டு வந்தார். தைல சிகிச்சை, மருந்துகள் என்று எல்லா வகையிலும் முயன்றார். ஆனாலும், பயனில்லாமல் போகவே முருகனிடம் முறையிடுகிறார்.

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.

ஞானப்பழத்துக்கான பஞ்சாயத்தில் மும்முரமாக இருந்து விட்ட காரணத்தாலோ, அல்லது இவருடைய தீந்தமிழை இன்னும் சுவைக்க எண்ணியோ, முருகப்பெருமான் இவருடைய வேண்டுதலுக்குச் செவி சாய்க்க காலம் தாழ்த்துகிறார். கவிமணியாரோ நாளொரு வேதனையும் பொழுதொரு வலியுமாகத் தவிக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று சொல்வார்கள், ஆனால், முருகன் இப்படிக் கை விட்டு விட்டானே என்று வருந்துகிறார். இறுதியில்,

உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு 
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.

என்று சண்டைக்காரனிடமே சரணடைந்து விடுகிறார். சாட்சிக்காரன் காலில் விழுவது போதாதென்று காரியமும் கை கூடாமல் தவிப்பதை விட இது மேலானதல்லவா. மட்டுமல்லாமல் 
சண்டைக்காரனையும் சும்மா விட்டு விடவில்லை.

“சிரங்கப்பராயர்” என்று எத்தனை பெரிய பட்டமெல்லாம் கொடுத்து தாஜா செய்திருந்தார். அந்தப் பட்டத்தையெல்லாம் ஒரு பக்கம் வாங்கி வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் தன்னை வாட்டியும் வதைத்த நோய்க்கு ‘மண்டு’ என்று ஒரு குட்டும் வைத்து விட்டுத்தான் விட்டார்.

பாயில் படுத்தாலும் நோயின் வேதனையை நகைச்சுவையால் வென்ற கவிமணியாருக்கு, நல்ல உடல் நலம் இருக்கும் நிலையில் மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் போய் விடுமா என்ன!! 

ஒரு சமயம் ம.பொ.சியார் அவர்கள் கவிமணியாரைச் சந்திக்க வந்தார். சந்திப்பு முடிந்து விடைபெறும் போது, ‘என்னை மறந்து விடாதீர்கள்’ என்று ம.பொ.சி வேண்டுகோள் விடுக்க, “உங்களை மறக்க முடியுமா?.. எல்லோருக்கும் முகத்தில் மீசை இருக்கிறது என்றால், உங்களுக்கு மீசையில் அல்லவா முகம் இருக்கிறது” என்று புன்சிரிப்புடன் பதில் கூறினார். இந்த இனிய சம்பவத்துக்குப்பின் ம.பொ.சியாரும் கவிமணியாரை மறக்க வாய்ப்பிருந்திருக்காது.

இன்னொரு முறை, நாதஸ்வர வித்வான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் கவிமணியாரைச் சந்திக்கச்சென்றார். வந்தவருக்கு குளிர்பானம் தருவித்து உபசாரம் செய்த கவிமணியார், அதைக் குடிப்பதற்காக வைத்திருந்த ஸ்ட்ராவைக்காட்டி, “எப்போதும் நாதஸ்வரத்தை ஊதுவீர்கள் அல்லவா?. இன்று ஒரு மாறுதலுக்காக இதை ஊதுங்கள்” என்று கூறி கூடியிருந்தவர்களைச் சிரிக்க வைத்தார்.

கடுகத்தனை துன்பத்தையும் மலையளவு பெருக்கிப்பார்த்து மன அமைதி இழந்து வாடும் தற்கால வாழ்க்கை முறையையும் மக்களையும் எண்ணுகையில், எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழக்காமல், அதனை எதிர் கொண்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது அல்லவா?..

டிஸ்கி: எனது கட்டுரையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி....



LinkWithin

Related Posts with Thumbnails