Tuesday, 2 August 2011

மனசெல்லாம் பூவாசம்...(வல்லமையில் வெளியானது)


(படம் கொடுத்து உதவிய இணையத்துக்கு நன்றி)
‘டட்ட்டடட்ட்…’ என்று ஒரே சீராகப்போய்க்கொண்டிருந்த ஆட்டோ வேகம் குறைத்து, ஒரு காரின் பின்னால் நின்றபோதுதான்,.. ‘ஓ.. சிக்னல் விழுந்துடுச்சா’ என்று நினைத்தபடி லேசாக தலையைத்தாழ்த்தி, பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஷினியைத்தாண்டி, கிடைத்த இடைவெளியில் தெரிந்த ஆட்டோமேடிக் சிக்னலுக்கு பார்வையை அனுப்பினேன். ரெய்டு வரப்போகிறார்கள் என்பதைத்தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப்போல சிகப்பு நிற எண்கள் வேகவேகமாக இறங்குவரிசையில் மாறிக்கொண்டிருந்தன.

‘தீதி… ஒரு ரூபா கொடேன்.. காலைலேர்ந்து என் தம்பிக்கு சாயாகூட வாங்கிக்கொடுக்கமுடியலை.. பசிக்குது..’ என்றபடி பரிதாபமாக நோக்கியபடி, ரோஷினி தடுக்கத்தடுக்க ஆட்டோவுக்குள் தெரிந்த சல்வார்கால்களைத்தொட இடுப்பிலிருந்த தன்தம்பியுடன் குனிந்தாள்,.. நிமிர்ந்தபோதுதான் என்னைப்பார்த்திருக்கவேண்டும். வறுமையின் மொத்த உருவமாய் நின்ற அவள், அடுத்தவினாடியில் கழுகைக்கண்ட கோழிக்குஞ்சாய் ஓடி ரோட்டின் அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்னால் மறைந்துவிட்டாள்.

‘அந்தப்பொண்ணு ஏன் உன்னைப்பார்த்துட்டு ஒளிஞ்சு ஓடுது?..’ கேள்வியாய் நோக்கிய ரோஷினிக்கு பதில் சொல்ல எத்தனிக்குமுன் பச்சைவிளக்கு எரிந்து ஆட்டோ புறப்பட்டுவிட்டது. அவளுக்கு பதிலாய்ச்சொன்ன சொற்களை காற்றோடு அரைத்துச்சென்றது எங்களைக்கடந்த ட்ரக் ஒன்று. ‘அப்புறம் சொல்கிறேன்.. ‘ என்று கையசைத்துவிட்டு, ரயில்வே ஸ்டேஷன் முன்னால் வந்து நின்றதும் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய்க்கலந்து டிக்கெட் கூப்பன்களை தானியங்கி மெஷின்களுக்கு தின்னக்கொடுத்து, அடையாளம் வாங்கிக்கொண்டுவிட்டு திரும்பினேன்.

ப்ளாட்பாரத்தில் வந்து தூண்களைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் திண்ணைகள் ஒன்றில் வாகாக அமர்ந்துகொண்டோம். ‘பயணிகள் கவனத்திற்கு..’ என்று ஆரம்பித்து குறிப்பிட்ட இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே ரிப்பேர் வேலை நடப்பதால் சாயந்திரம் வரை அந்தப்பாதையில் மட்டும் ரயில்கள் ஓடாது என்பதை வருத்தத்துடன் சொல்வதாக ரயில்வே அறிவிப்பு ஒலித்து ஓய்ந்தது.  நாங்கள் எங்களது ரயில் வருவதற்காக காத்திருந்த நேரத்தில்,…’ இப்ப சொல்லு..’ என்றபடி என் முகத்தை ஏறிட்டாள். விடமாட்டாள் போலிருக்கிறதே!!..

‘அது ஒண்ணுமில்லை.. வழக்கமா தினமும் அந்த சிக்னல் பக்கம் பார்க்கறதுதான். குடும்பம் அங்கியேதான் ப்ளாட்பார்முல வசிக்குது போலிருக்கு. அதான் பார்த்தியே, பத்துப்பதினஞ்சு பசங்க அங்கியே சுத்திக்கிட்டு, சிக்னல்ல நிக்கிறவங்ககிட்ட காசு கேக்கறதை..’

‘ஆமா,.. பார்த்திருக்கேன். சிலதுகள் வெறுமே காசு கேக்கும். சிலதுகள் இன்னிக்கு மாதிரி கால்ல விழுந்துடும். சில பசங்க போட்டிருக்கற சட்டையையோ, துப்பட்டாவயோ வெச்சு காரு கண்ணாடிகள தொடச்சுட்டு காசு கேக்கும். ப்பா.. பார்க்கவே பரிதாபமாயிருக்கும். காசு கொடுத்தா இதுகளை ஊக்குவிக்கறாப்ல ஆகிடுமேன்னும் தோணுது.. பசங்களைக்கடத்திட்டு வந்து இந்தத்தொழில்ல இறக்கி சம்பாத்தியம் செய்யற கும்பல் இன்னும் பெருகிடுமே. அதுக்காக, பார்த்துட்டு சும்மாப்போகவும் முடியலை. என்ன செய்யறதுன்னுதான் தோணலை..’

‘ஒரு வயசு வந்தப்புறம், சில ஆம்பிளைப்பசங்க கெட்ட சகவாசம் காரணமா, சமூகவிரோதச்செயல்கள்ல ஈடுபடறாங்க.. ஆனா, அந்தப்பொண் குழந்தைகள்?... அவங்க எதிர்காலம். அறிஞ்சும் அறியாமலும் இருக்கற வயசுல யாராச்சும் அவங்களை தப்பிதமா உபயோகப்படுத்தவும் ச்சான்ஸ் இருக்கு.. அது இன்னும் பரிதாபம். அதான், இப்ப பார்த்தோமே!!.. அந்தப்பொண்ணுகிட்ட இப்படி பிச்சை எடுக்கறதுக்கு பதிலா, குறைஞ்சபட்சம் சிக்னல்கள்ல ஏதாவது சின்னச்சின்ன பொருட்களை வித்துப்பொழைக்கலாமேன்னு டோஸ் விடுவேன். அதான், என்னைப்பார்த்ததும் ஓடுது..’

‘ இவ்ளோதானே.. எப்படியும் திரும்பிப்போகறச்சே அந்தவழியாத்தானே போகணும். நான் பார்த்துக்கறேன்…” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ரோஷினி.

போன வேலையை நல்லபடியாக முடித்துக்கொண்டு திரும்பியபோது, அதே ரோடு, அதே சிக்னலில் அதே பெண் பார்வைக்குக்கிடைத்தாள். இப்போது வேறு ஒரு வாகனத்தில், கார்க்கண்ணாடியை துடைத்துக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னவோ.. சிக்னல் கிடைத்து அந்த வாகனம் கிளம்பியபோது, என்னவோ உதட்டுக்குள் திட்டுவதுபோல் தெரிந்தது. துப்பட்டாவை தோள்மேல் போட்டுக்கொண்டு ப்ளாட்பாரத்துக்கு திரும்பியவள், சத்தமில்லாமல் வந்து பின்னால் நின்ற எங்களைக்கவனிக்கவில்லை.

கவனித்து ஓடத்தயாரானவளை கையைப்பிடித்து நிறுத்தினாள் ரோஷினி. ‘ தீதி.. என்னை விட்டுடுங்க.. அப்பா அடிப்பாரு..’ என்று பார்வையை அங்குமிங்கும் செலுத்திக்கொண்டே அலைபாய்ந்தவளை அமைதிப்படுத்திப்பேசிய ரோஷினியை ஏறிட்டாள் அந்தப்பெண்.

‘வேற என்னதான் செய்யறது.. பிச்சை எடுக்கறது எனக்கும் பிடிக்கலைதான். வயிறுன்னு ஒண்ணுஇருக்கே.. ஏழையா, ப்ளாட்பாரத்துல பொறந்தது என் தப்பா?..’ வெறுப்பை உமிழ்ந்தன அவளது வார்த்தைகள்.

‘சரி.. அதுக்காக பிச்சை எடுக்கறது ரொம்ப ஒசத்தியோ..’ ரோஷினியும் விடவில்லை. ‘ இங்க பாரு. நான் N.G.O.வுல இருக்கேன்.. என்னால முடிஞ்ச உதவிகளைச்செய்யறேன். ஏன்னா, தேவைப்படறவங்களுக்கு உதவுறதுதான் எங்க வேலையே. உன்னாட்டம் எத்தனைபேரு பூவு, சின்னப்பசங்களுக்கு புக்கு, பென்சில்ன்னு கூட சிக்னல்ல வித்துப்பொழைக்கிறாங்க. உனக்கென்ன?..”

‘அதுக்கு காசு வேணுமே..’ தரையைப்பார்த்துக்கொண்டு பதிலளித்தாள் சிறுமி. ‘விவரமானவளாத்தான் இருக்கே.. நேத்து கூட இனிமே பிச்சை எடுக்காதேன்னு சொல்லி பத்து ரூபா கொடுத்தேனே. என்ன செஞ்சே?..’ என்னிடமிருந்து புறப்பட்ட கேள்விக்கணையை, ‘ எங்கப்பா குடிக்கிறதுக்கு புடிங்கிட்டுப்போயிட்டாரு..’ என்ற பதில் கணையால் முறித்துப்போட்டாள்.

‘சரி.. இப்ப நான் காசு தரமாட்டேன். அதுக்குப்பதிலா கொஞ்சம் பூவு வாங்கிட்டு வந்து தருவேன். எப்படி விக்கணும்ன்னும் சொல்லித்தருவேன். புத்தியா பொழைச்சுக்க. என்ன?..’ என்றாள் ரோஷினி.

மெல்ல தலையாட்டிய சிறுமியின் கைகளில், பக்கத்து செக்டரில் இருந்த மொத்தமாய் விற்பனை செய்யும் பூமார்க்கெட்டிலிருந்துநான் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்த,.. ஒரே சீராக வெட்டப்பட்டிருந்த பத்து மல்லிகைப்பூச்சரத்துண்டுகளை திணித்தாள். ‘ஒரு துண்டு நாலு மூணுலேர்ந்து நாலுரூபாய்க்குள்ள விக்கணும்.. பேரம் பேசி வாங்குறவங்களும் இருப்பாங்க. சட்னு ஒத்துக்கிட்டு ஒரேயடியா அவங்க சொல்ற விலைக்கு குடுத்துடாதே. விலையை குறைக்க மாட்டேன்னு கொஞ்ச நேரம் பிகு செஞ்சுக்கிட்டு அப்புறமா கொஞ்சமா குறைச்சுக்கொடு. எல்லாம் போகப்போக நீயே பழகிப்பே.. இப்ப ஓடு. சிக்னல் விழுந்துடுச்சு பாரு..’

ஏதோ பிறந்ததிலிருந்தே இதே தொழில்செய்துகொண்டிருப்பவள் போல ஒவ்வொரு வண்டியாக ஓடியோடி பூ விற்றுக்கொண்டிருந்தாள். ‘ அக்காவுக்கு பூ வாங்கிக்கொடுங்க சாரே.. வண்டிக்குள்ள இருக்கற சாமிபடத்துக்கு பூ போடுங்க ஐயா..’ ஒவ்வொன்றாய் விற்றுத்தீர்ந்துகொண்டிருந்தன. கோடுபோட்டால் ரோடு போட்டுவிடுகிறாளே.. சாமர்த்தியசாலிதான்.

அங்கேயே காத்துக்கொண்டிருந்த எங்களிடம் முகம் கொள்ளாப்பூரிப்புடன் திரும்பி வந்தாள். கையில் இரண்டு மூன்று பூத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஒரு பூத்துண்டு இரண்டு ரூபாய் என்று நான் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தது அவளுக்கு எத்தனை ரூபாய் லாபத்தைச்சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது என்று கணக்குப்போட்டு அவளுக்குச்சொன்னபோது நம்பமுடியாமல் விழிபிதுங்கப்பார்த்தாள்.
மலங்க மலங்க விழித்த அந்தக்குழந்தையை பார்க்க பரிதாபமாக இருந்தது..

லேசாக திரையிட்ட கண்ணீரை சமாளித்துக்கொண்டு, ‘ பார்த்தேயில்ல.. பூ விக்கிறப்ப உன்னை யாரும் அடிச்சுவெரட்டலை. வேணாம்ன்னாக்கூட மரியாதையா ‘வேணாம்மா’ன்னுதான் சொல்றாங்க. இந்த வாழ்க்கை உனக்கு வேணும்ன்னா சொல்லு.. என்னால முடிஞ்ச ஏற்பாடு செய்யறேன். உங்க அப்பாவ பத்தி கவலைப்படாதே.. தேவைப்பட்டா நாங்க லேசா மெரட்டிவைப்போம். பயப்படாதே..’ என்றேன்.

‘‘மெரட்ட தேவையிருக்காதுண்ணே.. அதை நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு வசதிப்பட்டா இதேமாதிரி தேவைப்படறப்ப ஒத்தாசை செய்யுங்க. அது போதும்..’ என்றவள், ‘அக்காவுக்கு பூ வாங்கிக்கொடுங்கண்ணா.. வெளியே கூட்டிட்டு வந்துருக்கீங்கல்ல..’ சின்னச்சிரிப்புடன் ஒரு துண்டு பூவை நீட்டினாள் என்னிடம்.

‘எங்கிட்டயேவா!!!.. அது சரி!!. ரெண்டு துண்டாவே கொடு..’ என்று சிரித்தபடி எட்டு ரூபாயை நீட்டினேன் பேரம் பேசாமல்.. அப்போதுதான் மலரத்தொடங்கியிருந்த அரும்புகள் மெலிதான வாசனையை அந்த பிராந்தியம் முழுவதும் பரப்பத்தொடங்கின.


டிஸ்கி: இந்த சிறுகதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி.












Monday, 1 August 2011

தமிழ்மணத்துல இந்த வார நட்சத்திரமாம் : -) அறிமுகம்..


எழுத ஆரம்பித்தது...


சின்னவயசுல, அதாவது அஞ்சாறு வயசு இருக்கும்போதே எழுத ஆரம்பிச்சுட்டேன். சிலேட்டுக்குச்சியால் 'அ' ன்னு எழுதினதுதான் என்னோட முதல் எழுத்தனுபவம். என்னோட முதல் வாசகரான அப்பா, ' ஆஹா!!.. என்பொண்ணு என்ன அழகா எழுதறா!!..' அப்படீன்னு பாராட்டினதுதான் முதல் விமர்சனமும் கூட.. :-))))).

ஒவ்வொரு எழுத்தாளர்களையும் வாசிக்க வாசிக்கத்தான், நாமளும் எழுதணும்கற ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. கதை, கவிதைன்னு மனசுல தோணுறதையெல்லாம் ரகசியமா ஒரு நோட்டுல எழுதி நானே படிச்சுப்பார்த்துப்பேனே தவிர, அதை மத்தவங்க பார்வைக்கும் கொண்டுபோகணும்ன்னு தோணவேயில்லை. எதேச்சையா, என்னோட கவிதைக்கு கல்லூரியில் கிடைச்ச பாராட்டு, 'பரவால்லையே நாம எழுதறதும் வாசிக்கறாப்லதான் இருக்கு'ன்னு ஒரு திருப்தியை கொடுத்தது.

அந்த உத்வேகத்துல, 'விடிய மறுக்கும் இரவுகள்' ங்கற தலைப்புல நடத்தப்பட்ட, ஒரு கவிதைப்போட்டிக்கு எங்க கல்லூரி சார்பா அனுப்பப்பட்ட கவிதைகள்ல என்னோட கவிதை, ஆறுதல் பரிசை தட்டிக்கிட்டு வந்தது... கலந்துக்கிட்ட முதல் போட்டியிலேயே அது பரிசை தட்டிக்கிட்டு வந்ததால, ஏதோ,.. முதல்பரிசே கிடைச்ச சந்தோஷம் எனக்கு :-) கவிதை நோட்டு ரொம்ப காலத்துக்கு முன்னாடி தொலைஞ்சு போனதால, முழுக்கவிதையும் இப்ப ஞாபகம் இல்லை..

'ஒரு வேளை
கனவுகளை மட்டும் அனுபவிப்பதற்காகத்தான்
எங்கள் இரவுகள்
இன்னும்
விடிய மறுக்கின்றனவோ...' அப்டீன்னு முடியும் கடைசிபத்தி வரிகள் மட்டும் ஞாபகமிருக்கு :-).  கல்லூரியோட ஆண்டுவிழா மலர்லகூட பரிசுகிடைச்ச விஷயம் என்பேரோட வந்துச்சு..  போனஸா என்னோட இன்னொரு கவிதை வெளியீட்டோட... ரொம்ப சந்தோஷமா இருந்தது :-)

அங்கிருந்து ஆரம்பிச்ச எழுத்துப்பயணம் இப்போ வலைப்பூவில் தொடர்ந்துக்கிட்டிருக்கு.. இதோ இப்ப, தமிழ்மண நட்சத்திரமா உங்க முன்னாடி நின்னுட்டிருக்கேன். செய்தியறிஞ்சதும் லேசா ஒரு உதறல் இருந்தாலும், இதையும் ஜமாய்ச்சுடலாம்ன்னு ஒரு உற்சாகத்துல இறங்கிட்டேன். ஜமாய்க்கப்போறேனா.. சொதப்பி வைக்கப்போறேனான்னு தெரியலை :-))


இப்ப என்னைப்பத்தி ஒரு சின்னஅறிமுகம்:

வலைப்பதிவில் தோன்றும் பெயர்..

அமைதிச்சாரல்.

பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம்..

கிட்டத்தட்ட சொந்தப்பேரு மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.

தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பொழுதுபோகாத ஒரு நாள்லதான் கூகிள்ல தமிழ்வார்த்தைகள் வர்றதை கண்டுபிடிச்சேன்.. அது என்னடான்னா துளசிதளத்துக்கு கொண்டுபோய் விட்டது. 'வாங்களேன்.. கேக் சாப்புடலாம்'ன்னு கூப்பிட்டு துளசியக்கா விருந்து வெச்சாங்க. அப்புறம் அங்கியே செட்டிலாயிட்டேன்.. மறுபடி கண்டுபிடிக்கத்தெரியாம ரெண்டுமூணு நாள் முழிச்சது தனிக்கதை. கடைசியில் கூகிள் அண்ணாச்சி கண்டுபிடிச்சுக்கொடுத்தார். மொதல்ல தமிழ்மணம் இருக்கிறது தெரியாது.. இடுகைகளுக்கு பின்னூட்டம் வரும்ன்னும் தெரியாது..

கொஞ்சம் கொஞ்சமா தமிழ்மணம் பக்கமும் வர ஆரம்பிச்சேன். ரொம்ப நாளுக்கப்புறம் சொந்தவூடு கட்டலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் கெட்டப்பை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு இந்தப்பேரு வெச்சிக்கிட்டேன்.. அக்காவுக்கு லாரி அனுப்ப யோசிக்கிறவங்க அது நெறைய ரோஜாப்பூவை அனுப்பிவையுங்க, முட்களை எம்பக்கம் அனுப்பிவிடுங்க :-)))

எழுதுவது பொழுதுபோக்குக்காகவா,.. அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.

எழுதும் தமிழ் வலைப்பதிவுகள்..

ஒண்ணு உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச 'அமைதிச்சாரல்'.

கவிதைன்னு கிறுக்கறதை தனியா தொகுக்க வசதியா 'கவிதை நேரமிது'

பேரண்ட்ஸ் கிளப்பிலும் இருக்கேன்.

எனக்கு கொஞ்சம் பாட்டுக்கிறுக்கு உண்டு. மென்மையான பாடல்களை கேக்கப்பிடிக்கும். அதுக்காக ஆரம்பிச்சது குயில்களின் கீதங்கள்.

பதிவை பற்றி முதன் முதலில் தொடர்புகொண்டு பாராட்டியவர்கள்...

முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே,ராமலஷ்மி மேடம், துளசியக்கா, வல்லிம்மா,முத்தக்கா, அப்புறம் இப்ப பின்னூட்டத்துல பாராட்டுற நீங்க வரைக்கும் பெரிய லிஸ்டே இருக்குதே.. எதைன்னு சொல்ல!!! :-)

என்னைப்பற்றி...

நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே..(அப்படி ஒண்ணு நான் போடுற மொக்கையில் இருக்கா என்ன???):-))))))

வாசிப்பனுபவம்..

வாசிப்பது என்பது, எப்பொழுதும் என்னை, என் உலகத்துக்கு இட்டுச்செல்வதாகவே இருந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது, குமுதம், விகடனை எழுத்துக்கூட்டி படிப்பதில் ஆரம்பித்தது, நாளடைவில் கதைப்பைத்தியமாகவே ஆகிவிட்டேன். அம்மா திட்டியதோ,டியூஷன் டீச்சரிடம் வத்தி வைத்து கண்டிக்க செய்வதோ, எதுவும், கதைப்புத்தகத்தை, பாடப்புத்தகத்தில் மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த நிமிடத்தில் மறந்துவிடுவேன், இந்த உலகத்தையும் சேர்த்து.

நாளடைவில் பூந்தளிர் படிக்க கிடைத்தது. என் வாசிப்புத்தோழன் என் கடைசி தம்பிதான். கடையில் இருந்து வாங்கி வந்ததும், என் மடியில் அமர்ந்து கொண்டு,... வாசிப்போம். அப்போது அது மாதமிரண்டு முறை வந்து கொண்டிருந்தது, எட்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.காக்கை காளி,சமந்தகன், வேட்டைக்கார வேம்பு எல்லோரும் எங்கள் தோழர்கள். அதன்பின் champak,அம்புலிமாமா,என்று வளர்ந்து, சுஜாதா கதைகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் தீவிரமடைந்தது.

எனது மாமா ஒருவர், அப்போது லைப்ரரி ஒன்றில் உறுப்பினராகியிருந்தார்.அங்கிருந்து நாவல்களை எடுத்துக்கிட்டு வருவார். பாக்கெட் நாவல் அப்போதுதான் அறிமுகமான சமயம். ராஜேஷ்குமார் மட்டும்தான் அதில் எழுதிக்கொண்டிருந்தார். த்ரில்லர் கதைகளுக்காக விரும்பி படிப்பேன். வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் நாவல்கள், ஒவ்வொன்றாக படிக்க கிடைத்தது. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது, வாசிக்கும் பழக்கம் வந்தது. பாடப்புத்தகங்கள் மூளைக்குள் ஏற்றும் சுமையை, கொஞ்சம் இறக்கி வைக்க முடிந்தது. இப்போதும், சாப்பிடும்போது படிக்க ஏதாவது இருக்க வேண்டும். தவறென்று தெரிந்தும் விட முடியவில்லை.

பள்ளியில் படிக்கும்போது, தமிழாசிரியர் கல்கியை அறிமுகப்படுத்தினார். சாண்டில்யனையாவது, சிலவார இதழ்களில் வாசிக்க கிடைத்தது. கல்கியை வாசிக்க கல்லூரி வரை காத்திருக்க வேண்டி வந்தது. எங்கள் கல்லூரியில், ஒவ்வொருவருக்கும் இரண்டு டோக்கன்கள் கொடுப்பார்கள். அதாவது ஒரே நேரத்தில், இரண்டு புத்தகங்கள் எடுக்க அனுமதி.படித்து விட்டு திருப்பிக்கொடுக்கும்போதுதான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.கோ-எஜூகேஷன் ஆதலால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மட்டும்தான் பெண்கள் லைப்ரரிக்கு செல்ல அனுமதி உண்டு.பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்று நினைவில்லை.

இப்போதும் அடிக்கடி சென்னை லைப்ரரி. காம் சென்று வாசிப்பேன். தமிழாசிரியர் மெர்க்குரிப்பூக்களைப்பற்றி சொன்னதிலிருந்து, பாலகுமாரன் அறிமுகமானார்.ஜெயகாந்தனின் எழுத்துக்களை தேடித்தேடி படித்ததுண்டு.சிவசங்கரி எழுதியதில், நண்டு எனக்கு பிடிக்கும், இன்னொரு நாவலான 'குட்டி' திரைப்படமாகக்கூட வந்தது. சுஜாதாவின்,' கரையெல்லாம் செண்பகப்பூ' எங்கள் லைப்ரரியில் ஒரு நாளும் இருந்ததில்லை. எப்போது கேட்டாலும் யாராவது எடுத்துப்போயிருப்பதாகத்தான் பதில் வரும். காத்திருந்தே மூன்று வருட படிப்பும் முடிந்துவிட்டது. கடைசியில்,திரைப்படமாக பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டேன்.

பூர்வீகம் திர்னவேலி மாவட்டமா இருந்தாலும் ,  வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை கன்யாகுமரி மாவட்டத்துல கழிக்க நேர்ந்ததன் பலனா, அந்த மாவட்டத்துலயே, நாஞ்சில் நாட்டுப்பகுதியில் புகுந்தவீடும் அமையப்பெற்று இப்போ மும்பையில் மையம் கொண்டிருக்கிறது என்வாழ்க்கை :-)). இங்கே வந்தபுதுசுல தமிழ்படிக்க, கேக்க ரொம்பவே ஏக்கமாருக்கும். இப்ப எல்லாத்துக்கும் சேர்த்து, வலைப்பூக்கள், இணைய இதழ்கள்ன்னு படுதீவிரமா, விட்டுப்போனதையெல்லாம் சேர்த்துவெச்சு வாசிக்கவும், விட்டுப்போன எழுத்தை தொடரவும் ஆரம்பிச்சிருக்கேன் :-))

இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம ராஜாங்கம் இங்கேதான்.. மறக்காம நண்பர்களெல்லாம் சுற்றம்சூழ வந்துருங்கோ :-))))

டிஸ்கி: அறிமுகப்படலத்தை எங்கியோ படிச்சமாதிரியே இருக்குன்னுதானே நினைக்கிறீங்க. ஏற்கனவே பகிர்ந்துக்கிட்டதுதான்.. ஆனா, இப்ப கொஞ்சம் மாற்றங்களோடு :-))


Thursday, 28 July 2011

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு :-))))



'அரிது.. அரிது.. ஆரோக்கியமாய் இருத்தல் அரிது; அதனினும் அரிது மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடல்'ன்னு நிகழ்காலக்கலம்பகத்துல படிச்சப்பகூட நான் நம்பலை.. வறுபட்டு ஃப்ரைட்ரைஸ் ஆனப்புறம்தான் நம்புனேன் :-)))

அந்த சரித்திரமுக்கியத்துவம் பெற்ற சம்பவம் நடைபெற்று பத்துப்பதினஞ்சு நாளானப்புறமும்கூட அதோட பாதிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு நீங்கலைன்னா, அதோட மகிமை என்னான்னு புரிஞ்சுக்கோங்க. பையருக்கு பல்லில் பிரச்சினை காரணமா, பல்டாக்டரைப்பார்க்கவேண்டி வந்தது (பல்டாக்டரைப்பார்க்காம பின்னே,.. கண் டாக்டரையா பார்ப்பாங்கன்னு கமெண்டுறவங்கல்லாம் அப்டியே ஒன் ஸ்டெப் பேக் :-)).

இந்த E.N.T. ஸ்பெஷலிஸ்டுகளெல்லாம் ஏன், பல்லுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடாதுன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். காது,மூக்கு,தொண்டை எல்லாத்துக்கும் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருக்கறமாதிரியே பல்லோடயும் சம்பந்தம் இருக்குதுதானே!!.. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்க இல்லியா :-)

சொல்லவந்ததை விட்டுட்டு எங்கியோ போயிக்கிட்டிருக்கேன்.. முந்திய நாளே ஆசுத்திரிக்கு போன் செஞ்சு, 'இந்த மாதிரி இந்தமாதிரி பையனுக்கு பிரச்சினை இருக்கு,.. அதனால இந்தமாதிரி இந்தமாதிரி டாக்டர்கிட்ட கலந்தாலோசிக்கணும். அதனால அப்பாயிண்ட்மெண்ட் குடுங்க'ன்னு கேட்டேன். அதுக்கு அங்க வரவேற்பறையில இருந்தவங்க,' இந்த மாதிரி இந்த மாதிரி மொத நாளே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது,.. அதனால நாளைக்கு காலேல போன் செய்யுங்க'ன்னு சொன்னாங்க.

அதேமாதிரி மறு நாள் காலேல போன் செஞ்சப்ப, 'டாக்டர் மத்தியானம் ஒருமணிக்குத்தான் வருவாரு,.. உங்களுக்கு ரெண்டுமணிக்கு அப்பாயிண்ட்மெண்டு கொடுத்திருக்கேன்'னு சொன்னாங்க. சரீன்னுட்டு 'நோயாளியோட பேரை எழுதிக்கோங்க'ன்னுட்டு பையரோட பேரைச்சொன்னேன். 'பரவால்லைங்க.. நீங்க மத்தியானம் வரச்சே வரவேற்புப்பிரிவுல வந்து பேரைச்சொன்னாப்போதும்'ன்னாங்க. அவங்க சொன்னதை நம்ம்ம்ம்பி மெத்தனமா இருந்துட்டேன்.

மத்தியானமா, குறிச்ச நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னாடியே கிளம்புனோம். ஆக்சுவலி அந்த ஆசுத்திரிக்கு பதினஞ்சு நிமிஷத்துலயே போயிடலாம். ஆனா, ஆசுத்திரிக்கும், பஸ் நிலையத்துக்கும் நடுவால இருக்கற ரோட்டுல பாலம் கட்டுற வேலை நடக்குது. அதனால, ஊரெல்லாம் ஊர்கோலம் போயித்தான் சேரணும். அங்க போனா, மூணாவது மாடிக்கு போங்கன்னாங்க. அங்க போயி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா காத்திருந்தோம். ஒவ்வொரு காமணி நேரத்துக்கொருக்கா, சிஸ்டர் கிட்ட டாக்டர் வந்தாச்சான்னு கேக்கறதும், இப்ப வந்துடுவார்ன்னு அவங்க பதில் சொல்றதும், இடையிடையே, எதுக்காப்ல இருந்த வார்டுகள்ல இருக்கற குட்டிக்குட்டி பேஷண்டுகளை வேடிக்கை பார்க்கறதுமா இருந்தோம்.

கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சதும்,   டவுட்டு வந்து தலைல தட்டுச்சு. தடவிவிட்டுக்கிட்டு, மறுபடி வரவேற்புப்பிரிவுல வந்து 'டாக்டர் எப்போங்க வருவாரு.. குறைஞ்சபட்சம் அவருக்காவது போன் செஞ்சு கேளுங்களேன்'னு ஐடியா கொடுத்தேன்.. (எல்லாம் நேரம்... அவங்க வேலையையும் நாமளே பாக்க வேண்டியிருக்கு!!..). போன் செஞ்சு கேட்டவங்க, அப்படியொரு குண்டைத்தூக்கிப்போடுவாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.

விஷயம் என்னான்னா,.. அன்னிக்கு காலைல டியூட்டியில இருந்தவங்க,.. நாங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கறதையே டாக்டர்கிட்ட சொல்லாம இருந்திருக்காங்க.உடனே, நானே நேரடியா டாக்டர்கிட்ட பேசி, ரெண்டு நாளைக்கப்புறம் அப்பாயிண்ட்மெண்டை அவர்கிட்டயே உறுதிசெஞ்சுக்கிட்டு, அப்றமா பழைய வரவேற்பாளினியை லேசா டோஸ்விட்டுட்டு வந்தேன்.அவங்க சார்பா இவங்க மன்னிப்பு கேட்டாலும், 'மாஃபி.. இந்தியில எனக்கு புடிக்காத ஒர்ர்ரே வார்த்தை'ன்னுட்டு கிளம்பி வந்துட்டோம்.

அப்றமா, டாக்டர் கிட்ட போயி செக்கப் செஞ்சப்ப, B12ங்கற விட்டமின் குறைபாடு இருக்குமோன்னு தோணுது. எதுக்கும் இரத்தப்பரிசோதனை செஞ்சுடுங்கன்னு எழுதிக்கொடுத்தாரு. அங்க இருக்கற லேபோட லட்சணம் தெரிஞ்சும், இப்பவாவது குறையையெல்லாம் சரிசெஞ்சுருப்பாங்கன்னு நம்ம்பி,.... லேபுக்கு போனா,.. பையரை விட்டுட்டு, ஜாலியா கையைக்கட்டிக்கிட்டு அங்கியும் இங்கியும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கற எங்கிட்ட ஊசியும் கையுமா ரத்தம் எடுக்கவர்றாங்க.. (எனக்கெதிரா உள் நாட்டு சதி நடக்குதோ???) எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரியலை.

 'ஏங்க.. பேஷண்டோட பேரை படிச்சுப்பாக்கமாட்டீங்களா??..பேஷண்ட் யாருன்னுகூட செக் பண்ண மாட்டீங்களா'ன்னு அழாக்குறையா கேட்டேன். தப்பு எம்மேலதானாம்.. நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம். (அது பேஷண்டா இல்லைன்னாக்கூடவா :-))))). ரிப்போர்ட் வந்ததும் போன்செஞ்சு சொல்லுவோம். நீங்க வந்து வாங்கிக்கலாம்ன்னு சொல்லிட்டு போன் நம்பரை அவங்க தப்பா எழுதிக்கிட்டதும், அதை ஒருவாரத்துக்கப்புறம் நான் போனப்ப கண்டுபிடிச்சு டோஸ்விட்டப்ப,.. எங்கிட்டயிருந்து வாங்கிக்கட்டிக்கிட்டதும் இடைச்செருகல் :-))

ஒருவாரத்துக்கப்புறம் ரிப்போர்ட்டை வாங்கிக்கிட்டு, டாக்டர்கிட்ட போனா,.. பி12 குறைச்சலா இருக்கு. இங்கிருக்கற பொதுமருத்துவர்கிட்ட நான் அனுப்பினேன்னு சொல்லி, ரிப்போர்ட்டை காமிங்க, மருந்து கொடுப்பார்ன்னு சொல்லி அனுப்பிவெச்சார். பொதுமருத்துவரும் ஊசிபோடணும்ன்னு சொல்லி, எழுதிக்கொடுத்தார். அங்கிருந்த மருந்தகத்துல சிரிஞ்ச் உட்பட வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதுல விட்டமினோட அளவு குறைச்சலா இருக்குதுன்னுட்டு சிஸ்டரையே சரியான மருந்தை வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்பிவெச்சார். மருந்து மட்டும் போதும்.. புதுசிரிஞ்ச் அவங்களே கொடுப்பாங்கன்னு சொன்னதால நான் வாங்கின சிரிஞ்சை திருப்பிக்கொடுத்தேன். ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே :-))

அடுத்து நடந்ததுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம்..
நான் : "மொத்தம் எவ்ளோங்க ஆச்சு??.."
மருந்தாளுனர் : "104 ரூபா ஆச்சுங்க.."
நான் : (குழப்பத்தோட)"சிரிஞ்சோட விலை எட்டு ரூபாயை இதுல கழிச்சுக்கச்சொன்னேனே.. செய்யலையா ?.."
மருந்தாளுனர் : "அட!.. ஆமால்ல. இதோ கழிச்சுடறேன்... ம்ம்ம் ஆங்... இப்போ, 196 ரூபா தரணும் நீங்க.." (இவரு எந்த ஊர்ல கணக்குப்பாடம் படிச்சார்ன்னு தெரியலியே )

ஊசியே போடவேணாம் போங்க.. :-)))). இத்தனைக்கும் அந்த ஆசுத்திரியில எங்கூரு பெரியதலையின் மருமகள் நிர்வாக இயக்குனர்களில் ஒருத்தரா இருக்காங்க. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கிட்ட இவ்ளோ அலட்சியமா நடந்துக்காம அவங்களுக்கு உதவறது, மருத்துவர்களுக்கு மட்டுமான கடமை இல்லைதானே??. அங்கிருக்கறவங்களுக்கும் அந்தக்கடமை உண்டுதானே!!.. அங்கேயுள்ள லட்சணம் ஓரளவு தெரிஞ்சிருந்தும் அங்கே ஏன் போனீங்கன்னு உங்க அடிமனசுல கேள்விகள் வருதுல்ல.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதில்லையா,.. அதேமாதிரி அங்கேயுள்ள டாக்டர்கள் நல்லபடியாத்தான் சேவை செய்யறாங்க. இந்த பரிவார தேவதைகள்தான் இப்படி :-))

Thursday, 21 July 2011

சேவை செய்யறவங்களுக்கொரு சேவை..

( நன்றி- இணையம்)

"ட்ராபிக் ஜாம் ஆனா என்ன செய்யணும்.."
"ப்ரெட் வாங்கிட்டு வந்து அதுல தடவி, சாப்பிடணும்.."

ஜோக்குக்காக சொல்லப்பட்டாலும், மாநகரங்கள்ல போக்குவரத்து நெரிசல்ல, அதுவும் சிக்னல் இல்லாத இடங்கள்ல மாட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே.. அப்பப்பா!!!.. இஞ்ச் இஞ்சா ஊர்ற வாகனங்கள்ல இருந்துக்கிட்டு போக்குவரத்து காவலர்களை கரிச்சுக்கொட்டுவோம். (இங்கே சிலசமயங்கள்ல காவலர்கள் இல்லாத நேரங்கள்ல நெரிசல் இல்லாம அழகா வாகனங்கள் தானே வழி ஏற்படுத்திக்கிட்டு போறதும், காவலர் ஒழுங்கு படுத்துற நேரங்கள்ல நெரிசல் ஏற்படறதும் விந்தையான ஒண்ணுதான் :-))

ஆனா, அவங்கல்லாம் வெப்ப நிலை மாறுபாடுகளையும், இரவு பகல்களையும் பொருட்படுத்தாம நடுரோட்டுல தூசுதும்புகளுக்கு மத்தியிலும், வாகனப்புகை ஏற்படுத்தும் மாசுகளுக்கு மத்தியிலும் வேலை பார்க்கறதை எத்தனை பேரு ஊன்றிக்கவனிச்சிருப்போம். அதான் 'சம்பளம்' வாங்கறாங்கல்லன்னு மனசாட்சி முனகுனாலும், அது வாய்ல ப்ளாஸ்டரை ஒட்டிவெச்சுட்டு எத்தனை பேரு யோசிச்சிருப்போம்.. நான் உட்பட :-))

ஆனா, செம்பூரைச்சேர்ந்த சூரஜ் ஷா, கொளுத்தும் வெய்யில்ல போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, சரியாகிறதுக்காக காத்திருந்தப்ப இதை யோசிச்சார். அதன் பலனா உருவானதுதான் 'வெப்பத்தை முறியடிப்போம்'ங்கற அமைப்பு. மும்பை ஃப்லிம்சிட்டியின் Rotaract க்ளப்பின் தலைவரான ஷா,.. போக்குவரத்து காவலர்களைப்பத்தி மட்டும் யோசிக்காம, வெய்யில்ல இறங்கி வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கற மத்த தொழிலாளர்களான, தெருக்கூட்டும் துப்புரவாளர்கள், ரயில்வே ஸ்டேஷன்கள்ல வேலை செய்யற துப்புரவுத்தொழிலாளிகள், ரோடு போடுறவங்க, பஸ் ட்ரைவர்+கண்டக்டர்கள்ன்னு எல்லோரையும் பத்தி யோசிச்சதுதான் அற்புதமான விஷயம்.

அவங்களுக்கெல்லாம்,.. தன்னோட அமைப்புல உள்ளவங்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு, குடிநீர், சிற்றுண்டிகள், எலுமிச்சை ஜூஸ்ன்னு விளம்பி சந்தோஷப்படுத்தியிருக்கார். கொஞ்சமா வெய்யிலும் வெப்பமும் கூடுதலானாலே நாமெல்லாம் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ள தஞ்சமாயிடறோம். போக்குவரத்து நெரிசல்ல சிக்கிக்கிட்டாக்கூட வாகனங்களோட குளிர்சாதன வசதியை சட்ன்னு உபயோகிக்க ஆரம்பிச்சுடறோம்.

அப்படியிருக்க அவஸ்தைகளையெல்லாம் தாங்கிக்கிட்டு, பொது நலத்தோட நமக்காக உழைக்கிற அவங்களுக்கு இந்த சின்ன உதவியை செஞ்சா தப்பேயில்லை. இப்போதைக்கு தெற்கு மும்பை மற்றும் புற நகர்களின் சிலபகுதிகள்ல மட்டும் ஆரம்பிச்சிருக்கற இந்தத்திட்டம் அடுத்த கோடையில் இன்னும் விரிவாக்கப்படலாம்ன்னு சொல்றாங்க...

முக்கியமா போக்குவரத்து காவலர்களுக்காகவே அரசாங்கத்தோட சார்பா ஸ்பெஷலா, இன்னொரு திட்டமும் கொண்டுவரப்பட்டிருக்கு. சென்ற மழைக்காலத்துல பதினஞ்சு ஆப்பீசர்களுக்கு 'லெப்டோஸ்பைரோசிஸ்'ன்னு சொல்லப்படற ஒருவகைக்காய்ச்சல் வந்துருக்கு. இது தேங்கி நிற்கிற மழைத்தண்ணீர்ல விலங்குகளோட கழிவுகள் கலக்கறதுனால பெருகும் 'லெப்டோஸ்பைரோ'ங்கற ஒருவகைக்கிருமியினால வருது. ரோட்டுல அந்தத்தண்ணியில நின்னு வேலை பார்க்கிறதால அவங்களை இந்தக்காய்ச்சல் தாக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த மழைக்காலத்துலயும் இதுமாதிரி வராம இருக்கறதுக்காக போக்குவரத்துத்துறை அவங்களுக்காக முழங்கால் வரைக்கும் உயரமுள்ள கம்பூட்ஸ்களையும், மருந்துகளையும் ஏற்பாடு செஞ்சுருக்காங்களாம். கொட்டற மழையிலும் நடுரோட்டுல வெள்ளத்துல நின்னு கடமையைச்செய்யற அவங்களுக்கு செய்யப்படும் இந்த வசதிகள் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். அப்படியே வெள்ளத்தால கஷ்டப்படும் பொதுமக்களையும் அரசாங்கம் கொஞ்சம் கவனிச்சா தேவலைன்னு ஒரு நினைப்பு மனசோரத்துல எட்டிப்பார்க்கறதை தவிர்க்க முடியலை...

Tuesday, 19 July 2011

எதிர்பாராத வேளையில்..

'க்ணிங்..க்ணிங்..' என்ற மணிச்சத்தத்தோடு சைக்கிளை வாசலில் நிறுத்திய தபால்காரர், சைக்கிளில் இருந்தபடியே தபாலை வீட்டுக்குள் விசிறிவிட்டுப்போனார்.

நாற்காலியில் அமர்ந்தபடி நகம் வெட்டிக்கொண்டிருந்த நாராயணனுக்கு லேசான மேல்பார்வையிலேயே.. தபால் எங்கிருந்து வந்திருக்கிறதென்று புரிந்துபோனது. 'அப்பா கவனிக்காமல் இருக்கவேண்டுமே!!..' என்ற வேண்டுதலுடன் அந்த கவரை எடுக்க குனிந்தான். முதுகைத்துளைத்த பார்வையை உணர்ந்து ஓரக்கண்ணால் பக்கவாட்டிலேயே லேசாக தலையை திருப்பினான். எதிர்பார்த்ததுபோல, செய்தித்தாளை லேசாக தாழ்த்தி அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா.

அவன் பார்த்ததும் லேசாக புன்னகைத்தார். சட்டென தபாலை பிரிப்பதுபோல பாவனை செய்துகொண்டே தன்னுடைய அறைக்கு நகர்ந்துவிட்டான்.. ' இதுவும் திரும்பிவந்துடுச்சா??...' அவருடைய பார்வைக்கு இதுதான் அர்த்தம். பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். கதை, கவிதை, கட்டுரைகள் என்று ஏதாவது அனுப்பிக்கொண்டேயிருப்பான். அவர்களும் சளைக்காமல், 'பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற ஒற்றைவரியில் அவனுடைய கனவுகளை சுக்கு நூறாக தகர்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆயினும், என்றாவது ஒரு நாள் தன்னுடைய படைப்புகளும் பத்திரிகைகளில் வெளியாகும் என்று நம்பினான். நம்பிக்கைதானே வாழ்க்கை??.. அவனுடைய அப்பாவுக்கோ இதெல்லாம் வெட்டியாக செய்யும் காரியமாக பட்டது.  எதையாவது எழுதி எழுதி, சரியாக வரவில்லையென்றால் கசக்கிவீசும் காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் கொலைசெய்யப்பட்டனவோ?.. சாப்பாட்டில் கவனமில்லாமல், எதையாவது யோசித்துக்கொண்டு சோற்றை அளைந்துகொண்டிருப்பான். கேட்டால் அவன் சொல்லும் பதில்..,'நல்ல ஒரு தாட் வரும்போது கட் பண்ணாதீங்க'

அப்பாவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆரம்பத்தில் அவர் ஊக்குவிக்கத்தான் செய்தார், ஆனால் நடைமுறை வாழ்க்கையையும் கவனிக்கவேண்டும் என்ற நடைமுறை தெரிந்தவர் அவர். அதனால், பையனின் கனவு நனவாக வேண்டுமென்று விரும்பினாலும், வெளிப்பார்வைக்கு கிண்டலும் கேலியும் செய்துகொண்டேயிருப்பார். அப்படியான ஒரு நேரத்தில்தான் அவனிடம் கேட்டார்.

"சரி!!... உன்னோட படைப்புகள் பத்திரிக்கையில் வெளியாகுதுன்னே வெச்சுக்குவோம். வர்ற சன்மானத்தில் எனக்கென்ன வாங்கிக்கொடுப்பே.."

"உங்களுக்கு என்னவேணும்ன்னு மொதல்ல சொல்லுங்க. வாங்குறதை அப்புறம் பார்ப்போம்"

"ம்ம்.... வேற ஒண்ணும் வேணாம். எனக்கு ஒரு சால்வை வாங்கிக்கொடு. அப்புறம் இந்தத்தெருவுல இருக்கிறவங்களுக்கெல்லாம் ஸ்வீட்டும் கொடு,.. எம்பையன் ஒரு படைப்பாளின்னு பெருமையா சொல்லிப்பேன்.. அதுபோதும் எனக்கு"

"கொடுக்கிறேனா.. இல்லியான்னு பாருங்க"

வழக்கம்போல சிரித்துக்கொண்டார். அப்படிப்பட்ட அப்பா இறந்துவிட்டதாகத்தான் ஆபீசுக்கு, வீட்டிலிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. அலறியடித்துக்கொண்டு ஓடினான். அவன் வீட்டுக்குள் நுழையும்போதே அழுகுரல் அவனை வரவேற்றது.

ஆபீசிலிருந்து அவன் சாயந்திரம் வீட்டுக்குள் நுழையும்போது, 'வாடா... கைகால் கழுவிட்டு வா.. காப்பி சாப்பிடலாம்' என்று வரவேற்கும் அப்பா... அறைக்குள் அவன் இறைத்துவிட்டுப்போன புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் ஒழுங்குபடுத்தி வைக்கும் அப்பா.. ஆயிரம்தான் கிண்டல் செய்தாலும், மகனுடைய வாசிப்பிற்காக தேடித்தேடி புத்தகங்கள் வாங்கிக்கொடுத்த அப்பா... இப்போது அவன் வீட்டுக்குள் வந்ததே தெரியாமல் படுத்துக்கிடந்தார். எப்பொழுதும் வரவேற்கும் வாய் இன்று ஏனோ ஊமையாகிவிட்டிருந்தது.

எவ்வளவு நேரம் அப்பாவின் பக்கத்தில் அவர்முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் என்று நினைவில்லை. முகத்தையும் கண்ணீரையும் ஒருங்கே துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், கைப்பையை வைப்பதற்காக தன்னுடைய அறைக்கு சென்றான். மேசையின்மேல் வைக்கும்போதுதான் காற்றில் பறந்துவிடாமலிருக்க பேனாஸ்டாண்ட் மேலே வைக்கப்பட்டிருந்த அந்த தபாலை பார்த்தான். வழக்கம்போலத்தான் இருக்கும் என்ற அசிரத்தையும், அப்போது அவனிருந்த மனநிலையும் ஒருசேர, கவரை கையிலேயே வைத்துக்கொண்டு நின்றான். பின் தன்னையறியாமலேயே மெதுவாக பிரித்து, உள்ளிருந்த கடிதத்தை படித்தவன் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஐநூறு ரூபாய்க்கான காசோலை நழுவி கீழேவிழுந்தது.

அன்றைக்கு அவன் நடந்துகொண்டதை பார்த்தவர்கள் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நம்பினார்கள். இறந்த தகப்பனுக்கு சால்வை போர்த்தியதுகூட அவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், அழுதுகொண்டே வீடுவீடாக சென்று இனிப்புகொடுத்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்... அவன் பைத்தியமா??.....

டிஸ்கி: இந்தக்கதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி..



Thursday, 14 July 2011

1+1=22

வழக்கம்போல இந்த வருஷமும், இந்த நாளை மறந்ததுபோல நடிச்சு, சர்ப்ரைஸா பாதுஷாவும் கையுமா மத்தியானமே வந்து நின்ன ரங்க்ஸுக்கு சர்ப்ரைஸா நானும் ட்ரீட் கொடுத்தேன்... (நேத்திய மும்பை கோரத்தால விஸ்தாரமா கொண்டாட மனசு வரலை.. இன்னிக்கும் ரங்க்ஸ் வீட்டுக்கு வந்து சேர்றவரைக்கும் மனசுக்குள்ள பக்.. பக்ன்னு இருந்தது)

உங்க எல்லோருக்காகவும் விருந்து ரெடி செஞ்சுருக்கேன். இருந்து சாப்பிட்டுட்டு மறக்காம மொய்யெழுதிட்டுத்தான் போகணும் :-)))



Monday, 4 July 2011

இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..



கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.

இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி,  போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.

படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.

3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.  ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.

வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.

முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.

 'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.

 "வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.

இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."

"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.

 'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம்,  அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,...  'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.

 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...




LinkWithin

Related Posts with Thumbnails