வீடோ நாடோ.. அங்கே நிர்வாகம் நன்றாக இருக்கிறதென்றால் அது தானும் முன்னேறி பிறரையும் முன்னேற்றும். சிதிலமடைந்த நொடிந்த நிறுவனங்களை வாங்கி நல்ல முறையில் நிர்வகித்து லாபம் கொழிக்கச்செய்வதையெல்லாம் நாமும் கண்கூடாகக் காண்கிறோம். ஒரு நல்ல நிர்வாகி எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன உத்திகளைக் கடைப்பிடித்தால் வெற்றி காணலாம் என்பதற்கான பல வழிகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. நம் செயல்களுக்கு முதலில் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத்தின் பாலபாடம் என்றே இதைச்சொல்லலாம். ஒரு காலத்தில் பள்ளிகளில் இதிகாசங்கள், நீதிக்கதைகள் போன்றவை வாழ்க்கை நெறிகளின் முக்கியத்துவத்தைப் பயிற்றுவிக்கும் முகமாகக் கற்பிக்கப்பட்டன. அவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகள் இன்றும் நமது நிர்வாகவியலில் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி ராமாயணம், மஹாபாரதம், நீதிக்கதைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகளை ஆசிரியர் அருணா சீனிவாசன் விவரித்துள்ளார்.
வேறு வேறு யுக்திகளைக்கையாள்வதோடு காரண காரியங்களை ஆராய்ந்து இடம் பொருள் மற்றும் ஏவல் அறிந்து செயல்படுவது நிர்வாக இயலில் முக்கிய பாடம். ஒரு காரியம் ஒருவனால் சாதிக்கப்பட வேண்டுமெனில் அந்தக்குறிக்கோள் அவன் மனதில் துளிர் விட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு உதவக்கூடிய இது போன்ற பல வழிமுறைகளைப்பற்றிப்பேசுகிறது அருணாவின் இந்தப்புத்தகம். இதிகாசங்களிலிருந்தும், நீதிக்கதைகளிலிருந்தும், நீதி நூல்களிலிருந்தும், சொந்த அனுபவங்களிலிருந்தும் மட்டுமல்ல.. ஸ்டீபன் ஆர். கோவே, ஸ்பென்சர் ஜான்ஸன், சி.கே. ப்ரஹலாத், கேரி ஹேமல், டேவிட் ஃப்ரீட்மேன், கர்ட் காஃப்மேன், பீட்டர் ட்ரக்கர், பில் கேட்ஸ் போன்ற பல மேனாட்டு நவீன நிபுணர்களின் கருத்துகளிலிருந்தும் நமக்குப் பாடம் கிடைக்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல வழிமுறைகளும் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, ஒருவரது சுயமுன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது சுவாரஸ்யமான ஒன்று.
ஆன்மீகமும் வணிகமும் ஒன்றோடொன்று பிணைந்தவையே என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பார்கள். இச்சிந்தனையும் குறைந்த வளங்களில் உற்பத்தி அதிகரிக்கும் திறனும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி முகாம்களில் வலியுறுத்தப்படுகின்றன. ஆலன் ஹால்க்ரோ முன்வைக்கும் வடிகால் கருத்து பல நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அவரை ஒரு மனிதராகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் வெகு விரிவாகவும் அற்புதமாகவும் திருக்குறளின் உதாரணத்தோடு அலசப்பட்டுள்ளது. ஒரு செயலில் இறங்கும்போது தன்னை முழுக்க முழுக்கத்தயார் படுத்திக்கொண்டுதான் இறங்க வேண்டுமென்பதில்லை, 70% தயாராக இருந்தாலே போதுமானது எனச்சொல்லப்பட்டுள்ளது. உண்மைதானே?.. அலை ஓய்ந்தபின்தான் கடலில் இறங்குவேன் என்றிருப்பது நடக்கிற காரியமா?
அறிவு ரீதியான மூளை வளர்ச்சி, மனரீதியான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான எண்ண வளர்ச்சி(INTELLIGENT, EMOTIONAL, SPIRITUAL QUOTIENTS). வேலை செய்யுமிடத்தில் இக்குணங்கள் அல்லது இவற்றில் சில வெளிப்படும்போது எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஆங்கில வார்த்தைகளோடு அவற்றின் தமிழ்ப்பதமும் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
பஞ்சதந்திரக்கதைகள், பாட்டி சொன்ன கதைகளில் பொதிந்திருக்கும் வாழ்முறை நெறிகளை சிற்சில மாற்றங்களுடன் இன்றும் நிர்வாகவியல் பாடங்களாகக் கடைப்பிடிக்கலாம். இன்றைய வர்த்தக உலகில் அடிப்படையாகச் சமாளித்துப் பிழைக்க வேண்டுமென்றால் மாற்றங்கள், சிரமம், குழப்பம், பிரளயம் என எல்லாவற்றையும் எதிர்கொள்வது மட்டுமன்றி அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகவியல் நிபுணர் டாம் பீட்டர்ஸ் சொல்லியிருப்பதை சிற்சில உதாரணக்கதைகளுடன் நிறுவியிருப்பது அழகு.
நேரத்தை நிர்வாகம் செய்வது குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை வாசிக்கும்போது உண்மையிலேயே நமக்குள் ஓர் உந்து சக்தி பிறக்கிறது. ஒரு நிர்வாகிக்கு மாறுபட்ட கோணங்களிலிருந்து காணப்பழகுவதன் அவசியமும், ஊழியர்களின் சுய மதிப்பீடு உயரும்போது செயல்திறன் எவ்வாறு அதிகரிக்கும் என்ற உத்தியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ‘பேட்டி லெவிட்டான்’ என்ற பெண் எப்படி நேர்மறை எண்ணங்களை தன்னுள் ஊன்றியே கான்ஸரிலிருந்து குணமடைந்தார் என வாசிக்கும்போது எண்ணம் போல் வாழ்வு என்ற கூற்று ஞாபகத்துக்கு வருகிறது.
முழுமையான தரக்கட்டுப்பாட்டை நிறைவேற்ற தரப்பகுதிகள்(QUALITY CIRCLES) என்ற உத்தி ஏன் எப்படி அமைக்கப்பட்டுப் பயன்படுகிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். இது ஜப்பானியர்கள் அவர்களின் பாரம்பரியச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கி உபயோகிக்கும் அனேக நிர்வாக உத்திகளில் ஒன்று. பள்ளிகளில் தொழில்முறை நிர்வாகம் ஏன் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதை வாசித்தபின்பு அனைவரும் யோசிக்க ஆரம்பிப்பது கட்டாயம்.
பழமொழிகள், திருக்குறள்கள், பஞ்ச தந்திரக்கதைகள், சொந்த அனுபவங்கள் என பலவும் எடுத்தாளப்பட்டுள்ளன. நூலில் சொல்லப்பட்டுள்ள ‘ஐந்து மருமகள் கதை’யை வாசித்தீர்களானால் கூட்டாக வேலை செய்ய வேண்டியதன் அருமை விளங்கும். அன்றைய தமிழக அரசர்கள்.. குறிப்பாக ராஜராஜச்சோழனின் நிர்வாகத்திற்கும் இன்றைய நவீன நிர்வாகவியலுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. மேலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டியவைகளும் ஏராளம் உண்டு எனும்போது பெருமிதம் ஏற்படுகிறது. சிறிய வணிக நிறுவனங்களின் தனிச்சிறப்பு என்ன? அவை வளர்ந்தபின்னும் ஏன் அதே உத்திகளையே பயன்படுத்துகிறார்கள்? நான் என்ற உணர்வு ஏற்படுத்தும் அறிகுறிகளின் FLOW THEORY BY MIHALY CSIKSZENTMIHALYI பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? சின்ன நல்ல காரியமும் நேர்மறை அலைகளை எழுப்பி ‘தான்’ என்ற நிலையிலிருந்து எப்படி பொது நலம் நோக்கி நகர்த்துகிறது? நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.
நிர்வாகவியலோடு சுயமுன்னேற்றத்திற்கான பல கருத்துகளும் அக்காலத்திற்கு மட்டுமல்ல இக்காலத்திற்கும் பொருந்திப் பிரதிபலிப்பதை இந்நூலில் காணலாம். அவ்வகையில் இப்புத்தகம் மேலாண்மைக்கல்வி கற்பவர்கள், சிறு நிறுவனத்தார் மற்றும் வணிகர்களுக்கு மட்டுமல்ல தனி மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதே.
No comments:
Post a Comment