காலை வேளைகளில் அல்லது முற்பகல் பதினொரு அளவில் பழைய பஸ் ஹார்ன் சத்தம் "பாங்...பாங்" என மும்பைத்தெருக்களில் ஒலிக்கத் தொடங்கி "இட்லிவாலா"வின் வருகைக்குக் கட்டியம் கூறுகிறது. பொருளின் பெயரைச் சொல்லி கூவி விற்பதில்லை, ஹார்ன்சத்தம் ஒன்றே போதுமானது. தெருவுக்கு நாலைந்து தலைகளாவது எட்டிப்பார்ப்பது உறுதி.
பெரிய அலுமினிய டோப்பில் இட்லிகளையும் வடைகளையும் தோசைகளையும் பக்கத்துப் பக்கத்தில் அடுக்கி வைத்து தட்டு போட்டு மூடி அதன்மேல் தேங்காய்ச்சட்னி, காரச்சட்னி, சாம்பார் வகையறாக்களை தனித்தனி டப்பாக்களில் ஊற்றி,அந்த மூன்று டப்பாக்களையும் சைக்கிள் ட்யூபால் இறுகப் பிணைத்துக்கட்டி இட்லி டோப்பின் மேல் ஏற்றி வைத்து கத்தரிக்கப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதத்தட்டுகள் சகிதம் வியாபாரத்துக்குப் புறப்படுகிறார்கள். வேண்டியதை காகிதத்தட்டுகளில் அடுக்கி சட்னி சாம்பாரை ஊற்றிக் கொடுத்தால் விள்ளல்களாக அழகாகப்பிய்த்து சட்னி சாம்பாரில் தோய்த்துத் தின்னாமல் முழு இட்லியைக் கையில் பிடித்துக்கொண்டு சட்னியில் முக்கித் தின்பர் வடநாட்டார்.
ஆசைப்பட்டுச் சாப்பிடுபவர்கள், சிக்கனத்தையெண்ணி இந்த இட்லியை உண்டு ஒரு நேர வயிற்றுப்பொழுதைக் கழிப்பவர்கள், நடைபாதை வாசிகள், என இவர்களை எதிர்நோக்கியிருக்கும் எத்தனையோ வயிறுகளின் ஒருநேரப்பசியைத் தணித்து அதன் மூலம் தம் பிழைப்பை நகர்த்த மும்பைத்தெருக்களில் கால் நோக அலைந்து திரிகிறார்கள் இந்த இட்லிவாலாக்கள்.
எனது அமைதிச்சாரல் யூ ட்யூப் சானலிலும் காண சுட்டியைச்சொடுக்குக.
1 comment:
Idlywala குறித்த தகவல் பகிர்வு நன்று. காணொளியும் கண்டேன்.
பகிர்வுகள் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
Post a Comment