உடல் நிலை சரியில்லையென்றால் நம்மூரில் ரசஞ்சாதம் சாப்பிடச்சொல்வதைப்போல, மஹாராஷ்டிரத்தில் டாக்டர்கள் கிச்சடி சாப்பிடச்சொல்வார்கள். காய்ச்சல் நேரத்தில் பட்டினி போட்டு உடலை மேலும் கெடுத்துக்கொள்ளாமல் சத்துள்ளதாகவும், வாய்க்கு ருசியாகவும் அதே சமயம் நலிவுற்றிருக்கும் உடலின் ஜீரணசக்திக்கு சோதனை வைக்காமலும் சாப்பிடக்கூடிய ஒரே அயிட்டம் கிச்சடிதான். செய்யப்படுவதென்னவோ அர்சீம்பருப்பு மாதிரிதான், ஆனாலும் சிற்சில மாற்றங்களுடன் செய்தால் அன்றாடச் சமையலிலும் ஓர் அயிட்டமாகச் சேர்த்துக்கொள்ளலாம். தினப்படிச் சமையல் போரடிக்கும்போதோ அவசர அடியாகவோ செய்ய உகந்தது. பையரும் ரங்க்ஸும் தற்சமயம் அரிசியில்லாக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதால் கோதுமை ரவையில் செய்தேன்.
இவ்வளவுதான் தேவை:
அரிசி 1 கப் அல்லது வறுக்கப்பட்ட கோதுமை ரவை 1 கப்,
வேக வைக்கப்பட்ட துவரம் பருப்பு கால் கப்
காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள்
கொஞ்சமாக மஞ்சட்பொடி
ருசிக்கேற்ப உப்பு
சிட்டிகை பெருங்காயப்பொடி
சீரகம் கால் ஸ்பூன்
நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு தலா அரை ஸ்பூன், வெங்காயம் ஒன்று
கொத்துமல்லி இலை 1 கப்.
நறுக்கப்பட்ட தக்காளி ஒன்று
நறுக்கப்பட்ட கேரட், பட்டாணி, முட்டைக்கோஸ் கலவை 1 கப்
இரண்டு கப் தண்ணீர்,
இரண்டு டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
கொஞ்சமாக நெய்
ஒரு அகலமான பாத்திரம்.
இப்படித்தான் செய்யணும் கிச்சடி:
1. சட்னி ஜாரில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, மிளகாய், மஞ்சள் தூள்களைப்போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
2. அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி அதில் சீரகத்தைப்போட்டுப் பொரிய விடவும். பொரிந்ததும், பெருங்காயப்பொடியைப்போட்டுக்கிளறி, உடனேயே அரைத்த மசாலையை அதோடு சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போனதும், தக்காளித்துண்டுகளைப்போட்டுக் கிண்டி, ஒரு ஸ்பூன் உப்புப்போட்டு தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும்,
3. தக்காளி வெந்ததும் கேரட் முதலான காய்கறிக்கலவையைச்சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் வேக விடவும்.
4. தண்ணீரைச் சேர்த்து, சூடானதும், கோதுமை ரவையைச்சேர்த்து அரை வேக்காடு வரும் வரை சமையுங்கள்.
5. இப்போது வெந்த பருப்பை நன்கு மசித்துச் சேர்க்கும் தருணம். சேர்த்தபின் நன்கு தளபுளவெனக்கொதிக்கும்போது கொஞ்சமாக நெய் சேருங்கள். இன்னும் சத்துள்ளதாகச் செய்ய விரும்பினால் ஏதாவதொரு கீரையை நறுக்கி கைப்பிடியளவு சேர்க்கலாம். கஸூரி மேத்தியை கொஞ்சமாக அள்ளிப்போட்டால் மணத்துக்கொட்டும். இங்கெல்லாம் ஹோட்டல்களில் "பாலக் கிச்சடி" மிகவும் பிரசித்தம். கிச்சடி இறுகலாகவோ, தளதளவெனவோ வேண்டுமென்றால் அதற்குத்தகுந்தாற்போல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நன்கு சேர்ந்து மணம் வந்ததும், உப்பு காரம் சரி பார்த்து இறக்கி விடலாம். பொதுவாக மராட்டியத்தில் கொஞ்சம் தளதளவெனத்தான் கிச்சடி செய்வார்கள். பருப்பு சேர்ப்பதால் நேரமாக ஆக தானாகவே இறுகிக்கொள்ளும்.
அரிசி சேர்த்து கிச்சடி செய்வதென்றால், ஒரு கப் அரிசி, கால் கப் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அப்படிச்செய்யும் போது மூன்றாவது பாயிண்டிலிருந்து நேராக ஐந்தாவது பாயிண்டிற்குப் பாய்ந்து விடவும். மற்றவையெல்லாம் ஒரே மாதிரிதான்.
கிச்சடிக்குத்தொட்டுக்கொள்ள பப்படம், ஊறுகாய், சமோசா, ஃபாஃப்டா, வெங்காய ராய்த்தா என எத்தனை இருந்தாலும் எலுமிச்சை ஊறுகாய்தான் முன்னிலையில் இருக்கிறது. கிச்சடியில் காரம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அதை நிரவும் பெரும்பொறுப்பை சுர்ர்ர்ர்ரென நாக்கில் உறைக்கும் ஊறுகாய் எடுத்துக்கொள்கிறது.
1 comment:
சுவையான குறிப்பு.
கோதுமை ரவையில் இப்படி காய்கறி சேர்த்து சமைப்பதுண்டு. உங்கள் செய்முறையிலும் செய்து பார்க்க வேண்டும். முயற்சிக்கிறேன்.
Post a Comment