Saturday, 5 January 2019

நெகிழி வதம்.. ஆரம்பம்.

தறி கெட்டு ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்த கடிவாளம் போட்டு இழுத்துப்பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வருவதைப்போல், பூமியின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தும் ஆபத்தாக விளங்கும் ப்ளாஸ்டிக்கின் உபயோகத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் என்பதை உலக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப்பற்றி முன்பொரு முறை எழுதிய கட்டுரை இங்கே. இந்தியாவைப்பொறுத்தவரை அவ்வப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதைப்பற்றி விவாதித்தாலும், ஒரு நல்ல முடிவு எடுக்கப்படாமலே இருந்து வந்தது. கடைசியில், பூனைக்கு மணி கட்டும் விதமாக டில்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா, பிகார் என ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பகுதிகளில் ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தப்பட்டியலில் நம் தமிழகமும் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி.

எனக்குத்தெரிந்து எண்பதுகளின் பிற்பகுதியில்தான், சரியாகச்சொன்னால் 1989ல்தான் கேரிபேக் எனப்படும் ப்ளாஸ்டிக் பைகள் புழக்கத்துக்கு வந்தன. மங்கலான வெள்ளைப்பின்னணியில் நீலம், குங்குமக்கலர், பச்சை, மஞ்சள் என வெவ்வேறு கலர்களில் பட்டைக்கோடுகள் போட்டதோ, அல்லது தனிக்கலர்களிலோ வர ஆரம்பித்தன. முதற்கட்டமாக காய்கனிகள் விற்பவர்கள் பொருட்களை அதில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த கட்டமாக மளிகைப்பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். சில கடைகளில் இன்னும் ஒரு படி மேலே போய், பொருட்களை ஐம்பது கிராமில் ஆரம்பித்து ஒரு கிலோ வரையிலான அளவுகளில் நிறுத்து ஆயத்தமாகப் பாக்கெட் போட்டு வைத்தார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அப்படியே எடுத்துக்கொடுத்தால் ஆயிற்று. அதன்பின், ஒவ்வொரு வியாபார ஸ்தலமாக தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக்கொண்டே சென்றது ப்ளாஸ்டிக். தேக்கிலையில் பூவைப்பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்த வியாபாரிகள் சிறு பையில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்ததுதான் இதன் உச்சகட்டம். இந்த ப்ளாஸ்டிக் கேரி பேகுகள் இலவசமாகக் கிடைத்ததுதான் இவை பெருமளவில் பரவி இன்றைய சீர் கேடுகளுக்கு வழி வகுத்தன என்றால் மிகையல்ல.
மஹாராஷ்ட்ராவில் தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் பைகள். இவற்றில் பாலிதீன் பை 50மைக்ரானுக்கு மேற்பட்டது.
அது நாள் வரை, துணிப்பைகள், வயர் கூடைகள், பிக் ஷாப்பர் எனும் கட்டைப்பைகள் சகிதம் கடைகளுக்குச் சென்றவர்களுக்கு, 'இனிமேல் அப்படி எதையும் தூக்கிச்சுமக்கத் தேவையில்லை, அழுக்குப்படிந்த பைகளைச் சுத்தம் செய்து பத்திரப்படுத்த வேண்டியதுமில்லை, பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சேமித்ததும், பைகளை தூர எறிந்து விடலாம்' என்ற நினைப்பே இனித்தது. காய்கறிகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் தனித்தனி கேரிபேகுகளில் வாங்கிக்கொண்டால், வீட்டிற்கு வந்ததும், ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து மறுபடி அதே பைகளில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளும் பழக்கம் பெருகியது. மல்லிகைப்பூவின் வாசனை தோசைமாவு, வத்தக்குழம்பு இன்ன பிற அயிட்டங்களில் பரவாமை கண்டு மகிழ்ந்தனர். மும்பையைப் பொறுத்தவரை, ஆபீசுக்கு மதிய உணவாக சப்பாத்தி செய்து அதை பால் கவர்களில் கட்டி கொண்டு சென்றவர்கள், ப்ளாஸ்டிக் கேரிபேகுகளுக்கு மாறினார்கள். ஒரு தடவை உபயோகித்தபின் தூக்கி எறிந்த பைகளால் ஊர் நிரம்பியது.  ப்ளாஸ்டிக் கேரிபேகுகளின் ஆயிரம் உபயோகங்கள் என வீட்டுக்குறிப்புகள் எழுதுமளவுக்கு அவற்றை விதவிதமாகப் பயன்படுத்தினர் மக்கள். இதற்காகவே, காய்கறிகள் வாங்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தனி கேரிபேக் கேட்டு வாங்கத்தொடங்கினர். இரண்டு எலுமிச்சம்பழங்கள் வாங்கினால் கூட அவற்றையும் தனிப்பையில் போட்டுக்கொடுக்க வேண்டும். கடைக்காரர்களும் சளைத்தவர்களல்ல.. சுண்டல் வினியோகம் கெட்டது போங்கள்... அய்யா வாங்க... அம்மா வாங்க.. என அள்ளியள்ளிக்கொடுத்தார்கள். திடீர் மழை வந்தால் தலை நனையாதிருக்க கேரிபேகை மாட்டிக்கொண்டவர்கள் அனேகம் பேர். ஒரு சில மக்கள், ஹெல்மெட்டுக்குப் பதிலாக, கேரிபேகை உபயோகித்ததாகவும் கேள்வி.

இப்படியெல்லாம் கொடுத்துப் பழக்கியபோது, இந்த ப்ளாஸ்டிக் பின்னாளில் ஓர் அழிக்க முடியாத அசுரனாக உருவெடுக்கும் என்பதை யாரும் உணர்ந்தாரில்லை. அந்நாளில் ஃபேஸ்புக், வாட்சப் போன்றவை இல்லாதிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையில் பெரு வெள்ளம் வந்து அவதிப்பட்டபோது, மழை நீர் வடிகால்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டதால்தான் வெள்ளம் வடியவில்லை என்று கண்டுபிடித்தபோது, இனிமேல் கடைகளில் 50 மைக்ரானுக்கு அதிகமான அளவுள்ள ப்ளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. வெளியான சூட்டில் ஆங்காங்கே சோதனைகளும் நடந்து முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பெற்றது. ஆனால், பெருவாரியான எதிர்ப்பால் இந்த விழிப்புணர்வு சீக்கிரமே வலுவிழந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது ஆர்வலர்கள் தீயை ஊதி ஊதி கனன்று கொண்டிருக்கச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாளாக நாளாக, பொது மக்களிடையேயும் விழிப்புணர்வு மெல்ல பரவத்தொடங்கியது. ஒரு சிலர் வீட்டிலிருந்து பைகளை முன்போல் எடுத்துச்செல்லத்தொடங்கினோம். கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் கொடுத்தாலும் மறுத்தோம். கடைக்காரர்கள் மற்றும் சக மக்களின் வினோதமான பார்வையை அலட்சியம் செய்தோம். சந்தையிலிருந்து திரும்பும்போது, எங்கள் கட்டைப்பைகளில் அவரையும் தக்காளியும் கொத்துமல்லியும் பச்சைமிளகாயும் கலந்துதான் கிடக்கும். வீட்டிற்கு வந்ததும், அவற்றை வகை பிரித்து ஃப்ரிஜ்ஜில் அடுக்கினோம். தப்பித்தவறி கிடைக்கும் கேரிபேகுகளையும், முடிந்த வரை மறு உபயோகம் செய்தோம்.

இனி பொறுப்பதில்லை என முடிவு செய்த அரசு, கடந்த 2018ம் வருடம் மார்ச் வாக்கில், ஒரு சில அத்தியாவசிய பொருட்களைத்தவிர மற்ற அனைத்து ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதும் தடையுத்தரவு பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பொருட்களின் பட்டியல் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வழியாக அறிவிக்கப்பட்டது. தவிரவும் கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அறிவிப்புப்பட்டியல் ஒட்டப்பட்டது.  மூன்று மாத கால அவகாசமளித்து, அக்கால கட்டத்தில் தங்களிடமிருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை முறையாக ஒழிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. மும்பை மாநகராட்சியின் தலைமையலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில், நகரில் ஆங்காங்கே சேகரிப்புத்தொட்டிகள் அமைக்கப்பட்டன. குடியிருப்புகள் தங்கள் பகுதி மக்களிடம் சேகரித்து அவற்றை நகராட்சியிடம் ஒப்படைத்தன. ப்ளாஸ்டிக்குக்கு மாற்று ஏற்பாடுகள் என்னென்ன என்று ஒரு கண்காட்சி நடத்தி மக்களுக்கு தெளிவுறுத்தப்பட்டது. துணி, சணல் பைகள், மறுபடி முழு உபயோகத்திற்கு வந்தன. வீட்டு அடுக்களைகளில் கண்ணாடி, எவர்சில்வர் பாத்திரங்கள், பாட்டில்கள் மறுபடி இடம் பிடித்தன. எங்கள் வீட்டில் மளிகைப்பொருட்கள் இன்றும் ப்ளாஸ்டிக் பெட் ஜார்களில்தான் இருக்கின்றன. தேன் முதலானவை வரும் பாட்டில்களைச் சுத்தம் செய்து அதில் பொருட்களை நிரப்பி வைத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கும் கண்ணாடிக்கும் ஏழாம் பொருத்தம்.
தடை செய்யப்பட்ட மற்றும் படாத ப்ளாஸ்டிக் பொருட்களின் பட்டியல்
இதனாலெல்லாம் மஹாராஷ்டிரத்தில் ப்ளாஸ்டிக் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டதா? என்றால், அதுதான் இல்லை. அறிவிப்பு வந்த புதிதில் அதிகாரிகள் கடைகள், சந்தை, சிறு வியாபாரிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் முழு வீச்சில் சோதனை நடத்தி, 50 மைக்ரானுக்கும் குறைந்த பைகள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். நெல்லைச்சீமையில், “புது மாடு குளிப்பாட்டுதல்” என்றொரு சொல் உண்டு. எதுவும் புதிதாக இருக்கையில் விழுந்து விழுந்து கவனித்து விட்டு, பழசான பின் கண்டு கொள்ளாமல் விடுவதை அப்படி எகத்தாளமாகக் குறிப்பிடுவார்கள். ப்ளாஸ்டிக் ஒழிப்பும் அப்படித்தான்… மறுபடி நிறைய இடங்களில் ப்ளாஸ்டிக் பையைத்தவிர பிற ப்ளாஸ்டிக்கின் உபயோகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், சற்றே கட்டுக்குள் இருக்கிறதென்றே சொல்லலாம்.

ப்ளாஸ்டிக்  உபயோகம் பெருமளவில் கட்டுக்குள் வந்து விட்டாலும், இந்த அறிவிப்பால் அதிருப்தி கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சின்ன கடைகளில் கேரிபேகுகளையும் ப்ளாஸ்டிக் கவர்களையும் தடை செய்து விட்டு பெரிய கடைகளில் ப்ராண்டட் பொருட்களைப் ப்ளாஸ்டிக்கில் பொதிந்து விற்பனைக்கு வைத்திருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனிந்த பாரபட்சம் என அவர்கள் கேட்கிறார்கள். தவிரவும், இன்றும் காய்கறிக்கடைகளுக்குச் சென்று கேரிபேக் கேட்டு அடாவடியாகச் சண்டை போடும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடைகளில், காகிதம், டிஷ்யூ, சணல், மற்றும் துணிப்பைகளில் பொருட்களைப்போட்டுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சில கடைகளில் காகிதத்தில் பொதிந்தும் கொடுக்கிறார்கள். இவற்றில் சணல் மற்றும் துணிப்பைகள் அவற்றின் அளவுக்கேற்ப விலையில் கிடைக்கின்றன. துணிக்கடைகளில் கூட, காசு கொடுத்தால்தான் பை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து பை கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். காகிதம், மற்றும் சின்ன அளவு டிஷ்யூ பைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இலவசமாகக் கிடைக்கின்றன என்பதாலேயே மக்களும் டிஷ்யூ பைகளுக்கு பாலிதீன் கேரிபேகுகளுக்குக் கொடுத்த அதே வரவேற்பை அளிக்கிறார்கள். அதான்.. அதேதான். வாங்கிக்குவிக்கவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கியெறியவும் ஆரம்பித்திருக்கிறார்கள். தனித்தனி டிஷ்யூ பைகளில் போட்டுத்தரச்சொல்லி காய்கறிச்சந்தையில் சில வாடிக்கையாளர்கள் சண்டை போடுவதும், கடைக்காரர் மறுப்பதும் கண் கொள்ளாக் காட்சி.

காகிதப்பைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விடுமே? மரங்களை அதிகம் வளர்க்க வேண்டிய இப்போதைய சூழலில், ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டினால் என்னாகும்? என இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. தவிரவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எறியப்படும் டிஷ்யூ பைகள் மட்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காதா? அவை, மழை நீர் வடிகால்களில் சென்று அடைத்துக்கொள்ளாதா? என்னதான் இப்பைகள் விரைவில் மக்கி விடும் என்றாலும், இவற்றையும் அளவில்லாமல் குப்பையாகச் சேர்ப்பது சரிதானா? என பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. 

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. இந்த நெகிழி அரக்கனை ஒழிக்க ஒவ்வொருவரும் பங்கு பெற வேண்டும் என்பதில் சாந்தேகமில்லை.

pudugaithendral said...

தமிழகத்திலும் ப்ளாஸ்டிக்குக்கு தடா போட்டிருக்காங்க. பார்ப்போம். மக்கள் கையிலும்தான் இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

புதுகைத்தென்றல்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails