Monday 26 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 6 (பண்டிகைகள்)

பண்டிகைகளும் விழாக்களும், அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளில் சோர்வுற்று நொய்ந்திருக்கும் மனிதனுக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றன. அல்லது,.. தலைகீழாகவும் இருக்கலாமோ!!.. புத்துணர்வூட்டவென்றே மனிதன் இவற்றை உருவாக்கினானோ!! எது எப்படியோ, பண்டிகைகளும் விழாக்களும் மனிதனுக்கு, அவ்வப்போது சமுதாயத்தில் தான் தனியில்லை என்ற பிரக்ஞையைத் தக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

பல்வேறு கலாச்சாரங்களின் கதம்பமே இந்தியா. ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு தடவையும் மக்களின் உணவுமுறை, பழக்க வழக்கங்கள், கொண்டாட்டங்கள் எல்லாமும் மாறுவதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் ஒரு சிலவற்றைப் பதிவு செய்தவை இங்கே வரிசை கட்டுகின்றன. 

வட இந்தியாவில் மார்ச் முதல் வாரத்துக்கப்புறம் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்தாலும், ஹோலியே வேனல்காலத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இதோ இன்னும் மூன்று தினங்களில் ஹோலி வரவிருக்கிறது. வண்ணங்களில் குளிக்கக் காத்திருக்கின்றனர் மக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைப் பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். 

வானவில்லின் அத்தனை வண்ணங்களும்..

ஹோலிகா தகனம் மற்றும் கலர்பூசு விளையாட்டுக்கான பொருட்கள் விற்பனைக்கு.
எரியக்காத்திருக்கும் சொக்கப்பனை
ஹோலிகா தகனம்
வண்ணங்கலந்த தண்ணீரைப் பீய்ச்சி விளையாட உபயோகிக்கும் பிச்காரி எனப்படும் பீச்சாங்குழல்கள்.
ஹோலியைத்தொடர்ந்து மஹாராஷ்ட்ராவில் புத்தாண்டு தினமான "குடி பாட்வா" கொண்டாடப்படுகிறது. //தமிழ்நாட்ல விஷூன்னும், ஆந்திராவில் யுகாதின்னும் கொண்டாடற மாதிரி மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா”ங்கற பேர்ல புது வருஷம் கொண்டாடப்படுது. இங்கே உள்ள மக்களுக்கு இன்னிக்குத்தான் சித்திரை முதல் தேதியாக்கும். சித்திரையை இங்கேயுள்ளவங்க “சைத்ர”ன்னு சொல்லுவாங்க.// என ஆரம்பித்து இப்பண்டிகையைப் பற்றி முன்னொரு முறை எழுதியது இங்கே பத்திரமாக இருக்கிறது. 

வீடுகளில் ஏற்றப்படுவது போலவே வியாபார நிறுவனங்களிலும் "குடி" ஏற்றப்படுவதுண்டு. ஒரு கரும்புச்சாறு விற்பனையகத்தில் அவரது தொழிலுக்குப் பொருத்தமாக கருப்பங்கழியில் ஏற்றப்பட்டிருந்த "குடி" அனைவரையும் கவர்ந்தது. வித்தியாசமான சிந்தனைதான் இல்லையா?
மஹாராஷ்ட்ர மக்களின் விருப்ப தெய்வமான பிள்ளையார். இவரை மஹாராஷ்ட்ரா மக்கள் கொண்டாடும் விதத்தை எத்தனை எழுதினாலும் தீராது. இவரை மொபைலில் எடுத்த படங்கள் தனிப்பதிவாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் இப்பண்டிகை, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆரம்பித்து பதினான்காம் நாளான அனந்த சதுர்த்தசி வரையிலும் மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்தே பிள்ளையார் சதுர்த்தி  அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், வெகு காலத்திற்குப் பின் அது பொது மக்களும் கொண்டாடும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. 
ஹோலிப்பண்டிகையை அடுத்து இங்குள்ள மக்கள் நவராத்திரியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். பத்து நாளும் கர்பா, தாண்டியா என ஆட்டம் பாட்டத்தோடு அதிர வைப்பார்கள். நம்மூர் மாதிரி படி கட்டுவதில்லையே தவிர, முளைப்பாரி போன்ற எல்லாச் சடங்குகளும் இங்கே உண்டு. அஷ்டமியன்று ஒன்பது கன்யாப்பெண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு சகலவிதமான உபசாரங்களும் செய்து பூஜித்தல் நல்லது என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. 

மகிஷாசுரமர்த்தினி.
எங்கள் வீட்டுக்கொலுவில் என் கைப்படச்செய்த அம்பாள் அலங்காரம். அவளுக்குக் குஞ்சலமும் செய்து அணிவித்தேன்.
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். 

சென்னை-கோடம்பாக்கம் மேம்பாலத்தினருகில் ஒரு சிறிய கோவிலின் முகப்பில் அமைந்திருக்கும் திருவுருவம். 
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர்-25ம் தேதி கொண்டாடப்படும் "கிறிஸ்துமஸ்" பண்டிகையைப் பற்றி அறியாதவருண்டோ?!. தீபாவளிக்கடுத்தபடியாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு இங்குள்ள மால்கள் வண்ண விளக்குகளால் விதவிதமாக அலங்கரிக்கப்படும். தவிரவும், சாண்டாக்ளாஸ் அலங்காரங்களும் அமைக்கப்படுவதுண்டு. அவற்றைக்காண்பதற்கென்றே மக்கள் கூட்டம் குவியும். பாட்டு, ஓவியம் போன்ற வழக்கமான போட்டிகளைத்தவிர திடீர் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். 

இங்குள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் அலங்காரம்.




தொடரும்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails