Wednesday, 7 September 2016

கண்பதி - 2016


மஹாராஷ்ட்ராவைப்பொறுத்தவரை வினாயகர் சதுர்த்திக்கு குறைந்தது பதினைந்து இருபது நாட்கள் இருக்கும்போதே மக்களிடம் “பண்டிகைக்கால மனநிலை” தொற்றிக்கொண்டு விடும். தெருவுக்குத்தெரு ஏரியாவுக்கு ஏரியா கொட்டகை போட்டு பிள்ளையாரின் உருவச்சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட ஆரம்பித்ததுமே மக்கள் அங்கே படையெடுக்க ஆரம்பித்து தங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் பிள்ளையார்களை முன்பதிவு செய்து விடுவர். அந்தப்படியே நாங்களும் எங்கள் வீட்டுக்கான பிள்ளையாரை தெரிவு செய்யச்சென்றோம். ஹைய்யோ!!.. விதவிதமான வடிவங்களில் அலங்காரங்களில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் சிலைகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற உலகமகாக் குழப்பமே வந்தது. ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் அழகு. கடைசியில் ஒரு வழியாக தேர்வு செய்த கையோடு, வீட்டில் எப்பொழுதும் வைத்து அழகு பார்க்கவென ஒரு குட்டிப்பிள்ளையாரையும் தேர்வு செய்து கொண்டோம். இங்கே மஞ்சள் உடையில் அமர்ந்திருப்பவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது செவ்வாடை தரித்து வந்தார்.
வருடத்துக்கு ஒரு முறை பெரியவர் வீட்டுக்கு வரும்போது வீடு கச்சாம் முச்சாமென்று இருந்தால் நன்றாகவா இருக்கும். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் இந்த ஏரியா என்று டைம்டேபிள் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட முழு வீட்டையும் தண்ணீரில் முக்கிக் கழுவாத குறையாக வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் சுத்தப்படுத்தியாயிற்று. என்னதான் தினம் பெருக்கித்துடைத்தாலும், அடிக்கடி அலமாரிகளை ஒழித்துச் சுத்தம் செய்தாலும் பண்டிகை என்று வரும்போது மொத்தமாக மறுபடியும் சுத்தம் செய்தால்தான் மனதிருப்தி. தவிர, வீட்டில் கொஞ்சமாகவா பொருட்களை வாங்கி அடுக்கி அடைத்து வைக்கிறோம். சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் அவற்றையெல்லாம் கடாசினால்தானே மறுபடியும் அந்த காலியிடத்தை நிரப்ப முடியும்? ஊடே ஊடே பூ மற்றும் பழங்கள் போன்ற விரைவில் கெட்டுப்போகும் பொருட்களைத்தவிர்த்து மண்டப அலங்காரம், பூஜை மற்றும் பிரசாதங்களுக்கான பொருட்களையும் ஏற்கனவே தயாரித்து வைத்த லிஸ்டைச்சரி பார்த்து வாங்கி வைப்பது என்று நாட்கள் விரைந்து ஓடின.

கட்டக்கடைசியாக பூவும் பழங்களும் வாங்கி வந்து விடலாம் என்று கிளம்பினோம். இங்கே நெருல் எனுமிடத்தில் இருக்கும் காமாட்சியம்மன் கோவிலுக்கான பூக்கடையில் அருகம்புல் மாலை கிடைத்தது. வழக்கமாக வைத்திருக்கும் மல்லிகை, கதம்பச்சரங்கள் அன்றைக்கு கிடைக்கவில்லை. வாஷியில், செக்டர் -17ல் இருக்கும் வள்ளி ஸ்டோர்சின் முன்னால் கிடைக்குமென்று சென்ற எங்களை ஏமாற்றாமல் மல்லிகை, ஜாதிமுல்லை, அரளி, கதம்பம் என்று விதவிதமான பூச்சரங்கள் கொட்டிக்கிடந்தன. கூடவே பன்னீர் ரோஜாவும் செண்பகமும் தாமரை மொட்டுகளும். விமானத்தில் வந்ததாலோ என்னவோ பூக்களின் விலையும் வானத்தைத் தொட்டுக்கிடந்தது. சரமாகத்தொடுத்த பூச்சரம் முழம் ஐம்பது ரூபாய்க்கு விற்றதென்றால், நெருக்கித்தொடுத்த மல்லிகைச்சரத்தின் விலை 200 ரூபாயாக இருந்தது. நாம் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் சகாய விலையில் ஓரிரு முழம் கூடுதலாகக் கிடைத்தது. வேண்டியதை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.

பிள்ளையாரை தெர்மோகோலில் செய்யப்பட்ட மண்டபத்தில் அமர்த்துவதும் இங்கே வழக்கம். அந்த மண்டபத்தை ‘மக்கர் (maker”) என்று சொல்வார்கள். பிள்ளையார் சிலைகள் விற்கப்படும் கடைகளைத்தவிர ஸ்டேஷனரிகளிலும் தனிக்கடைகளிலும் கூட இவற்றை செய்து விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இவற்றின் விலை மக்கரின் அளவைப்பொறுத்து ஐநூறு ரூபாயிலிருந்து ஆரம்பித்து ஏறிக்கொண்டே செல்லும். எங்கள் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக உபயோகித்த மக்கர் கொஞ்சம் பழசாகி விட்டதால் பழையது கழிந்து புதியது புகுந்து மகள் கையால் அலங்காரம் செய்து கொண்டது..
முக்கியமான அந்த நாளும் வந்தது. விடிந்தால் வினாயகர் சதுர்த்தி. அன்றைக்கு காலையில் வினாயகரை வீட்டுக்கு அழைக்கப்போனால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். தவிரவும் பிரம்ம முஹூர்த்தத்தில் வந்து பூஜை செய்து வைப்பதாக பண்டிட்ஜியும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆகவே, முதல் நாளிரவே சென்று பிள்ளையாரை முறைப்படி அழைத்து வந்தோம். வந்து மண்டபத்தில் இருத்தியபின், குளித்து முடித்து விடிய விடிய தூங்காமல், பச்சரிசி இட்லி, மோதகம், தேங்காய்க்கொழுக்கட்டை, கடலைப்பருப்பு சுண்டல், பூரி, உலர்பழ ஷீரா, சாதம், பருப்பு என சாமிக்கான பிரசாதங்களும், வீட்டிலிருக்கும் ஆசாமிகளுக்கென உருளைக்கிழங்கு மசாலாவும் தயார் செய்து, நாங்களும் தயாராகவும் பண்டிட்ஜி வரவும் சரியாக இருந்தது. விடியலின் மௌனமும் மழைக்காலக்குளிரும் சங்கமித்த அப்பொழுதில் கலசம் ஸ்தாபித்து, பிராணபிரதிஷ்டை செய்து ஆரம்பிக்கப்பட்ட பூஜை மனதுக்கு நிறைவாக அமைந்தது. ஊருக்குச் சென்றிருந்தபோது மகள் எனக்குப் பரிசளித்த ஒரு ஜோடி அன்னவிளக்குகளையும் இன்று அரங்கேற்றியாயிற்று.
சதுர்த்தியன்று ஆரம்பித்து ஒன்றரை நாள், மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பத்தாம் நாள் என்ற கணக்கில் மூர்த்திகள் கரைக்கப்படுவது வழக்கம். எங்கள் வீட்டில் ஒன்றரை நாள் குடியிருந்து விட்டு “நான் போயிட்டு வாரேன்” என்று கிளம்பினார். அனுப்ப மனதே வரவில்லை. வீட்டில் அவர் இருக்கும்போது ஒரு தனித்தெம்பும் பாதுகாப்பு உணர்வும் தோன்றியது நிஜம். ஆனாலும், போனால்தானே அடுத்த வருடம் திரும்பி வர முடியும். 
யதாஸ்தானம் பிரதிஷ்டா செய்து சற்று வடக்கே நகர்த்தி வைத்து புனர்பூஜையை முடித்த கையோடு, கட்டுச்சோறும் கொடுத்து அவரைக் கைகளில் சுமந்து கொண்டு, வீடு முழுக்கச் சுற்றிக்காண்பித்தபின் “கண்பதி பப்பா மோரியா.. புட்சா வர்ஷி லௌக்கர் யா” என்ற வேண்டுகோளுடன் அவரைக்கரைக்க கிளம்பினோம். ஒவ்வொரு ஏரியாவாகச்சென்று தரிசனம் செய்ய நேரமில்லையா?.. கவலை ஏன்?. விசர்ஜன் நடக்கும் நீர் நிலைக்குச் சென்றால் போதும். ஃபேஷன் பரேடு தோற்றது போங்கள்.. வரிசையாக வந்து கொண்டிருக்கும் அழகுப்பிள்ளையார்களைப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். விசர்ஜன் செய்யுமுன் அங்கும் ஒரு முறை ஆரத்தி எடுக்கப்படும். முடிந்தபின் தங்கள் குறைகளை பிள்ளையாரின் காதில் போட்டுக்கொண்டிருந்த சில மக்களையும் காண முடிந்தது. அதெல்லாம் கேட்டுக்கொள்ளத்தானே இத்தனை பெரிய காதுகள் அவருக்கு இருக்கின்றன. என்ன ஒன்று!!.. வாங்கி அந்தக்காது வழியாக விடுகிறாரா இல்லையா என்றுதான் தெரிந்து கொள்ள முடியாது. 
 வெறுமை :-(
காலியான பேரல்களை அடுக்கிக் கட்டப்பட்டிருந்த தெப்பத்தின் மேல்பலகையில் ஓரளவு எண்ணிக்கையில் பிள்ளையார்கள் வரிசையாக அமர்த்தி வைக்கப்பட்டு குளத்தின் ஆழமான பகுதிக்குக்கொண்டு சென்றபின், ஒவ்வொருவராகக் கரைக்கப்பட்டனர். முன்னதாக, பிள்ளையாருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மலர்மாலைகள் களையப்பட்டு, அவை தனியாக நிர்மால்ய கலசத்தில் சேகரிக்கப்பட்டது சிறப்பு. இதனால், குளத்தில் பூக்கள் மிதப்பது தவிர்க்கப்படுகிறதே. குறைந்த பட்சம் அந்த அளவுக்காவது சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது அல்லவா? பிள்ளையார் கரைக்கப்பட்டதும் மணைப்பலகையில் கொஞ்சம் குளத்து மண்ணை வைத்துத் தருவார்கள். அதையும் கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காயையும் மணையில் விரிக்கப்பட்டிருந்த சிகப்புத்துணியில் வைத்துக்கட்டி வீட்டில் தொங்க விடுவது இங்குள்ள வழக்கம். இதை அடுத்த வருடம் நிர்மால்யத்தில் சேர்த்து விட்டு புதிய கலசத்தேங்காயைக் கட்டுவார்கள். பிள்ளையாருக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தோம். அவரை அமர்த்தியிருந்த இடத்தில் காலி மணையை வைத்து ஆரத்தி எடுத்தபோது எவரிடமும் அதிகம் சுரத்தில்லை. பரவாயில்லை.. நம் வீட்டிலிருந்து விடைபெற்றிருக்கிறார். ஆனால், மற்ற இடங்களில் இன்னும் பத்து நாட்களுக்கு இருப்பாரே!! அங்கு போய் கண்டு கொண்டால் ஆயிற்று.

“கண்பதி பப்பா மோர்யா.. மங்கள் மூர்த்தி மோர்யா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”

4 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!!!!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான படங்களுடன் + அற்புதமான விளக்கங்களுடன் சுவையான பதிவு.

நேர்முக வர்ணனைகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

பகிர்வுக்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பகிர்வு
மிக மிக அருமை
நாங்களும் உடன் இருந்து
கொண்டாடிய உணர்வளித்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

அழகு.

இப்போதெல்லாம் தமிழகத்திலும் இப்படி நிறைய இடங்களில் பிள்ளையார் சிலை வைப்பதும் ஆற்றில் கரைக்க வரிசையாகக் கொண்டு செல்வதும் பார்க்க முடிகிறது. நேற்று இங்கே பார்த்தேன்...

தில்லியில் இன்னும் அத்தனை பிரபலம் ஆகவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails