Friday, 18 July 2025

சாரல் துளிகள்

அன்பெனப்படுவது..
கைச்சூட்டால் கூட வதங்கிவிடாமல் ஒரு மலரை உள்ளங்கையில் பொத்திப் பாதுகாப்பது.

இளைப்பாறிய அத்தனை பறவைகளும் பறந்து சென்றபின், இலைகளெல்லாம் உதிர்ந்தபின், கிளைகளும் கழிந்து அடிமரம் மட்டும் எஞ்சியபோது வேரடி மண் இறுக்கிக்கொண்டது தனது பந்தத்தை.

பனியை விதைத்து நிலவொளியை அறுவடை செய்யக் காத்திருந்தவனின் எஞ்சிய கனவுகளில் ஒரு ஊதாப்பூவைச் செருகுகிறது வெயில்.

அன்பு, அழகு, குணம், உதவும் மனம், திறமை போன்றவற்றில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ பிறருடன் பழகவும் நட்பு பாராட்டவும் தகுதிகளாய்க்கொள்கின்றனர் சிலர். பணம் ஒன்றை மட்டுமே அவ்வாறு நெருங்குவதற்கான ஒரே தகுதியாய்க் கொள்கின்றனர் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள் போன்ற சிலர்.

அங்கெங்கெனாது எல்லா இடங்களிலும் நீக்கமற வந்துவிட்டது காசில்லா பணப்பரிமாற்றம். வாய்க்கரிசிக்கும் நெற்றிக்காசுக்கும் கூட க்யூஆர் கோட் வந்து விட்டதென்றால் நிம்மதியாகப் போய்விடும். 

நாலு பேர் என்ன சொல்வார்கள்? சமுதாயம் நம்மை எப்படிப்பார்க்கும்? என்ற அச்சத்திலும் குழப்பத்திலும்தான் பல தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சமுதாயம் என்பதும் அதிலிருக்கும் நாலு பேர் எனப்படுபவர்களும் வேறு யாருமல்ல.. நீங்களும் நானும்தான். புறம் பேசுதல், முன்பின் அறியாதவர்களைப்பற்றி மனம் போன போக்கில் எடைபோடுதல், வன்மம் வளர்த்தல் போன்ற பல கல்யாண குணங்களை எப்போது விட்டொழிக்கப்போகிறோம்? எப்போது திருந்தப்போகிறோம்?!

வலியைச்சொல்லி அழக்கூட விதியற்றுப்போனவர்களின் கண்ணீர்க்குரலை மௌனமாய்க் கேட்டுக்கொள்கிறது தலையணை.

ஓங்கியோங்கி அறைந்து கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறது மழை. பழம் விட மறுத்து பிடிவாதமாய் இன்னும் இறுகிக்கொள்கிறது திறவா நெடுங்கதவம்.

ஒன்றுக்கும் மதிப்பில்லாத உறுத்தலை விலைமதிப்பில்லா முத்தாக்கி வெல்கிறது சிப்பி. உறுத்தல்களை எண்ணியெண்ணி விலைமதிப்பில்லா நேரத்தையும் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் தோற்கிறோம் நாம்.

உளி தொடா ஆழத்தில் புதைந்து கிடக்கிறது சிற்பியின் மனம் தொட்டுக்கொணராத இன்னொரு சிலை.

Monday, 30 June 2025

ச்சுண்டா.. இதை ருசித்ததுண்டா!!

ச்சுண்டா.. பெயரைக்கேட்கும்போது ஏதோ ஹிந்திப்பட வில்லனின் பெயரைப்போல் இருக்கிறதல்லவா! ஆனால் இது கோடைகாலத்தின் ஹீரோக்களில் ஒன்றான மாங்காயில் செய்யப்படும் ஒரு இனிப்பும் புளிப்புமான தொக்கு வகை. குஜராத்தில் மிகப்பிரபலமான பாரம்பரிய வகையான இது தற்காலத்தில் அதன் அண்டை மாநிலங்களிலும் தயாரிக்கப்படுகிறது. 

முக்கனிகளில் ஒன்றான மா மலிந்துகிடக்கும் வேனிற்காலம் இது. பழமாகச் சாப்பிட்டதுபோக மாம்பழப்புளிசேரி, மாம்பழக்காடி எனவும் செய்தாயிற்று. இன்று முருகனுக்குகந்த வைகாசி விசாகத்திருநாள். குமரி மாவட்டத்தில் மாம்பால் என்றழைக்கப்படும் மாம்பழக்காடியைச் செய்து படைப்பார்கள். அதன் செய்முறையை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். சீசனில் அதிகமாகக் கிடைக்கும்போது இங்குள்ளவர்கள் மாம்பழத்தை அரைத்துக் கூழாக்கி, ஐஸ் ட்ரேயிலிட்டு கட்டிகளாக்கி ஜிப்லாக் பைகளில் நிரப்பி ஃப்ரீசரில் சேமித்துக்கொள்வார்கள். சிலர் ஆம்ரஸ் செய்து அதையும் சேமிப்பார்கள். பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஆம்ரஸ் அருமையான ஜோடி. வெயில் கொளுத்தும் தினங்களில் மாம்பழத்தைக்கூழாக்கி தட்டில் ஊற்றி வெயிலில் காய வைத்து அது இறுகியதும் துண்டு போடப்படும் "ஆம் பாப்பட்" என்ற வஸ்து வாய்க்கு உணக்கையானது.

வெயில் கொளுத்தும் நாட்களில் அதை வீணாக்காமல் மாங்காயைப் பல்வேறு பதார்த்தங்களாகப் பதப்படுத்தி சேமித்து வைத்துக்கொண்டால் அடுத்து வரும் மழை, குளிர்காலங்களில் பெரிதும் பயன்படும். ஊறுகாய், தொக்கு, உப்பிலிடு, முரப்பா என இவற்றின் வரிசையில் தவறாது இடம் பெறுகிறது "சுண்டா"

இது ஒரு குஜராத்திய வகை கட்டா மீட்டா ஊறுகாய். ஆனாலும் மஹாராஷ்ட்ர மக்களும் தயாரித்து ஸ்டாக் வைத்துக்கொள்வதுண்டு. அண்டை மாநிலங்களிடையே ரெசிப்பிகளைப் பகிர்வது புதிதா என்ன? பாரம்பரிய முறைப்படி செய்வதானால் கிட்டத்தட்ட ஒரு வாரமும் கொளுத்தும் வெயிலும் ஒரு சில மசாலாக்களும் தேவைப்படும் இந்த "சுண்டா"வை ஒரு மணி நேரத்தில் கொட்டும் மழைக்காலத்தில் சில மசாலாக்களைத் தவிர்த்துவிட்டு என் முறைப்படி செய்தேன். பருவமழை முந்திக்கொண்டு விசிட் செய்ததற்கு நான் பொறுப்பாக முடியாதல்லவா..

பொதுவாக எல்லா வகை மாங்காய்களிலும் செய்யலாம் என்கிறார்கள். பாட்டின் பிழைக்குத்தக்கன பரிசைக் குறைப்பதுபோல் இல்லாமல் அதிக புளிப்புக்கு அதிக சீனி சேர்க்க வேண்டும். என்னவொரு ப்ரச்னை எனில் ஏகத்துக்கும்சீனி சேர்த்தால் டயபடீஸ் காரர்கள் மோந்து பார்த்தாலே 500க்கு மேல் சுகர் எகிறிவிடும் அபாயமிருப்பதால் அதிகம் புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காயில் செய்தல் நலம். அதிக புளிப்புள்ள காய்களை ஊறுகாய் போட்டுத் தீர்த்துக் கட்டிவிடலாம்.

ஒரு பெரிய கிளிமூக்கு மாங்காயை கேரட் துருவியில் பூப்பூவாய்த் துருவி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு அதோடு சம அளவுக்கு சீனியோ அல்லது சீனியும் வெல்லமும் சேர்ந்த கலவையையோ சேர்த்து கால் ஸ்பூன்உப்பும் அதேயளவு மஞ்சள் பொடியும் சேர்த்துக் கிளறி அரை மணி நேரத்துக்கு மூடி வைத்து விடவும். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் மாமி, சித்தப்பா போன்ற காவியங்களைக் கண்டவர் நெஞ்சம் போல் நெகிழ்ந்து நீர் மல்கி இருக்கும். அதை அப்படியெல்லாம் ஈஸியா விட்ரப்பிடாது. கொண்டு போய் தகதகவென எரியும் அடுப்பில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்துவிட வேண்டும். சீனி நன்றாகக் கரைந்து மாங்காய் பளபளவென நிறம் மாறி ஒரு கம்பிப்பதத்திற்கு பாகு வரும்வரை அவ்வப்போது லேசாகக் கிளறி விடவும்.

பதம் வந்ததும் கால் ஸ்பூன் சீரகத்தூளும் அரை ஸ்பூன் மிளகாய்த்தூளும், கால் ஸ்பூன் ஏலப்பொடியும் சேர்த்துக் கிளறி அடுப்பை தகதகவென எரியவிட்டு ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரைக்கும் கிளறுங்கள். அடிப்பிடிக்காமல் இருக்கணும். இனிப்பும் புளிப்பும் காரமும் எங்கோ ஒரு மூலையில் உப்பும் கலந்து ருசிக்கணும். இனிப்பும் புளிப்பும் முன்னே நிற்கிறதெனில் சிட்டிகையளவு காரம் சேருங்கள். அல்வா பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் நிரப்பிக்கலாம்.

சப்பாத்தி, பூரி, ப்ரெட்டில் தடவிக்கலாம், சாப்பாட்டுடன் ஊறுகாய் மாதிரி தொட்டுக்கலாம், அல்லது சும்மாவே கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டு கொஞ்சங்கொஞ்சமா ருசிக்கலாம். சுண்டாவுக்குத் தொட்டுக்க ஜில்லுன்னு மழையும் ஒரு புத்தகமும் இருந்தாப் போதும்.

Thursday, 1 May 2025

உழைப்பாளர் தினத்தில் பிறந்த மஹாராஷ்ட்ர தினம்


உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப ஆண் பெண் பேதமில்லாமல், உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமே வாழ்த்துகளைச்சொல்லுவோம். அடுக்களையில் உழைப்பவராயினும் ஆபீசில் களைப்பவராயினும், வீதியில் பாடுபடுபவராயினும் விண்வெளியில் சாடுபவராயினும் அனைவரும் ஒன்றே. உடலாலும் மூளையாலும் உழைப்பவர் அனைவரும் ஓர் வர்க்கமே. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

இன்று மஹாராஷ்ட்ரத்தில் மஹாராஷ்ட்ர திவஸ் கொண்டாடப்படுகிறது. மொழி வாரியாகப் பிரிந்து மராட்டிய மாநிலம் உருவான தினம் இன்று. மேலதிகமாக விக்கியண்ணன் கொடுக்கும் தகவல்கள் இதோ..

The States Reorganisation Act, 1956 defined boundaries for the states within India on the basis of languages. The Bombay State that was formed as a consequence of this act, however, was composed of different areas where different languages were spoken; Marathi, Gujarati, Kutchi and Konkani. The Samyukta Maharashtra Samiti was at the forefront of the movement to divide the Bombay State into two states; one composed of areas where people primarily spoke Gujarati and Kutchi and the other where people primarily spoke Marathi and Konkani.
The state of Maharashtra and Gujarat were formed as a result of this movement according to the Bombay Reorganisation Act, 1960 enacted by the Parliament of India on 25 April 1960. The act came into effect on 1 May 1960, hence the reason of annual celebration. from onwards.

பல வருடங்களுக்கு முன் எனது வலைப்பூவில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி..

//தனி மாநிலம் வேண்டுமென்று போராடிய சம்யுக்த மராட்டிய இயக்கத்தினரின் ஒரு போராட்டத்தின் போது 105 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மராட்டிய மாகாணம் கலைக்கப்பட்டு, தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960ல்உருவானது. மஹாராஷ்டிர மாநிலம் பிறந்த இத்தினத்தை இங்குள்ள மக்கள் "மஹாராஷ்டிர திவஸ்" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உழைப்பாளர் தினமான மே தினமும், மஹாராஷ்ட்ர தினமும் ஒவ்வொரு வருடமும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 

மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள், முந்தைய ஹைதராபாத் மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் போன்றவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. குஜராத்தி மொழி பெருவாரியாகப்பேசப்படும் பகுதிகள் இணைக்கப்பட்டு குஜராத் மாநிலமும் இதே நாளில்தான் உருவானது. இன்றைய தினம் தாதரிலிருக்கும் சிவாஜி பார்க்கில் ஊர்வலங்கள், மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவதோடு மராட்டிய மாநில ஆளுநரின் உரையும் கட்டாயம் இடம் பெறும். மஹாராஷ்டிர தினத்தன்று மாநிலம் முழுவதும் மதுபான விற்பனையும் கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருக்கும்.//

Sunday, 27 April 2025

சாரல் துளிகள்

மண்ணிறங்கிய முதல் மழைத்துளியைக் கண்டது ஒரு நொடி. காலடித்தடத்தில் ஊறும் நீரைக்கண்டது மறு நொடி. இரண்டுக்குமிடையே குளிர்ந்து கிடக்கிறது மேகத்தின் வாழ்வு.

விழி மூடி ஓய்வெடுக்க ஏங்கும் களைத்தவளுக்கு, தலை சாய்க்கக் கிடைத்திருப்பது இலவம் பஞ்சுத்தலையணையா அல்லது மீன் கூடையா என்பது ஒரு பொருட்டேயல்ல. அவளுக்கு அதுவும் ஒரு தாய்மடியே.

பலி கொள்ளும் வரை.. இரையுடன் சற்று விளையாடுகிறது புலி, தப்பிக்க கருணை காட்டி நேரமளிக்கிறது சிலந்தி, வாத்சல்யமும் பாசமும் காட்டுகிறான் மனிதன்.

ஒருவர் தனது கடமைகளிலிருந்து விலக பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் வழுவாமலிருக்க தன்னறம் ஒன்றே காரணமாய் இருக்க முடியும்.

புரிந்தும் புரியாதவர்போல் அராஜகம் செய்வோரே, சாதுர்யமாய்க் காய் நகர்த்தி எதிராளியைக் குழப்புவதில் முன்னணியில் இருக்கின்றனர்.

இயல்பிலேயே கசக்கும் வேப்பம்பூவின் அமுதையும் அதற்கான தேனீ எங்கிருந்தாவது தேடி வந்துவிடுகிறது.

கண்ணாடி வளையல்களும் கொலுசுகளும் எழுதும் இசைக்குறிப்புகளுக்கான நுட்பங்கள் விடுவிக்குந்தோறும் இன்னும் இறுகிக்கொள்கின்றன.

எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் கடலில் படகைச்செலுத்த இயலாது, அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதில் உருப்படியான சிந்தனைகள் பிறக்காது.

தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாதவர்களே பிறரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் குலைப்பதில் முதலிடம் வகிக்கிறார்கள்.

நமது அபிமானத்தைப் பெறுவதற்காக இன்னொருவரைத் தரம் தாழ்த்துபவர்கள் ஆபத்தானவர்கள். வேறொருவரின் அபிமானத்தைப் பெறுவதற்காக என்றாவது நம்மையும் தரம் தாழ்த்தக்கூடும் இவர்கள். அன்பைப் பூசிக்கொண்டிருக்கும் அவர்களை அடையாளம் காண்பதும் எளிதல்ல.

Monday, 21 April 2025

உணவு மஹாத்மியம்..

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்காலத்தில் உணவைப்பற்றிய விழிப்புணர்வும் உடல் நலத்தின் மேல் அக்கறையும் மக்களிடையே பெருகி வருகிறது. ஒரு காலத்தில் ஊருக்குள் ஒன்றிரண்டு ஹோட்டல்கள் இருந்தாலே அதிசயம். ஆனால் இப்பொழுதோ தெருவுக்கு ஐந்தாறு ஹோட்டல்கள், மெஸ்கள் என பெருகிக்கிடக்கின்றன. போதாததற்கு, வேண்டியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டால் வீட்டுக்கே கொண்டு வந்து தந்து விடும் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்றவற்றின் பெருக்கம். பல வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்டே இராத பெரும்பாலான உணவுகள் இன்று சர்வ சாதாரணமாக நமது தட்டுக்கு வந்திருக்கின்றன. 
அவையெல்லாம் நமது உடலுக்கு ஊறு விளைவிக்காதவைதானா? அம்மாக்கள், பாட்டிகள் சமைத்ததைப்போல் ஆரோக்கியமும் ருசியும் நிரம்பியவைதானா? என அலசிப்பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கூடவே, ‘அப்படியெல்லாம் யோசிக்க விட்டுவிடுவோமா?’ என கங்கணம் கட்டிக்கொண்டு ஏகப்பட்ட செய்முறைகளும் ஒவ்வொரு உணவகத்தின் சிறப்புகளையும் பற்றி யூட்யூபர்களின் ‘வேற லெவல்’ ரிவ்யூக்களும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. பலனாக, வீட்டுச்சாப்பாடு சிறந்ததா? வெளிச்சாப்பாடு சிறந்ததா? என மேடைகளில் விவாதிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

‘உணவே மருந்து’ என வாழ்ந்து வந்தவர் நம் மக்கள். நோய் வாய்ப்பட்டு விட்டால், எந்த வகை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் சரி, பத்தியச்சாப்பாடுதான் போடுவார்கள் நம் அம்மாக்கள். நகைச்சுவைக்காக நாம் ரசத்தை எவ்வளவோ கிண்டல் செய்கிறோம். ஆனால், காய்ச்சல் வந்து வாய் கசந்து கிடக்கும் ஒருவனுக்குத்தான் தெரியும் ரசம் வாய்க்கு எவ்வளவு உணக்கையாக இருக்கிறதென்று. மாறி வரும் உணவுப்பழக்கம், நேரமின்மை, வீட்டின் அஸ்திவாரமான குடும்பத்தலைவிக்கே உடல் நலம் குன்றுவது என பல காரணங்களால் இப்பொழுதெல்லாம் சாப்பாட்டை வெளியில் ஆர்டர் செய்து தருவித்துக்கொள்வது அதிகமாகியிருக்கிறது. மாதத்தில் ஒரு நாள் எனில் பரவாயில்லை, ஆனால், எப்போதாவதுதான் வீட்டில் சமைப்போம் என்ற நிலை ஆரோக்கியத்துக்கும், பணத்துக்கும் கேடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மிகவும் சுத்தமாக, சுகாதாரமாகச் சமைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், வெளிச்சாப்பாடு உண்மையிலேயே அப்படித்தான் சமைக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. வீட்டிலிருக்கும் அல்சர் நோயாளிக்கு, வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு, அதிக உடல் எடை கொண்ட உறுப்பினர்களுக்கு என ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் நாம் பார்த்துப்பார்த்து சமைப்பதைப்போல் வெளியில் சமைத்து அனுப்புவதில்லை. ருசியையும், மணத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்த நிச்சயமாக செயற்கை நிறமிகள், எசென்ஸ்கள், அளவுக்கதிகமான எண்ணெய் போன்றவை கண்டிப்பாகச் சேர்க்கப்பட்டே வரும். வேடிக்கை என்னவெனில், வீட்டுச்சாப்பாடு போரடிக்கிறதென்று, வெளியில் சாப்பிடும்போது, வீட்டுச்சாப்பாடு மாதிரி திருப்தியாகவேயில்லை என அலுத்துக்கொள்வதுதான். 
ஒரு காலத்தில் பண்டிகைகள், நல்ல நாட்கள் என ஏதாவது விசேஷங்கள் வரும்போதுதான் வீட்டில் பட்சணங்கள், பலகாரங்கள் என ஏதாவது செய்வார்கள். இப்பொழுதெல்லாம் நினைத்தபோது செய்தோ, வெளியில் வாங்கியோ சாப்பிடுகிறோம். அவற்றில் பெரும்பாலானவை எண்ணெய்யில் குளித்த, நெய்யில் புரண்டவையாக, எக்கச்சக்கமான கலோரிகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. அதிகமும் உடலுழைப்பு தேவைப்படாத, நாற்காலியிலேயே அமர்ந்திருக்கும் இன்றைய வாழ்க்கை முறையால் அந்த அதிகப்படியன கலோரிகள் எரிக்கப்படாமல் ஊளைச்சதையாய், வேண்டாத கொழுப்பாய் உடலில் தங்குகிறது. அது வேண்டாத வியாதிகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது. இதன் விபரீதத்தை உணர்ந்து சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  லோ கார்ப் முதலான பல்வேறு உணவு முறைகள், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர் மக்கள். ஆனால், இவை ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலில், டயட்டீஷியனின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனில், வெளிச்சாப்பாட்டையே முற்ற முழுக்கத் தவிர்த்து விட வேண்டியதுதானா எனக்கேட்டால் தவிர்க்க வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இருவரும் வேலைக்குப்போகும் வீடுகளில் பணியிடத்துக்கும் வேலையிடத்துக்கும் இடையே பெருந்தூரம் இருந்தால் பயணத்திலேயே பெரும்பொழுது கழிந்து விடும். என்னதான் எளிமையாகச் சமையலைத் திட்டமிட்டுக்கொண்டாலும் ஏதாவதொரு கட்டத்தில் அலுப்பும் சலிப்பும் நிச்சயம் ஏற்படும். அப்படியான சந்தர்ப்பங்களில் வெளியில் சாப்பிடுவதில் தவறொன்றுமில்லை. அதற்காகக் குற்ற உணர்வு கொள்ளவும் தேவையில்லை. மஹாராஷ்ட்ராவில் “போளி பாஜி கேந்த்ர” மிகவும் பிரபலம். சோறு, சப்பாத்தி, பருப்புக்குழம்பு, இரண்டு வகைக்கறிகள், அதிகம் போனால் ஏதாவதொரு இனிப்பு, இவ்வளவுதான் அவர்களின் மெனு. பெண்களே சுகாதாரமாகச் சமைத்துத்தருகிறார்கள். சோளம், கம்பு, தினை போன்ற சிறுதானியங்களில் செய்த ரொட்டி, விரத நாட்களில் ஜவ்வரிசி உப்புமா, வடை போன்றவையும் கிடைக்கும். வேலை முடிந்து வீட்டுக்குச்செல்லும் பெண்கள் இவற்றில் தங்களுக்கு வேண்டியதை வாங்கிச்செல்வதுண்டு. 
முழு உணவுத்தட்டு
தேவையைத்தவிர, வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் ஆர்வமும் வெளிச்சாப்பாட்டு வகைகளைத் தேடி உண்ணத்தூண்டுகிறது. சிலர், வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ சென்றால் முதலில் அந்தப்பகுதியின் ஸ்பெஷல் உணவு என்ன? என்று நிச்சயமாக அறிந்து ருசி பார்ப்பார். மும்பைக்கு வருபவர்கள் வடா பாவ், பாவ் பாஜி, மிசல் பாவ், சாபுதானா வடா, தாலிபீட் போன்ற மராட்டிய உணவுகளை ருசி பார்க்க நிச்சயம் விரும்புவர். அதைப்போலவே தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் இட்லி தோசை உண்ண விரும்புவதுமுண்டு. என்னதான் சமையலில் விற்பன்னராக இருந்தாலும் சில பகுதிகளின் வட்டார உணவுகளை அதே ருசியுடன், பக்குவத்துடன் சமைக்க இயலாது. அப்படியிருக்க சமையலில் அ ஆ கூட தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்? மக்களின் இந்த உணர்வை நாடி பார்த்துப் புரிந்து கொண்ட உணவகங்கள் இப்பொழுதெல்லாம் நாம் மறந்து விட்ட பாரம்பரிய உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் காலையுணவாக பழைய கஞ்சி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். 

மனிதனின் முக்கியமான அடிப்படைத்தேவைகளில் முதலிடம் பிடிப்பது உணவு. இந்தியர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது “சாப்பிட்டீர்களா?” என வினவிக்கொள்வது வழக்கம். இந்தியாவில் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்பட்ட பஞ்சங்களின்போது உணவுப்பற்றாக்குறையால் பெருமளவு மக்கள் உயிர் துறக்க நேரிட்டதின் நீட்சியாகவே அவ்வாறு விசாரித்துக்கொள்கிறோம்  என்பர். அப்படி அடிப்படைத்தேவையான உணவை எக்காரணங்கொண்டும் வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திருமணம் போன்ற விசேஷங்களின்போது எக்கச்சக்கமான அயிட்டங்களைப்பரிமாறி அவை சாப்பிடப்படாமல் வீணாகிறது, ஆகவே, முற்காலம் போல் குறைவான அதே சமயம் சுவையான அயிட்டங்களைப்பரிமாறி நிறைவான விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாகி வருவதும் வரவேற்கத்தக்கதே.

எதைக்கொடுத்தாலும் போதும் என்ற மனநிறைவு கொள்ளாத மனிதன் உணவை மட்டுமே “போதும்.. போதும்” என்கிறான். ஆகவேதான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கின்றனர். 

அன்னம் என்பது சக்தி, அன்னமயம் பிராண மயம்.

டிஸ்கி: புழுதி மின்னிதழின் உணவுச்சிறப்பிதழில் வெளியானது.

Thursday, 23 January 2025

கழி ஓதம் - ரம்யா அருண் ராயன்

“கழி ஓதம்” ரம்யா அருண் ராயனின் முதல் சிறுகதைத்தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தைத் சேர்ந்த இவர் கவிஞருமாவார். இவரது முதல் கவிதைத்தொகுப்பான “செருந்தி” பல விருதுகளை வென்றுள்ளது. கோவையில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.
மொத்தம் பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களங்களைக்கொண்டவை. இவற்றில் ஒன்றிரண்டை இணைய இதழ்களில் அவை வெளியானபோதே வாசித்திருந்தேன்.  பெரும்பாலும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களையே கற்பனை சேர்த்து கதையாக்கியிருப்பது சிறப்பு. சிறுகதைகளுக்கான கரு நம்மைச்சுற்றி நடப்பவற்றை உற்றுக்கவனித்தாலே கிடைத்து விடும் என்பார்கள், அது உண்மைதான். முக்கியமாக தலைப்புச்சிறுகதையான கழி ஓதம். ஓதத்தைக் கருவாகக்கொண்டு நான் வாசிக்கும் முதல் சிறுகதை இதுவே. ஓதம் ஏற்படும்போது அதைக் கண்ணெதிரே படிப்படியாகக் கவனித்திருப்பதால் கதையை உள்வாங்க இயன்றது.

நம்மைச்சுற்றி நடப்பவற்றை மட்டுமல்ல, மனித மனங்களையும் படிக்கத் தெரிய வேண்டும். ரம்யாவுக்கு அது நன்றாகவே கை வந்துள்ளது. நீர்க்குரல், பின்னல், இலக்கணப்பிழைகள் போன்ற கதைகளில் உளவியல் ரீதியாகவும் ஒரு திறப்பு ஏற்படுகிறது. வவ்வாக்குட்டியும் கிட்டத்தட்ட அப்படித்தான். நடந்து கோவிலுக்குள் போக நினைத்த வவ்வாக்குட்டிக்குப்பதிலாக இன்னொரு வவ்வாக்குட்டி பறந்து கோவிலுக்குள் சென்றுவிட்டது. எந்த வவ்வாக்குட்டியாயிருந்தால் என்ன? கோவிலுக்குள் புகுவதுதான் முக்கியம் அல்லவா?! பின்னலில் எங்கோ எப்படியோ மனதில் விழுந்த விதை முளைத்து பின்னிப்பின்னி எவ்வளவு சிக்கலை உண்டாக்கிக்கொள்கிறது.

சிறுகதையாசிரியரினுள் ஒரு கவிஞரும் இருப்பதால் அழகியலுடன் அமைந்திருக்கின்றன கதைகள்.  உவர்ப்பு வாசத்துடன் மின்னும் நிலவொளி, அழும் வீடு, காற்றுடனேயே கண்ணாமூச்சி ஆடும் காற்று, சிரிக்கும் சில்லறை என ரசிக்க வைக்கின்றன வரிகள்.

ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்கள் மனதை ஒவ்வொரு விதத்தில் தொடுகின்றன. கழி ஓதம் கதையில் “தங்கப்புள்ள” என வாஞ்சையுடன் அந்த அண்ணன் கூறும்போது, பவுனும் அவளது கொலுசைச்சுமந்து தந்த கடலும் கூட அவனுக்கு மேலும் இரு சகோதரிகளாகிறார்கள். வேண்டாமென மனைவி உதறிவிட்டுப்போனாலும் இன்னும் அவளுக்கு தனது நினைப்பு இருக்கிறதா என நோட்டம் பார்க்கும் க்ளைவ்வின் நப்பாசையை என்ன சொல்ல!! இதற்கெல்லாமா விவாகரத்து வரை செல்வார்கள் எனத்தோன்றினாலும், ஆல்பம் கதையின் ஆனந்தி தனது வெகுளித்தனத்தைக் கொன்று கொள்ளும்போது பரிதாபமே மேலிடுகிறது. திருமணமாகி புகுந்த வீடு போகும்போது பெண்களிடம், ‘இன்னும் நீ சின்னப்புள்ள இல்லை. போற இடத்துல பொறுப்பா இருந்து நல்ல பேர் எடு’ என அறிவுறுத்தும்போதே அவர்களினுள்ளிருக்கும் அப்பாவித்தனத்தை கிள்ளி எறிந்துதானே அனுப்புகிறார்கள். 

தன்னியல்பு தடம் மாறும்போது அவர்கள் அது நாள் வரை இல்லாத புது மனிதர்களாக ஆகி விடுகிறார்கள், கவினைப்போல, ஆறாவெயிலாளைப்போல. அவளையும் பொற்செல்வியையும் மறக்க முடியாதபடி ஆக்கி விடுகிறது ரம்யாவின் எழுத்து. ‘குருதிக்கோடு’ வாசிப்பவர்கள் கண்களில் நீர்த்திரையிடச்செய்வது உறுதி. தனது குரலைப் பிரிய வேண்டாமென அப்புராணி கற்குவேல் முடிவெடுத்தது ஏற்றுக்கொள்ளத் தக்கதெனப்படுகிறது. தொகுப்பிலிருக்கும் பன்னிரண்டு கதைகளும் தனித்தனிக்கதைகளாயினும் அடிநாதமாக மனித நேயம் அவற்றை இணைத்திருப்பது சிறப்பு. 

Sunday, 19 January 2025

வாரணம் - ராம் தங்கம் (புத்தக மதிப்புரை)


நூல்: வாரணம்
ஆசிரியர்: ராம் தங்கம்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
விலை: 350 Rs.

ராஜவனத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது “வாரணம்” எனும் இந்த நாவல். “திருக்கார்த்தியல்” எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதை வென்ற எழுத்தாளர் ராம்தங்கம் எழுதிய இந்த நாவலில் ராஜவனம் ஒளித்து வைத்திருக்கும் பல ரகசியங்களான மேகமூட்டி மலை, ஆனையருவி மற்றும் பலவற்றை மன்றோவுக்கு மட்டுமல்ல, நமக்கும் காட்டித்தருகிறார் ஆனை ராஜசேகர்.

வனத்தின் உண்மையான அரசன் யாரெனில் அது யானைதான். ஒரு காட்டையே உருவாக்கும் வல்லமை யானைக்கு உண்டு என்பர். உணவையும் நீரையும் தேடி யானை உருவாக்கும் பாதையில்தான் பிற உயிர்கள் சென்று அவற்றைக் கண்டுகொள்ளும். ‘வனத்துல சாமி மாதிரி’ என ஆனை ராஜசேகர் சொல்வது அந்த அனுபவ உண்மையையே.

வனத்துக்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியலுக்குமிடையே ஒரு ஊஞ்சலைப்போல் நாவல் ஆடியாடித்திரும்புகிறது. இவ்விரண்டும் இரு வேறு துருவங்களானாலும் இணைக்கும் புள்ளிகளாக மன்றோவும் அவனது மாமாவான சாமர்வெல்லும் இருப்பதாகத்தோன்றுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவம் உதயமானதும், அது எவ்வாறு பரவியது என்பதும், மாவட்டத்தின் முதல் சர்ச் மயிலாடியில் கட்டப்பட்ட வரலாறும், முதல் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வும் சாமர்வெல்லின் வாயிலாக விவரிக்கப்பட்டுள்ளன. 

அக்கால அடிமை முறையில் மக்கள் எப்படி விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பதையெல்லாம் வாசிக்கையில் நமக்கும் கண்கள் கசிகின்றன. மேலாடை உடுத்தக்கூட உரிமையின்றி பெண்கள் அடக்கியொடுக்கப்பட்டிருந்ததையும் அந்த அவல நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு ஜோகன்னா செய்த முயற்சிகளையும், கன்யாகுமரி மாவட்டத்தில் கல்வி புகட்ட அவர் செய்த தொண்டுகளையும் அறிய நேர்கையில் அவர் மீது பெருமதிப்பு மேலிடுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை அடிமுறை ஆசான்கள் வர்மக்கலை, களரி போன்ற போர்க்கலைகளைப்பயிற்றுவிப்பதிலும், வைத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதிலும் வல்லவர்களாக விளங்கினர். அப்படியொரு அடிமுறை ஆசானான தங்கையா நாடாருக்கும் மிஷனரியின் ரெவரெண்ட் மீட்டுக்குமிடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியல் நிகழ்வுகளைப்பற்றியும், மிஷனரிகளின் செயல்பாடுகளைப்பற்றியும் அறிய முடிகிறது.

‘வனத்தை நேசிக்கக்கூடியவன் இல்லைன்னா வனம் எப்படி சார் காப்பாத்தப்படும்?’ என சாமர்வெல் ஆதங்கப்படுவது நியாயமானதே. நேசிப்பவர்கள் இல்லாததால்தான் இன்று பல மலைகள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக மலைவாழ் உயிரினங்கள் தங்கள் தேவைக்காக ஊருக்குள் புகுந்து உணவைத்தேடுகின்றன. இதனால் பல இடங்களில் மனிதனுக்கும் மிருகத்துக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் விளைகிறது. அழகாக இருந்தாலே ஆபத்துதான் போலிருக்கிறது.

ஆனை வேறு வனம் வேறல்ல.. இரண்டுமே வனப்பானவை, அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டுபவை, எல்லைமீறி நெருங்கிச் சீண்டினால் ஆளை ‘உண்டு.. இல்லை’ என ஆக்கும் ஆபத்தானவை. ஆராதித்தால் அருள்பவை.

ஆனை ராஜசேகருடன் மன்றோ காட்டுக்குள் செய்யும் பயணத்தில் காட்டையும், அங்கிருக்கும் இயற்கை வளங்கள், செடிகொடிகள், விலங்குகள் என ஒவ்வொன்றைப்பற்றியும் ஆசிரியர் வர்ணித்திருப்பவை அபாரம். துளித்துளியாய் நம்மையும் ரசிக்க வைக்கிறார். அதுவும் கதைக்களமான மலையகத்தமிழை நாவலின் உரைமொழியாய்க்கொண்டிருப்பது நாவலோடு இன்னும் ஒன்ற வைக்கிறது. ஆனைதுருத்தி மலையையும், ஆனையருவியையும் மன்றோ காணும் காட்சிகள் வர்ணனையின் உச்சகட்டம். எத்தனை வாசித்தாலும் ரசித்துத்தீராது. அவற்றை வாசிக்கும்போதே நாமும் அந்த அருவியில் நனைவது போல் பிரமை ஏற்படுகிறது.

கட்டையன், நெட்டையன் என ஆனைகளின் வகைகள், சபரிமலையில் பக்தர்கள் கூடும் சமயத்தில் அங்கிருக்கும் யானைகள் இந்தப்பக்கம் வலசை வந்துவிடும் புத்திசாலித்தனம், தண்ணீரைக்கண்டதும் குழந்தை போல் அவை செய்யும் அட்டகாசம், பிருத்திச்சக்கை என கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்கும் அன்னாசிப்பழ விவசாயத்தில் விவசாயிகள் யானையால் எதிர்கொள்ள நேரிடும் நஷ்டம், அதைத்தடுக்க அவர்கள் வைக்கும் ‘வெடிக்காய்’ என்ற கொடுமை என பல தகவல்களை உரையாடல் உத்தி மூலம் பகிர்ந்திருக்கிறார் ராம் தங்கம். ஜெயமோகனின் “கீறக்காதன்” யானையைப்போலவே “கீரிப்பாறை ராஜா”வும் நம் மனதில் அழியா இடம் பிடிக்கிறான்.

இயற்கையோடு இயைந்த வாழ்வையும் யானைகள் மேலான அன்பையும் அவரது அப்பாவான சுடலை மூலம் புரிந்து ஏற்றுக்கொள்ளும் ராஜசேகர் அந்த அன்பை தனது மகனிடம் மட்டுமல்ல மன்றோவிடமும் கண்டு பெருங்களிப்பு கொள்கிறார். “வனம் இல்லைன்னா மனுசனா இருந்தாலும் அவ்வளவுதான்” என்பது உண்மைதானே?

இயற்கை எல்லோரையும் நேசிக்கிறது, ஆனால் மனிதன்தான் இயற்கையை விட்டு வெகுதூரம் கடந்து சென்றுவிட்டான். “தூரத்தைக்கடக்குறதுக்குத்தானே பாதை” என்கிறார் சாமர்வெல். ஆனால், இந்த தூரத்தைக் கடப்பதற்கான பாதைதான் எதுவெனப்புலப்படவில்லை. மனிதனின் பேராசை எனும் திரை அவனது அறிவுக்கண்ணை மறைத்திருப்பது விலகும்வரை பெருவனத்தையும் அதைக்காக்கும் வாரணங்களையும் காக்க ஆனை ராஜசேகர் போன்றவர்கள் யானைகளுக்காக வாழைகளை நட்டு வைத்து உணவிட்டு  மனிதர்களுக்கும் ஆனைகளுக்குமிடையே போராடிக்கொண்டுதான் இருப்பார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails