Monday, 20 July 2015

நாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி

இட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்கென்று குப்புறத்தட்டி, சூடாக இருக்கும் இட்லித்துணியை மெல்லெனப்பிரித்து, கண் சிமிட்டும் நம் தென்னிந்திய “அரிசி நூடுல்ஸ்”.. அதாவது இடியாப்பத்தை ஒரு தட்டிலோ, வாழையிலையிலோ விளம்பி மாம்பழப்புளிசேரியையும் விட்டு அம்மாக்களோ பாட்டிகளோ கொடுக்க வேண்டும். வாங்கிக்கொண்டு, சாரல் தெறிக்கும் தாழ்வாரத்திலோ திண்ணையிலோ அமர்ந்து, சிறுபிள்ளை கையிலகப்பட்ட நூல்கண்டாய் எக்கச்சக்க சிக்கல்களுடன் இருக்கும் இடியாப்பத்தை ஓர் ஓரமாகப்பிய்த்து மாம்பழப்புளிசேரியுடன் புரட்டி வாயிலிட்டு, சூடு தாங்காமல் வாயில் ஓர் ஓரமாக ஒதுக்கி லேசாக வாயைத்திறந்து காற்றை உஃப் உஃப் என்று உள்ளிழுத்து ஆறவிட்டு பல்லுக்குப்பதமாக ஆனபின் மெல்ல அசை போட்டு விழுங்கினால், சொர்க்கம் “நான் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறேன்” என்று குரல் கொடுக்கும்.

சாம்பார், சைவ/அசைவ குழம்புகள், நீர்க்கத்தாளித்த தேங்காய்ச்சட்னி என்று பலவும் இருந்தாலும் ஆனியாடிச்சாரல் பொழியும் நாட்களில் ஒரு நாளேனும் மாம்பழப்புளிசேரியுடன் இடியாப்பம் சாப்பிடாவிடில் நாஞ்சில் மக்களுக்கு மனம் நிறையாது. மாம்பழப்புளிசேரி பாலக்காட்டைப்பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் நாஞ்சில் பகுதியிலும் அதிகம் செய்யப்படுகிறது. இடியாப்பத்துக்கு மட்டுமன்றி சாதத்தில் ஊற்றிச்சாப்பிடவும் உகந்த இக்குழம்பு இனிப்பும் புளிப்பும் லேசான காரமுமாக அமர்க்களப்படும். ஊரில் இதற்கென்றே குட்டிக்குட்டியாக மாம்பழங்கள் கிடைக்கும். 

சர்க்கரைக்குட்டி மாம்பழங்கள் கிடைக்காவிடில், ஜகத்தையெல்லாம் அழிக்கப்புறப்பட வேண்டாம். கிடைக்கும் மாம்பழத்தையே பெரிய துண்டுகளாக நறுக்கி புளிசேரி செய்தால் நாக்கு நம்மை ஊரை விட்டுத்தள்ளி வைத்து விடுமா என்ன? இப்பொழுது மும்பையில் லங்கடாவும், தோத்தாபுரி எனும் கிளிமூக்கு மாம்பழமும் மலியும் காலம். எத்தனைதான் பழுக்க வைத்தாலும் அதிகம் இனிக்காத தோத்தாபுரியை தீர்த்துக்கட்ட வேறென்ன செய்வது?.. அன்னத்தைப் பழிக்கவோ வீணாக்கவோ கூடாதல்லவா? ஆகவே மாம்பழப்புளிசேரி செய்தேன். 
இரண்டு மாம்பழங்களை தோலுடன் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். நீலம் மாம்பழமும் நன்றாகவே சுவை கூட்டுகிறது என்பதை இன்று கண்டு கொண்டேன். ஒரு கப் தேங்காய்த்துருவலுடன் கால் ஸ்பூன் சீரகம், சிறிதளவு மஞ்சள்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்றிரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். இடியாப்பத்திற்கென்று ஸ்பெஷலாகச் செய்யப்படுவதானால் மிளகாய்த்தூளுக்குப் பதிலாக பச்சை மிளகாயைச் சேர்த்தரையுங்கள். ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பிலேற்றி இரண்டு ஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டுச்சூடாக்கி, கொஞ்சம் கடுகும் அதே அளவு வெந்தயமும் போட்டு வெடிக்க விட்டு, கறிவேப்பிலையும் போட்டுப் பொரிய விடவும். அதனுடன் இரண்டு சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து லேசாக சிவக்க விட்டபின் நறுக்கிய மாம்பழத்துண்டுகளைச் சேர்க்க வேண்டும். 

பழத்துண்டுகள் மூழ்கும் அளவிற்குத்தண்ணீர் விட்டு வேக விட வேண்டும். அரை வேக்காடு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவையும் ருசிக்கேற்ப உப்பையும், ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து குழம்பு கூட்ட வேண்டும். குழம்பில் கட்டக்கடைசியாக கடைந்த தயிரைச்சேர்க்க வேண்டியிருப்பதால் தற்சமயம் கொஞ்சம் கெட்டியாகவே குழம்பைத்தயார் செய்து கொள்வது நல்லது. ஊரில் தண்ணீர் செழிப்பாக இருக்கிறதென்று அதிகம் சேர்த்தால் இலையில் குழம்பாறு ஓடி, பாத்தி கட்டியிருக்கும் சாதம் உடைப்பெடுக்கும் வெள்ள அபாயமுண்டு.

லேசாகக் கொதித்து மணம் வந்ததும் இறக்கி சிறிது ஆறியபின், ஒரு கப் தயிரை நன்றாகக் கடைந்து சேர்க்கவும். ஊற்றிச்சாப்பிடும் பதத்தில் குழம்பு இருப்பது முக்கியம். தயிர் அல்வாத்துண்டு போல் கெட்டியாக இருக்கிறதென்றால் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்வது உத்தமம். 

நூடுல்ஸ் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத்தள்ளி வைத்து விட்டு, இடியாப்பத்திற்கு ஆரத்தி எடுத்து நம் உணவு மேசையில் இருத்தி மாம்பழப்புளிசேரியால் மகுடாபிஷேகம் செய்வோமாக :-))

Monday, 13 July 2015

நாஞ்சில் நாட்டு சமையல் - உளுந்தஞ்சோறு

தமிழர்களின் கலாச்சாரத்தில் உணவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. வெறும் பசிக்காகவும் ருசிக்காகவும் மட்டுமன்றி ஆரோக்கியத்திற்காகவும் சாப்பிட்டவர்கள் நம் முன்னோர். “உணவே மருந்து,.. மருந்தே உணவு” என்றிருந்தவர்கள். சாப்பிடும் உணவு மருந்தாகவும் செயல்படும் விந்தையை அறிந்ததால் உடலில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை பத்தியச்சமையலையே மருந்தாகச்சாப்பிட்டு விரட்டி வந்தவர்கள். நம் பாரம்பரியச் சமையலை ஆராய்ந்து பார்த்தால் நம் சமையலில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மருத்துவக்குணமிருப்பது புரியும். “சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை” என்பது பழமொழி. 

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உளுந்துக்கு முக்கிய இடமுண்டு. அதுவும் தோல் நீக்கப்படாத கறுப்பு முழு உளுந்தென்றால் சத்துகளின் சுரங்கமென்றே சொல்லலாம். சௌகரியத்தை முன்னிட்டு அதை இரண்டாக உடைத்தும் பயன்படுத்துவர். அப்படி உடைப்பதற்கென்றே “திருகை” என்று அழைக்கப்படும் கல் இயந்திரம் அந்தக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து வந்தது. கறுப்பு உளுந்தை வறுத்துச்செய்யப்படும் “மொளாப்டி/மொளவாடி” என்று பேச்சு வழக்கில் வழங்கப்படும் இட்லி மிளகாய்ப்பொடியின் ருசியே தனி. இப்பொழுதோ தோலோடு அதிக அளவில் சத்துகளும் நீக்கப்பட்ட வெள்ளை உளுந்தே அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.

கிராமங்களில் பருவமடைந்த பெண்குழந்தைகளுக்கு உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு செய்து கொடுப்பதை உறவினர்கள் ஒரு முக்கியக்கடமையாகவே செய்வார்கள். நெல்லைப்பகுதியில் திருமணம் நிச்சயமானதிலிருந்து கல்யாணம் வரையிலான இடைவெளி நாட்களில் மணப்பெண்ணுக்கு “பெண்சோறு” மாப்பிள்ளைப்பையனுக்கு “மாப்பிள்ளைச்சோறு” என்று அவரவர் உறவினர்கள், முக்கியமாக உடன் பிறந்தவர்கள் உளுந்தஞ்சோறு செய்து கொடுத்து சாப்பிடச்செய்வார்கள். உடன் சின்னவெங்காயம் பூண்டு சேர்த்த வற்றக்குழம்பும், அவியலும், எள்ளுத்துவையலும், பொரித்த அப்பளமும் இருக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் நாட்டுக்கோழிக்குழம்பும் முட்டைச்சமையலும் இடம் பெறும். இப்படிச்சாப்பிட வைத்தே ஐந்தாறு கிலோ எடையை ஏற்றி விடுவதால் நாம் பார்த்த பெண்/மாப்பிள்ளை இதுதானா? என்று சம்பந்தப்பட்டவர் மணமேடையில் குழம்புவதும் நடக்கும். புதிதாகத்திருமணமான தம்பதிகளுக்கும் இந்த உபச்சாரம் நடைபெறும். 

இடுப்பு எலும்புகளுக்குப் பலமூட்டுவதில் உளுந்து முதலிடம் வகிப்பதால் பெண்களுக்கு அதிகம் சிபாரிசு செய்யப்படுகிறது. பெண்களின் வாழ்வில் டீன் ஏஜ் முதல் 40+ வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ உடல்நலக்கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாக்கால கட்டங்களிலும் அவள் உடலில் ஏற்படும் இழப்புகளைச் சரிக்கட்டி தெம்பூட்ட பலவகையான உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி, வெந்தயக்காடி, உளுந்தஞ்சோறு என்பவை முக்கியமானவையாகும்.
உளுந்தஞ்சோறானது நெல்லைப்பகுதியில் “பருப்புச்சோறு” என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு பங்கு உடைத்த கருப்பு உளுந்தும் நான்கு பங்கு புழுங்கலரிசியும் தேவை. கூடுதல் ருசிக்காகவும் சத்துக்காகவும் வெந்தயம், சீரகம், தேங்காய்த்துருவல், சுக்கு, பூண்டு, கறிவேப்பிலை போன்றவை சேர்க்கப்படுகிறது.

உடைத்த உளுந்தை லேசாக வாசனை வரும்வரை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ள வேண்டும். வறுக்காமல் போட்டால்தான் சத்து என்பவர்களும் உண்டு. அரிசியும் உளுந்தும் சேர்ந்து எவ்வளவு இருக்கிறதோ அதற்கு மூன்றரை பங்கு தண்ணீரை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். (அதாவது ஒரு கப் கலவைக்கு மூன்றரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில்). அதில் ஒரு ஸ்பூன் அளவில் வெந்தயத்தையும் சீரகத்தையும், ஒரு இஞ்ச் அளவில் இரண்டு துண்டு சுக்கையும் ஒன்றிரண்டாகச் சிதைத்துப் போட்டு அடுப்பிலேற்றிச் சூடாக்கவும். உலை சூடானதும் அரிசி உளுந்துக் கலவையை நன்கு நீர் விட்டுக்கழுவி தண்ணீரை வடித்து விட்டுச் சேர்க்கவும். உலை கொதித்ததும் மிதமான சூட்டில் சாதம் வேக வேண்டும். முக்கால் பங்கு வெந்ததும் பத்து பல் பூண்டு, அரை கப் தேங்காய்த்துருவல், ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு சேர்ந்து வரும்படி கிளறவும். தண்ணீர் சுண்டி சாதமும் வெந்து மணம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தட்டு போட்டு மூடிவிடவும். 

நெல்லைப்பகுதியில் பெரிய பானைகளில் அதிக அளவில் செய்யும்போது கிளறுவதற்கு ஏதுவாக “துடுப்பு” என்று அழைக்கப்படும் சுமார் மூன்றடி நீளமுள்ள மர அகப்பை எல்லா வீடுகளிலும் இருக்கும். “அரிபெட்டி” என்று அழைக்கப்படும் பனை நாரிலான பெட்டியும் எல்லா வீடுகளிலும் இருக்கும். உளுந்தஞ்சோறு சமைக்கப்பட்ட பானையை இந்தப்பெட்டியால்தான் மூடுவார்கள். தட்டில் படும் நீராவி குளிர்ந்ததும் நீராக சாதத்தில் வடிவதை “வேர்த்து வடியுது” என்று சொல்வார்கள். அப்படியிருந்தால் சாதம் சீக்கிரம் கெட்டு விடும். அதைத்தடுக்கவே பெட்டியால் மூடுவது வழக்கம். 

பையருக்காக கோதுமை ரவையிலும் செய்தேன், நன்றாகவே வந்தது. அரிசிக்குப்பதில் கோதுமை ரவை அவ்வளவே. செய்முறையில் எந்த மாற்றமுமில்லை.

வறுத்த எள்ளுடன் தேங்காய்த்துருவல், மிளகாய்த்தூள், பூண்டு, புளி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து அரைக்கப்படும் எள்ளுத்துவையல் இதற்கு சரியான பக்கவாத்தியம். சில சமயம் மெயின் சரியாக அமையவில்லை என்றால் கூட பக்கவாத்தியத்தின் சாமர்த்தியத்தால் கச்சேரி களை கட்டிவிடும். எள் பிடிக்கவில்லை என்பவர்கள் அதற்குப் பதிலாக கொத்தமல்லி விதையை வறுத்துப் பயன்படுத்தலாம். இந்தக்கொத்தமல்லித்துவையல் உளுந்தங்கஞ்சிக்கு ரொம்பவே பொருத்தமாயிருக்கும். உளுந்தங்கஞ்சிக்கு சாதத்திற்கு வைப்பதை விட அதிகமாகத் தண்ணீர் வைத்து கொஞ்சம் அதிகமாகக் குழைய விட வேண்டும்.

நாஞ்சில் பகுதியில் காலை உணவாகவோ அல்லது ராச்சாப்பாட்டுக்கோ உளுந்தங்கஞ்சி செய்வது வழக்கம். சில காலம் முன்புவரை கஞ்சியே அங்கு பிரதான உணவாய் இருந்தபடியால் சோறு உண்ணுதலையே "கஞ்ஞி குடி" என்றுதான் சொல்வார்கள். நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பவர்களை, வீட்டிலுள்ளவர்கள் " உள்ள கஞ்சித்தண்ணிகள குடிச்சிற்று வேலை சோலியப் பாக்கப்பிடாதா?" என்று திட்டுவதை இன்றும் கேட்கலாம். மீதமாகிய உளுந்தஞ்சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பற்றும் தண்ணீருமாகக்குடித்தால் அது அமிர்தம்.

Saturday, 11 July 2015

நாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்

வத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து, அதாவது பொன்னிறமாக வறுத்து அரைத்துச்சேர்த்து செய்யப்படுவதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

செய்முறையும் பிற பகுதிகளில் செய்யப்படுவதை விட சற்று மாறுபட்டே இருக்கும். தேங்காய் அதிகம் விளைவதாலோ என்னவோ எங்கள் பகுதி தீயலிலும் காய் அல்லது வற்றலுக்கு அடுத்தபடியாக தேங்காயே பிரதான இடம் வகிக்கிறது. லேசாக அழுகிப்போனால்கூட தூக்கியெறியாமல் அந்தத்தேங்காயைத்துருவி மொத்தமாக தீயலுக்கு வறுத்து சேமித்து வைப்பது சொந்தமாக தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களில் ஒரு சிலரின் சிக்கனக்குணம். நூற்றுக்கணக்கில் காய்த்தால்தான் என்ன? ஐந்தாறு தேங்காய்கள் அழுகி விட்ட நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியுமா என்ன?. ஆனால் பக்கத்து வீட்டுக்காரரோ "கருமி" என்று திட்டிக்கொண்டிருப்பார்.

ஏதேனுமொரு காயின் வற்றலைப்பயன்படுத்திச் செய்யப்படுவதால் இப்பெயர் பெற்றதா? அல்லது குழம்பை வற்ற விடுவதால் வத்தக்குழம்பு என்று பெயர் பெற்றதா? என்பது பட்டிமன்றம் நடத்தித்தீர்மானிக்க வேண்டிய ஒன்று. ஆனால், எட்டு வீட்டுக்கு அப்பாலும் மணக்கும் இதன் ருசியை தீர்ப்பை மாற்றி எழுதத்தேவையின்றி அத்தனை பேரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

காலநிலைக்கேற்பவும், சமைப்பவரின் அன்றைய மனநிலைக்கேற்பவும், அடுக்களையில் காய்களின் இருப்புக்கேற்பவும் சுண்டவத்தல், மணத்தக்காளி வத்தல், கொத்தவரங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல், மிதுக்கு வத்தல், மாங்கொட்டை வத்தல், எனவும் பலவுமான வற்றல் வகைகளிலும், முருங்கைக்காய், கத்தரிக்காய், மொச்சை, கொண்டைக்கடலை, கொத்தவரங்காய், சேனை, வெண்டைக்காய், சுண்டைக்காய் என காய் வகைகளிலுமாக அடுக்களை மணக்க.. ஊரே மணக்க தீயல் சமைக்கப்படுகிறது. இவை அத்தனையையும் விட  உள்ளி வெள்ளக்கூடு(சின்னவெங்காயம், பூண்டு) தீயலே நாஞ்சில் நாட்டில் தீயல்களின் மஹாராணியாக மதிக்கப்படுகிறது. 

எங்களூரில் “தீயல் சாதம்” ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தம். கட்டுச்சாதமாகவோ மறுநாளின் தேவைக்காகவோ முன்பெல்லாம் அடிக்கடி செய்யப்படும் இந்தச்சாதத்தின் இடத்தை இப்பொழுதெல்லாம் ரெடிமேட் பொடிகள் பிடித்துக்கொண்டு விட்டன. மொச்சை, முருங்கைக்காய், கொண்டைக்கடலைத்தீயலை நன்கு சுண்ட விட்டு, ஆறியபின் நல்லெண்ணெய் விட்டுப் பிசிறிய சாதத்துடன் கலந்து வைத்து, மறுநாள் சாப்பிடுபவர்கள் பாக்கியவான்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரத்தில் மார்கழித்திருவிழாவின்போது "மக்கமார் சந்திப்பு" என்றொரு நிகழ்ச்சி நடைபெறும். கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையரான சிவன், பார்வதியை சந்திப்பதே மக்கள்மார் சந்திப்பு ஆகும். இவர்கள் பார்வதியிடமும் தாணுமாலயரிடமும் விடைபெற்றுச்செல்லும் கண்கொள்ளாக்காட்சியைக் காண சுத்துப்பட்டு எல்லா ஊர்களிலிருந்தும் கூட்டம் குழுமி விடும். பல்லக்கில் பவனி வரும் மூவரும் கோவில் வாசலை வந்தடைந்ததும், தாணுமாலயர் ஏக்கத்துடன் மக்களைப்பார்த்து விட்டு பிரிவுத்துயர் தாங்காமல் கோவிலுக்குள் ஓடி விடுவார். இதைச் சித்திரிக்கும் வகையில் பல்லக்கை இடவலமாக சற்றே சாய்த்து ஆட்டி விட்டு, பல்லக்குத்தூக்கிகள் கோவிலுக்குள் பல்லக்குடன் ஓடிச்செல்வார்கள். இந்த நிகழ்ச்சி எப்பொழுது நினைவுக்கு வந்தாலும், கூடவே அன்று தயாரித்துச் சாப்பிட்ட தீயல் சாதத்தின் நினைவையும் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறது.

இத்தனை சொல்லிவிட்டு செய்முறை சொல்லாமல் விட்டால் எப்படி?. 

மசாலாவுக்கு:
துருவிய தேங்காய்- 2 கப்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
நல்லமிளகு – கால் தேக்கரண்டி
கொத்தமல்லிப்பொடி – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப
சின்ன வெங்காயம்- 2
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்.

தாளிக்க
நல்லெண்ணெய்
கடுகு – கால் தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை -  ஆர்க்கு

சேர்க்க
புளி- எலுமிச்சை அளவு
உப்பு - ருசிக்கேற்ப

தீயல் செய்யலாம் வாங்க. அடுப்பில் வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, நல்ல மிளகு, சீரகம், வெந்தயம் போட்டுப் பொரிந்ததும் தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை இட்டு தேங்காய் சிவக்கும் வரை வறுக்கவும். பின் மல்லி, மிளகாய்ப்பொடிகளைப்போட்டு கரிந்து விடாமல் பக்குவமாகக் கிளறி எடுத்து ஆற வைக்கவும். இதை எவ்வளவு பக்குவமாகச் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தீயலின் மணமும் ருசியும் நிறமும் மேம்படும். தீயல் மேல் மாறாக்காதல் கொண்ட நாஞ்சிலார்கள் லேசாக எண்ணெய்ப்பசை தென்படும் வரை வறுப்பார்கள். இதில் சேர்க்கப்பட்ட சின்ன வெங்காயம் வறுக்கும்போது இருந்ததை விட அரைக்கும்போது எண்ணிக்கையில் குறைந்திருப்பதற்கு வெங்காயப்பிரியரான அரவையாளரின் சபலமே காரணம். :-)) நன்கு ஆறியபின் வெண்ணெய் போல் அரைத்து வைக்கவும். புளியையும் கரைத்து வைக்கவும். 
வற்றல்களைப்பயன்படுத்திச் செய்வதானால், சூடான எண்ணெய்யில் தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுப்பொரிந்ததும் கடைசியில் வற்றலையும் போடவும். பின் புளிக்கரைசலையும் அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். உப்பு உரைப்பு சரிபார்த்து விட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் தணலைக்குறைத்து வைத்து வற்ற விடவும். விட்ட எண்ணெய் பிரிந்து லேசாக மேல் வர ஆரம்பித்ததும் இறக்கி விடலாம்.

காய்களை உபயோகித்துச் செய்வதானால் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகப் பக்குவப்படுத்த வேண்டியிருக்கும். 

1- வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய் – இவைகளை தாளிதத்தின் கூடவே போட்டு நன்கு வதக்கியபின் புளிக்கரைசலில் வேகவிட்டு பின் மசாலாவைச் சேர்க்கவும்.

2- சேனை, முருங்கைக்காய், கொத்தவரங்காய் – இவைகளை உப்பிட்டு வேக வைத்து பின்  புளிக்கரைசலும் மசாலாவும் தாளிதமும் சேர்க்கவும்.

3- பூண்டு வெங்காயம் – பூண்டை தாளிதத்தின் கூடவே சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் வெங்காயத்தையும் சேர்த்து மேலும் வதக்கவும். பின் வழக்கம்போல் குழம்பு கூட்டி வைக்கவும். 

காய்களை தனித்தனியாகவோ அல்லது ஒன்றிரண்டு வகைகளைச் சேர்த்துப்போட்டோ தீயல் வைக்கலாம். அட்டகாசமாக இருக்கும். ஆனால் பாகற்காயுடன் வேறு காய்கள் சோபிப்பதில்லை.

தீயல் செய்யும் அன்று பருப்பும் காய்களும் சேர்த்த கூட்டுக்கறியோ அல்லது சிறுபயிறுத்துவையலோ அரைப்பதும் நாஞ்சில் நாட்டு வழக்கமே. முதற்கவளம் சாதத்தில் ஒரு கரண்டி துவையலை வைத்து தேங்காயெண்ணெய்யுடன் சேர்த்துப்பிசைந்து சாப்பிடுவது வழக்கம். சாதத்தில் தீயல் ஊற்றி ஒரு கரண்டி கூட்டுக்கறியும் இட்டு விரவி குழச்சடி என்ற முறையில் உண்டாலோ, ஆத்மாவின் அடிவேரையே அசைத்துப்பார்க்கும். “ஆஹா!! இதல்லவோ ஆத்மா கடைத்தேறும் வழி” என்றொரு ஞானம் சட்டெனப் பிறக்கும்.  “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று திருமூலரே சொல்லியிருக்கிறாரே :-)))

Monday, 15 June 2015

சாரல் துளிகள்


சோடியம் விளக்கிலிருந்து 
கொட்டிக்கொண்டிருந்த பெருமழையில்
நனைந்து கொண்டிருந்த மஞ்சள் மாடொன்றின்
முதுகிலிருந்து குதித்த
நீலத்தவளை சொல்லிப்போயிற்று
மழை 
வானத்திலிருந்தும் பொழிந்து கொண்டிருப்பதை.

வட்டத்திற்குள் கட்டமும்
கட்டத்திற்குள் சதுரமும்
ஒன்றையொன்று சிறைப்படுத்தியும்
விட்டு நீங்கியும், முழுமைப்படுத்தியும்
ஒன்றுக்குள் ஒன்றாயும்
அன்னியப்பட்டும்..

கரடிக்குட்டியும் ஷ்ரெக்கும் 
சிண்ட்ரெல்லாவின் பொருட்டு நடத்தும் மௌனயுத்தத்தை 
வேடிக்கை பார்த்தவாறு பாடிக்கொண்டிருக்கின்றன டால்மேஷியன்கள் 
பொம்மைக்கூடைக்குள்..

நினைத்தாற்போல் கலைந்து
திடுமென நினைத்துக்கொண்டு மூடும்
மழைக்கருமேகங்களுக்கும்
எதற்காக அழ ஆரம்பித்தோமென்பதை மறந்து
அவ்வப்போது ரீங்காரமிட்டு வைக்கும்
குழந்தைக்கும் அதிக வித்தியாசமில்லை.

நேற்று வரை வெயிலடிக்கிறது எனவும்
இன்று முதல் மழையடிக்கிறது எனவும்
பிறர் கூரையோரமாய் ஒதுங்கும்
தனக்கெனக் கூரையற்றவனை
மௌனசாட்சியாய் வெறித்துக்கொண்டிருக்கிறது கூரை

கடந்து செல்லும் கால்களைத் 
தட்டித்தட்டிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
பாதையில் புதைந்திருந்த கல்.

இந்த வழியாகச் சென்றிருக்கலாம்
அந்த வழியாகக்கூட சென்றிருக்கலாம்
இரண்டும் முட்டிக்கொள்ளும் 
கூட்டுப்பாதைச்சந்திப்பில்
எதிர்பாராத ஏதோவொன்றைச் 
சந்திக்க நேரிடுமெனில்
எந்தப்பாதை வழியாகச்சென்றால்தான் என்ன?

குளிர்ந்த இரவுக்குளத்தில் அல்லிகளாய்ப் பறிப்பாரற்றுப் பூத்திருக்கின்றன நட்சத்திரங்கள்.

தின்னும் தனிமைக்கு எண்ணங்களை இறைத்தவன் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பிக்கிறான் இன்னொரு முறை.

வளர்ப்பவனை நம்பாமல் வெட்டுபனை நம்பிய ஆடுகளின் கடைசிக்கணத்தில் கொலைவாளில் பிரதிபலித்தன அவை இழந்த அத்தனையும்.

Saturday, 30 May 2015

வாங்கி பாத் (கத்தரிக்காய் சாதம்)

அதென்ன “வாங்கி பாத்” “வாங்காத பாத்” என்று குழம்ப வேண்டாம். கத்தரிக்காயை மராட்டியில் “வாங்கி” என்று சொல்வார்கள். பாத் என்றால் சாதம். “தால் பாத்” என்பது பருப்பு சாதத்தைக் குறிக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அரிசியைக்குறிக்கும் “சாவல்” என்ற சொல்லையே எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறார்கள். எங்களூரில் இப்பொழுதெல்லாம் எல்லா வீட்டிலும் தால் சாவலே சாப்பிடுகிறோம். நம்மூரிலும் முன்னெல்லாம் சோறு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது வழக்கொழிந்து இப்பொழுதெல்லாம் எங்கெங்கு காணினும் சாதமே பரிமாறப்படுகிறது. 

அதிலும் இப்பொழுதெல்லாம் “வெள்ளை சாதம்” என்றொரு பெயர் கிளம்பி கிலியடிக்க வைக்கிறது. ஒரு விருந்தில் என்னிடம் “வெள்ளை சாதம் வைக்கட்டுமா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பேய்முழி முழித்தேன். மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு இலையில் பரிமாறப்பட்ட அந்த வஸ்துவைக்கண்டதும் கொஞ்சம் ஆசுவாசமும், கொஞ்சம் திடுக்கிடலும் ஏற்பட்டது. வெறுஞ்சோறு என்று அதுகாறும் அறியப்பட்டதே வெள்ளை சாதம் என்று புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது. இப்பொழுதெல்லாம், சைவ, அசைவ பிரியாணிகள் பரிமாறப்பட்டதும் அடுத்த ரவுண்டுக்கு வெறுஞ்சோற்றுடன் ரசமோ அல்லது சாம்பாரோ பரிமாறப்படுகிறதாம். சரி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அப்பாலிருந்து எப்பொழுதாவது ஊருக்கு வரும்போது இம்மாதிரியான திடுக்கென்ற திடுக்கிடல்கள் ஏற்படுவது ஜகஜமே. வேறென்னென்ன அயிட்டங்கள் என்னென்ன பெயர்களில் மாற்றப்படக்காத்திருக்கின்றனவோ. 

சூப்பர் மார்க்கெட்டில் எம்.டி.ஆர் மசாலாக்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிப்பக்கம் சென்றபோதும் இப்படித்தான், “பிசிபேளா பாத்” என்ற பெயரைக்கண்டதும், அட!!.. இது நம்மூர் கூட்டாஞ்சோற்றுக்கு தங்கையல்லவோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கண்ணை ஓட்டியபோது தென்பட்ட “வாங்கிபாத்” பாக்கெட்டை வாங்கி வந்து செய்து பார்த்தேன். ருசி பரவாயில்லை ஆனால் வாயில் வைக்க முடியாத அளவுக்குக் காரம். பொதுவாகக் காரம் என்றாலே ஒதுக்கி விடும் மகளுக்கு இது ரொம்பப் பிடித்து விட்டது. செய்து தரச்சொல்லி அடிக்கடி கேட்பாள். ஆனால் என்ன காரணத்தாலோ மார்க்கெட்டில் எம்.டி.ஆரின் வாங்கி பாத் கிடைக்கவேயில்லை. கிடைத்த ரெசிப்பிகளையெல்லாம் முயற்சித்தாலும் ‘அந்த’ ருசி வரவேயில்லை. கிட்டாத பழம் ரொம்பவே புளித்ததால் அதன்பின் முயற்சிக்கவேயில்லை.

சமீபத்தில் நம் கீத்தா மாத்தாஜியின் வலைப்பூவில் இதன் செய்முறை கிடைத்தது. அதன்படி செய்து பார்த்தேன். ஆஹா!!.. அபார ருசி போங்கள். செய்முறையை இங்கேயும் தருகிறேன்.

கத்திரிக்காய் கால் கிலோ

வெங்காயம் பெரிது 2 (இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.)

பச்சை மிளகாய்  2  குறுக்கே கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி

உப்பு தேவையான அளவு

தாளிக்க வறுக்கத் தேவையான எண்ணெய்

ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, ஜீரகம், வேர்க்கடலை தோல் நீக்கியது இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையானால்.

பச்சைக் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

மசாலாப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:

மி.வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு, உபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

மிளகு அரை டீஸ்பூன்

கொப்பரைத் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள் இரண்டு டீஸ்பூன்

வேர்க்கடலை வறுத்துத் தோல் உரித்தது  ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு

சோம்பு ஒரு  டீஸ்பூன்

ஏலக்காய் பெரியது ஒன்று,

கிராம்பு ஒன்று.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆற வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.

உதிரி உதிரியாக சாதம் வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதிலே கறிவேப்பிலை, பச்சைமிளகாயப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்க்கவும். கத்தரிக்காயைச் சற்று நேரம் எண்ணெயிலே வதக்கவும். பாதி வெந்திருக்கும் நேரம் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்க்கவும். சற்று வதக்கவும். இப்போது வறுத்துப் பொடித்துள்ள பொடியை அளவாகச் சேர்க்கவும். பொடியைச் சேர்க்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். சற்று நேரம் கிளறவும். பின்னர் எடுத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டுக் கலக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பு சாதத்திற்கு மட்டும் தேவைப்படும்படி சேர்க்கவும். நன்கு கிளறவும். இன்னொரு வாணலியை அடுப்பில் ஏற்றி ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கடுகு, ஜீரகம் சேர்க்கவும். வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையை அந்த நெய்யில் போட்டு உடனே அடுப்பை அணைத்துவிடவும். இவற்றை அந்த சாதத்தின் மேலே போட்டுக் கொத்துமல்லியும் தூவிவிட்டுக் கிளறவும்.  இதற்குக் காரட் துருவல், வெங்காயத் துருவல் போட்ட தயிர்ப்பச்சடி தொட்டுக்கொளள நன்றாக இருக்கும்.


ஆஹா!!.. அபார ருசி போங்கள். அரிசியை உபயோகித்துச் செய்தது வெற்றியடைந்ததால் பையருக்காக கோதுமை ரவையை உபயோகித்துச் செய்தேன். அளவாகத் தண்ணீர் வைத்து அதிலேயே கொஞ்சம் உப்புப்போட்டுக் கொதிக்க வைத்தபின் கோதுமை ரவையைப் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு, கோதுமை ரவையை அப்படியே ஆற விடவேண்டும். கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் தண்ணீரும் உறிஞ்சப்பட்டு பொலபொலவென சாதம் வெந்து விடும். அதன் பின் செய்முறையின்படி சாதத்தைத் தயாரிக்க வேண்டியதுதான். பையருக்கும் இது ரொம்பவே பிடித்துப்போனது. தொட்டுக்கொள்ள மாங்காய்இஞ்சி ஊறுகாய் இருந்தால் அதிக ருசி.

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வயிற்றில் "வாங்கி பாத்" வார்த்த மாத்தாஜிக்கு ஜே :-)

Monday, 11 May 2015

பெருவாழ்வு

அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம் என பலப்பல நதிகளை இணைத்துக்கொண்டு பெருநதியாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது இவ்வாழ்வு.

கொழுந்து விட்டெரிய வைக்கும் நொடியை எதிர்நோக்கி காற்றுக்காகக்காத்திருந்த பேரார்வம் கொண்ட சிறுபொறி பெரு வனத்தை விழுங்கிப் பசியாற்றிக்கொண்டது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் சில விஷயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தவறான நேரத்தில் சொல்லப்பட்டால் சரியான சொற்களும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.

திட்டமிட்டுச்செய்யும் முயற்சிகள் எந்த முன்னேற்றமும் காணாத நிலையில், திட்டமிடப்படாமலே சில தங்களைத்தாங்களே நடத்திக்கொண்டு விடுகின்றன.

ஒவ்வொரு விடையிலும் முன்னெப்போதோ தேடிய இன்னுமொரு விடையையும் விடுவித்துக்கொண்டே போகிறது வாழ்வெனும் குறுக்கெழுத்துப்புதிர்.

சுறுசுறுப்பு ஒரு நூலிழை அதிகமாகும்போது பதட்டத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. முன்னது ஆக்கும், பின்னது தள்ளாட வைக்கும்.

எவ்விதத்துன்பத்தையும் தாங்கிக்கொள்பவர்களால்கூட, தனக்கு இழைக்கப்பட்ட  துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

காரணமில்லாமல் காரியமில்லை, ஆனால் அந்தக்காரணத்தைக் கேட்பதற்கு சில சமயங்களில் மனதும் நேரமும் இருப்பதில்லை.

இருண்ட பக்கங்கள் மட்டுமே கொண்ட வாழ்வு விதிக்கப்பட்டவர்கள் ஒளியை நோக்கிச் செல்லுமிடமெல்லாம் அவ்விருள் ஒரு நாய்க்குட்டியைப்போல அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Sunday, 5 April 2015

ஈடுபாடு..

சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனநிலை வந்து விட்டால் அதன்பின் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வராது.

வெறுமனே கவலைப்படுவதால் வீணாகும் நேரத்தையும் ஆற்றலையும், அடுத்து செய்ய வேண்டிய செயலுக்கான சிந்தனையில் செலவழித்தால் குறைந்த பட்சம் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழியாவது தோன்றும்.

'வலி' என்ற உணர்வு மட்டும் இல்லாவிடில், மனிதன் மரணத்திற்கும் அஞ்சமாட்டான். 

விதைத்த கற்களையெல்லாம் வீடுகளாய் விளைவித்து நல்ல மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது தன் கடமை மறவாத முன்னாள் வயல்.

எதிலும் நிறைவுறா மனங்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகள் எல்லாமே விரிசலுற்ற பாத்திரத்தின் ஒழுக்காய் கசிந்து பயனில்லாமல் சென்று விடுகின்றன.

இரவின் நீள் தனிமையில் இன்னிசைத்துக்கொண்டிருந்த பூச்சியின் கச்சேரி தடைபட்டதற்கு சுவற்றுப்பல்லி வருந்தவேயில்லை. 

சொல்லப்படும் கருத்திலிருக்கும் கனத்தை விட, சொல்லும் குரலிலிருக்கும் கனமே முதலில் அதைக்கவனிக்க வைக்கிறது.

தனக்குச் சாதகமான சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, தனக்குப் பலன் தருபவற்றை மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் சிலரது அறிவுத்திறன் அமையப்பெற்றிருப்பதுவும் கூட இறைவனின் திருவிளையாடலே.

கடமையைச் செய்தபின், கிடைத்த அனுபவம் மட்டுமே சில சமயங்களில் பலனாக எஞ்சுகிறது.

முயல்பவன் முன்னேறுவான், முயலாதவன் தலைவிதி மேல் பழி போட்டு முடங்கிக்கொள்வான்.

LinkWithin

Related Posts with Thumbnails