Thursday, 30 October 2014

கண்ணாமூச்சி..

எடுத்து வைக்கும் முதல் அடியைப்பாராட்டி ஊக்குவித்தால் ஆமையும் மாரத்தான் வெல்லும், மாறாக நகையாடினால் அந்த எள்ளல் நாளடைவில் சிறுத்தையைக்கூட முடக்கி விடும்.

எத்தனைதான் ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் இரையெடுக்க பூமிக்கு வந்து தீர வேண்டியிருக்கிறது.

பயமும் அவநம்பிக்கையும் கொண்டவரிடத்தில் தோல்வி ஒரு திருடனைப்போல் நுழைந்து உரிமையாளனைப்போல் குடி கொண்டு விடுகிறது.

நல்லவர்களாக இருப்பதை விட, நல்லவர்களாகவே நீடிப்பதுதான் அதிகக்கடினமானதும் சோதனைகள் நிரம்பியதுமாகும்.

வாழ்வில் நாம் இன்னொருவரை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நம்மை முன்மாதிரியாக யாரேனும் கொண்டிருக்கக்கூடும்.

தன்னை ஆக்கிரமிக்கும் பயங்களையும், அவநம்பிக்கைகளையும் வென்று, தன்னைச் சிறந்த முறையில் ஆளும் ஒவ்வொரு மனிதனும் மாமன்னனே.

சிற்றறிவு கொண்ட எறும்பிற்குக்கூட அதன் வாழ்வை நடத்தத் தேவையான அறிவை அளித்திருக்கும் இறைவன் மற்றவர்களையும் வெறுங்கையோடு அனுப்பி விடவில்லை.

பிறரின் நிம்மதியான வாழ்வையும் மகிழ்ச்சியான மனநிலையையும் கெடுக்கும் மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

ஊகங்களுக்கும் வரையறுத்தல்களுக்கும் நடுவே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது உண்மை.

எப்பொழுதும் அப்படித்தான் என்பதால் எப்பொழுதுமே அப்படியிருக்கத்தேவையில்லை. மாற்றங்கள் ஏற்படலாம்.

Monday, 13 October 2014

தெளிவும் .. குழப்பமும்.

திறமையற்ற உழைப்பும், உழைக்க மனமற்ற திறமையும் வீணே. 

அறியாமை பிழையல்ல.. அறிந்து கொள்ள கடுகளவேனும் முயலாமல் இருப்பதே பெரும்பிழை.

"இனி பொறுப்பதற்கில்லை" என்று சொல்லிக்கொண்டே மேலும் மேலும் பொறுத்துக்கொள்கிறோம் ஒவ்வொன்றையும்.

இன்றைய வெற்றி கொடுத்த இனிய நினைவுகளிலேயே தேங்கி நின்று விடாமல் எதிர்கால வெற்றிகளுக்கான நகர்தலில் ஈடுபடுபவனே அறிவாளி.

பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

வெளிக்காட்டிக் கொள்ளாததாலேயே எதுவும் இல்லையென்று ஆகி விடுவதில்லை.

அவசர புத்தியும் ஆராயாத்தன்மையும் சிந்தனையை மழுங்கடித்து எண்ணங்களையும் பாழ்படுத்தி விடுகிறது.

எண்ணங்களைக் கெடுத்துக்கொள்வதை விட, தெளிந்த பின்னும் அவற்றைத் திருத்திக்கொள்ளாதிருப்பதே பெருந்தவறு.

அன்பு செய்தலும் செய்யப்படுதலும் வாழ்வின் மிக இனிய வரங்கள்.

கிடைப்பதுதான் கிடைக்கும் என்று சோர்ந்து உட்காராமல் நமக்கு வேண்டியதைப்பெற அயராது முயல்வோம்.

குழப்பவாதிகள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

Wednesday, 24 September 2014

துணிவே துணை..

பொழியப்படும் அன்பை அலட்சியப்படுத்துவதைப் போன்றதொரு வன்முறை வேறெதுவுமில்லை.

சுகர் இல்லாத வரைக்கும்தான் சுகப்பிரும்மம். 

புரிந்து கொள்ளவில்லை என்று அங்கலாய்ப்பவர்களில் பலர் புரிய வைக்க முயற்சிப்பதேயில்லை.

ஒருவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுவது என்பதை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வழங்கப்படும் உரிமமாகவே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் சிலர்.

வாழ்க்கை எண்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

இடம், பொருள், காலம் என்று அத்தனையும் சாதகமாக இருப்பினும் துணிவு இல்லையெனில் அத்தனையும் வீணே.

கொள்ளும் பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மட்டும் மாற்றிக்கொண்டு, தன்னியல்புகளை மாற்றிக்கொள்ளாத தண்ணீரின் குணம்தான் எத்தனை உன்னதமானது.

ஒன்றைப் புரிந்துகொள்ள இயலாவிட்டால் குறைந்தபட்சம் அதைப்பற்றித் தவறாக விமர்சிக்காமலாவது இருப்போம்.

பெய்த ஒவ்வொரு சூரியத்துளியும் குளத்தை நிரப்பியது வெடிப்புகளாலும், மீன்களின் கல்லறைகளாலும்.

ஒரு நொடி சலனம் பல கால நற்பெயரையும் கட்டமைப்பையும் தகர்த்து விடுகிறது.

Wednesday, 17 September 2014

உறங்கும் எரிமலை..


மூச்சடக்கி இருக்கும் எல்லா எரிமலைகளும் குளிர்ந்து அமைதியாய் இருப்பதாய் அர்த்தமில்லை. அவற்றில் சில ஆயத்தமாகிக்கொண்டிருக்கவும் கூடும்.

கூரையில் பிடிமானம் கிட்டாது சறுக்கிய கால்கள் கைவிட, தரை தொடவிருந்த இறுதிக்கணத்தில் உதவிக்கு வந்தன அதுகாறும் மடக்கியே வைத்திருந்த இறக்கைகள்.

சொற்கள் காயப்படுத்தும், வன்மத்தை விதைக்குமெனில் அவ்வாறான சொற்களை வெளி விடாமல் ஆயுட்சிறைக்கு உட்படுத்துவதே மேல்.

வினையாக முடிந்தவையில் சில, விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கக்கூடும்.

பால்யத்தில் தொலைந்த நிலா திரும்பக்கிடைத்தது காட்ராக்ட் திரைக்கு அப்பால். இத்தனை நாள் எங்கிருந்தாயென்று இருவருமே கேட்டுக்கொள்ளவில்லை.

இறகின் நீர்த்துளியில் ஒளிந்திருக்கும் சூரியனை அறியாமல் சிறகு கோதிக்கொண்டிருக்கிறது குருவி.

எல்லாக்காதுகளும் மூடிக்கொள்ளும்போது மனது திறந்து கொள்கிறது சொற்களை வரவேற்க.

போனால்தான் என்ன? வராமலா போய்விடும்?

சிந்திய ஒரு சொட்டு நிலவினைப்பருக அடித்துக்கொண்டன அத்தனைக் கண்களும்.

செய்த தவறுகளையெல்லாம் மறந்து விடுவதாகச் சொல்லிக்கொள்பவர்களில் பலர் தாங்கள் செய்த தவறுகளை மட்டுமே மறக்கிறார்கள்.

Saturday, 13 September 2014

வெற்றியைத்தேடி..



புறத்தால் அகம் விழிக்கிறது, அகத்தால் புறம் செயல் புகுகிறது.


பொரிந்து தள்ளுவதை விட புரிந்து கொள்ளும்படி பேசப்படுவதே கவனத்தில் நிற்கும்.

பயத்தை வெல்ல ஒரே வழி அதனுடன் தோழமை ஏற்படுத்திக்கொள்வதுதான்.

ஒட்டிக்கொண்டிருந்த கல்துணுக்குகளைத் தூசாய்த்தட்டி விட்டு விட்டு எழுந்து நின்றது சிற்பம்.

ஆர்வத்தாலோ ஆர்வக்கோளாறாலோ, எப்படி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் முழுமூச்சுடன் உழைக்க ஆரம்பிக்கும் ஒரு கட்டத்தில் இரு பாதைகளும் இரண்டறக்கலந்து வெற்றியை நோக்கிப் பயணத்தைத் தொடர்கின்றன.

பிறர் தோளில் சவாரி செய்யும் குழந்தைகள் கூட ஓர் நாளில் சுயமாய் நடக்கத்துவங்கி விடுகிறார்கள். சொகுசு கண்ட சோம்பேறிகளோ அதிலேயே உறைந்து விடுகிறார்கள்.

பிடிமானம் உறுதுணையாக இல்லாத இடமானால் அங்கே உறுதிக்கு இலக்கணமான நாணலாலும் தாக்குப்பிடிக்க இயலாது.

சொல்பவர்கள் இறைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். சொற்கள்தாம் கிடந்து அரைபடுகின்றன.

நம் அழுத்தங்களையும் சுமையையும் தாங்குமளவு பிறர் தோள்கள் வலுவுள்ளவையா என்பதைப் பெரும்பாலான சமயங்களில் நாம் அறிவதேயில்லை.

"என்னைத்தூக்கிக்கோ.." என்று கைகளை உயர்த்தும் குழந்தையை நோக்கி நீள்கின்றன ஒன்றுக்கும் மேற்பட்ட தாய்க்கரங்கள்.

Thursday, 17 July 2014

குதூகல ஏமாற்றம்..


காயம் பட்டவர்களின் வலியை ஆயுதம் என்றும் அறிந்ததில்லை.

சோம்பல் தனியே வருவதில்லை, முயற்சியின்மை, ஒத்திப்போடுதல், சாக்குச் சொல்தல் போன்ற நண்பர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வருகிறது.

பயணிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கும் சேர்த்து கையசைத்து விடை கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.

தொலைந்து போனதைத் தேடித்தேடி கடைசியில், "போய்த்தொலைகிறது " என்று விட்டு விடுவதுதான் பக்குவப்படுவதன் அடுத்த படி.

மதிக்கப்படும் இடங்களில் ஒரு துளிக் கண்ணீரும் ஒரு துளி தண்ணீரும் விலை மதிப்பற்றவை.

ஏமாறுவதும் குதூகலமளிக்கிறது, ஏமாற்றுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்.

கசந்த காலத்திற்கு நிகழ்காலத்திலும் உயிரூட்டிக்கொண்டிருந்தால் எதிர்காலம் இனிக்காது.

உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமிடையே அரைபட நேரிடும் போது, நழுவிச் செல்லத்தெரிந்தவர்களே தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள்.

குறும்புத்தனத்துடன் முன்னே ஓடி, விசுவாசத்துடன் பின்தொடர்ந்து, பின் களைப்புற்ற நாய்க்குட்டியாய்க் காலடியில் குறுகியது நிழல்.

கட்டறுத்துக்கொண்டு ஓடும் எண்ணங்களை அடக்கியாள்வதும் , அவற்றால் துவைத்து எடுக்கப்படுவதுமாக மனித வாழ்வில் நடக்கிறது தினம் ஒரு ஜல்லிக்கட்டு.

Monday, 14 July 2014

படிப்படியாய்..


நம்பிக்கையின்மையை நப்பாசை முந்திச்செல்ல முயல்கிறது, சில சமயங்களில் வென்றும் விடுகிறது.

அளவு கடந்த பயம் தேவையற்ற கற்பனையைத்தூண்டுகிறது, கற்பனை மேலும் பயத்தை வளர்த்தெடுக்கிறது.

ஓங்கி உயர்ந்து வரும் ஒரு கிளையை அரக்கினாலும், தளராமல் உடம்பெல்லாம் கிளைக்கும் தாவரத்திடமும் கற்றுக்கொள்ள இருக்கிறது ஒரு வாழ்க்கைப்பாடம்.

அறிவுரைகளோ, ஆலோசனையோ நம்பிக்கையையும் தைரியத்தையும் மேலும் வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர சிதைப்பதாக இருக்கக்கூடாது.

அவநம்பிக்கை புகுந்திருக்கும் மனதில் மருட்சி இருளாய் நிரம்பி விடுகிறது. ஞான அகலேற்றி அவற்றை விரட்டுவோம்.

கற்றுக்கொடுக்க உலகெங்கும் புல்பூண்டு வடிவில்கூட ஆசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள், ஆனால் பரீட்சையை மட்டும் விதி தன்னந்தனியே நடத்துகிறது.

நமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை அப்படியே ஏற்காமல், அந்தந்தக் காலகட்டத்திற்கும் அப்போதைய நிலைக்கும் நன்மை பயப்பவற்றை மட்டும் ஏற்றல் நலம்.

தீ, விவாதம், கடன், விரோதம் போன்றவைகளை மீதம் வைக்காமல் அப்போதைக்கப்போது முடித்துவிட வேண்டும்.

தலையைக் குனிந்து கொண்டு சென்று கொண்டிருந்த மந்தையில், நிமிர்ந்து நடந்த ஆடொன்று புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தது அந்த நொடிகளிலிருந்து.

எதிர்பாரா விதமாக அந்த நொடியில் நிகழ்ந்தவையாக நினைக்கப்பட்டவையெல்லாம் உண்மையில் அதற்கு முந்தைய நொடிகளிலிருந்தே நிகழ்வை ஆரம்பித்தவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails