Thursday, 8 September 2022

அக்கா (துளசி கோபால்) - புத்தக மதிப்புரை

புத்தகம்: அக்கா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ஆசிரியர்: துளசி கோபால்

பதிவுலகில் எங்கள் அனைவராலும் அக்கா என அன்போடு அழைக்கப்படும் துள்சிக்கா என்ற துளசி கோபால், தனது அக்காக்களோடும் அண்ணனோடும் கழித்த இளம்பிராயத்து அனுபவங்களைக் கட்டுரைகளாகத் "துளசி தளம்" என்ற தனது வலைப்பூவில் எழுதி வந்தார். அவ்வனுபவங்களின் தொகுப்பே “அக்கா” என்ற தலைப்பில் தனி நூலாக மலர்ந்திருக்கிறது. அக்கா என்றதும் எனக்கு கலாப்ரியா அண்ணாச்சியின்,

“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கச்சிப் பாப்பாக்களைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்”

என்ற புகழ்பெற்ற கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அக்காக்கள் அப்படித்தான். அக்கா என்பவள் இன்னொரு தாயும் கூட. 

அக்காக்களின் கதையைச்சொல்ல வந்த துள்சிக்கா, அதனுடன் தன் கதையையும் பின்னியே சொல்லியிருக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் மூன்று சகோதரிகளின் வாழ்வும் மூன்று வெவ்வேறு திசைகளில் பயணித்திருக்கின்றன. அக்காக்கள் என்றால் அவர்கள் தனி மரமா? மாமாக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் வாழ்க்கை முறை என எல்லாமும் சேர்ந்த தோப்புதான் அக்கா.

அக்கா என்றால் இன்னொரு அம்மாதானே? துள்சிக்காவின் பெரியக்காவைப்பற்றி வாசிக்கும்போது எனக்கு அவர் துள்சிக்காவின் இன்னொரு அம்மா என்றுதான் தோன்றியது. அந்தப்பகுதியை வாசிக்கும்போது துள்சிக்காவின் ஞாபகசக்தியை வியந்தேன். எவ்வளவு சிறுசிறு விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்து எழுதுகிறார்!. முக்கியமாக, நீளமான எலி போன கதை, அக்கா வீட்டில் மெழுகிக்கோலம் போடும் முறை, வீட்டில் என்ன நடந்தாலும்“நானு” என எல்லாவற்றுக்கும் குழந்தை ரேணு சொல்லும் விதம், முக்கியமாக அக்காவின் கல்யாணக்கூரையான பனாரஸ் பட்டுப்புடவையைக் கட்டிக்கிழித்தது, முத்தாய்ப்பு வைத்தது போல் அப்பா தனது கடைசி நாட்களை மூத்த மகள் வீட்டில் கழித்தது என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

சின்னக்காவிற்கும் அண்ணனுக்குமிடையே அகப்பட்டுக்கொண்டு சின்ன துள்சிக்கா பட்ட பாடு நமது உடன்பிறப்புகளிடையே ஏற்படும் விளையாட்டுச் சண்டைகளைக் கண்டிப்பாக நினைவூட்டும். இருவருக்கும் சமரசம் ஏற்பட்டிருக்ககூடாதா என்ற ஏக்கம் தோன்றியது நிஜம். சின்னக்காவையும் அவரது நறுவிசான காரியங்களையும் வாசிக்க வாசிக்க, அவரைக்கொண்டு போன எமன் மேல் கோபம் வந்தது. சின்னக்காவுடன் துள்சிக்கா பூவுக்குப் பங்கு கேட்கும் முறையையும், அம்மா மற்றும் அக்காக்களுடன் சினிமாவுக்குக் கிளம்பும் வைபவம் பற்றியும் விவரித்திருப்பதை வாசிக்கும்போது, அந்த உணர்வை நம்முள் நேரடியாகக் கடத்திவிடுகிறார். சிறந்த கதை சொல்லியான துள்சிக்கா.

மருத்துவரான அம்மா இருந்த வரைக்கும், கதம்பமாய் ஒற்றுமையாய் இருந்த உடன்பிறப்புகள், அவரின் இறப்புக்குப்பின் சிதறிப்போவதும், அந்தக்குடும்பம் கொஞ்சங்கொஞ்சமாய்க் கலைவதும் வாசிக்கும்போதே வலி தருகிறது. அக்காக்களின் கல்யாணம் பற்றி விவரிக்கும்போதே, அம்மா வழி குடும்பத்தையும் சற்று நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அம்மம்மாவுடன் நிகழ்த்தும் “நடு வீடு” கலாட்டா நகைக்க வைத்தது.

அக்காக்கள் என்பவர்கள் நிச்சயமாக அபூர்வப்பிறவிகள்தான், இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக அவரவர் அக்காக்கள் நினைவுக்கு வருவது உறுதி. தனது வலியைக்கூட புன்னகையுடன் நகைச்சுவையுணர்வுடன் சொல்வது எங்கள் துள்சிக்காவின் சிறப்பியல்பு. இப்புத்தகத்திலும் அது வெளிப்பட்டுள்ளது. கையிலெடுக்கும் ஒவ்வொருவரும் புன்னகை தவழ வாசித்து முடிப்பது உறுதி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails