Thursday, 25 November 2021

காளீ.. தக்காளி


ஏழு கடை தாண்டி, ஏழு மால் தாண்டி, ஆங்கோர் வயலிலே விளைஞ்சு கிடக்குது தக்காளி. அதுலதான்...

அரக்கனோட உசுரு இருக்காப்பா?

இல்லே, என்னோட உசுரு இருக்கு. தக்காளி வேணும்ன்னு உங்கம்மா காலைலேர்ந்து அதை வாங்கிக்கிட்டிருக்கா.

********************************************

........க்கு மிக அருகில் அறுபதே கிலோ மீட்டர் தொலைவில் வீட்டு மனைகள் ரெடி. முந்துங்கள்.. குறைவான எண்ணிக்கையிலேயே மனைகள் கையிருப்பில் உள்ளன.
முன்பதிவு செய்யும் முதல் ஐந்து பேருக்கு ஒரு கிலோ தக்காளி இலவசப்பரிசு

**********************************************

"இளவட்டக்கல் தூக்கறது, சல்லிக்கட்டுக் காளையை அடக்கறதெல்லாம் வேண்டாமாம். ரேஷன் கடையில ஒரு கிலோ தக்காளி யாரு வாங்கிட்டு வாராங்களோ அவனுக்குத்தான் பொண்ணைக் குடுப்பேன்னுட்டார் பொண்ணைப் பெத்தவர்"

**********************************************
"பேரன்பேத்தி மேல அவங்களுக்குப் பாசம் அதிகம்தான், அதுக்காக இப்படியா?!"
"ஏன்? என்ன செஞ்சாங்க?"
"என் நாட்டுத்தக்காளியே.. என் பெங்களூர்த்தக்காளியே.. என் மணத்தக்காளியேன்னு கொஞ்சிக்கிட்டிருக்காங்க"

***************************************************

"ஆயிரம் ரூபா டிக்கெட், தனி வரிசைல இப்பத்தான் காளியை  சிறப்பு தரிசனம் செஞ்சுட்டு வரேன்"
"காெல்கத்தா காளியா? உஜ்ஜயினி காளியா?"
தக்"காளி".

***********************************************

"படத்தோட கதை சொல்றேன்னீங்களே?"
"கேட்டுக்குங்க. தக்காளின்னு அவமானப்படுத்தி ஒரு கூடை தக்காளிகளை அழிச்சுருது அந்த ஊரு. அப்ப தப்பிப்பிழைச்ச ஒரு தக்காளியோட பரம்பரைல வந்த சின்னத்தக்காளி, தான் வளந்து பெருசானதும் தன் முன்னோர்களுக்கு நேர்ந்த அவலத்துக்குப் பழிக்குப்பழி வாங்குது. அந்த ஊரே தக்காளியோட அருமையை உணர்ந்து திருந்தும்படியாச் செய்யுது"

**********************************************
"தக்காளியோட படம் தத்ரூபமா அச்சுஅசலா தோணுதுங்கறதென்னவோ உண்மைதான். அதுக்காக அதை அரைச்சுப்போட்டு சட்னி செய்யறதெல்லாம் கொஞ்சங்கூட நல்லால்லை கமலா.."

**********************************************
z பிரிவு பாதுகாப்பு வேணும்ன்னு கேட்டுருக்காளாமே நம்ம கோடி வீட்டு சுசீலாக்கா?
ஆமா.. கால் கிலோ தக்காளி வாங்கி வெச்சுருக்காளாம் அவ வீட்டுல. மடில கனம் இருந்தா பயம் இருக்கத்தானே செய்யும்?

**********************************************
ப்ரொட்யூசர் ஏன் தலைல கை வெச்சுக்கிட்டு இடிஞ்சு போய் உக்காந்திருக்கார்?
கனவுக்காட்சியை தக்காளித் தோட்டத்தில் வைக்கச்சொல்லி ஹீரோ கண்டிஷன் போடறாராம்

**********************************************
ஆனாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பண்றது ரொம்பவே ஓவர்தான்..
ஏன்? என்னாச்சு?
மாமியாரோட எடைக்கு எடை தக்காளி குடுத்தாதான் பொண்ணு கழுத்துல மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்.

டிஸ்கி:  தங்கத்தைப்போல் நாளுக்கொரு விலையேற்றத்தைச் சந்திக்கும், ஏழைகளுக்கு எட்டாக்கனியாகியிருக்கும் தக்காளிக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

1 comment:

கோமதி அரசு said...

தக்காளி விலை உயர்வு ! அது அழகான நகைச்சுவை பதிவை உங்களை தர வைத்து இருக்கிறது.
அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails