Monday 17 April 2017

நெடுமரம்..

நாம் சொல்லும் எந்தச்சொல்லுக்கும் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் சும்மா அமைதியாக நிற்பவரை "மரம் மாதிரி நிக்கறியே"எனத் திட்டுகிறோம். உண்மையில் மரம் எதற்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் சும்மாவா நிற்கிறது? ஒவ்வொரு பருவகாலத்துக்குமேற்ப தன்னுடலில் அது வெளிப்படுத்தும் மாற்றங்கள் எத்தனையெத்தனை!!

வசந்த காலம் வந்ததும் மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, வெள்ளை என பலப்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறதே.. இத்தனை வண்ணமலர்களை அதுகாறும் எங்கே ஔித்து வைத்திருந்தது அது? உதிர்ந்து வழியெங்கும் பூம்பாய் விரித்த மலர்கள் போக சிலவற்றை தனது வம்சவிருத்திக்கென விதையுற்பத்திச்சாலை சுமக்கும் கனிகளாக உருமாற்றும் இரசவித்தையை ஒவ்வொரு நாளும் பிறரறியாமல் நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறது. இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு உடலெங்கும் செம்பூக்களை மட்டும் அணிந்து நிற்கிறதே இந்த மரம்.. எந்தப் பருவகாலத்திலிருந்து இதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்ததோ!! யாருக்குத் தெரியும்?

வாழும் ஒவ்வொரு நொடியும் தனக்காகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உயிர்ப்புடன் பேரமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்ச்சாலையல்லவா அது!! புரட்டிப்போடும் புயலுக்கிசைந்து தன்னுடலில் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலும், மறு நொடியிலிருந்தே அவ்விழப்பைச் சரிக்கட்டும் முயற்சியில் அதன் வேர்களும் திசுக்களும் ஒன்றிணைந்து சத்தமில்லாமல் பாடுபடத் தொடங்கி விடுவதை யாரறிவார்.

அசைவற்று அது நிற்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதற்குள் ஒரு பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிந்தோமில்லை. அதைப்போய் சும்மா நிற்கிறது என மனிதனோடு எப்படி ஒப்பிடவியலும்? வேண்டுமானால், காய்ந்து பட்டுப்போன மரத்தைப் பார்த்து, "மனிதனைப்போல் சும்மா நிற்கிறாயே" என்று ஒப்பிட்டுச் சொல்லிக்கொள்ளலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails