Monday, 21 November 2016

பாலும் பழமும் கடைகளில் தேடி..

"எல.. மணீண்டன் கல்யாணத்துக்கு ஸ்ருதிக்கி புளியங்கொட்ட பட்டுப்பாவாட எடுத்தாச்சி. இனும ஒனக்கு மட்டுந்தான் சேல எடுக்கணும். விடிஞ்சதும் ஆரெம்கேவி போலாம்" என்று அம்மா சொன்னதும் பட்டுப்பாவாடை துணியை கையில் வாங்கிப்பார்த்தேன். மெரூன், பச்சை, மஞ்சள் என்று கட்டம்போட்ட டிசைன் ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது. 

"ஒனக்கு வேற டிசைனே கெடைக்கலியா? இல்ல கலர்தாம் கிடைக்கலியா?" 

"தச்சுப்போட்டப்றம் பாரு, அதுவும் போட்டோல பாரு. இதாம் எடுப்பா இருக்கப்போவுது. ப்ளெயின் பாவாடதான் அவாட்ட நெறய இருக்கே" என்று எனது ஆட்சேபத்தை இடது கையால் ஒதுக்கிய அம்மாவின் கூற்று எத்தனை உண்மையானது என்பதை திருமண புகைப்படங்கள் வந்தபின் புரிந்து கொண்டேன். அப்பொழுதிலிருந்தே அந்த டிசைனில் புடவை வாங்கி மகளின் பட்டுப்பாவாடைக்கு மேட்சாகக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. எப்பொழுதாவது ஊருக்குப்போகும்போது புடவைக்கடைகளில் தேடுவேன். அது கிடைக்காது.. சொக்கா!!! எனக்கில்ல.. எனக்கில்ல. இல்லவேயில்ல. விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட என புடவை ஆசையை விட்டொழித்தேன்.

இப்படியாகத்தானே சில வருடங்கள் போனபின், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் என் நண்பிகளான முப்பெருந்தேவியர் ஒரே மாதிரியான புடவை கட்டி போட்டோ போட்டு வெறுப்பேத்தினார்கள். அது வேறேதுமில்லை. புளியங்கொட்டை டிசைன் என என் அம்மா நாட்டு வழக்கில் சொன்ன பாலும் பழமும் டிசைனேதான். கி கி கி. மறுபடி புத்தியில் தீ பற்றிக்கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது நெல்லையி்லிருக்கும் சென்னை சில்க்ஸிற்குப் போனேன்.

"பாலும் பழமும் டிசைன்ல புடவை இருக்கா?"

உடனே பட்டுப்புடவை செக்ஷன் முழுக்க "ஏ.. பாலும் பழமும் எடுத்துப்போடு" என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. கடைசியில் முஹூர்த்தப்புடவைகள் இருக்கும் செக்ஷனில் இருந்தவர் என் செவியில் பால் வார்த்தார்.

"இருக்குங்க. பாதிப்பாதி இருக்கு." அவர்சொன்னது half and half. அதாவது புடவையானது முட்டி வரைக்கும் ஒரு டிசைனும் கணுக்கால் வரைக்கும் பாலும் பழமும் கட்டம் போட்டதுமாக இருந்தது. அதுவும் நான் கேட்ட மல்ட்டி கலரில் இல்லாமல் மஞ்சளும் பச்சையும், காவியும் மெரூனும் என காவியக்கலர்களில் இருந்து கண்ணைப்பறித்தது. கடையைத் தலைகீழாகப் புரட்டி தேடியவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு வெறும்கையோடு நடையைக் கட்டினேன். இங்கில்லாவிட்டாலென்ன? ஆரெம்கேவியில் இருக்கும் என அங்கும் சென்றேன்.

"பாலும் பழமுமா? இன்னேரத்துக்கு பாலுக்கும் பழத்துக்கும் நா எங்க போக?". புடவை இருக்கிறதா எனக்கேட்ட சக பணியாளருக்கு இன்னொரு பணியாளர் அளித்த பதிலில் நெல்லைக்கே உரிய குசும்பு இருந்தது :-). என்றாலும், கடையை மூடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும் வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒவ்வொருவரும் தேடத்தொடங்கினர். கடைசியில் ஒருவர், "கெட்டு நாளைக்குத்தான் பிரிப்போம். ஆனா நீங்க ஆசையா கேக்கேளேன்னு இப்பமே பிரிச்சுட்டேன். பிடிச்சதைப் பாருங்க" என நாலைந்தை எடுத்துப்போட்டார். நல்லாத்தான் இருந்தது என்றாலும் நான் கேட்ட மல்ட்டி கலரிலோ பார்டரிலோ இல்லாததால் "போனால் போகட்டும் இந்தத் தடவையும்" என்ற மன நிலையை அடைந்திருந்தேன்.. எனினும் மகளுக்குப் பிடித்துப்போனதால் ஒன்றை எடுத்துக்கொண்டேன். ஆனாலும் "பாலும் பழமும் போச்சே" என வெம்பிய மனதை, "ஹெ.. யாருக்கு வேணும் பாலும் பழமும்? இந்தா இருக்கே பொடி தோசை.. சாப்டு" என சமாதானப்படுத்தியாயிற்று.

மறுநாள் நாகர்கோவிலில் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோமோ எனத்தோன்றியது. வேப்பமூடு ஜங்க்ஷனில் இருக்கும் "நல்லபெருமாள் சில்க்ஸ்" நல்ல டிசைன் துணிகளுக்குப் பெயர் போனது. ஒரு காலத்தில் நெல்லை வட்டாரத்திலிருந்து கூட ஜவுளி எடுக்க இங்கேதான் வருவார்கள். இதை மறந்து விட்டோமே என என்னை நானே கடிந்து கொண்டு, கடைக்குள் நுழைந்து, நேராக பட்டுப்புடவை செக்ஷனுக்குச் சென்றேன். "பாலும் பழமும் டிசைன் இருக்கா?" எனக்கேட்டதுதான் தாமதம். நாலைந்தை எடுத்துப்போட்டார். அத்தனையும் நான் எதிர்பார்த்த மல்ட்டிகலர் கட்டங்கள் போட்ட புடவைகள். அளவான அழகான கட்டங்களும் அசத்தலான பார்டர்களுமாக ஜிலுஜிலுத்தன. "அள்ளிக்கோ" என பரபரத்த மனதை அடக்கிக்கொண்டு ரொம்பவும் பிடித்த புடவையை பத்தே நிமிடத்தில் செலக்ட் செய்து கையில் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "ஆயிரம் சொல்லு.. இல்லே, ஐநூறு சொல்லு. கடைசில எங்கூர்தான் எனக்கு வேணுங்கறதைக் கொடுத்துச்சு" என மகளிடமும் பெருமையடித்துக்கொண்டேன். 

என்ன ஒன்று, இந்தப்புடவையைப் பார்க்கும்போது, "லேய்.. அன்னிக்கி என்னமோ, புளியங்கொட்டைலாம் பழைய டிசைன்.. இதப்போயி எடுத்தியேன்னு கேட்டியே" எனக் கிண்டலடிக்கலாம் அம்மா. அடுப்பில் காய் கருகுவதைக்கவனிக்கச் செல்வதைப்போல் நழுவி விட வேண்டும். அடுப்பே எரியாவிட்டாலும் கூட.

4 comments:

ராமலக்ஷ்மி said...

இரண்டுமே அசத்தல். வாங்கிய அனுபவப் பகிர்வு அதைவிடவும் அசத்தல் :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ஊரெங்கும் தேடினேன்,.. நல்லபெருமாளில் கண்டேன் :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

நல்ல வேல .எங்க அண்ணாச்சிய தொந்திரவு பண்ணாம ......நீங்க மட்டும் தேடுநிகல .அது மட்டும் சேமம் ....

Anonymous said...

நல்ல வேல...... .எங்க அண்ணாச்சிய தொந்திரவு தராம விட்டிங்கலேன்னு .எனக்கு சந்தோஷம் ....

LinkWithin

Related Posts with Thumbnails