அப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மணமும் மங்கி மறைந்து விடுகிறது. ஆனால், வாடினாலும் மணம் குறையாத, சொல்லப்போனால் வாடுந்தோறும் மணம் அதிகரித்துக்கொண்டே போகும் ஒரே பூ மகிழம்பூ மட்டுமே.
எழுத்தாளர் லக்ஷ்மியின் கதைகளில் இப்பூ நிறையவே இடம் பெற்றிருக்கும். கண்ணால் கண்டதில்லை எனினும் அவரது எழுத்தின் மூலம் கண்ட மகிழம்பூ தரிசனம் என்றாவதொரு நாள் மகிழம்பூவைக் கண்ணால் காண மாட்டோமா என்று ஏங்கச்செய்திருந்தது. எதேச்சையாக ஒரு நாள் எங்களூர் ரயில் நிலையத்தின் வெளியே இளநீர் அருந்திக்கொண்டிருந்தபோது கடையின் பின்னால் வளர்ந்திருந்த குறுமரம் கண்ணில் பட்டது. குட்டிக்குட்டியாகப் பூத்திருந்த பூக்களை படமெடுக்கும் நோக்கில் அருகே சென்று காமிராக்கண் வழியே உற்று நோக்கினேன். ஹைய்யோ!! என் கண்களையே என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை காலமும் இணையத்தில் மட்டும் கண்டு களித்த மகிழமரம் இப்போது என் கண் முன். நாலைந்து பூக்களைப் பறித்து நுகர்ந்தேன். மயக்கும் நறுமணம் உச்சி வரை ஏறி கிறங்கச்செய்தது. இன்னும் சில பூக்களைப் பறித்து வந்து சாமி அலமாரியில் சிறு கிண்ணத்திலிட்டு வைத்தேன்.
பச்சை வான்வெளி போன்ற மரத்தில் லேசான வெண்ணிறத்தில் சின்னஞ்சிறு நட்சத்திரங்களாகப் பூத்திருக்கும் இப்பூக்கள் கண்ணுக்கும் நாசிக்கும் ஒரு சேர இன்பமளிக்கின்றன. இப்பூ இறைவழிபாட்டிற்கும் உகந்தது. திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
மகிழம்பழங்கள் சாப்பிடவும் உகந்தவை. மனதை மகிழவைக்கும் பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில்களிலும், வீடுகளிலும் இவை வளர்க்கப்படுகின்றன. கரும்பச்சை நிறத்தில் சற்றே நாவல் மர இலைகளைப்போல் தோற்றம் கொண்டிருக்கும் இலை மறைவில் இலைக்கணுக்களிலிருந்து கொத்துக்கொத்தாகத் தோன்றும் மொட்டுகள் பூத்து உதிர்ந்தாலும் மேலும் மேலும் அதே கணுக்களில் மொட்டுகள் தோன்றிக்கொண்டே இருப்பது இதன் சிறப்பு. விடியலில் மலர்ந்து மாலையில் கூம்பி விடுவதால் ஒரு நாள் அதிகாலையில் சென்று படம் பிடித்து வந்தேன். இம்மரம் ஏப்ரல் மாதத்திலிருந்து பூக்க ஆரம்பித்து ஜூன் ஜூலையில் பழங்கள் வர ஆரம்பிக்கின்றன. மஹாராஷ்டிராவில் பெண்கள் இப்பூக்களை ஊசி நூலால் கோர்த்து தலையில் சூடி மகிழ்வர். சந்தையிலும் பூச்சரங்கள் கிடைக்கின்றன. ஒன்று வாங்கி வந்து வார்ட்ரோபில் வைத்தாயிற்று. சரமென்னவோ வாடி சருகாகி விட்டது. ஆனாலும், வார்ட்ரோப் கதவைத்திறக்கும்போதெல்லாம் அதன் மணம் கும்மென்று மூக்கில் மோதுகிறது.
பொதுவாக ஸ்பானிஷ் செர்ரி எனவும், சமஸ்கிருதம், மராட்டி மற்றும் பெங்காலியில் பாகுலி (Bakuli) எனவும், ஹிந்தியில் மௌல்சரி எனவும் அழைக்கப்படும் இப்பூ தமிழில் மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என அழைக்கப்படுகிறது. இதன் தாவரப்பெயர் Mimusops elengi ஆகும். சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சிறப்பும் இப்பூவுக்கு உண்டு. மகிழ மரத்தின் இலை, பூ, காய், கனி மரப்பட்டை என அனைத்துப்பாகங்களும் ஆயுர்வேத வைத்தியத்தில் உபயோகிக்கப்படுகின்றன. காய்ந்த மகிழம்பூவோடு செண்பகம். ரோஜா இதழ்களையும் காய வைத்து சிறுபயறுடன் அரைத்துப்பொடித்து கஸ்தூரி மஞ்சள் பொடியோடு கலந்து வைத்துக்கொண்டால் மணம் மிக்க குளியல்பொடி தயார். முகத்தில் பூசிக்குளிக்க நன்றாகவே இருக்கிறது.
வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மரம் இருபது அடி முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. சுமார் ஐந்தடி உயரம் வளர்ந்ததுமே பூக்க ஆரம்பித்து விடும் இம்மரம் மிக மெதுவாகத்தான் வளரும் ஆகவே விரைவில் பலன் பெற விரும்புவோர் இதை வளர்க்க விரும்புவதில்லை. ஆனால் இதை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கு நல்லது என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு. வருடமுழுவதும் உதிராத அடர்த்தியான இலைகளையுடைய, நல்ல நிழல் தரும் இம்மரத்தின் கீழே உறங்குவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது எனவும் கூறப்படுகிறது.
6 comments:
மகிழம் இப்பதிவை படித்தால் மகிழும்.
இலையைப் பார்த்தால், மாமரம் ஜாடை வருதோ...
பல புதிய தகவல்கள் - மகிழம்பூ பற்றி... நன்றி...
வாங்க ஈஸ்வரன்,
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ஹுஸைனம்மா,
நாவல் பாதி மா பாதி கலந்து செய்த கலவை மாதிரி இருக்குப்பா :-)
பூக்கள் அழகு. தகவல்களும் தான்.....
நன்றி.....
வாசமிகு பதிவு. அருமையான படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
Post a Comment