Wednesday, 9 March 2016

குருவியும் துடைப்பமும் பின்னே ஞானும்..

அடுக்களையையொட்டிய சிறிய பால்கனியில்தான் எப்பொழுதும் பூந்துடைப்பம் ஓய்வெடுப்பது வழக்கம். ஒரு நாள் அதிகாலையில் வாசலைப்பெருக்குவதற்காக வழக்கம்போல் துடைப்பத்தை எடுக்கப்போனால் சிறு சிறு துரும்புகள் துடைப்பத்தைச்சுற்றிலும் இரைந்து கிடந்தன. அவையெல்லாம் பூந்துடைப்பத்திலிருந்து பிய்த்துப்போடப்பட்டவைதான் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. 

ஏதோ சிறுகுழந்தைகள் விளையாடிப் பிய்த்துப் போட்டிருப்பது போல் இருக்கிறதே,.. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிட்டுக்குருவி வந்து பால்கனிச்சுவரில் உட்கார்ந்தது. வழக்கம்போல் அதற்கு அரிசி மணிகள் எடுத்து வருவதற்காக உள்ளே திரும்பவும், சட்டென்று துடைப்பத்தினருகில் வந்து ஒரு புல்கற்றையைக் கொத்திக்கொண்டு பறந்தது. ஆஹா!!.. இதானா சங்கதி. கோடை நெருங்குவதால் காக்கை, குருவி என்று எல்லாப்பறவைகளும் தாங்கள் சொந்த வீடு கட்டுவதற்காக குச்சிகள், சிறு சுள்ளிகள் என்று அலகுக்குக் கிடைப்பதையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய சுள்ளிகளை கூடுகளுக்கும் சிறிய புற்கள் மற்றும் இலைகளின் நார்களை கூடுகளில் நிரப்பி மெத்தை போல் மென்மையாக வைத்துக்கொள்ளும் வித்தையை இயற்கை இவற்றுக்குப் பிறவியிலேயே வழங்கியிருப்பது அதிசயம்தான். சாதாரணமாகவே எக்கச்சக்க சுறுசுறுப்பாய் இருக்கும். இப்போது, வீட்டுக்குரியவர் வருமுன் முடிந்தளவு துடைப்பத்துரும்புகளை கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தாலோ என்னவோ பயங்கர சுறுசுறுப்பு. சின்ன அலகால் புற்கற்றைகளை ஒவ்வொன்றாக அசைத்து அசைத்தே ஒடித்தெடுத்து விடுகின்றன. எடுத்த வேகத்தில் அவை விர்ர்ர்ரென்று பறப்பதும் தனியழகுதான்.
குருவிகள் அக்கம்பக்கத்து வீடுகளில் வளரும் செடிகளையும் விட்டு வைப்பதில்லை. தங்களுக்கு வேண்டிய புரதச்சத்திற்காக இலைகளையெல்லாம் கூட கொத்தித்தின்றுவிட்டுப் போய் விடுகின்றன. டப்பாக்களில் முளைத்து அப்போதுதான் வளர ஆரம்பித்திருந்த வெந்தயச்செடிகளை ஒரே நாளில் கபளீகரம் செய்து விட்டன. செடிகளைச் ‘சாப்பிட்டு விட்டுப்போ’ என்று விட்டு விட்டேன். ஆனால், மறக்காமல் துடைப்பத்தை வீட்டுக்குள் எடுத்து வந்து பத்திரப்படுத்தி விட்டேன். அதே கையோடு இதையும் எழுதினேன்.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

உடைத்தே துரும்பினை ஊர்க்குருவி கொள்ளும்
துடைப்பத்தை வீட்டுள்ளே வை


சில நாட்களுக்கப்புறம் வழக்கம்போல் துடைப்பம் பால்கனிக்கே ஓய்வெடுக்கப்போக ஆரம்பித்தது தனி விஷயம் :-))

7 comments:

கோமதி அரசு said...

பாவம் குருவி, துடைப்பத்தை உள்ளே வைத்து விட்டீர்களே!
அவை அலையாமல் கொள்ளாமல் உங்கள் வீட்டு துடைப்பத்தை உடைத்து வெகு சீக்கிரம் கூட்டை கட்டி முடித்து இருக்குமே.
படங்கள் அழகு.

ப.கந்தசாமி said...

குறள் வெண்பா சிறப்பாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அவர்களுக்காக ஒரு துடப்பத்தை அங்கே வைத்துவிடுங்கள். சாந்தி. வீடு கொடுத்த புண்ணியம் கிடைக்கும். எத்தனை அழகுப் படங்கள். அருமை.

'பரிவை' சே.குமார் said...

சிட்டுக்குருவி வீடுகட்ட உங்க வீட்டில் இருந்து பொருள் கொண்டு போயிருக்கிறதே அக்கா...

படங்கள் அழகு.... குறள் வெண்பா சூப்பரோ சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

பொறுமையாகப் படமாக்கியிருக்கிறீர்கள். அனைத்தும் அருமை. வெண்பா நன்று.

ஆம், எப்படியும் வேறெங்கேனுமிருந்து கொண்டு வந்து கூட்டைக் கட்டுவதற்குப் பதிலாக உங்கள் துடப்பமே பயன்படுட்டுமாக!

சாந்தி மாரியப்பன் said...

பழக்கதோஷத்தில் துடைப்பத்தை வெளியில்தான் போட்டு வைக்கிறேன். போகட்டுமென்று விட்டு விட்டேன் :-))

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி

மீரா செல்வக்குமார் said...

மிகச்சரி...துடைப்பத்தை வெளியே விட்டுவிடுங்கள்...
நல்ல பதிவு கிடைக்கும்..

அருமையான..எளிய நடை..விகற்பக் குறள்..நன்று

LinkWithin

Related Posts with Thumbnails