பாஸ்போர்ட் மற்றும் இன்ன பிற விஷயங்களுக்குத் தேவைப்படும் என்பதால் என் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களின் இன்னொரு பிரதியை வாங்குவதற்காக சமீபத்தில் நாகர்கோவில் செல்ல நேரிட்டது. இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் தரவிறக்கிக்கொள்ளும் வசதி வந்து விட்டது என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த வசதி இன்னும் வரவில்லை எனத்தெரிந்தது. ஆகவே நேரில் போய்த்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பதால் ஊருக்குப்போக தத்காலில் டிக்கெட் ரிசர்வ் செய்தோம். சான்றிதழ்கள் கிடைக்க எத்தனை நாட்களாகும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு அந்த வாரத்திலேயே கிறிஸ்துமஸ், சனி ஞாயிறு விடுமுறைகள் என வரிசை கட்டி நின்றதால் வந்த வேலை முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியாததால் முனிசிபல் ஆப்பீசில் போய் நிலைமையைச்சொல்லி, குத்துமதிப்பாக எத்தனை நாட்கள் ஆகுமென்று தெரிந்து கொண்டு அதன் பின் மும்பை திரும்ப டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.
விண்ணப்பிக்கும்போது என்னென்ன டாகுமெண்ட்டுகள் தேவைப்படும் எனத்தெரியாததால் பிள்ளைகளின் போட்டோக்கள், வாக்காளர் அட்டை, பள்ளி இறுதிச்சான்றிதழ் முதற்கொண்டு அத்தனை டாக்குமெண்டுகளும் அடங்கிய ஃபைல், மகளின் பிறப்புச்சான்றிதழின் எஞ்சியிருந்த ஜெராக்ஸ் காப்பி, பஞ்சிங் மெஷின், ஸ்டாப்ளர், பேனாக்கள், ஃபெவிகால் மற்றும் ஒரு சில வெள்ளைத்தாள்கள் அடங்கிய பையோடு நாகர்கோவில் முனிசிபல் ஆப்பீசில் போய் இறங்கினேன். வளாகத்தில் மரங்களினூடே ஒளிந்திருந்த, திருப்பிப்போட்ட ‘ப்’ வடிவிலான கட்டிடத்தின் எந்தப்பகுதியில் சான்றிதழ்களுக்காக அணுக வேண்டும் எனத்தெரியாமல் காவலாளியை அணுகிக்கேட்டதும் அவர் ‘ப’வின் நடுவில் புள்ளியாய் அமைந்திருந்த சிறிய கட்டிடத்தைக் கை காண்பித்தார். நாலைந்து படிகள் ஏறிச்சென்று கவுண்டரில் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்தவரிடம் விசாரித்தேன். “இந்த அப்ளிகேஷனை மட்டும் நிரப்பிக்கொடுங்க. வேற டாக்குமெண்ட்ஸ் எதுவும் தேவையில்லை” என்றார்.
அவரிடம் சான்றிதழ்களுக்காகவே மெனக்கெட்டு மும்பையிலிருந்து வந்திருப்பதைச்சொல்லி கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டேன். நிச்சயம் உதவுவதாகச்சொன்னவர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பக்கத்துக் கவுண்டரிலிருந்த பெரிய ஆப்பீசரிடம் கொடுக்கச்சொன்னார். விண்ணப்பங்களை நிரப்பியபின் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தபோது இனம் புரியாத பதற்றத்தாலும் முதல் நாள் மாத்திரை எடுத்துக்கொள்ளாததாலும் இருதயத்துடிப்பு சற்று அதிகரித்திருந்தது. போதாக்குறைக்கு மும்பையிலிருந்து கடுமையான ஜலதோஷம் மற்றும் இருமலோடு கிளம்பியிருந்தேன். மூக்கோடு சேர்ந்து காதும் அவ்வப்போது அடைத்துக்கொண்டு படுத்திக்கொண்டிருந்ததால் எதிரில் யாராவது பேசும்போது சற்றுக்கூர்மையாக அவதானித்துக்கேட்க வேண்டியிருந்தது வேறு கடுப்பைக்கிளப்பியது.
ஒரு வழியாக பெரிய ஆபீசரின் முன் சென்று விண்ணப்பங்களைக்கொடுத்ததும் விஷயத்தைச்சொல்லி “இதுக்குன்னே மும்பைலேர்ந்து வந்திருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சா கொள்ளாம்” என்று அவரிடமும் எனது வேண்டுகோளைச்சொன்னேன். அவரது பதிலைப்பொறுத்துதான் மும்பைக்கு ரிடர்ன் டிக்கெட் எடுக்க வேண்டுமென்றும் சொன்னேன். “எம்மா ரெண்டு நாள்ல கிடைக்காதே. கிறிஸ்மஸ், சனி, ஞாயிறுண்ணு எல்லாம் வருது. அடுத்த வாரம் ஆயிருமே. வந்தது வந்தீங்க.. கூடுதலா ரெண்டு நாள் நாரோயில்ல தங்கி வாங்கிட்டுப்போங்க” என்றவர் கொஞ்சம் யோசித்தார். பின், “சரி.. ஒண்ணும் பிரச்சினையில்ல.. ரெண்டு ஃபார்முக்கும் அறுவது ரூவா கொடுங்க. சாயந்திரம் ஒரு மூணு மணி வாக்குல வாங்க. இங்க மேடத்துக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யறேன்” என்றார். அவர் அறுபது என்று சொன்னது கண்ணாடி ஜன்னலைத்தாண்டி வரும்போது தேய்ந்து, ஜலதோஷத்தால் அடைத்திருந்த என் காதில் அறுநூறு என்று விழவே ரூபாயை எடுத்து நீட்டினேன்.
அதிர்ச்சியான அவர், “ எம்மா.. எதுக்கு இவ்ளோ? அறுவதுதான்” என்று கூறியபடியே அதிகப்படியான பணத்தைத்திருப்பித்தந்தார். “அவ்ளோதானே சொன்னீங்க?” என்று குழம்பிய என்னிடம் “இல்லம்மா.. அறுவதுதான்” என்றவர் ‘இங்கே யாருக்கும் அதிகப்படி காசு எதுவும் கொடுத்துராதீங்க’ என்று ஜாடை செய்தபோதுதான் ஒருவேளை நான் அதை லஞ்சமாகக் கொடுத்ததாக நினைத்துக்கொண்டு விட்டாரோ என்று சந்தேகம் வந்தது. அடடா!!.. எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று வழி தேடும் இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான அரசாங்க அதிகாரியா?. நான் தவறுதலாகக் கொடுத்திருந்தாலும் அதை சாக்குப்போக்குச் சொல்லி தக்க வைத்துக்கொள்ளாமல் திருப்பிக்கொடுத்தது அந்த நல்ல மனம்.
பகலுணவை முடித்துக்கொண்டு நாகர்கோவில் மணிமேடைப் பகுதியிலிருக்கும் சுதர்சன் புக்ஸில் சென்று சற்று நேரம் அலசி ஆராய்ந்து ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டபின் சொன்னது போல் சாயந்திரம் மூன்று மணிக்கு மேல் முனிசிபல் ஆபீசிற்குப்போனேன். அங்கே ஒரு மேடத்திடம் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, “சர்ட்டிபிகேட்டுக்குன்னே மெனக்கெட்டு வந்திருக்காங்க. கொஞ்சம் சட்ன்னு முடிச்சுக்கொடுங்க” என்று நிலைமையையும் எடுத்துச்சொன்னார். பக்கத்துக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச்சென்ற மேடம், “மகனுக்கு கொஞ்சம் டைம் ஆகும். நாளைக்குத்தான் ரெடியாகும். மகளோட சர்ட்டிஃபிகேட் காப்பி இருக்கதால இப்பம் சாயந்திரம் அஞ்சு மணிக்கு கிடைச்சுரும். இப்பம் மூணரை மணி ஆவுது. இருந்து வாங்கிட்டுப்போங்க.. இல்லண்ணா சாயந்திரம் அஞ்சு மணிக்கி வாங்க" என்றவர் சற்று யோசித்து விட்டு, "ஒண்ணு செய்யலாம், ரெண்டையும் சேத்து நாளைக்கே வாங்கிக்கிறீங்களா?" என்று கேட்டார். இரண்டு மணி நேரத்துக்குள்ளாக இன்னொரு முறை தங்குமிடத்துக்கும் முனிசிபல் ஆபீசுக்கும் அலைய தெம்பில்லை. மறு நாள் வந்து வாங்கிக்கொண்டால் இன்றைய அதிகப்படி அலைச்சல் மிச்சமாகும் என்பதால் இரண்டையும் மறுநாள் ஐந்து மணி வாக்கில் வந்து வாங்கிக்கொள்வதாகச்சொல்லி விட்டு தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் சென்றபோது பையனின் சான்றிதழ் தயாராகி ஆபீசரின் கையெழுத்துக்காகக் காத்திருந்தது. பெண்ணின் சான்றிதழை கீழே ஆபீசில் சென்று கையெழுத்திட்டு வாங்கியபின், ஓட்டமும் நடையுமாக பக்கத்துக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு ஓடிச்சென்று சற்றுக்காத்திருந்து பையனின் சான்றிதழையும் கையெழுத்திட்டு வாங்கியபின்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதிப்பெருமூச்சு வந்தது. முனிசிபல் ஆபீசுக்குள் அங்கே இங்கே என்று ஊழியர்களிடம் சொல்லி வைத்து, அனைவரும் விடுமுறைக்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்த அவசரத்திலும், சான்றிதழ்களைத்தயார் செய்ய வைத்து, விரைவில் கிடைக்க உதவிய பெரிய ஆபீசருக்கு நேரில் சென்று நன்றி சொல்லி விட்டு, லேசான மனதுடன் நாகராஜா கோவிலுக்குச்சென்று மனங்குளிர தரிசித்து வந்தோம்.
பொதுவாகவே அரசாங்க அலுவலகம் என்றால், வேலை சட்டென்று முடியாது, இழுத்தடிப்பார்கள், சுலபமாக முடித்துக்கொடுக்க மேற்படி எதிர்பார்ப்பார்கள் என்றெல்லாம் சில அபிப்ராயங்கள் மக்களிடையே உண்டு. அதிலும் சான்றிதழ்கள் ஏதாவது வழங்க வேண்டுமென்றால் ஆதாயம் ஏதுமில்லாமல் நிச்சயமாகச்செய்து கொடுக்க மாட்டார்கள் என்று பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்பேர்ப்பட்ட இடத்திலும், இக்கட்டான நிலையிலிருக்கும் மக்களுக்கு எவ்வித பலனையும் எதிர்பாராமல் வேண்டிய சேவையைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் நினைத்திருந்தால், விடுமுறையைக் காரணம் காட்டி வேலையை இழுத்தடித்திருக்கலாம். அல்லது சீக்கிரம் முடித்துக்கொடுக்க ஆதாயம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மெனக்கெட்டு சான்றிதழ்களுக்காகவே ஊருக்குச்சென்றிருந்த எங்களிடம், எதையும் எதிர்பாராமல் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு உதவி செய்த அந்த நல்ல மனம் நீடூழி வாழ்க.
7 comments:
இந்த மாதிரி அலுவலர்கள் அரசாங்க அலுவலகங்களில் நிறையவே உண்டு. உங்கள் வேலை எளிதாக முடிந்தது மகிழ்ச்சி. எனக்கும் பதினைந்து நாட்களாக ஜலதோஷம் காரணமாக காது அடைத்துக்கொண்டு ஒரே தொல்லை. :))))
சென்ற வேலை நல்லபடியாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி. உண்மைதான். கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல மனம் படைத்த அரசு அலுவலர்களை நானும் இங்கே பலமுறை பார்க்கிறேன். குறிப்பாக BSNL அலுவலகத்தினர் குறித்து ஒரு பதிவும் முன்னர் எழுதியிருந்தேன்.
நல்ல மனங்கள் வாழ்க.
தம +1
வாங்க ஸ்ரீராம்,
நல்ல ஆப்பீசர்கள் நிச்சயம் நிறையப்பேர் இருக்கிறார்கள். வழக்கமாக அரசாங்க அலுவலர்களைக் குறை சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம். நல்லவர்களையும் பாராட்டுவோமே என்ற எண்ணத்தின் விளைவே இந்த இடுகை :-)
வாங்க ராமலக்ஷ்மி,
நல்லவர்களைப்பற்றியும் பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மாதேவி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :-)
Post a Comment