Sunday, 5 April 2015

ஈடுபாடு..

சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனநிலை வந்து விட்டால் அதன்பின் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வராது.

வெறுமனே கவலைப்படுவதால் வீணாகும் நேரத்தையும் ஆற்றலையும், அடுத்து செய்ய வேண்டிய செயலுக்கான சிந்தனையில் செலவழித்தால் குறைந்த பட்சம் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழியாவது தோன்றும்.

'வலி' என்ற உணர்வு மட்டும் இல்லாவிடில், மனிதன் மரணத்திற்கும் அஞ்சமாட்டான். 

விதைத்த கற்களையெல்லாம் வீடுகளாய் விளைவித்து நல்ல மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது தன் கடமை மறவாத முன்னாள் வயல்.

எதிலும் நிறைவுறா மனங்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகள் எல்லாமே விரிசலுற்ற பாத்திரத்தின் ஒழுக்காய் கசிந்து பயனில்லாமல் சென்று விடுகின்றன.

இரவின் நீள் தனிமையில் இன்னிசைத்துக்கொண்டிருந்த பூச்சியின் கச்சேரி தடைபட்டதற்கு சுவற்றுப்பல்லி வருந்தவேயில்லை. 

சொல்லப்படும் கருத்திலிருக்கும் கனத்தை விட, சொல்லும் குரலிலிருக்கும் கனமே முதலில் அதைக்கவனிக்க வைக்கிறது.

தனக்குச் சாதகமான சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, தனக்குப் பலன் தருபவற்றை மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் சிலரது அறிவுத்திறன் அமையப்பெற்றிருப்பதுவும் கூட இறைவனின் திருவிளையாடலே.

கடமையைச் செய்தபின், கிடைத்த அனுபவம் மட்டுமே சில சமயங்களில் பலனாக எஞ்சுகிறது.

முயல்பவன் முன்னேறுவான், முயலாதவன் தலைவிதி மேல் பழி போட்டு முடங்கிக்கொள்வான்.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

சாரல் துளிகள் அனைத்துமே அருமை.....

விதைத்த கல்லையெல்லாம் வீடுகளாக்கும் நிலம் - மனதைத் தொட்டது....

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நன்று.

முன்னாள் வயல்.. சுடும் நிதர்சனம்.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான புதுமொழிகள்..

LinkWithin

Related Posts with Thumbnails