Thursday, 5 February 2026

அத்தினி - சித்ரா சிவன்( புத்தக மதிப்புரை)


நூல்: அத்தினி
ஆசிரியர்: சித்ரா சிவன்
வெளியீடு: பிறகு பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு)
முதல் பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 229
விலை:280

இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் ஒரு நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ள சித்ரா சிவனின் மூன்றாவது புத்தகமே அத்தினி. இது இவரது முதல் நாவலுமாகும். இந்த நாவல் ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. மேலும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, சௌமா இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளது. சித்ரா சிவன் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எழுதிவருகிறார்.

“அத்தினி” என்ற சொல் பெண்யானையையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும். யானைக்கூட்டத்தில் ஆளுமை மிக்க ஆண் யானைகள் இருந்தாலும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெண்யானையே அக்கூட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும், இடர்களை முன்கூட்டியே அறிந்து தன் கூட்டத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். அவ்வாறே, வெளிப்பார்வைக்கு ஆண் குடும்பத்தை நடத்துவது போல் தோன்றினாலும், முக்கியமான முடிவுகளை அக்குடும்பத்திலுள்ள தலைமைப்பெண்ணே எடுக்கிறாள். ஆண் அந்த முடிவைச் செயல்படுத்துகிறான். சில குடும்பங்களில் பெண்ணே வெளிப்படையாகக் குடும்பத்தை நடத்திச்செல்வதைக் காண முடியும். இது நாம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சம். 

இவ்வாறு தலைமைப்பண்புடன் இயங்கும் பெண்களிடம் தைரியமும், தன்னம்பிக்கையும், சுதந்திர மனப்பான்மையும் சற்று அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைப்பயணத்தில் கூட நமக்கு வேறு துணை யாரும் தேவையில்லை என்ற முடிவுடன் தனித்தியங்குவர். அப்படிப்பட்ட சகோதரிகளான பவித்ரா தேவி, உமையாள் என்ற இரு பெண்களையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்டிருக்கிறது எழுத்தாளர் சித்ரா சிவனின் “அத்தினி” என்ற இந்நாவல். 

ஆஸ்பத்திரி கேண்டீனை கதைக்களனாகக் கொண்டிருக்கும் நாவலில் ருசிக்குக் குறைவில்லை, பாத்திரங்களுக்கும் குறைவில்லை. பவித்ரா எனும் அத்தினியின் கூட்டத்தில்தான் எத்தனையெத்தனை அத்தினிகள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதாமல், ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருப்பதுதான் பெருஞ்சிறப்பு. அவரவரின் வலிகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதிலேயே அமிழ்ந்து கிடக்காமல் அந்த வலிகளை வெல்லும் யுக்திகளையும் கையாண்டு நகர்ந்து செல்கின்றனர்.

பெண்களின் கதைகளைப் பெண்களே எழுதும்போது, அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சரிதா, பூங்கொடி போன்றவர்களின் கதைகளைப் புரிந்துகொள்ள முடிவதைப்போல. ஆஸ்பத்திரியில் பவித்ரா சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணிடமும்தான் எத்தனை சோகம் கொட்டிக்கிடக்கிறது. பெரும்பாலும் குடும்ப வன்முறைக்கு ஆட்பட்டவர்களாக, ஆணாதிக்கத்தால் நசுக்கப்படுபவர்களாக இருக்கும் அவர்களின் தலை சாயும் ஒரு தோளாக இருக்கிறாள் பவித்ரா. அவள் மூலம், பெண்கள் விரும்பும் ஓர் உலகத்தைப் பல நிகழ்வுகள் மூலம் சுட்டுகிறார் எழுத்தாளர். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிறுவப்பட்டிருக்கும் பல சமூகக்கோட்பாடுகளை அநாயாசமாக உடைத்தெறிந்திருக்கிறார். ஏன் கூடாது? என்ற கேள்வி வாசிப்பவர் மனதில் எழும் எனில் அதுவே அவரது எழுத்தின் பலம். ஆற்றொழுக்குப்போன்ற தெளிவான நடையில் பட்டுப்போன்ற மொழியில் ஒழுகிச்செல்கிறது நாவல். ஆங்காங்கே பட்டுக்கத்தரித்தாற்போன்று கருத்துகளைச்சொல்லவும் தவறவில்லை ஆசிரியர்.

அன்னக்கொடியின் பாத்திரப்படைப்பு மிகவும் கவர்ந்தது. அத்தனை ஆளுமையுள்ள, பொருளாதாரச் சுதந்திரமுள்ள ஒரு பெண்ணாக இருந்தபோதும் கணவனின் சொல்லைத்தாங்கவியலாமல் தன்னையே கொளுத்திக்கொள்ளுமளவு அவள், கணவன் என்ற ஆணின் அதிகாரத்தால் பலவீனப்படுகிறாள். அவளது தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் ஆளுமைத்திறனின் எச்சமே பவித்ராவாக நீள்கிறது. வாழ்வில் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளால், திருமணத்தை வெறுத்த சகோதரிகள் தனியாகவே வாழ்கிறார்கள். குடும்பச்சொத்துகளையும் காத்துக்கொண்டு தேவைப்படுபவர்களுக்குத் தங்களாலான உதவியைச்செய்துகொண்டு வாழ்ந்த அவர்களின் வாழ்வில் மாறன், இளங்கோ எனும் இரு ஆண்கள் குறுக்கிடுகிறார்கள். நாவலில் பெரும்பாலும் கூறப்பட்ட ஆண்களைப்போலில்லாமல் இவர்கள் நல்லவர்களாகச் சித்திரிக்கப்பட்டது சிறப்பு. எல்லா ஆண்களும் கெட்டவர்களாக இருந்து விடுவதில்லைதானே. அவர்களில் மாறனை உமையாள் திருமணம் செய்துகொண்டு அவளுக்கான தனிக்கூட்டை அமைத்துக்கொண்டுவிடுகிறார். பவித்ராவும் இளங்கோவும் ஒருவர் கனவை ஒருவர் மதித்து அவரவர் பாதையில் செல்கின்றனர். ஆனால் அதுவுமே பவித்ராவை இன்னும் புடம் போடுமேயன்றி பலவீனப்படுத்தாது. கூட்டத்தின் முன்னால் தலை குலுக்கி, மத்தகத்தை நிமிர்த்திகொண்டு நடை போடும் அந்த அத்தினி.

LinkWithin

Related Posts with Thumbnails