அன்பெனப்படுவது..
கைச்சூட்டால் கூட வதங்கிவிடாமல் ஒரு மலரை உள்ளங்கையில் பொத்திப் பாதுகாப்பது.
இளைப்பாறிய அத்தனை பறவைகளும் பறந்து சென்றபின், இலைகளெல்லாம் உதிர்ந்தபின், கிளைகளும் கழிந்து அடிமரம் மட்டும் எஞ்சியபோது வேரடி மண் இறுக்கிக்கொண்டது தனது பந்தத்தை.
பனியை விதைத்து நிலவொளியை அறுவடை செய்யக் காத்திருந்தவனின் எஞ்சிய கனவுகளில் ஒரு ஊதாப்பூவைச் செருகுகிறது வெயில்.
அன்பு, அழகு, குணம், உதவும் மனம், திறமை போன்றவற்றில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ பிறருடன் பழகவும் நட்பு பாராட்டவும் தகுதிகளாய்க்கொள்கின்றனர் சிலர். பணம் ஒன்றை மட்டுமே அவ்வாறு நெருங்குவதற்கான ஒரே தகுதியாய்க் கொள்கின்றனர் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள் போன்ற சிலர்.
அங்கெங்கெனாது எல்லா இடங்களிலும் நீக்கமற வந்துவிட்டது காசில்லா பணப்பரிமாற்றம். வாய்க்கரிசிக்கும் நெற்றிக்காசுக்கும் கூட க்யூஆர் கோட் வந்து விட்டதென்றால் நிம்மதியாகப் போய்விடும்.
நாலு பேர் என்ன சொல்வார்கள்? சமுதாயம் நம்மை எப்படிப்பார்க்கும்? என்ற அச்சத்திலும் குழப்பத்திலும்தான் பல தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சமுதாயம் என்பதும் அதிலிருக்கும் நாலு பேர் எனப்படுபவர்களும் வேறு யாருமல்ல.. நீங்களும் நானும்தான். புறம் பேசுதல், முன்பின் அறியாதவர்களைப்பற்றி மனம் போன போக்கில் எடைபோடுதல், வன்மம் வளர்த்தல் போன்ற பல கல்யாண குணங்களை எப்போது விட்டொழிக்கப்போகிறோம்? எப்போது திருந்தப்போகிறோம்?!
வலியைச்சொல்லி அழக்கூட விதியற்றுப்போனவர்களின் கண்ணீர்க்குரலை மௌனமாய்க் கேட்டுக்கொள்கிறது தலையணை.
ஓங்கியோங்கி அறைந்து கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறது மழை. பழம் விட மறுத்து பிடிவாதமாய் இன்னும் இறுகிக்கொள்கிறது திறவா நெடுங்கதவம்.
ஒன்றுக்கும் மதிப்பில்லாத உறுத்தலை விலைமதிப்பில்லா முத்தாக்கி வெல்கிறது சிப்பி. உறுத்தல்களை எண்ணியெண்ணி விலைமதிப்பில்லா நேரத்தையும் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் தோற்கிறோம் நாம்.
உளி தொடா ஆழத்தில் புதைந்து கிடக்கிறது சிற்பியின் மனம் தொட்டுக்கொணராத இன்னொரு சிலை.