Tuesday 26 February 2013

காட்டுக்கொடியும் நூல்கண்டும்..


தவறைத் தவறென்று ஒப்புக்கொள்ளாமல் அதுதான் சரியென்று வாதிடுபவர்களால் தவறுகளும் காலப்போக்கில் சரியெனக் கொள்ளப்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

வாழ்க்கையும் தொலைக்காட்சித்தொடர்களும் ஒன்றே.. முதலில் மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும்தான் ஆரம்பிக்கின்றன. அதன்பின் வந்து சேரும் கிளைத்தொடர்களாலும் புதிய பாத்திரங்களாலும் எங்கெங்கோ சிக்கல்களில் கொண்டு செல்லப்பட்டு, கடைசியில் ஒரு வழியாய் முடிகிறது  அல்லது முடித்து வைக்கப்படுகிறது.

பரீட்சையும் வைத்து வலிக்க வலிக்கத் தண்டனையும் கொடுத்தபின், பாடம் சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கையைப்போல் சிறந்த ஆசான் வேறு யாருமில்லை.

எந்தவொரு நல்லது கெட்டது நடக்கும்போதும், “இது நடக்குமென்று அப்பொழுதே சொன்னேன்” என்று சொல்ல நாலு பேராவது இருப்பார்கள்.

மரணம் நிஜத்தில் ஒரு தடவைதான் சம்பவிக்கிறது. அது ஏற்படுத்தும் பயத்திலோ கற்பனையில் ஒவ்வொரு கணமும் மரணிக்கிறோம்.

பலரை விரக்தியடைய வைக்கும் சிக்கல்களும் ஏமாற்றங்களும் சிலரை வாழ்வில் பக்குவப்படவும் வைக்கின்றன. ஆகவே வயதானால்தான் என்றில்லாமல்.. அனுபவங்களாலும்கூட ஒருவன் பக்குவப்படக்கூடும்.

சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை மேலும் சிக்கலாகின்றன. 

சிலருக்குப் பிறப்பாலும் பலருக்குப் பயிற்சியாலும் கைவரப்பெறுகிறது பொறுமை.

துக்கங்களையும் வெறுப்பையும் முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. இல்லையெனில் அவை, மழைக்காலத்தில் வேகமாகப்படர்ந்து மரத்தையே மூடிவிடும் காட்டுக்கொடிகள் போல் நம் மனதை முழுவதும் மூடிவிடும்.

பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் ஒருவனின் உறவைப் பலரும் விரும்பி ஏற்பார்கள்.

Sunday 24 February 2013

விருது மழையில் நனைந்த சூரர்..



ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி இருந்து கொண்டு இந்த 'சூரர்' நம் ஜலீலாக்கா நடத்திய போட்டியில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வந்திருக்கிறார். மேக்கப் போட்டு அனுப்பிய வேலையை மட்டும்தான் நான் செய்தேன். அந்த அழகுக்கே ஒரு விருது கொடுத்ததாக ஜலீலாக்கா சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அயிட்டங்கள் சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். உண்மைதானா என்று சூராவைச் சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்.
விருது கொடுத்தது மட்டும் போதாதென்று ஜலீலாக்கா பணமுடிப்பு.. அதாவது அழகான மணிபர்ஸ் ஒன்றையும் அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். க்ரே அண்ட் ப்ளாக் காம்பினேஷனில் அள்ளுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி, பைக்ராப்ட்ஸ் சாலையிலிருக்கும் ஜலீலாக்காவின் கடையான "சென்னை ப்ளாசா"விலிருந்து அழகான பாக்கிங்கில் பரிசு வந்து சேர்ந்தது. பாதுகாப்பாக அனுப்பி வைத்த சென்னை ப்ளாசாவுக்கும் ஜலீலாக்காவிற்கும் மிக்க நன்றிகள்.

Tuesday 19 February 2013

ஃபேஸ்புக்கில் வலம் வந்த வாகனங்கள்..

வாராவாரம் ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் நடத்தும் தீம் போட்டி அனைவரும் அறிந்ததே. சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் "வாகனங்கள்" என்ற தலைப்பில் போட்டி நடந்தது. கை வசம் இருந்த வாகனங்களை அங்கே கண்காட்சிக்கு வைத்திருந்தேன். இருக்கிற விலைவாசியில் இத்தனை வாகனங்களுக்கும் பெட்ரோல் போட முடியாதே.. ஆகவே மற்ற வாகனங்களோடு போட்டி போடாமல், பரிசெல்லாம் எதுவும் கொண்டு வராமல் சும்மாவே நின்று விட்டு வந்து விட்டன :-). கலந்து கொண்டவர்களுடன் ஷெட்டில் நின்றவர்களையும் சேர்த்து ஒவ்வொருத்தரையுமாக அறிமுகப்படுத்துகிறேன் வாருங்கள்..

இவர்களை மும்பை புகைப்படக்கண்காட்சியிலிருந்து இரவல் வாங்கி வந்தேன். மஞ்சக்காட்டு மைனாவுக்கு அருகில் கம்பீரமாக நிற்கும் மிஸ்டர் ரெட்.
அந்தேரி-குர்லா ரோட்டில் ஜெரிமெரி என்னும் பகுதியில் ரோட்டை ஒட்டினாற்போல் மும்பை விமான நிலையத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது. அங்குதான் விமானங்கள் தரையிறங்குவது வழக்கம். அதாவது லேண்டிங் பாயிண்ட் என்றும் சொல்லலாம். கீழே பாலத்தில் சாலைப்போக்குவரத்து இருக்கும் அதே சமயம் நம் தலைக்கு மேல் தொட்டு விடலாம்போல் தூரத்தில் பறக்கும் விமானங்கள் தரையிறங்க ஆரம்பிப்பது மெய் சிலிர்க்க வைக்கும். விமான நிலையத்தில் நுழையாமல் விமானங்களைப் படம் பிடிப்பதற்காக டபுள் டெக்கர் பஸ் ஒன்றில் ஏறி மேல் பகுதியில் அமர்ந்து கொண்டோம்.விமான நிலையத்தைக் கடக்கும்போது கரெக்டாக விமானமொன்று எங்கள் பஸ்ஸைக்கடந்து இறங்கியது. சந்தர்ப்பத்தைத் தவற விடக்கூடாதென்பதற்காக முன் கூட்டியே காமிராவில் ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனையும், மழைக்காலமாதலால் isoவை 800க்கும், continuous shooting-ம் தேர்வு செய்து வைத்திருந்ததால் சட்.. சட்டென்று ஷூட்டித்தள்ளினேன். 

வீட்டருகே இருக்கும் ரயில்வே க்ராஸிங்கில் அடிக்கடி கேட் மூடிக்கிடப்பதால், வாகனங்கள் இருபக்கமும் காத்துக்கிடப்பதும் பொதுமக்கள் இன்னல்களை அனுபவிப்பதும் வழக்கமாக இருந்தது. க்ராஸிங்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அந்தப்பக்கமிருந்து இந்தப்பக்கத்துக்கு ஆட்டோரிக்ஷாக்களும் வர மறுப்பதுண்டு. அல்லது அதிகத்தொகை கொடுத்தால்தான் வருவார்கள். அந்தப்பக்கமிருக்கும் டிமார்ட்டிலிருந்து ஷாப்பிங் முடித்து இந்தப்பக்கம் வருவதென்பது சிரமமான ஒன்றாகவே ஆகிவிட்டது. ஒன்றிரண்டு பலிகளும் வாங்கியது அந்த ரயில்வே க்ராஸிங். இதனால் ஏராளமான மரங்களைப்பலி கொடுத்து அந்த ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தின் மேலிருந்து எடுத்ததுதான் இந்தப்படம். விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலை "ஸ்போர்ட்ஸ்" ஆப்ஷனைத் தேர்வு செய்து எடுத்தேன். 
நவிமும்பையின் நெருலில் தற்பொழுது புதிதாக ஆரம்பித்துள்ள வொண்டர்ஸ் பார்க்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த டாய் ட்ரெயின். குழந்தைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பெரியவர்களும் எஞ்சாய் செய்யும் இந்த ட்ரெயினில் ட்ரைவர் மட்டும் டிக்கெட் எடுக்காமல் ஜாலியாகப் பயணம் செய்யலாமாம். பற்றாக்குறைக்கு மாசம் பிறந்தால் பணமும் கொடுப்பார்களாம். கரும்பும் கொடுத்து கூலியும்.. ஹூம். ஒய் திஸ் ஓரவஞ்சனை யுவர் ஆனர்? :-))
மும்பையின் "கேட் வே ஆஃப் இந்தியா"விற்கு வரும் உல்லாசப்பயணிகளை கடலுக்குள்ளும் படகுப்பயணமொன்றை ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கிறார்கள்.கரையிலிருந்து கடலைப்பார்ப்பது ஒருவிதமென்றால் கடலுக்குள்ளிருந்து மும்பையையும், தாஜ்ஹோட்டல், கேட்வே ஆஃப் இந்தியா போன்ற கட்டிடங்களைப்பார்ப்பது இன்னொரு விதமான பார்வை. மீன் பிடிப்படகுகளைத்தாண்டிச்சென்றால் மும்பையின் தனவான்களின் உல்லாசப்படகுகள் பார்க்கிங்கில் விடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டும், கடலைச்சுற்றிக்காண்பிக்கும் இன்னொரு படகும்.
கடற்கரைக்கு வருபவர்கள் கடலில் போடும் குப்பைகளில் விழுங்கியது போக மீதமானவற்றைக் கடல் துப்பி விடும். இவையெல்லாம் கரையில்தான் கடைசியில் வந்து சேரும். அப்போதைக்கப்போது இதையெல்லாம் சுத்தம் செய்யவில்லையென்றால் அந்தப்பகுதியே நாறி விடும். மும்பையின் ஹிந்துஜா ஆஸ்பத்திரியின் அருகிலிருக்கும் சிறிய கடற்கரையை நன்றாகவே பராமரிக்கிறார்கள். நீண்ட துடைப்பத்தால் கடல் சேர்த்த குப்பைகளை பணியாட்கள் ஒரு மூலையில் குவித்து வைத்ததும் பொக்லைன் வந்து வாரிக்கொண்டு போய்விடும். அப்படி வாரிக்கொண்டு போவதற்காக வந்தவர்தான் இவர்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது காமிராவைத்தயார் நிலையில் வைத்துக்கொள்வது நல்லது என்று முன்னொரு இடுகையில் சொல்லியிருந்தேன். என் பேச்சை நானே கேட்டு எடுத்த படம் இது. நான் பிடித்த பஸ்சுக்கு ரெண்டே டயர்தான். வேண்டுமென்றால் எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள். :-). முன்பெல்லாம் பள்ளி வாகனங்கள் க்ரீம், நீலம் அல்லது மஞ்சள் கலரில் வரும். அப்போதெல்லாம் மஞ்சள் கலர் பஸ்களில் வரும் குழந்தைகளைப்பார்த்து,

"யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ..
சிட்டிங் ஆன் அ பஃபெல்லோ'

என்று மற்ற பஸ்களில் வரும் குழந்தைகள் ஓட்டுவது வழக்கம். இப்போதென்னவென்றால் எல்லா பஸ்களுமே மஞ்சள் கலரில் ஓடுகின்றன :-)))))
சீவிச்சிங்காரித்து பூச்சூடி நிற்கிறது இந்தக்கார்.. புது மண ஜோடிக்காக..

இந்தக்கார்கள் விற்பனைக்கல்ல.. :-))

வாகனங்களைச் சாலைகளில் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செலுத்துங்கள். நமது ஒரு நிமிடத்தவறு ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே பாழடித்து விடக்கூடும்.

Friday 15 February 2013

இங்கேயும் அங்கேயும்.. (நம் தோழி மாத இதழில் வெளியானது)


படம் வரைந்த ஓவியர் ஜெயராஜுக்கு நன்றி..
வெளியிட்ட நம் தோழிக்கும் நன்றி..
வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள். துளிர்க்காத வியர்வையை ஒற்றியெடுக்கும்  சாக்கில் ஒவ்வொருத்தியும் தன் கழுத்திலிருந்த நகையை சரி செய்து கொண்டே மற்றவர்கள் தன்னுடைய நகை, புடவையை கவனிக்கிறார்களாவென்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க பஜ்ஜியின் மணமும், கேசரியின் நெய்மணமும் பரவி நின்று, காபியின் நறுமணத்துடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. கேட்பாரற்று வழிந்து கொண்டிருந்த மெல்லிய புல்லாங்குழல் இசையையும் மீறி ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது ஒவ்வொருவரின் பேச்சுக் குரலும், குழந்தைகளின் விளையாட்டுக் கூச்சலும்..

உள்ளுக்கும், புறமுமாக எதற்கென்றே தெரியாமல் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தாள் பார்வதி. ’இந்த இடமாவது நல்ல படியா அமையணுமே..’ என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள். ‘சாயந்திரம் நாலு மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் வந்துடுவாங்கன்னு தரகர் சொன்னாரே, இன்னும் காணோமே!.. அவர் கிட்ட சொல்லி போன் செஞ்சு பார்க்கச் சொல்லலாமா..’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, “வாங்க.. வாங்க..” என்று அவள் கணவன் பரசு வந்தவர்களை வரவேற்கும் குரல் கேட்டது. ‘அப்பாடா..’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் வாசலுக்குப் போய் தானும் வந்தவர்களை வரவேற்றாள்.

“ஏங்க.. சோபாவுல ஏதோ ஒரு குழந்தை பூவைப் பிச்சுப் போட்டு வெச்சிருக்கு. அதை சுத்தம் செஞ்சுட்டு, மாப்பிள்ளையை அதுல உக்கார வையுங்க..” என்று கணவனின் காதோரம் கிசுகிசுத்து விட்டு, பெண் தயாராகி விட்டாளா? என்று பார்க்க உள்ளே சென்றாள்.

ஹாலில் பேச்சுக் கச்சேரி ஆரம்பித்திருந்தது. இரு வீட்டாரும் தயக்கம் மறைந்து இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். திடீரென சம்பந்தியம்மாள், “அடடே!!.. அப்ப நாம ரொம்ப நெருங்கிட்டோம்ன்னு சொல்லுங்க.” என்று சற்றுப் பெரிய குரலில், ஆச்சரியத்துடன் சொன்னாள். வழக்கம் போல் புரியாது விழித்த கணவருக்கு, ”ஏங்க.. உங்களுக்கு தெரியுமா?.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க. உங்க பெரியப்பா பிள்ளையின் மனைவிக்கு இவங்க தூரத்து சொந்தமாம்.. ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோமில்ல..” என்று விளக்கமும் கொடுத்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த தரகருக்கு, வயிற்றில் ஏதோ உருண்டது. “ஆஹா.. நம்ம கமிஷன் போச்சா..” என்று எண்ணிக் கொண்டவராய் கிலி பிடித்தாற்போல் அமர்ந்திருந்தார்.

“ம்க்கும்..” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்ட பெரியவர் ஒருவர், “சரி.. நேரம் போயிக்கிட்டிருக்கு, பொண்ணைப் பார்த்துடலாமே.. கூப்பிடுங்க” எனவும், “பவித்ரா.. பவி, அந்த கூல்ட்ரிங்க்ஸை கொண்டாந்து எல்லாருக்கும் கொடும்மா” என்று அழைத்தாள் பார்வதி. பெண்ணைக் கூப்பிடுவதற்காக வாயைத் திறந்த அவள் கணவர், தன்னுடைய வேலையை மனைவியே செய்து விட்டதால் மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி, ரெண்டு ஸ்பூன் மிக்சரை அள்ளிப் போட்டுக் கொண்டார்.

கூல்ட்ரிங்க்ஸ் தட்டை ஏந்தி வந்த பவித்ராவைப் பார்த்ததும் பார்வதி  லேசாக துணுக்குற்றாள். தான் கொடுத்த பட்டுப் புடவையை கட்டிக் கொள்ளாமல், மெல்லிய சரிகையிட்ட காட்டன் புடவையில் மகள் இருப்பது கண்டு அவளுக்கு லேசாகக் கோபம் கூட வந்தது. “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண்??.. மாப்பிள்ளை வீட்டார் என்ன நினைப்பார்கள்?” என்று குமைந்தாள். அதற்கேற்றாற்போல் சம்பந்தியம்மாளின் முகமும் லேசாக மாறியது அவளுக்குக் கிலேசத்தைக் கொடுத்தது. வெளிக் காட்டிக் கொள்ளாமல் பாடுபட்டுச் சமாளித்தாள்.

“இப்படி உக்காரும்மா..” என்று பவித்ராவை தன்னருகே அமர வைத்துக் கொண்ட சம்பந்தியம்மாள், “என்ன படிச்சிருக்கே?..” பேச்சை ஆரம்பிக்க வேண்டுமேயென்று எதையோ கேட்டு வைத்தாள்.

“ஒரு பக்கம் வேலை பார்த்துக்கிட்டே, இன்னொரு பக்கம் எம்.சி.ஏ. முடிச்சிருக்கா. ரிசல்ட்டும் வந்துடுச்சு. இன்னும் ரெண்டொரு மாசத்துல ப்ரமோஷனும் கிடைக்குமாம்..” உபரித் தகவலைச் சேர்த்து வழங்கிய கையோடு  “இருங்க வந்துடுறேன்” என்று விட்டு உள்ளே போனாள் பார்வதி.

பவித்ராவின் கண்கள் அங்குமிங்கும் தத்தித் தாவி, காலண்டர், பூப்பழத்தட்டு, சோபா நுனி, என்று அலைபாய்ந்து கொண்டிருந்தது. போட்டோவில் கண்ட அந்த முகத்தை நேரில் காணும் சந்தர்ப்பத்தில் எங்கிருந்தோ ஒரு வண்டி வெட்கம் வந்து உட்கார்ந்து கொண்டது. இயல்பிலான தைரியம் தொலைத்து, ஆசையும் வெட்கமும் போட்டி போடத் தடுமாறிக் கொண்டிருந்தாள். அவளுக்கே தெரியாமல் யுகங்கள் கழிந்து கொண்டிருந்தன.

“சரி.. நாமளே பேசிக்கிட்டிருந்தா எப்படி?. சிறுசுக மனசுல இருக்கறதையும் தெரிஞ்சுக்கணுமில்லையா?..”

“என்னடா?.. பொண்ணு கிட்ட வேண்ணா பேசிப் பார்த்துட்டு உன் முடிவைச் சொல்றியா?..” சொன்னது பிள்ளையின் தந்தையாகத்தான் இருக்க வேண்டும்.

பையன் அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். ஒப்புதலான பார்வையொன்று கிடைத்ததும் தலையசைத்தான்.

“பவி.. மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போம்மா..”

தலையசைத்து விட்டு எழுந்து நடந்த பவித்ராவைப் பின் தொடர்ந்தான் பிரகாஷ்.

“அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அதுக்குள்ள நாம மத்த லௌகீகங்களைப் பேசிடலாமே. என்னங்க?.. சரிதானா!..” சம்பந்தியம்மாள் கணவனை நோக்கிக் கொக்கியைப் போட்டாள்.

“ஆமாமா… ரொம்பச் சரி..”

உள்ளுக்கும் வெளியிலுமாக பரபரப்புடன் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வதி இடை மறித்தாள். “இதுல பேசறதுக்கு ஒண்ணுமில்லைங்க. தரகர் எல்லாம் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன். பவித்ரா எங்களுக்கு ஒரே பொண்ணு. எல்லாமே அவளுக்குத்தான். ஓஹோன்னு இல்லாட்டாலும் ஓரளவுக்கு வாழ்ந்துட்டிருக்கோம். பொன் வைக்கிற இடத்துல பூவையாவது வெச்சுடுவோம்....”

“உங்க பொண்ணு.. உங்க இஷ்டம்.. ஆமா, உங்க பொண்ணு போட்டிருந்த நெக்லஸ் அவளுக்குன்னே செஞ்சதா?”

“ஆமாங்க..”

“அந்த டிசைன் நல்லால்லை.. அழிச்சுட்டு வேற டிசைன்ல செஞ்சுடுங்க. அப்றம் பொண்ணுக்கு ஜிமிக்கி செஞ்சுருப்பீங்க இல்லே.. அதோட காதுக்கான மாட்டலும் சேர்த்து செஞ்சுடுங்க. அப்பத்தான் ஒரு அம்சமா இருக்கும். அவ கை வாகுக்கு நிறைய வளையல் போட்டா நல்லாருக்கும். அதனால கழுத்துக்கு போடறதைக் குறைச்சுக்கிட்டு கைக்கு நவ்வாலு வளையல் கூடுதலாப் போட்டுடுங்க… வைர மூக்குத்தி கண்டிப்பா இருக்கணும்” சம்பந்தியம்மாள் அடுக்கிக் கொண்டே போக பெண்ணின் தாய் தந்தையர் பேச்சு மூச்சற்று உட்கார்ந்திருந்தனர். பையனின் தந்தையோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் வெற்றிலையின் நரம்பைக் கிள்ளிக் கொண்டிருந்தார்.

“’பொண்ணு படிச்சிருக்குது.. அது போதும்’ன்னு நீங்க சொன்னதா சொன்னாங்களே..” பார்வதிக்கு குரல் எழும்பவில்லை.

“கல்யாணப் பேச்சுன்னா அப்படியிப்படி இருக்கத்தான் செய்யும். உங்களுக்குத் தெரியாததா..” அமர்த்தலாகச் சொன்னாள் சம்பந்தியம்மாள்.

கூடத்தில் அத்தனை பேர் உட்கார்ந்திருந்த போதிலும், ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டிருந்த போதிலும், திடீரென எல்லாமே அமைதி மயமாகி விட்டாற் போன்றதொரு சூழல். நொடிகள் ஜென்மங்களாகக் கழிந்தன. மாடியிலிருந்து இறங்கி வந்த பவித்ராவும் பிரகாஷும் இதைக் கவனிக்கத் தவறவில்லை. என்னவென்று கண்களாலேயே வினவிய பிரகாஷின் காதில் அவன் தந்தை கிசுகிசுத்தார். இரு பக்கத்து அம்மாக்களின் முகங்கள் இறுகிக் கிடந்ததைக் கண்ட பவித்ராவுக்குத் துணுக்குற்றது. அறையினுள்ளே சென்றதும் விவரமறிந்தவள் கதவருகில் நின்றபடி பிரகாஷை ஏறிட்டாள்.. அவன் அங்கிருந்த பத்திரிகையைப் புரட்டியபடி அமர்ந்திருந்தான். ‘வரதட்சணை வாங்கறதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று அவன் மொட்டை மாடியில் சொன்னது நினைவு வந்தது அவளுக்கு.

சிறிது நேரம் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு “சரிங்க… வீட்டுக்குப் போய் கலந்தாலோசிச்சுட்டுப் பதில் சொல்றோம்” என்றபடி மாப்பிள்ளை வீட்டார் போய் விட்டார்கள்.

சுரத்தே இல்லாமல் வாசல் வரை போய் வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்த பார்வதியம்மாள் வெடித்து விட்டாள்.

“நமக்கு இந்தச் சம்பந்தம் வேணாங்க.. அந்தம்மா ரொம்பக் கறார் போலிருக்கு. பையன் வீட்டுக்காரங்க இவ்வளவு நகை போடுங்கன்னு கேப்பாங்க.. கேள்விப் பட்டிருக்கேன். அதென்ன.. இன்னின்ன நகை போடுன்னு கட்டளை போடறது?. நம்ம பொண்ணுக்கு எதையெல்லாம் போட்டுப்பார்க்கணும்ன்னு நமக்கு ஆசையிருக்காதா?.. இல்லை நம்ம பவிக்குத்தான் தனிப்பட்ட விருப்பம்ன்னு ஒண்ணு இருக்காதா?. எதையுமே யோசிக்காம பேசறாங்களே. எனக்குச் சரியாப் படலை. அவங்க புருஷனும் பையனும் கூட அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறதைப் பார்த்தா எனக்கென்னவோ நம்ம பொண்ணு அங்க போய் சுகப்படுவான்னு தெரியலை. அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு நம்ம பொண்ணை கஷ்டப் படுத்திடக் கூடாதே..”

அதே சமயம் அங்கே காரில்,

“நமக்கு இந்த சம்பந்தம் வேணாங்க..”

ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷின் தந்தை திடுக்கிட்டுத் திரும்பினார். பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் ஒரு சினேகிதனைச் சந்தித்து விட்டு வீட்டுக்கு வருவதாகக் கூறி பிரகாஷ் கிளம்பி விட்டிருந்தான்.

“என்னம்மா.. திடீர்ன்னு இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடறே?..” ஆச்சரியத்துடன் கேட்டார் அவர். “உனக்குப் பொண்ணைப் பிடிக்கலியா?”

“அப்படியில்லை.. ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க ஒரு விஷயம் கவனிச்சீங்களா?. அந்த வீட்டுல அந்தம்மா வெச்சதுதான் சட்டம் போலிருக்கு. ஒவ்வொருத்தரையும் எப்படி டாமினேட் செஞ்சுட்டிருந்தாங்கன்னு நீங்க கவனிக்கலை… ஆனா, நான் கவனிச்சேன். பொண்ணோட வாழ்க்கையிலயும் அது மாதிரியே தலையிட்டு அதிகாரம் செஞ்சாங்கன்னா என்னாகும்?.. தாயைப் போல பிள்ளைன்னு சொல்லுவாங்க. இந்தப் பொண்ணும் அதே மாதிரி இருந்துட்டா என்னங்க செய்யறது!!. அதிகாரம் செய்யற மனைவி கிட்ட நம்ம பையன் அடங்கிப்போகணுமா?. அம்மா சொல் கேட்டு, நம்ம பையனைப் பிரிச்சுத் தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போயிட்டான்னா என்ன செய்யறது??... எனக்கு ரொம்பப் பயமாருக்குங்க”

“சேச்சே.. அப்படி இருக்காதும்மா.. நீயா ஏன் எதையோ நினைச்சுக் குழப்பிக்கறே?.. நம்ப புள்ளை மேல நம்பிக்கையில்லையா உனக்கு?. தாயைப் போல பிள்ளைன்னு சொன்னியே.. அந்தக் கோணத்துல யோசிச்சிப் பாரு. அவங்கம்மாவை மாதிரியே ஆளுமையோடயும் அரவணைச்சும் வேலை வாங்கற திறமை இருந்தா அது நிச்சயம் உயர்பதவியில இருக்கற அந்தப் பொண்ணுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டுதான். பலாப்பழம் முரடுதான்.. ஆனா, உள்ளே இருக்கற சுளை இனிக்கிறதில்லியா?.

மனைவி யோசிக்கத் தொடங்கி விட்டாள் என்பதை அவள் முகபாவத்திலிருந்தே கண்டு கொண்டவர், வாய்க்குள் சிரித்துக் கொண்டார். “நாளைக்கே ‘சம்மதம்’ என்று சொல்லி விட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார். நாளைய தினம் அவர்களுக்கு என்ன தரக் காத்திருக்கிறதென்று அறியாமலேயே…

அதே நேரம் அங்கே பவித்ராவுக்குள் ஒரு சூறாவளி சுழலிட்டுக்கொண்டிருந்தது. மொட்டை மாடியில் பிரகாஷுடன் தனியாகப் பேச அனுப்பப்பட்ட அந்தக்கணங்கள் மறுபடி நினைவில் வந்தன.

ஆரம்பத்தில் மேம்போக்காகப் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குத்தாவியது.

“இந்தப் பெயிண்டிங்கை நீங்களே வரைஞ்சீங்களா?...” கேட்ட அவனது பார்வை சுவரில் மாட்டியிருந்த தஞ்சாவூர் ஓவியத்திலிருந்த கோகுலகிருஷ்ணனை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“ஆமாம்.. இதுக்குன்னு ஸ்பெஷல் வகுப்புக்குப்போய்க் கத்துக்கலை. எனக்கிருந்த ஆர்வத்தால் கண்டதையும் கேட்டதையும் வெச்சு நானாவே கத்துக்கிட்டேன்”

“உங்களுக்குப் பொறுமையுணர்ச்சி அதிகம்ன்னு நினைக்கிறேன்.” லேசான சிரிப்புடன் சொன்னான்.

“பொறுமைங்கறதை விட கலையை ரசிக்கும் குணம் உண்டுன்னு சொல்லலாம். சரி, உங்களுக்கு புக்ஸ் வாசிக்கிற வழக்கம் உண்டா?” பதில் பந்துடன் எதிர்க்கணையையும் சேர்த்து எறிந்தாள்.

“சும்மா ஒரு தடவை வாசிச்சுட்டா அப்றம் தூக்கிப்போடப்போறோம். இதைப்போயி யாராச்சும் காசு கொடுத்து வாங்குவாங்களா?. எங்க ஆபீஸ்ல ஒரு இலக்கியப்பைத்தியம் இருக்கு. மாசந்தோறும் சம்பளக்கவரோட ரெண்டு புத்தகங்களையும் வீட்டுக்குக் கொண்டு போகும். ஏங்க?.. நீங்க கேக்கறதைப்பார்த்தா நீங்க நிறைய புக்ஸ் வாசிப்பீங்க போலிருக்கே”

“ம்.. வாசிக்கிறது மட்டுமில்லே, சில சமயம் எழுதவும் செய்வேன். ஆமா, உங்களுக்குக் கவிதைகளும்கூட பிடிக்காதா?” என்றபடி அவன் கைகளில் ஒரு நோட்டுப்புத்தகத்தைத் திணித்தாள்.

“பிடிக்குதோ இல்லையோ.. உங்களுக்குப் பிடிச்சதை எழுத கண்டிப்பா தடை சொல்லமாட்டேன். எழுதற சுதந்திரம் உங்களுக்கு எங்கிட்ட தாராளமா கிடைக்கும்”

“ஹலோ.. எழுத்துரிமை என்னோட பிறப்புரிமை. இதை நான் யார்கிட்டேயும் கேட்டுப்பெறணும்ன்னு அவசியமில்லே” சற்றுச்சூடாகவே சொன்னாள்.

“ஓ.கே…. ஓ.கே.. கூல் டவுன். இப்பவே ஏன் சண்டை போட்டுக்கணும். இதையெல்லாம் அப்புறம் கூட பேசிக்கலாமே” என்றபடியே நோட்டைப் புரட்டிக்கொண்டிருந்தவன், “வாவ்.. வெரிகுட். சூப்பரா எழுதியிருக்கீங்க. கவிதைகள்ன்னா இப்படித்தான் புரையோடிப்போன சமுதாயத்தைச் சாடுற மாதிரி இருக்கணும். கேள்வி கேக்கணும். நம்ம மக்களை இன்னும் சிந்திக்கத் தூண்டணும். அதிலேயும் வரதட்சணையைப்பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கீங்க பாருங்க. சான்ஸே இல்ல. எனக்குக்கூட வரதட்சணை வாங்கறது பிடிக்காது தெரியுமோ?. வரதட்சணை வாங்க மாட்டோம்ன்னு எங்க கல்லூரியில பத்து இளைஞர்கள் எல்லோர் முன்னாடியும் உறுதிமொழி எடுத்துக்கிட்ட சம்பவம் நியூஸ்ல கூட வந்தது. அந்த பத்து இளைஞர்கள்ல ஐயாவும் ஒருத்தர் தெரியுமோ?” என்றபடி காலரைத்தூக்கி விட்டுக்கொண்டான்.

அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. இந்தக்கால இளைஞனல்லவா என்று சற்றுப் பெருமிதமாகவும் இருந்தது.

அந்தப்பிரமிப்பையும் பெருமிதத்தையும்தான் இப்போது அவன் தூள்தூளாக்கிச் சென்றிருந்தான். கடைசியில் எல்லா ஆண்களையும்போல்தானா இவனும்? என்று ஆயாசமாக இருந்தது. மாடியில் தன்னிடம் தனிமையில் வாய் கிழியப்பேசியதையெல்லாம் அப்பா, அம்மாவிடமும் பேசியிருக்க வேண்டியதுதானே. சரி,.. நாலு பேர் முன்னிலையில் பேச வேண்டாம். தனியாகக் கூட்டிக்கொண்டு பேசியிருக்கலாமே. கடைசியில் அவன் மௌனமாக உட்கார்ந்து அவனது அம்மாவின் எதிர்பார்ப்பில் தனக்கு ஆட்சேபணையில்லை என்பதோடு ஒப்புதலையும் அல்லவா காட்டி விட்டான்.

“இப்படிப்பட்ட ரெட்டை நாக்கு மனிதர் எனக்கு வேணாம்ப்பா”.. மனதிலிருந்ததையெல்லாம் பெற்றவர்களிடம் கொட்டியவள் இறுதியாகச் சொல்லி முடித்தாள்.

“அப்படி நினைக்காதேம்மா. என்ன இருந்தாலும் நாம இப்ப வேத்தாள்தானே. நம்ம முன்னாடி பெத்தவங்களை விட்டுக்கொடுப்பாரா?. கொஞ்சம் யோசிச்சுப்பாரு” தகப்பன் பரிதவித்தார்.

“இல்லைப்பா.. இப்ப பேசலைன்னா இனி எப்பவுமே பேச முடியாதுப்பா. அந்த சந்தர்ப்பத்தை அவர் உபயோகப்படுத்திக்கவும் மாட்டார்ன்னு தோணுது. நான் நல்லா நிறைய தடவை யோசிச்சுட்டேன். வாய்ச்சொல் வீரர்களை நம்பறதுங்கறது மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கின கதைதான். அப்படியே வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போக வேண்டியதுதான். இதுவே கல்யாணத்துக்கப்புறம் பெத்தவங்களைக் குளிர வைக்கிறதா நினைச்சுக்கிட்டு எங்கிட்ட ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சுரும். இப்பவே அது வேணும் இது வேணும்ன்னு லிஸ்ட் போடற அந்தம்மா வீட்டுல நான் கடைசி வரைக்கும் நல்லபடியாக் குடும்பம் நடத்துவேன்ங்கறது என்ன நிச்சயம்?. விட்டுக்கொடுத்தவங்க கெடாம இருந்தது அந்தக்காலம். விட்டுக்கொடுத்தே வீணாப்போறது இந்தக் கலிகாலம். வேணாம்ப்பா.. ப்ளீஸ் விட்ருங்க.” கண்ணீர் முத்தாய்த் திரண்டு நிற்க கையெடுத்துக் கும்பிட்டாள்.

“வேணாம்மா ராசாத்தி,. நீ நல்லா இருக்கறதைப் பார்க்கறதுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறோமே தவிர கஷ்டப்படறதைப் பார்க்கறதுக்கில்லே. உனக்கேத்த நல்ல ராஜகுமாரன் வராமலா போயிருவான். கவலையை விடு. இப்பவே அவங்களுக்குப் போன் போட்டு நமக்கு இஷ்டமில்லேன்னு சொல்லிடறேன்..” என்றவர் டீபாயை நெருங்கி போனில் நம்பர்களை ஒற்றினார்.

"வணக்கம்,.. பத்திரமா வீடு போய்ச் சேர்ந்தீங்களா?" தன்மையாகத்தானே பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.

"அட!.. இந்தக்கல்யாணத்துல எங்களுக்கு முழுச்சம்மதம்ன்னு நாங்களே நாளைக்கு உங்களுக்குப் போன் செய்யலாம்ன்னு இருந்தோம். நல்ல வேளையா இன்னிக்கு நீங்களே லைன்ல வந்துட்டீங்க." ஆர்ப்பரித்தனர் எதிர்முனையில்

"இல்லைங்க, அதுக்கு அவசியமில்லை. எங்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் விருப்பமில்லை. நீங்க கேட்டதையெல்லாம் கொடுக்கற மாதிரியான வேற சம்பந்தத்தைப் பார்த்துக்கோங்க"

போனைப் பிடித்தபடியே பேயறைந்தாற்போல் நின்றனர் எதிர்முனையினர்.

போனை வைத்துவிட்டுத் திரும்பிய தகப்பனின் விரித்த கைகளில் அடைக்கலம் புகுந்தது அந்தக் குஞ்சுக்கோழி.
*****
டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட "நம் தோழி" இதழுக்கும், எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியரான ஜெ... என்று அனைவராலும் அன்புடன் அறியப்படும் திரு.ஜெயராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றி :-)

Friday 8 February 2013

ஒரு ஒளிப்பட நிபுணரின்(???) டைரிக்குறிப்பு..


"ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது" என்று சொல்வார்கள். இதனுடன் காமிரா பிடித்த கையையும் சேர்த்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவாக இருந்தாலும் சரி, டியெஸ்ஸெல்லார் வகைக்காமிராவாக இருந்தாலும் சரி, வாங்கிய பின் அதிலுள்ள வசதிகளை ஒவ்வொன்றாக இயக்கிப்பார்த்து, இஷ்டம்போல் கண்ணில் கண்டதையெல்லாம் பாலு மஹேந்திரா, பி.சி. ஸ்ரீராம் ரேஞ்சுக்கு வளைத்து வளைத்துப் படமெடுக்கத் தோன்றும். ஓரளவுக்கு நிதானப்பட்டபின் தேர்ந்தெடுத்துப் படமெடுப்போமே தவிர "போதும்" என்று காமிராவை நிச்சயமாகக் கீழே வைக்கத்தோன்றாது.

படம் எடுப்பதற்கு எது முக்கியம்?.. காமிராவா? படமெடுக்கத்தூண்டும் காட்சிகளா? என்னைக்கேட்டால் ஆர்வம்தான் முக்கியம் என்று சொல்வேன். நல்ல காமிரா கையிலிருந்தும், அபூர்வமான அசர வைக்கும் காட்சிகள் கடந்து போகும்போதும் படமெடுத்துப் பதிந்து வைக்கும் ஆர்வமில்லையென்றால் என்ன பிரயோஜனம்?. என்னதான் டியெஸ்ஸெல்லாரின் ரேஞ்சே வேறு என்றாலும் விலையுயர்ந்த டியெஸ்ஸெல்லார் வகை காமிராவில்தான் நல்ல படங்கள் வசப்படும் என்றில்லை. பாயிண்ட் அண்ட் ஷூட் வகைக்காமிராக்களும் இப்போது மேக்ரோ, ஸ்போர்ட்ஸ் போன்ற செட்டிங்குகளுடன் வரத்தான் செய்கின்றன. ஒளியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?, கோணங்களை எப்படி அழகாக அமைப்பது? போன்ற அடிப்படை விஷயங்களை ஓரளவு கற்றுக்கொண்டாலே போதும். அசத்தி விடலாம்.  நம்மிடம் இருக்கும் மொபைலில் தரமான காமிரா இருந்தால் அவசர அடிக்கு அதை வைத்தும் அசரடிக்கும் படங்களை எடுக்கலாம்.

காமிரா வாங்கினால் மட்டும் போதாது. பழகவும் வேண்டும் என்று இப்போதெல்லாம் காமிராப்பை இல்லாமல் எங்கேயும் செல்வதில்லை. எங்கே? என்ன மாதிரி தீனி காமிராவுக்குக் கிடைக்கப்போகிறதென்று யாருக்குத்தெரியும்? ஆகவே, குறைந்த பட்சம் பாயிண்ட் அண்ட் ஷுட் காமிராவாவது எப்பொழுதும் கைவசம் இருக்கும். பொது இடங்களில் இந்த ஜூனியர் காமிராவிலோ அல்லது மொபைலிலோ படமெடுக்கும்போது ஒரு பிரச்சினையும் ஏற்படுவதில்லை.அதுவே சீனியர் அதுதான் டியெஸ்ஸெல்லாரைக் கையிலெடுத்தால் ஏதோ ஏலியன் ரேஞ்சுக்கு நம்மை உற்று நோக்கிக்கொண்டே மக்கள் கடந்து செல்வார்கள். சில சமயம் செக்யூரிட்டி எங்கிருந்தோ பாய்ந்து வந்து, "எந்த ப்ரஸ்?.." என்று கேட்பார். "இண்டர் நெட்" என்று மையமாகச் சொல்லி விட்டால் போதும், ஏதோ புரிந்தாற்போல் தலையை ஆட்டிக்கொண்டு சென்று விடுவார். சில சமயங்களில் "ஆட்களை எவ்ளோ வேண்ணாலும் படம் எடுத்துக்கோங்க.  ப்ராப்பர்ட்டீஸை மட்டும் எடுக்க வேணாம்" என்று அன்பாகக் கேட்டுக்கொள்வார். நாம் படமெடுப்பதே அந்தப் ப்ராப்பர்ட்டீஸைத்தானே என்று பாவம் அவருக்குத்தெரியாது :-))))

பொது இடங்களில், அதுவும் திருவிழா, கடைத்தெரு, மால்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் படமெடுக்கும்போது கவனம் தேவை. அனுமதியின்றிப் படம் பிடிப்பதை சிலர் விரும்புவதில்லை. சில சமயம் பெண்கள் கூட, "அதற்கென்ன?.. எவ்ளோ வேண்ணாலும் எடுத்துக்கோ" என்று அனுமதிப்பார்கள். சில ஆண்கள் "இல்லைங்க வேணாம். அளகு குறைஞ்சுரும்" என்று சொல்லி விடுவார்கள். எதுவென்றாலும் அனுமதியுடன் படமெடுப்பது நல்லது. இல்லையெனில் தர்ம அடி விழவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லாமல் மக்களையோ, அந்தச்சூழலையோ அதன் அழகு குறையாமல் எடுக்க நினைத்தாலோ அல்லது கூட்டத்தில் வரும் சின்னக்குழந்தைகளைப் படம் பிடிக்க விரும்பினாலோ ஜூம் லென்ஸைப் பயன்படுத்துவது உத்தமம்.

காமிராவும் கையுமாக நம்மைப் பார்த்ததும் பத்திரிகைக்காரர்கள் என்று நினைத்து(இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது?) "இந்த போட்டோ எந்த சேனல்லங்க வரும்?" என்று அப்பாவித்தனமாக ஆர்வமாகக் கேட்பவர்களும் இருக்கிறார்கள், பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சமயம் திடீரென்று உறக்கம் விழித்தெழுந்த எங்கள் நவி மும்பையின் சிட்கோ, கடைத்தெருவில் ரெய்டு ஒன்றை நடத்தியது. எல்லாம் ப்ளாஸ்டிக் பை விவகாரம்தான். வாடிக்கையாளர்களுக்கு ப்ளாஸ்டிக் பை கொடுத்து கை கொடுத்த கடைக்காரர்களுக்கு 1500 ரூபாய் அபராதமும், பக்காவாக கூரை போட்டு நடந்து கொண்டிருந்த ப்ளாட்பாரக் கடைகளுக்கு அதையெல்லாம் அப்புறப்படுத்தச் சொல்லி எச்சரிக்கையும் விடுத்து விட்டு கடமையைச் செய்த நிறைவுடன் கிளம்பி விட்டார்கள் அதிகாரிகள். ஒவ்வொரு கடைக்காரர்களும் கிலியடித்துக் கிடந்தார்கள். இது தெரியாமல் அப்பாவியாக நான் ஃபலூடாவிற்கு மலாய் குல்பி வாங்கப்போனேன். ஆர்டர் கொடுத்து விட்டு சும்மா அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் கண்ணில் பக்கத்திலிருந்த கரும்பு ஜூஸ் கடை தட்டுப்பட்டது. கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்த கரும்புகளும் காலி நாற்காலிகளும் அப்போதுதான் குடித்து வைத்திருந்த காலிக்கோப்பைகளும் அழகான ஒரு காட்சியமைப்பாக என் கலைக்கண்ணுக்குத்தெரிந்தது( நோ... நோ.. சிரிக்கப்டாது. ஓ.கே). கையில் வைத்திருந்த ஜுனியரிடம் கடமையைச் செய்யச்சொல்லி ஏவினேன்.  
"ஏங்க.. நீங்க மீடியாவா?" என்றார் கடைக்காரர். 

"அப்டில்லாம் ஒண்ணுமில்லை. இது சும்மா, எனது பொழுது போக்கு" என்றேன். மனிதர் நம்பவில்லை. "காலைல சிட்கோக்காரங்க வந்தாங்க, இப்ப நீங்க படம் எடுக்கறீங்க. பத்திரிகையில் வரப்போவுதுதானே?. நெஜமாச் சொல்லுங்க, ஏதும் பிரச்சினை வரப்போவுதா?"என்று அரை மணி நேரமாக "ஆத்தா வையும்.. காசு கொடு" என்றே அனத்திக் கொண்டிருந்தார். கடைசியில், "பயப்படாதே,.. உன் கடைக்கு எதுவும் ஆகாது, நான்(வீட்டிலிருந்து டிவியில்)பார்த்துக்கறேன்" என்றதும்தான் நிம்மதியானார். என்னத்தைச் சொல்வது,.. ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் :-))

மும்பை நகருக்குள்,.. அதுவும் சனி ஞாயிறென்றால் போட்டோ ஷூட்டுக்கென்றே அரை நிஜாரும் டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு காமிராவும் கையுமாக ஆட்கள் செல்வதைக் கண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான காட்சிகள் எதையாவது கண்டு விட்டால் நின்று க்ளிக்கி விட்டு நகர்வார்கள். மக்களும் இந்தக் காட்சிகளுக்கெல்லாம் நன்றாகவே பழகி விட்டார்கள். ஒரு சமயம் மும்பைக்குள் சென்று கொண்டிருந்தோம். மாஹிம் பகுதியின் சிக்னலில் டாக்சி நிற்கும்பொழுது பொம்மைகள், பூக்கள், புத்தகங்கள் என்று விற்றுக்கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். புத்தங்களா? என்று ஆச்சரியப்படாதீர்கள். மும்பையின் பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் தாண்டி பாந்திராவின் லிங்கிங் ரோடு போகும் பாலத்தில் ஏறி இறங்கி சிக்னலில் நின்றால் ஷிட்னி ஷெல்டனே கிடைப்பார் புத்தக வடிவில். அந்த சிக்னலில் புத்தகங்கள் மட்டுமே கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். எங்கே விட்டேன்?.. ஆங்.. மாஹிம் சிக்னலில்..
அடுத்த வரிசை வாகனங்களில் கடையை விரித்திருந்தவர்களைக் க்ளிக்க ஏதுவாக ஜூம் லென்ஸை மாட்டி வேலையை முடித்து விட்டு, அருகில் வரும்போது படம் பிடிக்க வைட் ஆங்கிள் லென்ஸை மாட்டிக் கொண்டிருந்தேன். அதற்குள் சிக்னல் விழுந்து விடவே காரினருகில் வந்தவர்கள் காருக்குள் எட்டிப்பார்த்து விட்டு, "அரே யார்,.. மீடியா வாலே ஹைங்(மீடியாக்காரங்கப்பா)" என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு நகர்ந்தனர்.

இன்னும் சில இடங்களில் புகைப்படத்துக்கு போஸ் தர வேண்டுமென்றால் காசு கேட்கும் சிறுவர்களும் உண்டு. மும்பையின் "ஹாஜி அலி தர்கா" பகுதிக்குப் போயிருந்தபோது கடலில் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்த குழந்தைகளைப் படம் பிடிக்க அனுமதி கேட்டபோது,"எடுத்துக்கோ,.. ஆனா தலைக்கு ஐம்பது ரூபாய் தருவியா?" என்று கேட்டது அந்தக்கூட்டத்திலிருந்த ஒரு வாண்டு. மறுத்து விட்டு நகர்ந்த என்னால் வாஷியின் பகுதியில் பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் படம் பிடித்து விட்டுச் சும்மா வர முடியவில்லை. பணம் கொடுத்தேன்.. பதிலுக்கு நாலு துண்டு மல்லிகைப்பூவைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான் அந்தச்சிறுவன்.

பயணம் செய்யும்போது, அதாவது இன்னொருவர் வண்டியோட்ட நாம் பயணம் செய்யும்போது காமிராவைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. சில சமயம் சாலைகளிலும் அருமையான காட்சிகள் கிடைக்கும். வேகமாக நகரும் பொருட்களையோ அல்லது நகரும் வாகனத்திலிருந்து படம் எடுக்கவோ ஷட்டர் ஸ்பீடை அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்பது பாலபாடம். பறவைகளைப் படம் பிடிக்கவும் இந்த உத்தியைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் காமிராவிலிருக்கும் ஸ்போர்ட்ஸ் என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம். மற்ற அளவுகளைக் காமிராவே தீர்மானித்துக்கொள்ளும். அதுவே நகரும் வாகனங்களின் ஒளியையோ அல்லது அருவியையோ படம் பிடிக்கும்போது ஸ்பீடைக்குறைத்து வைத்து எடுத்தால் அழகான ஒளிக்கோடுகளும் பாலருவியின் படமும் கிடைக்கும். வாண வேடிக்கைகளை இந்த முறையில் எடுத்தால் அழகாக வரும். ஆனால் ஷட்டர் குறைந்த வேகத்தில் இயங்கும்போது ட்ரைபாட் அல்லது முக்காலி, மதில்சுவர் போன்ற அசையாப்பொருட்களின் மேல் காமிராவை வைத்துப் படம் பிடித்தல் நல்லது. படம் ஷேக்காகாமல் ஷோக்காக வரும்.
வீட்டிலேயே ஏற்பாடுகள் செய்து கொண்டு அழகான படங்கள் எடுப்பது ஒரு விதம் என்றால், தானாகவே கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்தி படம் பிடிப்பது இன்னொரு விதம். பழங்களை மரத்தில் வைத்துப் படம் பிடித்தல் ஒரு அழகு என்றால் பழக்கூடையில் அடுக்கிப் படம்  பிடித்தல் இன்னொரு அழகு இல்லையா.. ஒவ்வொருவரிடமும் மூன்றாவது கண்ணான கலைக்கண் இருக்கத்தான் செய்கிறது. சிலர் விழித்துக்கொண்டு விடுகிறார்கள். சிலர் இன்னும் உறங்குகிறார்கள். அவ்வளவே.. கலைக்கண்ணால் நம்மைச் சுற்றி நோக்கினால் பொன்னான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதைக் காணலாம். ஆர்வம் வற்றாமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்னும் இன்னும் என்று இந்தத்துறையில் எவ்வளவோ முன்னேறலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails