Friday 25 February 2011

வீட்டுத்தோட்டம் போடலாம்..

செடிகளின் மேலும், பூக்களின் மேலுமான ஆசை எப்போதிலிருந்து ஆரம்பிச்சிருக்கும். யோசிச்சுப்பார்த்தா, பிறவியிலேயே ஆரம்பிச்சிருக்கும்ன்னு தோணுது. (நெறைய பெண்களுக்கு அப்படித்தான் :-)). ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பாப்கட் ஹேர்ஸ்டைல்தான். அதையும், உச்சந்தலையில் ரப்பர்பேண்ட் போட்டு கொத்தமல்லிக்கட்டு மாதிரி கட்டிவிட்டிருப்பாங்க. இந்த அழகுல, வீட்ல அம்மாவுக்கும் எனக்குமா பூ வாங்கினாக்கூட, அத்தனையும் எனக்குத்தான் வேணும்ன்னு பிடுங்கிப்பேனாம். தலைமுடியைவிட பூதான் அதிகமா இருக்கும்ன்னு ஆச்சிகூட கிண்டல் பண்ணுவாங்க :-))

கொஞ்சம் வளந்தப்புறம், வீட்டுல செடிவளர்க்கணும்ன்னு ஒரு ஆசை. என் அப்பாவழிப்பாட்டிக்கும், தாய்மாமாவுக்கும் தோட்டக்கலையில் இருந்த ஆர்வத்தைப்பார்த்துக்கூட வந்திருக்கலாம். அவங்களுக்கு நல்ல கைராசியும் உண்டு. என்னத்தை விதைச்சாலும், அவ்வளவு செழிப்பா வளந்து நிற்கும். (எனக்கும் துளியூண்டு உண்டு ஹி..ஹி..ஹி..). சிரட்டைன்னு சொல்லப்படற கொட்டாங்கச்சியில் மண் நிரப்பி கடுகு, மெரிகோல்ட் விதைகளை போட்டுட்டு, முளைச்சிடுச்சா இல்லியான்னு தெனமும் கவனமா பாத்துக்கிட்டிருப்பேன். முளைச்சு ஒரு ஜாண் உசரத்துக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம், இதுலெல்லாம் வளர்த்தா பூக்காதுன்னு தெரிஞ்சதும் ஒர்ரே ஃபீலிங்க்ஸ்தான்..

பாட்டி வீட்டுல இருந்த அடுக்குமுல்லைப்பூக்கு அப்படி ஒரு அபாரமான மணம். ஒண்ணுமேல ஒண்ணா நாலடுக்கா,  இருக்கும். அவங்க வெச்சிருந்த செடிகொடிகளை வேறயாரையும் அண்டவிடாம தானே பராமரிப்பாங்க. கொடுக்காப்புளி, மருதாணி, முருங்கை, கனகாம்பரம், கோழி அவரைக்காய் (லேசான பர்ப்பிள் கலர்ல இருக்கும்)ன்னு அவங்க தோட்டத்தில் எக்கச்சக்கமா உண்டு. மாமாவோட தோட்டத்துல காய்கறிகளுக்கு தனியிடம் உண்டு. ஒருதடவை சூரியகாந்திப்பூவை கேட்டு அடம்பிடிச்சு, மாமாவை வீடு முழுக்க துரத்தி, ஓடவெச்சு தண்ணிகுடிக்க வெச்ச வீரக்கதையெல்லாம் உண்டு :-))). எனக்கு பயந்துட்டு தட்டட்டியில போய் உக்காந்துக்கிட்டார்.

இப்படியெல்லாம் பார்த்தே வளர்ந்ததுனாலயோ என்னவோ, வீட்டுத்தோட்டம் என்ற ஆசை மனசுல ஒரு மூலையில உக்காந்துக்கிட்டு பிறாண்டிக்கிட்டேயிருந்தது. வாய்ப்பும் வசதியும் கிடைச்சதும், நானும், சின்னதா அழகா ஒரு தோட்டம்போட்டுவெச்சேன். கல்யாணமாகி வந்தப்ப, தோட்டத்தை பிரியற ஏக்கம்தான் அதிகமா இருந்தது. இங்கே வந்தப்புறம், ஆரம்பத்துல ஒற்றை ரோஜாச்செடியை வளர்த்து திருப்திப்பட்டுக்கிட்டாலும்,   எப்பவாவது தொட்டிகளில், காய்கறிச்செடிகளை வளர்த்து உபயோகப்படுத்தும்போது நம்ம வீட்டுல வளர்த்ததுன்னு ஒரு தனி சந்தோஷம். அப்பப்ப சீசனுக்கேத்தமாதிரி, ஏதாவது விளையும். இப்போக்கூட புதினா, பொன்னாங்கண்ணி, தக்காளி, கரும்பு,  மிளகாய், இத்யாதிகள்ன்னு பயிரிட்டுருக்கேன். வருஷாவருஷம் பொங்கலுக்கு மஞ்சள்குலை என்னோட தோட்டத்து சப்ளைதான்.
எங்கவீட்டு மிளகாயும்.. புதினாவும்.
ஒவ்வொருத்தரும் தன்னால் முடிஞ்சவரை, வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரைகள், பூச்செடிகளை வளர்த்தாலே தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்துக்க முடியும். அதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும்.. நகரத்தில் ஏது வசதின்னு நிறையப்பேர் அலுத்துப்பாங்க. மனசிருந்தால் இடமுண்டு. இங்கே மும்பையில், குடிசைப்பகுதிகள்லயும் தொட்டிகளை வைக்க இடமில்லாட்டாக்கூட அதுகளை கயித்துல கட்டி கூரையின் பக்கக்கம்புகளில் தொங்கவிட்டுருப்பாங்க. சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு மேலயும் ரோஜாத்தொட்டிகளை வெச்சிருக்கறதுண்டு.

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும்.
(சுட்டது..)
அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள், மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, உழைப்பையும் செலவையும் பகிர்ந்துக்கிட்டா, பூச்சிக்கொல்லியின் நச்சு கலக்காத புத்தம்புது காய்கறிகள், பூக்கள் தங்குதடையில்லாம கிடைக்குமே. நல்ல உடற்பயிற்சியாவும், பயனுள்ள பொழுதுபோக்காவும் இருக்கும். மொட்டைத்தலையில்.. ச்சே.. மொட்டைமாடியில் பச்சைபசேல்ன்னு.. அழகா பூத்துக்குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாடவரும் அணில்கள்,குருவிகளையும் யாருக்குத்தான் பிடிக்காது!! Mumbai Port Trust-ன் காண்டீனின் மொட்டைமாடியில் இப்படியொரு அசத்தலான தோட்டத்தை, அதன் கேட்டரிங் ஆபிசரான ப்ரீதிபாட்டில் அமைச்சிருக்கார். காண்டீனின் பெரும்பான்மையான தேவையை அந்த தோட்டமே பூர்த்திசெய்யுதாம்.
(சுட்டது..)
அமோகமான நல்ல விளைச்சல் கிடைக்கணும்ன்னா, முதல்ல மண் ஆரோக்கியமா இருக்கணும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்தும், மிச்சத்தை காற்றிலிருந்தும் கிரகிச்சுக்குது. அதனால மண்ணும் சத்து நிரம்பியதா இருக்கணும். இதை, இப்பல்லாம் செடிகளுக்கான நர்சரிகளிலேயே ரெடிமேடா விக்கிறாங்க. செயற்கையுரம் போடாம, மட்கும் குப்பைகள், மாட்டுச்சாணம் இதெல்லாம் கலந்து மட்கச்செய்து தயாரிக்கப்படுது. வாங்கிட்டு வந்து தொட்டியில் நிரப்பி, செடியை நடவேண்டியதுதான்.

இந்த இயற்கை உரத்தை நாமளும் வீட்டிலேயே செஞ்சுக்கலாம். பழைய பக்கெட்டுகள், குப்பைத்தொட்டிகள் இதுல ஏதாவது ஒண்ணில் அடுக்களைக்கழிவுகள், செடிகளிலிருந்து உதிரும் இலைதழைகள் இதெல்லாம் போட்டுட்டு வரணும். ஜூஸ் எடுத்தப்புறம் கிடைக்கிற சக்கைகளைக்கூட போடலாம். மொத்தத்தில் மட்கக்கூடிய குப்பைகளா இருக்கணும். எப்பவும் லேசான ஈரப்பதம் இருந்துட்டிருந்தா ரொம்ப நல்லது. மழைக்காலத்தில் மண்புழுக்கள் தாராளமா கிடைக்கும். அதுல கொஞ்சத்தை எடுத்து, நம்ம உரத்தொட்டியில் போட்டுவெச்சா, குப்பைகளை நல்ல சத்துள்ள உரமா மாத்திடும்.

குறிப்பிட்ட அளவுக்கு ஒருமுறை கொஞ்சம் மண்ணையும் ஒரு லேயரா அடுக்குங்க. மறக்காம உரத்தொட்டியை மூடிவையுங்க. இல்லைன்னா, ஈத்தொல்லை தாங்காது. தொட்டி நிறைஞ்சதும், அப்படியே விட்டு வெச்சுட்டா, சுமார் மூணு மாசத்துல நல்ல அருமையான உரம் தயார். லேசா சலிச்சு எடுத்து, செடிகளுக்கு போடலாம். அமோக விளைச்சல் கொடுக்கும். எப்பவும்,ரெண்டு உரத்தொட்டிகளை கைவசம் வெச்சிருக்கணும். ஒண்ணு ரெடியாயிட்டிருக்கும்போது இன்னொண்ணில் உரம் தயாரா இருக்கும்.

செடிகளை வளர்க்க தொட்டிகளுக்கும் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. இப்பல்லாம் கண்டெய்னர் விவசாயம்ன்னு ஒண்ணு பிரபலமாகிக்கிட்டு வருது. இது ஒண்ணும் புதுசில்லை.. நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். வீட்டுல கிடக்கிற வேண்டாத பழைய டப்பாக்கள், பாட்டில்கள்ல செடி வளர்ப்போமே.. அதேதான். சில குடும்பங்கள்ல மாசாந்திர மளிகை வாங்கும்போது, அஞ்சுலிட்டர், ரெண்டு லிட்டர் கேன்கள்ல எண்ணெய் வாங்குவாங்க. அப்புறம், அதை பழைய பேப்பர்,பிளாஸ்டிக் வாங்குறவங்ககிட்ட தூக்கிப்போட்டுடுவாங்க. இதுதான் இப்போ நமக்கு கைகொடுக்கப்போவுது. பெப்சி, மிரிண்டா போன்ற பானங்கள் வர்ற பாட்டில்களையும் இப்படி உபயோகப்படுத்திக்கலாம். சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொஞ்சமாவது குறையும்.
கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. 'நானே வளர்த்ததாக்கும்'ங்கற பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும். எங்கவீட்ல வெண்டைக்காய் காய்ச்சுக்கிடந்தப்ப, பசங்க அதை பச்சையாவே சாப்பிடுவாங்க :-))

உங்க கற்பனைத்திறனுக்கேற்ப பாட்டில்கள்ல பெயிண்ட் வேலைப்பாடு செஞ்சுவெச்சா, அதுவே ஒரு அழகான உள்ளலங்காரமாவும் இருக்கும்.வீட்டுக்குள்ள வைக்கிறதுக்குன்னு தனியா க்ரோட்டன்ஸ்செடி வளர்க்கவேண்டியதில்லை. மும்பையில் குடிசைப்பகுதிகள்ல மட்டும் இருந்த இந்த கண்டெய்னர் முறை இப்ப நகரம் முழுக்க பரவ ஆரம்பிச்சிருக்கு. விளை நிலங்களெல்லாம் காங்கிரீட் காடுகளா மாறிட்டு வர்ற இன்றைய சூழல்ல, முடிஞ்சவரை அதை தடுக்கறதோட, நாம,இருக்குமிடத்தையும் உபயோகமுள்ள வகையில் பசுமையாக்கிக்கலாமே :-)))





Tuesday 22 February 2011

பவளமல்லி ..


வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது.  மேலாக ஒரு ஷாலைப்போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தவள்,.. அதை ரசித்தபடியே கட்டிடத்தின் பின்பக்கம் வந்தாள்..

கம்மென்று காற்றில் மிதந்து வந்து மோதிய பவளமல்லியின் வாசத்தை, முழுவதும் உள்வாங்கிக்கொள்வதுபோல் ஒரு நீண்டமூச்சை இழுத்து,  அப்படியே ஒரு நிமிடம் அதை அனுபவித்தபடி கண்மூடி நின்று கொண்டிருந்தாள்.. சிவப்பும் வெள்ளையுமான பூக்களை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான்,  'இங்கேதான் இருக்கியா..'  பின்பக்கமிருந்து ஒரு பெண்குரல் கேட்டது.

சட்டென விழித்துக்கொண்டவளுக்கு, தன்னுடைய வீட்டில் படுக்கையறையில் படுத்திருப்பது உறைக்க முழுசாக இரண்டு நிமிடங்கள் ஆனது. இருட்டில் துழாவி, பக்கத்து டேபிளிலிருந்த அலாரத்தை எடுத்து, அதன் தலையில் தட்ட, அது நீலவெளிச்சத்தில் நாலு இருபத்தைஞ்சு என்று தன் முகத்தை காட்டியது.

உலர்ந்துபோயிருந்த தொண்டையில் இறங்கிய ஒரு மடக்கு தண்ணீர், பாலைவனத்தில் பெய்த மழையாய்க்குளிர்வித்தது. 'இன்றைக்கு தூக்கம் அவ்வளவுதான்..' நினைத்தபடி கலைந்த கூந்தலை சரிசெய்துகொண்டு பால்கனியில் வந்து நின்றாள். இன்னும் பவளமல்லி வாசம் அலையடித்துக்கொண்டிருப்பதாய் பட்டது. கனவில் வந்த அந்தப்பெண்ணின் உருவமும் அது உடுத்தியிருந்த பச்சைப்பட்டும் இப்போதும் மங்கலாக நினைவிருந்தன.  எல்லா நினைவுகளையும் ஒரு தலையசைப்பில் உதறிவிட்டு, குளிக்கச்சென்றாள்.

விடிந்தும் விடியாத அன்றைய காலைப்பொழுதில் போன் வந்தது. வெளி நாட்டிலிருக்கும் அவரது அண்ணாதான் பேசினார். 'அப்பாவோட வருடாந்திர திதிக்கு வரமுடியவில்லையாம். பயண ஏற்பாடுகள் ஒன்றும் நினைத்தபடி நடக்கவில்லையாம். அவரது இடத்திலிருந்து இவர்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டுமாம்...' இருவரும் பேசிக்கொண்டதிலிருந்தே சுருக்கமாக விஷயத்தை புரிந்துகொண்டாள்..

"வருஷத்துக்கொருதடவை.. அதுக்குகூட வரமுடியலை துரைக்கு.."அவள் முணுமுணுப்பதை கேட்டும் கேளாமல், "ஆபீஸ்ல மகேந்திரன் சார்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணனும்.." என்று சொல்லிவிட்டு கிளம்பியவர் மதியத்துக்கு மேல் போன் செய்தார்.

" இங்கே பக்கத்துல ஒரு கோயில் இருக்காம். ஆனானப்பட்ட ராமரே தன்னோட தகப்பனுக்கு திதி கொடுத்த இடமாம். இங்கே செய்யறது புண்ணியம்ன்னு பேசிக்கிட்டிருக்கச்சே சொன்னாரு.. போயிட்டு வரலாமா?.."

" நாம என்ன செய்யவேண்டியிருக்கும்ன்னு கேட்டுக்கோங்க.. தகுந்த ஏற்பாடுகளோட போகணும் இல்லியா.."

"அனேகமா எல்லாமே அவங்க செஞ்சுடுவாங்களாம். காலைல ஏழு ஏழரைக்கெல்லாம் அங்க இருக்கணுமாம். ஒண்ணு செய்யலாம். முதல் நாளே கிளம்பி போயிடலாம். தங்குறதுக்கு கோயில்வளாகத்துலயே வசதியான அறைகள் இருக்குதாம்..."

திட்டமிட்டபடி கிளம்பிவந்து இதோ அறைக்குள் நுழைந்தாயிற்று. நல்ல பெரிய கோவில்தான். ' ட் 'டை திருப்பிப்போட்ட வடிவத்தில்,  நடுவில் கோயிலும், ஒரு பக்கமாக நாலைந்து அறைகளும்.. மறுபக்கத்தில் ஆபீஸும் , இன்னொரு சிறிய அறையும் இருந்தன. சிறிய அறையிலிருந்த வயதான தம்பதியை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி , காப்பி, டிபன் எல்லாம் அவர்களே தருவார்கள் என்று சொல்லிவிட்டு கடமை முடிந்ததென்று கோயில் ஊழியர் சென்றுவிட்டார்.

பளிச்சென்று இருந்த அந்தப்பெண்மணியை பார்த்ததுமே அவளுக்கு பிடித்துவிட்டது. கோயிலிலேயே தங்கியிருந்து சேவை செய்கிறார்களாம். சொல்லிக்கொள்ளவென்று வேறு யாருமில்லையாம்.பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது சாரதாம்மா சொன்னதும் சினேகமாக சிரித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.  நகரின் பரபரப்பு தன்னை தொட்டுவிடாத தூரத்திலிருந்த கோயிலில் நிலவிய அமைதியான சூழ்நிலையும், சாரதாம்மாவின் உபசரிப்பும் ரொம்பவும் பிடித்துப்போய்விட, 'இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப்போகலாமே' என்று அவள் கேட்டபோது அவரால் மறுக்கமுடியவில்லை.

வெளியே சுற்றிய நேரம்போக, மீதியிருக்கும் நேரங்களில் சாரதாம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நகரங்களில்தான் முகம் கொடுத்துப்பேசக்கூட நேரமில்லாதபடி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்களே.. காப்பியை உறிஞ்சிக்கொண்டே இரண்டுபேரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கிறேன்ம்மா.."

"இதிலென்ன சிரமம். என்னோட புள்ளையும், மருமகளுமாயிருந்தா செய்ய மாட்டேனா!!.. இதுக்காவது எனக்கு கொடுப்பினை இருக்கே. அதை நெனைச்சு சந்தோஷம்தான்."

இந்தவயதிலும் ,அங்கே தங்கும் யாத்திரீகர்களுக்கு வேண்டியதை சமைத்துப்போட்டுக்கொண்டு, அவர்களுடைய தேவைகளை கவனித்து பூர்த்தி செய்துகொண்டு ரொம்பவே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.  'ஓய்வெடுக்கவேண்டிய இந்த வயதில் இங்கே, இப்படி உழைக்கிறாரே.. பிள்ளைகள் சரியில்லை போலிருக்கிறது'.. புதிதாக அறிமுகமானவரிடம் இதையெல்லாம் எப்படி பேசுவது என்று சங்கடப்பட்டாலும், அவரது நிலையை தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டே விட்டாள்..

கண்கள் லேசாக இடுங்க, சின்ன சிரிப்புடன் அவளைப்பார்த்தார், "இதுல என் குழந்தைகளோட தப்பு எதுவுமில்லம்மா.. ஏன்னா, எங்களுக்கு குழந்தைகளே கிடையாது. எனக்கு அவரும், அவருக்கு நானும்ன்னே வாழ்ந்துட்டோம்.. ரெண்டுபேரும் ரிட்டயர் ஆனப்புறம், கோவில்களை தரிசனம் செய்யலாம்ன்னு தேசாந்திரம் கிளம்பினோம். இந்தக்கோயிலைப்பார்த்ததும் அதென்னவோ எங்களுக்கு இதான் எங்க இடம்ன்னு தோணிப்போச்சு. அம்பாளுக்கும், வர்றவங்களுக்கும் சேவை செய்துட்டே இங்கியே காலத்தை முடிச்சுப்போம்ன்னு இங்கியே தங்கிட்டோம் அவ்ளோதான்.. அந்தக்காலத்துல வானப்ரஸ்தம் போவாங்களாமே அதுமாதிரிதான்னு வெச்சுக்கோயேன்..."

"இங்க உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்காம்மா?.."  நேரடியாக கேட்கத்திணறினாலும் சாரதாம்மா புரிந்து கொண்டார்." ஒண்ணும் பிரச்சினையில்லைம்மா.. அவரோட பென்ஷன் வருது. உங்களை மாதிரி வர்றவங்க இஷ்டப்பட்டு கொடுக்கிறதும் உண்டு. கோயில்லேர்ந்து ஏதோ கொஞ்சம் கொடுக்கிறாங்க.. இதுபோதும்.." என்று சொல்லிக்கொண்டே புடவை மடிப்பை நீவிவிட்டுக் கொண்டார்.

அங்கிருந்து கிளம்பும்போது ஏனோ அவளுக்கு பிறந்த வீட்டிலிருந்து புறப்படுவதுபோல் தோன்றியது. கோயிலின் உள்ளே கற்சிலையாக இருந்த அம்பாள் உடலெடுத்து தன்னுடன் இருந்ததைப்போல் ஒரு மனநிறைவு. 'போயிட்டு வரேம்மா' என்று சாரதாம்மாவிடம் விடைபெற்றபோது ஏனோ தொண்டையை அடைத்தது. 'இரு.. வரேன்' என்றுவிட்டு குடுகுடுவென ஓடிய சாரதாம்மா, தாம்பூலத்துடன் திரும்பி வந்து வழியனுப்பி வைத்தார். பெற்றுக்கொண்டு நமஸ்கரித்தபோது தன் அன்னையை நமஸ்கரிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு, ' எப்ப என்ன வேணும்ன்னாலும் என்னைக்கூப்பிடுங்க' என்றுவிட்டு விடைபெற்றாள்.

பனிக்காலம் ஆரம்பமாகியிருந்த ஒரு பொழுது.. வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு புறப்பட்டவளுக்கு, இன்று ஏனோ ரொம்ப நேரம் நடக்க வேண்டும்போல் இருந்தது. ஆகவே, அன்றைக்கு புல்வெளியில் நடப்பதை விடுத்து, பூங்காவின் வெளிவட்டத்திலிருந்த ஜாகிங் ட்ராக்கில் நடக்கலானாள். மூலையில் பராமரிப்புப்பணிக்கான பொருட்களை போட்டு வைக்கும் அறையைச் சுற்றிக்கொண்டு போகும், அந்தப்பாதை தூரம் கொஞ்சம் அதிகம்தான்.

வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்தது போல் மெல்லிய பனி பரவி நின்றது.  மேலாக ஒரு ஷாலைப் போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தவள்,.. அதை ரசித்தபடியே கட்டிடத்தின் பின்பக்கம் வந்தாள்..

கம்மென்று காற்றில் மிதந்து வந்து மோதிய பவளமல்லியின் வாசத்தை, முழுவதும் உள்வாங்கிக் கொள்வது போல் ஒரு நீண்டமூச்சை இழுத்து,  அப்படியே ஒரு நிமிடம் அதை அனுபவித்தபடி கண்மூடி நின்று கொண்டிருந்தாள்.. சிவப்பும் வெள்ளையுமான பூக்களை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்,  'இங்கேதான் இருக்கியா..'  பின்பக்கமிருந்து ஒரு பெண்குரல் கேட்டது.

அட!!.. சாரதாம்மா.. இங்கே எப்படி??.. அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.சந்தோஷத்தில் மனம் திக்குமுக்காடியது.

"தனியாவா வந்தீங்க.. வாங்க வீட்டுக்கு போலாம்.."

"உன்னைப் பார்க்கணும்போல் இருந்தது. அதான் கிளம்பிட்டேன், மாமா வண்டிலேதான் உக்காந்திருக்கார். நடக்க முடியாதில்லையா??.."

"ஏம்மா.. பால்பாக்கெட்டை உங்கிட்டயே கொடுத்துடவா?? எனக்கு அலைச்சல் மிச்சம் பாரு.." பால்காரப்பையனின் குரல் அவளை இடைமறித்தது. "ஒரு நிமிஷம்மா.." என்றுவிட்டு, ட்ராக்கை விட்டிறங்கி பூங்காவின் காம்பவுண்ட் சுவரில் அவன் வைத்துச்சென்ற பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு, "உழைக்க வேண்டிய வயசுல சோம்பேறித்தனத்தை பார்த்தீங்களாம்மா.." என்றபடியே திரும்பினாள்.

அவளையும், அவளைப்போன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு சிலரையும் தவிர பூங்கா வெறிச்சோடிக்கிடந்தது. அங்குமிங்கும் ஓடிச்சென்று பார்த்தாள்.. சாரதாம்மாவைக் காணவில்லை. அவர் வந்ததும், மறைந்ததும் புதிராகவும், குழப்பமாகவும் இருந்தது அவளுக்கு. என்ன செய்வதென்றறியாமல், கைப்பேசியில் இருந்த கோயிலின் ஆபீஸ் நம்பருக்கு போன்செய்தாள்.

"சாரதாம்மாவா!!.. அவங்க அங்க வந்திருக்க முடியாதுங்க.. போனவாரம்தான், மாமா காலமானார். அந்த அதிர்ச்சியிலேயே மாமியும் போயிட்டாங்க.."

Thursday 17 February 2011

பச்சைப்பயிறு சப்பாத்தி..


சிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு செய்யமுடியற அயிட்டங்கள் எக்கச்சக்கம். ஆந்திராவின் புகழ்பெற்ற பெசரட்டு, நம்மூர் சுண்டல், பொங்கல், மஹாராஷ்ட்ராவின் கிச்சடி, மூங்தால் பக்கோடா, கேரளா ஸ்பெஷல் சிறுபயறு பாயசம், பயறு துவரன், துவையல், ... இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். கேரளாவில் இதை கூடுதலும் உபயோகிக்கிறாங்க. குறிப்பா, திருவாங்கூர் பகுதியில் தால் செய்யறதுக்கு துவரம்பருப்புக்கு பதிலா இதைத்தான் உபயோகிக்கிறாங்க. நாஞ்சில்நாட்டுப் பக்கங்களில், சிறுபயிறு பாயசம் இல்லாத கல்யாணவிருந்தோ, விசேஷ சமையலோ கிடையாது. சீனர்களின் சமையலிலும் இதுக்கு சிறப்பிடம் இருக்காம்.

இந்தியாவைத்தவிர.. தென்கிழக்கு ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இது பயிரிடப்படுது. அங்கெல்லாம் முளைக்கட்டிய பயிறை உபயோகிச்சு அனேகமான உணவுவகைகள் செய்யப்படுது. இதன் மாவை உபயோகப்படுத்தி நூடுல்ஸும் செய்யறாங்களாம். மைதாவால் செய்யப்படற நூடுல்ஸைவிட நிச்சயமா சத்துள்ளதாத்தான் இருக்கும் இல்லே.
cellophane noodles..
நம்மூரைப்பொறுத்தமட்டில், பத்தியச்சமையலில் இது முக்கிய இடம் வகிக்குது. அதுவும், ஆயுர்வேதத்தில் வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று தோஷங்களை இது கட்டுப்படுத்துவதா சொல்லப்படுது. காய்ச்சல் நேரங்கள்ல சீரணசக்தி குறைவா இருக்கும்ன்னு முழுச்சாப்பாடு கொடுக்கமாட்டாங்க. சோறுவடிச்ச கஞ்சி, நொய்க்கஞ்சி, ரசம் கரைச்சசாதம்ன்னு படிப்படியாதான் பழைய நிலைமைக்கு நம்ம உடம்பை தேத்தி கொண்டுவருவாங்க. அந்தமாதிரி நேரங்கள்ல கொடுக்கப்படற சம்பா பச்சரிசிக்கஞ்சியும், சிறுபயறு துவரனும் சூப்பர் காம்பினேஷன் தெரியுமோ..

மத்த பயிறுவகைகளை மாதிரி இது வாயுத்தொந்தரவை கொண்டுவர்றதில்லை. அதனாலயே, இது துவரம்பருப்புக்கு மாற்றாவும் உபயோகிக்கப்படுது. என்ன!!.. கொஞ்சம் கொழகொழன்னு இருக்கும். (எனக்கு பிடிக்கவே பிடிக்காது :-))) கடலைப்பருப்பு உபயோகிச்சு செய்யற கூட்டு, கறிகளை சிறுபயிறை வேகவெச்சும் செய்யலாம். நல்லாவே இருக்கும். ஒரு நாள் அடையும் செஞ்சு பாத்தேன்.. நல்ல வாசனையா, ருசியாவே இருந்தது. சிறுபயிறு துவையல் ரசம்,வத்தக்குழம்பு சாதங்களுக்கு அருமையான ஜோடி. பருப்புப்பொடி மாதிரியே இந்த துவையலையும் சாதத்துல போட்டு, தேங்காயெண்ணெய் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடலாம். என்ன!!.. அதுக்கப்புறம் இந்த ருசியில் மயங்கி குழம்பு சாதம் சாப்பிடமாட்டீங்க :-))

ஆளுதான் இத்துனூண்டு இருக்கே தவிர, இதனோட பராக்கிரமம் எக்கச்சக்கம். வாமனன் மாதிரின்னும் சொல்லலாம். நார்ச்சத்து நிரம்பியதாவும், கொழுப்புச்சத்து குறைவாவும் இருக்கறதால இதை தொடர்ந்து உபயோகப்படுத்தினா, நாட்பட உடல்எடை குறையும். அதேமாதிரி இரத்தத்தில் இருக்கற சர்க்கரையோட அளவும் கட்டுப்படுது. முக்கியமா.. இருதயம் ரொம்ப நல்லா இயங்கணும்ன்னா இதை அடிக்கடி எடுத்துக்கிட்டாலே போதும். இதுல இருக்கிற விட்டமின்களும், தாதுக்களும் இரத்தத்திலிருக்கிற சிவப்பணுக்களை பெருக்கி, கெட்ட கொழுப்பை கரைக்குது. இரத்தம் சுத்தமாவதன் பலன்.. இருதயம் ஆரோக்கியமாகுது. மாரடைப்பு வர்ற அபாயத்தை குறைக்க இது ஒண்ணே போதுமே.

இதுல இருக்கிற சத்துக்கள்:
Nutrients Amount
Calories 212
Protein 14.18 gm
Water 146.77 gm
Ash 1.60 gm
Fats & Fatty Acids
Total Fat 0.77 gm
Saturated Fat 0.234 gm
Monounsaturated Fat 0. 109 gm
Polyunsaturated Fat 0.259 g
Carbohydrates
Total Carbohydrate 38.68 gm
Dietary Fiber 15.4 gm
Sugars 4.04 gm
Vitamins
Vitamin C 2.0 mg
Vitamin E (alpha-tocopherol) 0.30 mg
Thiamin 0.331 mg
Niacin 1.166 mg
Vitamin B6 0.135 mg
Folate 321 mcg
Pantothenic Acid 0.828 mg
Riboflavin 0.123 mg
Vitamin K (phylloquinone) 5.5 mcg
Minerals
Calcium 55 mg
Iron 2.83 mg
Magnesium 97 mg
Phosphorus 200 mg
Potassium 537 mg
Sodium 4 mg
Zinc 1.70 mg
Copper 0.315 mg
Manganese 0.602 mg
Selenium 5.0 mcg
பொதுவாவே பயிறுவகைகளை அப்படியே சாப்பிடுவதைவிட முளைக்கட்டி சாப்பிடுவது நல்லதுன்னு சொல்லுவாங்க. முளைக்கட்டுவதால் அதுல இருக்கிற மாவுச்சத்து குறைஞ்சு புரோட்டீனோட அளவு கூடுதலாகுமாம். இது உடம்புக்கு ரொம்ப நல்லதாச்சே.. பயிறை குறைஞ்சது ஆறுமணி நேரமாவது ஊறவெச்சுட்டு, தண்ணீரை நல்லாவடிச்சுடணும். அப்புறம் ஒரு மெல்லிய துணியில் பொட்டலம் மாதிரி கட்டி, ஹாட்பேகில் இருபத்துநாலு மணி நேரம் மூடிவெச்சா போதும். குறைஞ்சது ரெண்டு அங்குலமாவது முளைகள் வளர்ந்துருக்கணும். அப்பதான் நல்ல சத்தா இருக்குமாம். இங்கே மஹாராஷ்ட்ராவிலும், மிசல், உசல் போன்ற அயிட்டங்களை செய்யறதுக்கு பயிறுகளை கூடுதலும் முளைகட்டிதான் உபயோகிப்பாங்க. சிலபேர் பானிபூரியிலும் உபயோகப்படுத்துவதுண்டு. மார்க்கெட்டுகளிலும் முளைகட்டிய பயிறுகள் கிடைக்கும்.

சிறுபயிறை உபயோகிச்சு சப்பாத்தி செஞ்சாலென்னன்னு ரொம்ப நாளா யோசனை. யோசிச்சிட்டே இருந்தா நடக்காதுன்னு காரியத்துல இறங்கிட்டேன்.செஞ்சு டப்பாவில் கொடுத்துவிட,  ரங்க்ஸின் ஆபீசில் எனக்கு உனக்குன்னு போட்டியாம். ஜூப்பரா இருந்ததுன்னு அங்க கொடுத்த பின்னூட்டத்த இங்கே காப்பி-பேஸ்ட் செஞ்சார். எப்படி செஞ்சேன்னு சொல்லட்டா.

தேவையானவை:

நல்லா ஊறிய சிறுபயிறு - அரைகப் (முளை கட்டியதோ.. இல்லாமலோ)

கொத்தமல்லி இலைகள் - ஒரு பெரிய கிண்ணம்.

பச்சைமிளகாய் - நாலஞ்சு,

கரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி,

இஞ்சி - ஒரு சின்ன துண்டு.

மஞ்சப்பொடி - ஒரு சிட்டிகை.

உப்பு - ஒரு டீஸ்பூன்

கோதுமைமாவு - தேவைக்கேற்ப.

செய்ய ஆரம்பிக்கலாமா... சிறுபயிறை அதிகமா தண்ணீர் இல்லாம, நல்லா குழைய வேகவெச்சுக்கோங்க. தப்பித்தவறி கூடுதல் தண்ணீர் இருந்திச்சின்னா, அதை வடிச்சு எடுத்து வெச்சுக்கோங்க. ஒருவேளை தேவைப்படலாம். அப்புறம், வெந்தபயிறு+கொத்தமல்லி இலை+மிளகாய்+கரம்மசாலா+இஞ்சி+மஞ்சப்பொடி எல்லாத்தையும் மிக்சியில் போட்டு நல்லா மசிய அரைச்சுக்கோங்க. இந்த விழுதோட உப்பு சேர்த்துட்டு, கொஞ்சம் கொஞ்சமா கோதுமைமாவை சேர்த்து பிசைஞ்சுட்டே வரணும். ஒருவேளை மாவு கூடுதலாகி ரொம்ப கட்டியா இருந்தா வடிச்சு வெச்சிருந்த தண்ணீரை சேர்த்துக்கோங்க. எல்லாம் பதமா ஒண்ணு சேர்ந்து வந்ததும், நல்லா அழுத்திப்பிசைஞ்சு சமமான உருண்டைகளா உருட்டி வெச்சுக்கோங்க.
அப்புறம் வழக்கமான முறைப்படி சப்பாத்திகளா திரட்டி, ரெண்டுபக்கமும் எண்ணெய்யோ நெய்யோ தடவி சுட்டெடுக்கவேண்டியதுதான். இதுக்கு சைட்டிஷே தேவையில்லை. ப்ளூட் மாதிரி சுருட்டி வெச்சுக்கிட்டு அப்படியே சாப்பிடலாம் :-))). அதெல்லாம் முடியாது, சைடிஷ் இல்லைன்னா, நான் சாப்பிடமாட்டேன்ன்னு சொல்றவங்களுக்கு ஒரு பரிந்துரை..... இதுக்கு பொருத்தமான சைடிஷ் என்ன தெரியுமோ??!!.. ஒரு ஸ்பூன்பொட்டுக்கடலை,பச்சைமிளகாய்,ஒரு பல் பூண்டு, கொஞ்சம் கறிவேப்பிலை,ஒரு கிள்ளு இஞ்சி, ஒரு ஸ்பூன் தயிர்+உப்பு சேர்த்தரைத்த தேங்காய்த்துவையல், இல்லைன்னா வாழைத்தண்டு துவையல். செம காம்பினேஷன்பா :-)))....




Tuesday 15 February 2011

டிட்வாலா பிள்ளையார்..

பெரியவரை பார்த்து ரொம்ப காலமாச்சு.. போய்ப்பார்க்கணும்ன்னு நெனைச்சாலும் கடமைகள் காலைக்கட்டிப்போட்டு வெச்சுருக்குதே. முந்தியெல்லாம் நினைச்சுக்கிட்டா ஒடனே பாத்துட்டு வந்துதான் அடுத்த வேலை. இப்போ முடியறதில்லை.. ரொம்ப நாளா சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருந்தோம். பெண் தன்னோட அசைன்மெண்டுக்காக கோயில்களையும், பெண்ணின் தோழி மும்பையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களையும் பத்தி மாதிரிவலைத்தளங்கள் தயாரிக்கிறாங்க. இதுக்கு பெரியவரோட ஊர் ரொம்ப பொருத்தமாச்சே... அங்கே கூட்டிட்டு போனா என்ன??.. களையெடுத்தமாதிரியும் இருக்கும் , அப்படியே மச்சினனுக்கு பொண்ணு பாத்தமாதிரியும் இருக்கும்ன்னு நம்ம தரிசனத்தையும் நடத்திக்கலாம்.ஒரே கல்லுல மூணு மாங்கா :-)))

சன்னிதிக்கு போறதுக்கு முன்னாடியே போட்டோவடிவில் தரிசனம் :-)
பெரியவர் இருக்குறது 'டிட்வாலா'ன்னு ஒரு ஊர்ல. இது மஹாராஷ்ட்ராவில் கல்யாணுக்கு பக்கத்துலதான் இருக்கு. கல்யாணிலிருந்து 'முர்பாட்'க்கு போறபாதையில் இடதுபுறம் ஒரு கிளைச்சாலை பிரிஞ்சு போகும். அதுலே சுமார் ஏழுகிலோமீட்டர் போனா 'டிட்வாலா' வந்துடும். இங்கேதான் நம்ம பெரியவர்.. அதாவது பிள்ளையார், கோயில் கொண்டிருக்கார்.
கோயிலின் பின்புறத்தோற்றம்.
மும்பையிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தூரத்துல இந்தக்கோயில் இருக்குது. இங்கே மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ்லேர்ந்து அஸன்காவ், கஸாரா போகும் ரயில்கள் மூலமாவும் வரலாம். டிட்வாலா ஸ்டேஷனிலிருந்து கோயிலுக்கு குதிரைவண்டிகளும் ஆட்டோரிக்ஷாக்களும் சவாரி வருது.
இது கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரியான்னாலும், வளர்ச்சிப்பணிகளெல்லாம் இன்னும் முழுசா வந்தடையலை. சுத்துமுத்தும் பக்காவான கிராமங்கள்தான்.. ஒண்ணு ரெண்டு டாபாக்களைத்தவிர நல்லதா ரெஸ்டாரண்டுகள் எதுவும் கிடையாது. கோயிலுக்கு எதிர்த்தாப்ல சுமாரா ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குது. டீ+வடாபாவ் பரவாயில்லாம கிடைக்கும். முன்னெல்லாம் கரும்புஜூஸ் கடைகள் நிறைய இருக்கும். இப்போ எதையும் காணலை..

இந்தக்கோயில் இதிகாசக்காலங்களுக்கு முற்பட்டதுன்னு சொல்றாங்க. முன்னொரு காலத்துல தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியா இந்த ஊரு இருந்திச்சாம். ஆரண்யம்ன்னா காடுன்னு அர்த்தம். அந்தக்காலங்கள்ல யாரோட தொந்தரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை வேணும்ன்னா முனிவர்களெல்லாம் காட்டுக்கு போயிடறது வழக்கம். அப்படித்தான் கண்வ மகரிஷியும் ஒரு குடில் அமைச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தார். அப்பதான் விஸ்வாவும், மேனகாவும் தங்களுக்கு வேண்டாம்ன்னு நெனைச்சு தூக்கிப்போட்ட 'சகுந்தலை' அவருக்கு கிடைச்சாள். (தொட்டில் குழந்தை திட்டத்துக்கு முதல் பங்களிப்பு??). அவளை தன்னோட பெண்ணாவே வளத்துக்கிட்டு வர்றார். அதுக்கப்புறம் சகுந்தலையும் துஷ்யந்தனும் காந்தர்வ மணம் செஞ்சுக்கிட்டதும், துர்வாசரின் சாபம் காரணமா அவன் அவளை மறந்து ஏற்றுக்கொள்ள மறுத்ததும் வரலாறு.

இப்படியாகிப்போச்சேன்னு வருத்தத்துல சகுந்தலை இருந்தப்பதான், கண்வ மகரிஷி, ' பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டி அவரை வழிபடு.. உன்னோட எல்லா கவலைகளையும் அவர் தீர்த்து வைப்பார்'ன்னு மகளுக்கு ஆறுதல் சொன்னார். அவளும் அதேமாதிரி வழிபட்டு வந்திருக்கா. காலப்போக்குல சாபவிமோசனம் கிடச்சு, துஷ்யந்தனுக்கு மனைவி, பிள்ளையின் ஞாபகம் வந்து உடனே தேடி வந்துட்டான். அப்புறம் அதே பிள்ளையார சாட்சியா வெச்சு.. மறுபடியும் முறைப்படி கல்யாணம் செஞ்சு, தன்னோட நாட்டுக்கு கூட்டிப்போனான். முன்னொரு காலத்துல 'பரதன்' என்ற மன்னன் அரசாண்டதாலதான் நம்ம நாட்டுக்கு பாரதம்ன்னு பேரு வந்துச்சுன்னு சொல்றாங்களே.. அந்த பரதன் வேற யாருமில்ல. இவங்களோட பிள்ளைதான். இந்த பரதனோட வழித்தோன்றல்கள்தான் நம்ம பாண்டவாஸ்+கௌரவாஸ்..

சகுந்தலை வழிபட்டு வந்த பிள்ளையார் கோயில் காலப்போக்குல அழிஞ்சு மண்மூடி அங்கே ஒரு குளமும் உருவாகிடுச்சு. ரொம்ப காலத்துக்கப்புறம், அதாவது முதலாம் மாதவ்ராவ் பேஷ்வா என்கிற குறுநிலமன்னர் அந்தப்பகுதியை ஆட்சி செய்யும்போது, நாட்டுல உண்டான தண்ணீர்ப்பஞ்சத்தை போக்க இந்தக்குளத்தை தூர்வாரியிருக்காங்க. குளத்துலேர்ந்து தண்ணீர் வந்துச்சோ இல்லியோ, பழைய கோயிலின் இடிபாடுகள் வந்துருக்கு. கூடவே பிள்ளையாரும் வந்துருக்கார். அவருக்கு ஒரு கோயிலை, முதலாம் மாதவ்ராவ் பேஷ்வாவும், அவரது தளபதியான ராமச்சந்திர மெஹந்தலேயும் கட்டியிருக்காங்க. குளத்தோட வேலைகள் நடந்துட்டிருந்தப்பவே இதிகாசக்காலத்து பிள்ளையார் மறுபடியும் காணாம போயிட்டார்ன்னும், இப்ப இருக்கிற பிள்ளையார், பேஷ்வா பிரதிஷ்டை செஞ்சதுன்னும் இன்னொரு கருத்தும் நிலவுது.

இந்தக்கோயிலும் காலப்போக்குல சிதைஞ்சுடவே, 1965-66ல் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகி இப்ப இருக்கிற கோயில் கட்டப்பட்டிருக்கு. ரெண்டுவருஷம் முன்னாடிதான் கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கோயிலை இன்னும் விரிவாக்கியிருக்கு. கோயிலோட பின்புறம் பாசிபிடிச்சுப்போய் பாழடைஞ்சு கிடந்த குளத்தையும் சரிசெஞ்சு , படகுச்சவாரியெல்லாம் நடக்குது. குளத்துக்குப்பக்கத்துலயே வண்டிகளை நிறுத்தவும், காலணிகளை பாதுகாக்கவும் வசதி செஞ்சிருக்காங்க. அங்கங்க முளைச்சுக்கிடந்த பூஜைப்பொருள் விக்கிற கடைகளையும் ஒரு கட்டிடத்துக்குள்ள ஒழுங்குபடுத்தியிருக்காங்க.
பழைய நுழைவாயில்.
புதிய நுழைவாயில். கார் பார்க்கிங்கும் இங்கேயே இருக்குது.
குழாய்த்தண்ணீரில் கால்களை சுத்தம் செஞ்சுக்கிட்டு கோயிலுக்குள் நுழைஞ்சோம். கூட்டமில்லாத நேரம் அதனால வரிசையில் நிற்க தேவையில்லாம, நேரடியா கருவறைக்கே போயிட்டோம். (வடக்கே, ரொம்பவே கூட்டமாயிருக்கும் சில கோயில்களைத்தவிர, மற்றகோயில்களில் கருவறைக்குள் நாமே விக்கிரகத்துக்கு பூஜை செய்யலாம்). இடுப்பளவு உசரத்துல ஒரு மேடை. அதுல ஜம்ன்னு ஒக்காந்துட்டிருக்கார். பெரியவர்.செந்தூரம் பூசிய திருவுருவம். சிம்பிளான அலங்காரத்தில் அழகா இருக்கார். இதுவே சதுர்த்தி, சதுர்த்தசி, அங்காரக சதுர்த்தி தினங்கள்ன்னா அலங்காரமும் கூட்டமும் அமளிதுமளிப்படும். 

நாம கொடுக்கற பூஜைத்தட்டிலிருக்கும் தேங்காய், மாலை, இத்யாதிகளை அதுக்குன்னு வெச்சிருக்கும் பாத்திரங்களில் போட்டுட்டு, அதுலேர்ந்தே கொஞ்சத்தை எடுத்து பிரசாதமா தர்றாங்க. மறுபடியும் தரிசிக்கணும்ன்னா, வெளிப்பக்கம் வந்து கர்ப்பக்கிரகத்தின் எதிரே இருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்துக்கலாம். கூட்டமில்லாத நாட்களில் கருவறையிலும் சிலபேர் உக்காந்துப்பாங்க. கருவறைக்கு எதிரே இருக்கற மண்டபத்துல ரெண்டுபக்கமும் மாடிக்கு படிக்கட்டுகள் போகுது. மேலேறிப்போனா, அங்கிருந்தும் கம்பிஜன்னல் வழியா மூலவரை தரிசிக்கலாம். 

வெளியே கோயிலுக்கு இடதுபக்கத்துலயே சின்னதா ஸ்டால் ஒண்ணு இருக்குது. புத்தகங்கள், பிள்ளையார் பொம்மைகள், விக்கிரகங்கள், பூஜைப்பாத்திரங்கள் இப்படி எல்லாமும் இருக்கு. விலைதான் ஆகாயத்துல நிக்குது.. வெளியே கடைகள்ல கிடைக்கிறதைவிட நாலுமடங்கு விலை.  கோயிலுக்கு முன்புறம் சின்னதா ஸ்தூபி ஒண்ணு இருக்குது. அகல் ஏத்திவெச்சுக்கறமாதிரி சின்னச்சின்னதா மாடங்கள்... பண்டிகைக்காலங்கள், பூஜைசமயங்களில் விளக்கேத்திவெச்சா அவ்வளவு அழகா இருக்கும்.
பக்கத்துலேயே சின்ன கிணறு ஒண்ணு இருக்குது. அதுல வழக்கம்போல பூக்கள், மாலைகள்ன்னு மிதக்கும் குப்பைகள். ரொம்ப வருஷமாவே இப்படித்தான்... சுத்தப்படுத்தி வெச்சாலும் நம்ம மக்கள் விட்டுவைக்கணுமே!! அதுல கிடக்கும் ரெண்டு ஆமைகளை வேடிக்கை பாத்துக்கிட்டு பசங்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க. இப்ப புதுசா ஒரு சம்பிரதாயம் ஆரம்பிச்சிருக்காங்க.. என்னவா??.. கிணத்துக்குள்ள காசை விட்டெறியறதுதான். ஏன்?னு கேட்டா, 'எல்லோரும் செய்யறாங்க.. நாங்களும் செய்யறோம்'ன்னு பதில்வருது :-)))
கோயில் தினமும், காலைல அஞ்சுலேர்ந்து இரவு ஒன்பதுமணிவரைக்கும் தரிசனத்துக்காக திறந்திருக்கும். சங்கடஹர சதுர்த்தி தினங்களில், காலை நாலுமணிலேர்ந்து இரவு பதினொரு மணிவரையிலும், அங்காரக சதுர்த்தி தினங்களில் இருபத்து நாலுமணி நேரமும் திறந்திருக்கும். (அதாவது,திங்கள் இரவு பன்னிரண்டுமணிலேர்ந்து செவ்வாய் இரவு பன்னிரண்டு மணிவரைக்கும்) இதுக்கிடையில், மதியம் ஒருமணிலேர்ந்து ரெண்டுமணிவரைக்கும், அப்புறம் சாயந்திரம் ஆரத்திக்கான ஏற்பாடுகளுக்காக ஆறுலேர்ந்து ஆறேமுக்கால்வரைக்கும் நடை சாத்தியிருக்கும். பொதுவாவே கோயில்களின் தரிசன நேரங்களை தெரிஞ்சிக்கிட்டுப்போனா, ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.





Tuesday 8 February 2011

அட்சிங்கு..



 நண்பனுடன் லயித்துப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு உருவம் தொம்மென்று முன்னால் வந்து குதித்ததும் திடுக்கிட்டுத்தான் போனான் காசிநாதன். அனிச்சையாக டக்கென்று ஓரடி பின்னால் நகர்ந்து, நண்பனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு ஏறிட்டபோது,  ஈயென்று இளித்துக்கொண்டு முன்னால் நின்றான் அந்தப்பையன்....

"பாத்துடே.. குத்தாலத்து கொரங்குக மாதிரில்லா குதிக்கே.." என்று அதட்டவும் இன்னும் பெரிதாகப் பற்களைக் காட்டி, "ஹெ..ஹெ.." என்று இளித்தபடி, கைகளை முன்னால் நீட்டி இல்லாத ஹேண்டில்பாரை பிடித்திருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு..'பிர்ர்ர்..பிர்ர்.பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று சத்தமெழுப்பியபடி ஓடத்தயாரானான்.

"எடே.. போறதுக்கு முன்னால அண்ணனுக்கு ஒரு சல்யூட்ட கொடுத்துட்டு போடே.."

சட்டென்று விறைப்பானவன், நெற்றியில் கை வைத்துக்கொண்டு.. வலது காலை உயர்த்தி, தரையில் ஓங்கியறைந்து 'அட்சிங்கு' என்று கத்தியபடி சல்யூட் அடித்தபின் தன்னுடைய வண்டியை கிளப்பிக்கொண்டு ஓடியே விட்டான்.

மேடையில்லா நாடகம்போல் நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காசி, "யாருடே அது?.." என்று கேட்டான் நடையைத் தொடர்ந்து கொண்டே.

"அவனா.. இங்கனதாம் சும்மா சுத்திக்கிட்டிருப்பான். யாரு, எவருன்னெல்லாம் ஒரு விவரமும் எங்களுக்கு தெரியாது. ஒரு நாளு இங்கன நின்னுக்கிட்டு அளுதுட்டுருந்தான்.  பயலுக்கு தமிழு தெரியாது போலிருக்கு. நம்ம பக்கத்து ஆளுக மாதிரியும் தெரியல. விசாரிச்சா அவனுக்குப் பதில் சொல்லத் தெரியல.. எந்த மொழியில விசாரிக்கிறதுன்னு எங்களுக்கும் புரியல. போலீசுக்கும் சொன்னோம்.. அவங்க கூட போக மாட்டேன்னுட்டான். சரி.. இங்கியே கெடந்துட்டுப் போட்டும்ன்னு விட்டுட்டோம்.."

"யாருமேவா தேடி வரல.. "

"ம்ஹூம்.. அப்பாம்மா கூட கன்னியாகுமரி வந்தவன் வழி தப்பியிருப்பாம்ன்னு செலபேரு சொல்லுதாங்க.. வீட்டை விட்டு ஓடியாந்திருப்பாம்ன்னு செலபேரு சொல்லுதாங்க.. யாருக்கு தெரியுது.."

"பாத்தா பத்துப்பன்னெண்டு வயசிருக்கும் போலிருக்கே. பள்ளிக்கூடத்துக்கு போகாமயா இருந்திருப்பான். இங்கிலீசுலயாவது கேட்ருக்கலாமுல்ல.."

"என்னத்த கேக்குறது!!.. வரும்போதே பயலுக்கு கொஞ்சம் மண்டைக்கு வழி கெடையாது.."

"அப்டீன்னா!!.."..

"வட்டுன்னு இந்த ஊர்ல சொல்லுவோம். டாக்டர்கள கேட்டா, மனநிலை பாதிக்கப்பட்டவன்னு சொல்லுவாங்க. அவனை பாத்தேயில்ல.."

ஆனால், அந்த கோணல் சிரிப்பையும்,..'அட்சிங்கு' என்று சத்தமிட்டபடி வைக்கும் சல்யூட்டையும் தவிர அவனுக்கும், இந்தியாவின் ஏழைக் கிராமத்துச் சிறுவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை. வெயிலிலும் மழையிலும் அலைந்து கருத்த தேகம், ஒன்றிரண்டு கிழிசல்களுடன் கூடிய அழுக்கான உடைகள் இதெல்லாம் பொதுச்சொத்தல்லவா..

"நீயும் அவனை மாதிரி இந்த ஏரியாவுக்குப் புதுசுதானே.. போகப்போக ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் நல்லாத் தெரிஞ்சிக்கிடுவீங்க.."என்று நக்கலடித்த கதிரேசனைத்தொடர்ந்து அறைக்கு சென்றான்.

பின்னிரவின் அமைதியில், தூக்கம் வராமல் பல நினைவுகளுடன் புரண்டு கொண்டிருந்தபோது, அந்தப்பையனையும் தன்னையும் ஒப்பிட்டு நண்பன் சொன்னது காசிக்கு நினைவுக்கு வந்தது. 'வாஸ்தவம்தான்.. ரெண்டு பேருக்கும் குடும்பத்துடன் சம்பந்தம் கிடையாது. கிடைத்த இடத்தில் ஒண்டிக்கொண்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு உயிர் வாழ்கிறோம். ஆனால், அவன் வீட்டை விட்டு வந்திருக்கிறான். நான் சித்தியின் மறைமுக உத்தரவின் பேரில், எங்களிடையேயான பூசலை சமாளிக்க முடியாமல் அப்பாவால் விரட்டப்.. தப்பு.. தப்பு.. அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன்..' நினைத்துக்கொண்டு தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

ஆனால், சித்தியின் 'அன்பில்' திளைக்கும் பாக்கியம் கிடைக்கப்பெறாதவன் ஆகையால், 'அட்சிங்கு' பத்திரகாளியம்மன் கோயிலின் முன்திண்ணையை தன்னுடைய அரண்மனையாக அமைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பகலெல்லாம் எங்கே சுற்றினாலும் இரவில் தன்னுடைய சப்ரமஞ்சத்துக்கு வந்து விடுவான். அந்த ஏரியா மக்கள்.. குறிப்பாக பெண்கள்.. சாட்சாத் அன்னபூரணிகள். அவன் வயிறு வாட விடுவதேயில்லை.

அவனைப்பார்க்கும்போதெல்லாம், தனிக்குடித்தனம் போன,.. வேலை நிமித்தம் வெளியூரிலோ வெளிநாட்டிலோ பிரிந்து வாழும், மற்றும் இளமையிலேயே பறி கொடுக்க நேர்ந்த பிள்ளைகளின் நினைப்பு சில தாய்மாரை இம்சிக்கும். 'என்பிள்ளையும் இப்படித்தானே ஆதரவில்லாம பசியோட பட்டினியோட வெளியூர்ல கஷ்டப்படும்'.. என்ற நினைப்பில் பெற்ற வயிறுகள் பிசையும்.

அவனை சல்யூட் போட வைப்பதில் குஞ்சுகுளுவான்கள் முதல் வயசானவர்கள் வரைக்கும் அலாதி பிரியம். 'டேய்.. சிங்கு' என்று குரல் வந்தால் போதும்... அங்கேயே நின்று கொண்டு..'அட்சிங்கு' என்று கத்தியபடி சல்யூட் வைத்து விட்டுத்தான் நகர்வான்.அவனுக்கும்.. அந்த மனசிலும் ஒரு பொருள் மேல் பிரியம் இருக்கத்தான் செய்தது. தோசையைக்கண்டால் பயல் உயிரையே விட்டு விடுவான். வேறு என்ன கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்.

இதில்தான் ஒரு கூத்தாகி விட்டது. வடக்குத்தெரு நாகராஜன் தன்னுடைய பிள்ளையின் முதல் பிறந்தநாளின் போது, பாவம் என்று பரிதாபப்பட்டு.. அட்சிங்கை வெளிவாசலில் இருந்த 'படுப்பிணை' என்று பேச்சு வழக்கில் மாறிவிட்ட படுப்புத்திண்ணையில் உட்கார வைத்து வாழையிலையில் சோறு போட்டான்.

எல்லாப் பதார்த்தங்களும் பரிமாறி முடிக்கும் வரை வட்டச்சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், கடைசியில் வாழையிலையை ரெண்டு கைகளாலும் சுருட்டிப்பிடித்து, அனைவரும் பதைபதைக்கும்படி சாக்கடையில் எறிந்தான். "டே..டே.. என்ன வேலை பாத்தே!!.. சோத்தை ஓடையிலயா கொட்டுதே.." என்றபடி அடிக்கப்பாய்ந்த நாகராஜனைத் தடுக்க நாலுபேர் வேண்டியிருந்தது. "அட்சிங்கு..அட்சிங்கு.." என்று கத்தியபடி கைகால்களை உதைத்துக்கொண்டு, சிறுபிள்ளை போல இன்னும் சத்தமாக அழுதான் பயல். "இவேன் கூறுவாடு தெரிஞ்சும் சோத்தைப்போடுதீங்களே.. டே,  இந்தா.." என்றபடி காலையில் மீந்த ரெண்டு தோசைகளைக் கொண்டு வந்து ஒரு கரம் நீட்ட, பிடுங்கிக்கொண்டு ஓடினான். வேறெங்கே போவான்!! தன்னுடைய அரண்மனைக்குத்தான்...

தன்னையும் பயலையும் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதாலேயோ என்னவோ!!.. காசிக்கு, அவனையறியாமலேயே சிங்கின்மேல் ஒரு இனம்புரியாத பற்று இருந்தது.  பரீட்சை முடிந்ததும் தற்காலிகமாக 'கலெக்டர்' வேலையையும் தேடிக்கொண்டான்... பில் கலெக்டர் உத்தியோகம்!!. அதனாலென்ன??.. கடைகளில் அவனைப்பார்த்ததும் கலெக்டர் வர்றாருன்னுதானே சொல்லுறாங்க. வேலையிடத்துக்கும், தங்குமிடத்துக்கும் பயணம் செய்வது கஷ்டமாக இருந்ததால், பக்கத்திலேயே ஒரு ரூம் பார்த்துப் போய்விட்டான். அதன்பின் வேலைப்பளுவும், புதிதாய்ச் சேர்ந்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ளும் அவசியமும் சேர்ந்து கொள்ள.. இந்தப்பக்கம் வருவது குறைந்து, கடைசியில் நின்றே போய் விட்டது.

 ஆறேழு மாதங்களுக்குப்பின் ஒரு நாள்,.. கதிரேசனைப் பார்த்து வரலாமென்று கிளம்பிய காசிநாதன், ஏனோ திடீரென்று தோன்றியதில், ஒரு சட்டையும் வாங்கிக் கொண்டான். கதிரேசனின் வீடு மிகவும் மாறியிருந்தது. இன்னொரு அறையையும் வாடகைக்கு விட்டிருந்தார்கள்.. 'ஆச்சிக்க அடியந்திரத்துக்கு வராம இருந்திட்டியே மக்கா' என்று குறைபட்ட அவனது அம்மாவிடம், 'இல்லம்மா.. கொஞ்சம் சோலியிருந்தது' என்று மழுப்ப.. 'என்னவோப்பா!!.. வந்து போயி இருக்காண்டாமா!!..' என்றபடி மிக்சர்தட்டை வைத்து விட்டு நகர்ந்து விட்டார்கள். விடுபட்ட கதைகளையெல்லாம் பேசி முடித்தபின், "இந்தச் சட்டையை அட்சிங்குட்ட குடுத்திடறியா?.." என்று நீட்டினான். "அட்சிங்கா..அவன் என்ன ஆனானோ!! யாருக்குத் தெரியும்" என்று சற்று அலட்சியமாகக் கதிரேசன் சொல்லவும், "என்னடா சொல்றே.." என்றான்.

"ஓ.. ஒனக்கு தெரியாதுல்லா!!.., போனமாசம் ஒரு நாள் வலுத்த மழை பெஞ்சுச்சுல்லா.. அப்ப பத்ரகாளிம்மன் கோயிலு செவுரு இடிஞ்சி, திண்ணைல படுத்திருந்த அட்சிங்கு மேல விழுந்துடிச்சி. பயலுக்க அவயம் கேட்டு, ரெண்டொருபேரு ஓடிப்போயி பாத்துருக்காங்க. நல்ல அடி பாத்துக்கோ..  யாரு பெத்த பிள்ளையோ!! பாத்துட்டு சும்ம இருக்கமுடியுதா?.. ஒடனே சர்க்கார் ஆஸ்பத்திரிக்கி தூக்கிட்டுப்போயி போட்டோம். இத்த செவுருன்னதால சின்னக் காயங்களோட போச்சு. ஆனா, நல்ல ஊமையடி பாத்துக்கோ. பின்னே, டாக்டர் தெரிஞ்ச பயன்னதால, நல்ல ஒபகாரம் செஞ்சாரு பாத்துக்கோ. கெட்டுப்போட்டு, ஒரு நாளைக்கு அங்கனயே தங்க வெச்சு அனுப்பிடலாம்ன்னு சொல்லிட்டாரு. சின்னப்பையன்லா.. கொஞ்சம் கெவனமாப் பாத்துக்கிடுங்கன்னு சொல்லிட்டு வந்தோம்.

மறுநாளைக்குக் காலைல ஊசி போடப் போனவரு, ஆளைக்காணாம.. வார்டு, ஆஸ்பத்திரில மூலைமுடுக்குன்னு எல்லாம் தேடிப்பாத்துட்டு, எங்க கிட்ட சொல்லிட்டாரு. பய இங்கன வந்துருப்பாம்ன்னு நாங்களும் ரெண்டு நாளு பொறுத்துப்பாத்தோம். ஆளு அட்ரசையே காணோம். எங்கன போனானோ.. " எனவும் ஆயிரம் மின்சார ஊசிகள் உடம்பில் பாய்ந்தது போல் இருந்தது அவனுக்கு.

"இதுகளுக்கெல்லாம் ஏது நிரந்தர இடம்.. மனுசனோட ஆன்மாவை மாதிரிதான்.. இதுகளும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூடு. இன்னிக்கிருந்த இடம் நாளைக்கில்லை.." என்று வெற்றிலையுடன் வார்த்தைகளையும் சேர்த்து துப்பினார் வீட்டுக்கார தாத்தா. எங்கேயோ கேட்ட உபன்யாசத்தை கூர் தீட்டிக்கொள்ள இன்றைக்கு என்னுடைய கழுத்துதான் கெடைச்சிருக்கு போலிருக்கு என்று எண்ணிக் கொண்டு எழுந்தான். ரூமுக்குத் திரும்பிப் போகும் போது ஆற்றுப்பாலத்தின் மீது ஆட்டோ போய்க்கொண்டிருந்தபோது ஏனோ நிறுத்தச்சொன்னான். சுவரின் பக்கமாகச் சாய்ந்து நின்று கொண்டு சுழித்தோடும் நதியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். கவரிலிருந்து சட்டையை வெளியே எடுத்து, ஒரு நிமிஷம் அதில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். பின் ஒரு பெருமூச்சுடன் சட்டையைத் தண்ணீரில் விட்டெறிந்தான்.. நீரின் ஓட்டத்தில் அது அடித்துச்செல்லப்படுவதைச், சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு.. ஏனோ சத்தமாய் அழத்தோன்றியது..

Thursday 3 February 2011

ஷிர்டி சாயிபாபா..

"பாபா.." இந்தப்பெயரை உச்சரிக்காத வட இந்தியர்கள்.. அதுவும் மராட்டிய மக்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பாபா..' என்ற சொல்லுக்கு, அப்பா.. தந்தை, தாத்தா இப்படி பல அர்த்தங்கள் இருக்கு. 'ஆயி.. பாபா..'ன்னுதான் இங்கே அம்மா அப்பாவை அழைக்கிறாங்க. மகான்களையும் அப்படியே அவங்க வயசை உத்தேசிச்சு, 'தந்தையே..' என்ற பொருள்பட 'பாபா..'ன்னு வடக்கர்கள் அழைக்க, நாமும் அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டோம். காலப்போக்கில் மகான்கள் என்றாலே பாபான்னு ஆகிடுச்சு.

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இவரது பிறந்த தினம் 1838-ல் செப்டம்பர் மாசம் 28ஆம் தேதின்னு உத்தேசமா சொல்லப்படுது. தன்னோட பதினாறாம் வயசுல இவர் ஷிர்டிக்கு வந்திருக்கார். மூணு வருஷத்துக்கப்புறம் திடீர்ன்னு காணாமப்போயி ஒரு வருஷத்துக்கப்புறம் திரும்பவும் வந்து ஷிர்டியில் நிரந்தரமா தங்கிட்டார். அதாவது அவர் இறந்த, 1918ஆம் வருஷம் அக்டோபர் 15ஆம் தேதிவரையிலும் .

ஷிர்டிக்கு திரும்பி வந்தப்புறம், ஒரு வேப்பமரத்தடியை தன்னுடைய வசிப்பிடமா ஆக்கிக்கிட்டு, சில சமயங்களில் அங்கியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாராம். கொஞ்ச காலத்துக்கப்புறம் அங்கிருந்த மசூதியில் தங்க ஆரம்பிச்சுருக்கார். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிச்ச அவர், தன்னோட மற்றும் தன்னைச்சார்ந்தவர்களோட உணவுத்தேவைகளை யாசகம் கேட்டு பூர்த்தி செஞ்சுக்கிட்டிருந்திருக்கார். பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது. அந்த சாம்பல் பிரசாதமாவும் கொடுக்கப்படுதாம்.
( துனியிலிருந்து வரும் புகை..நன்றி.. தென்றல்).

பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையானவர். கஃபன் என்றழைக்கப்படும் உடம்பைச்சுற்றிய காவித்துணி, தலையை மூடியிருக்கும் இன்னொரு காவித்துணி இவ்வளவுதான் அவரோட சொத்து. இந்து முஸ்லிம் ஆகிய ரெண்டு மதங்களுக்கும் பொதுவானவர் இவர். இதுக்கு, இந்தக்கோயிலுக்கு வர்ற கூட்டமே சாட்சி. தான் தங்கியிருந்த மசூதிக்கு 'த்வாரகாமாயி'ன்னு பேர் சூட்டியிருக்கார். அதேசமயம் அந்த மசூதியில் ரெண்டு மத சம்பிரதாயங்களின்படியும் பூஜைகளும் நடக்குது. இறைவனே தலைவன், ஒருவனே தேவன் என்ற பொருள்படும் பாபாவின் திருவாய்ச்சொற்களான 'அல்லா மாலிக்'.., மற்றும் 'ஸப்கா மாலிக் ஏக் ஹை.' இங்கே ரொம்பவும் புகழ்வாய்ந்தது.

பாபா மசூதியில் தங்கியிருந்தப்ப, ஒவ்வொரு நாள் இடைவெளிவிட்டு இங்கேயிருக்கும் சாவடிக்கு தங்கறதுக்காக போவாராம். அதை நினைவுகூரும் விதமா, பால்கி எனப்படும் பல்லக்கு சேவை நடக்குது. பல்லக்கில் பாபாவின் உருவப்படத்தை வெச்சு, சமாதி மந்திரிலிருந்து த்வாரகாமாயிக்கு கொண்டுபோயிட்டு அங்கிருந்து சாவடிக்கு போவாங்க. அப்புறம் மறுபடி சமாதி மந்திருக்கு திரும்பிவந்து ஆரத்தி எடுப்பாங்க இதுக்கு ஷேஜ் ஆரத்தின்னு பேரு.
எங்கே எந்த சன்னிதி இருக்குன்னு இப்ப தெளிவா புரிஞ்சுபோச்சு..

கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கியிருக்காங்க. முதல்ல போனப்ப, கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு,  நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க. நுழைவாசலில் ஆண்களுக்கு மட்டும் தடவல் சோதனை உண்டு.

லேண்டி பாக் பக்கத்துல இருக்கிற ரெண்டாம்கேட் வழியா நுழைஞ்சோம். 'பாக்& பகீச்சா'ன்னு சொன்னா தோட்டம்ன்னு அர்த்தம். இந்த லேண்டி பாக்கும், அதுல இருக்கிற கெணறும் பாபா தன் கையாலயும், ஊழியர்களின் உதவியாலயும் உருவாக்கினது. கெணத்தை வலைபோட்டு மூடிவெச்சிருக்காங்க. அங்கே ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில பாபா ஏத்திவெச்ச அகல் இப்பவும் எரிஞ்சுக்கிட்டிருக்காம், நம்மூர்ல அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.

தரிசனத்துக்காக வரிசையில் நின்னு நுழைஞ்சோம். அதிகம் கூட்டமில்லை, படிகள் வழியா ஏறி, இறங்கி, யூ டர்ன் எடுத்துன்னு எப்படியோ, போயிக்கிட்டே இருக்கோம். ஒவ்வொருத்தர் கையிலும் காணிக்கையா கூடைகள். அதுல பூ, மாலைகள், சரிகைச்சால்வை, சாதாரண சால்வை, அப்புறம் பேடா பாக்கெட் இல்லைன்னா உலர்பழங்கள் இல்லைன்னா கடிஷக்கர்ன்னு இங்கே சொல்லப்படும் சீனி உருண்டைகள். இந்த சால்வைகளை பாபாவுக்கு சாத்திட்டு வீட்டுல பிரசாதமா வெச்சுப்பாங்களாம்.  கடைசியில் ஒருவழியா பாபாவுக்கு முன்னாடி வந்தே வந்துட்டோம் ஜஸ்ட் பத்து நிமிஷத்துல. நீளமான ஹால். அந்தக்கோடியில் தகதகன்னு மார்பிள் மேடையில் மினுங்கும் சிம்மாசனத்தில் பாபா.

பாபாவின் சமாதி இருக்கறதால சமாதி மந்திர்ன்னு அழைக்கப்படும் இந்த இடத்தில் முரளீதரன் அதாவது நம்ம குழலூதும் கண்ணனுக்கு கோயில் அமைக்கணும்ன்னு நாக்பூரைச்சேர்ந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்ற பணக்காரர் ஏற்பாடு செஞ்சுருக்கார். சிலைகளும் ரெடியாகி வந்துட்டதாம். ஆனா, பாபா.. தானே முரளிதரனாக ரூபமெடுத்துக்காட்ட எல்லா தெய்வங்களும் ஒன்னுதான்னு தெளிஞ்ச கோபால்ராவ், அந்த இடத்தை பாபாவுக்கே கொடுத்துட்டாராம். சிலைகள் இப்போ கோயிலின் மியூசியத்தில் இருக்குன்னு கேள்வி.

மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம்.  இந்த சிலை திரு. பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டதுன்னு கூகிளார் சொல்றார். சமாதி மேடையின் முன்னால் அழகான வெள்ளி வேயப்பட்ட ரெண்டு தூண்கள். அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே வெள்ளி தகதகன்னுது.

பக்தர்கள் கொண்டுவர்ற மாலைகளை பாபாவுக்கு போட்டுட்டு, ஏற்கனவே சாத்தியிருக்கற மாலைகளில் ஒன்னை உருவி பிரசாதமா தர்றாங்க. தடுப்புக்குள்ளாற மெதுவா நகர்ந்து முன்னாடி போய் நின்னதும், சும்மா அந்த முகத்தைப்பாத்துட்டே நின்னேன். ஒண்ணுமே நினைக்கவோ வேண்டிக்கவோ தோணலை.. அதான் நிஜம். திருப்பதி மாதிரி இங்கியும் ஜருகண்டி இருக்குது.. ஆனா, இன்னும் தள்ளிவிட ஆரம்பிக்கலை. சும்மா வாய் வார்த்தையாலயே, பஸ் கண்டக்டர் மாதிரி, 'ச்சலா.. ச்சலா... ப்பூடே ச்சலா..' அவ்ளோதான். 'ஏம்மா, கருவாட்டுக்கூடை.. முன்னாடி போ' நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை :-))))). தரிசனம் முடிச்சுட்டு திரும்பும்போது பாபாவை பார்த்தமாதிரிக்கே ரிவர்ஸில் நடக்கறாங்க சிலபேர். திருப்பதியிலும் இதை பாத்திருக்கேன்.

தரிசனம் முடிச்சுட்டு வெளியே வந்தப்ப லேசா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. அதனால, ஓட்டமும் நடையுமா எல்லா சன்னிதிகளையும் வெளியில நின்னே கன்னத்துல போட்டுக்கிட்டோம். பாபா தங்கியிருந்த வேப்ப மரத்தடியிலும் ஒரு சிலைவெச்சு சின்னதா கோயில் கட்டியிருக்காங்க. அவர் வளர்த்த குதிரைக்கும் அங்கியே சமாதி இருக்குது. த்வாரகாமயியையும், மியூசியத்தையும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. ம்யூசியமாவது ஏற்கனவே பார்த்ததுதான்.பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவருடைய ஆடைகளையும் பார்வைக்கு வெச்சிருக்காங்க. த்வாரகா மயியை அடுத்ததடவைக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. அவர் உபயோகப்படுத்தின பொருட்களெல்லாம் அங்க இருக்குதாம். இந்தக்கோயிலைப்பத்தின விவரங்கள் அனைத்தும் இங்கே இருக்குது. தேவையானதை க்ளிக் செஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்துட்டே இருக்குது. அது கோயில் முழுக்க ஒலிக்கிறமாதிரி அங்கங்க ஒலிபெருக்கிகள் வெச்சிருக்காங்க. புத்தக ஸ்டால் ஒண்ணும் பார்த்தேன். அனேகமா கோயில்களைப்பத்தினதாத்தான் இருக்கணும். நிக்க நேரமில்லை..  செல்ஃப் ட்ரைவிங் வேற.. இப்ப கிளம்பினாத்தான் ராத்திரி ஒரு மணிக்காவது வீடுபோய் சேரமுடியும். மறு நாளிலிருந்து காலேஜ், ஆபீஸ்ன்னு ஆணிகள் ஆரம்பிச்சுடுதே. 

நாலாவது கேட் கிட்ட இருந்த பிரசாத ஸ்டாலில் லட்டுபிரசாதம் வாங்கிட்டு, அங்கியே பக்கத்தில் இளநி குடிச்சுட்டு புறப்பட்டோம். இதான் பாதைன்னு நெனச்சு அஹமதாபாத் ரோட்டில்போய், அப்புறம் ட்ராபிக் கான்ஸ்டபிள் கிட்ட கேட்டு இன்னொரு பக்கம் பிரிஞ்ச மண்சாலையில் திரும்பி, இது சரியான பாதைதானான்னு இருட்டுல குழம்பி, அப்புறம், சரியானதுதான்னு தெளிஞ்சு கடைசியா நாசிக் நெடுஞ்சாலையை பிடிச்சோம். இருட்டுல ஹேர்பின் மலைப்பாதைகளை திக்திக்ன்னு பயத்தோட கடந்து வீட்டுக்கு வந்தப்ப ராத்திரி ஒரு மணியை தாண்டிடுச்சு. அவசர ஓட்டமா இருந்தாலும் மனசுக்கு திருப்தியான தரிசனங்கள்.. இன்னொரு தடவை எப்போ வாய்க்குமோ!!! 

படங்கள் தந்துதவிய கூகிளாருக்கும், கூடவே வந்த உங்களுக்கும் நன்றி..



Tuesday 1 February 2011

சனி ஊருக்குள் இப்படித்தான் வந்தாராம்..


ரொம்ப காலத்துக்கு முந்தி, அதாவது.. சனிபகவான் இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி, இது ஒரு குக்கிராமமாத்தான் இருந்திருக்கு.  சுமாரா, ஒரு இருபத்தஞ்சு வீடுகள் இருந்திருக்கலாம். இங்கே இருந்தவங்களுக்கு, விவசாயத்தையும், ஆடுமாடுகளை மேய்க்கிறதையும்தவிர, வேறவேலை ஒண்ணும் தெரியாது. இதுல வர்ற வருமானத்தை வெச்சுத்தான் காலத்தை ஓட்டியிருக்காங்க. 

ஊருக்குப்பக்கத்துல 'பானசா நதி' ஓடிக்கிட்டிருந்தது.. இங்கேதான் தங்களோட கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுபோவாங்களாம். அதான், அதுங்களுக்கு சாப்பாடு, தண்ணி எல்லாம் ஒரே இடத்துல கெடைச்சுருதே.. அந்த மக்களுக்கு ஒரேகாவல், அவங்க கும்பிட்டுக்கிட்டிருந்த தெய்வமான 'கிராமதேவதை'தான். இங்கேயுள்ள மொழியிலும் 'காவ்தேவி'ன்னே சொல்றாங்க. காவ்(gav)ன்னா ஊர், கிராமம்ன்னு அர்த்தம்...

ஒரு நாள் பயங்கரமா, இடி மின்னலோட மழை பெய்யுது. கிராமவாசிகளின் குடிசைவீடுகளெல்லாம் மழையிலயும் காத்துலயும் பிய்ஞ்சு, வீட்டுக்குள்ள மழைத்தண்ணி ஒழுகுது. ஒக்கார, படுக்க, ஏன் சமையல் செய்யக்கூடமுடியாம தவிக்கிறாங்க.. பானசா நதியில் வெள்ளம் பெருகி, வயல்வெளியெல்லாம் முங்கிப்போச்சு. மக்களெல்லாம் ராத்திரி முழுக்க காவ்தேவி கோயில்லயே உக்காந்துட்டிருக்கிறாங்க. ஏன்னா, அங்க மட்டும்தான் நல்ல கூரையாயிருக்கு.

விடாம பெஞ்ச மழை கொஞ்சம் கொஞ்சமா நின்னு, வெள்ளமும் வடிய ஆரம்பிச்சுடுச்சு. ரெண்டு நாள் பட்டினியா கிடந்த கால்நடைகளெல்லாம் பாவமா குரல்கொடுக்கவும்,  அதுகளை பானசா நதிக்கரைக்கு ஓட்டிட்டுப்போறாங்க.. மாடுகளெல்லாம் புல்மேய ஆரம்பிக்கவும்,  பசங்க விளையாட ஆரம்பிச்சாங்க.. அப்பத்தான் அவங்க பார்வையில, இலந்தை மரக்கிளைகள்ல மாட்டிக்கிட்டிருந்த, சுமாரா ஆறடியளவு ஒசரமுள்ள அந்தக்கல்லு தட்டுப்பட்டுச்சு. சும்மா விளையாட்டுக்காக கையில் வெச்சிருந்த கம்பால், கல்லை ஒரு தட்டுத்தட்டவும், அந்த இடம் பொசுக்குன்னு வீங்கி, ரத்தம் வடிய ஆரம்பிச்சுடுச்சு.
அடிச்ச தழும்பு அப்படியே அடையாளமா இருக்காம்..

அப்புறமென்ன, வழக்கமா எல்லா சாமிக்கதைகள்லயும் வர்றமாதிரி, பசங்க ஊருக்குள்ளபோயி சொல்ல.. அவங்க வந்துபார்த்து அதிசயப்படன்னு, எல்லாம் வரிசைக்கிரமமா நடந்தேறியிருக்கு. அப்புறம்,  ராத்திரி கிராமவாசி ஒருத்தரோட கனவுல 'சனிபகவான்' வந்து தன்னோட வரவைச்சொல்லி, ஒரு கோயில் கட்டச்சொல்லியிருக்கார். ஏற்கனவே சிலையை ஊருக்குள்ள கொண்டுவர முயற்சி செஞ்சு, பத்துப்பேர் சேர்ந்து தூக்கியும் நகராத சிலையை எப்படி கொண்டுவர்றதுன்னு கனாக்கண்டவருக்கு கவலை. இதையும் சனீஸ்வரனே கனவுல வந்து தீர்த்துவெச்சார். 

அதாவது, நேரடியான உறவுமுறையுள்ள தாய்மாமனும், மருமகனும் சேர்ந்துதான் கொண்டுவரமுடியுமாம். சிலை மாட்டியிருந்த இலந்தைமரக்கிளையை ஒடிச்சுப்பரப்பி அதுமேல சிலையை வெச்சு கறுப்பு நிறக்காளைகள் பூட்டிய வண்டியில் கொண்டுவரணுமாம். இதை மொதல்லேயே சொல்லியிருந்தா,.. நேத்தே கொண்டுவந்திருப்பாங்கல்ல. சாமிக்கும் நல்ல நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்போலிருக்கு.

சாமி சொன்னமாதிரியே, கறுப்புக்காளைகள் ரெண்டப்பிடிச்சு வண்டிகட்டி, மாமனும் மருமகனும் சேர்ந்து, சாமியைக்கொண்டாந்தாங்க. வண்டி காவ்தேவி கோயில் கிட்ட வந்ததும் நின்னுடுச்சு. மேற்கொண்டு நகரமாட்டேங்குது. சரி.. இதுதான் சாமிக்கு பிடிச்ச இடம்போலிருக்குன்னு அங்கியே பிரதிஷ்டை செஞ்சுட்டாங்க. அப்புறம், 'ஜவஹர்மல் லோதா' என்ற பக்தரின் முயற்சியால், கோயில் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. 

அதுக்கு வசதியா, சிலைய கொஞ்ச காலத்துக்கு வேறிடம் மாத்தறதுக்கு முயற்சி செஞ்சப்ப, அந்தச்சிலையை நகர்த்தக்கூடமுடியலை. கடைசியில், சனீஸ்வரனின் உத்தரவின் பேரில், அதைச்சுத்தி மூணடி உசரத்துல பீடம் எழுப்பியிருக்காங்க. இத மக்கள் ரொம்ப அதிசயமா பார்க்கிறாங்க. ஏன்னா,.. அஞ்சரையடி சுயம்புவைச்சுத்தி மூணடியில் பீடம் எழுப்பியபிறகும், அதுக்குமேல உள்ள அளவு இப்பவும் அஞ்சரையடி இருக்குது. சரியாச்சொன்னா 5.9ஆம். அதாவது,... பூமிக்குள்ள வளந்துக்கிட்டே போகுதாம்.. இதான் சனி ஊருக்குள்ள வந்த கதை.
இதான் அந்த மேடை..


ஷிங்கனாப்பூர் போகும் பாதையில் கொஞ்சதூரம்தான் போயிருப்போம். இந்தியக்கோயில்களுக்குண்டான சமீபத்திய பாரம்பரியப்படி, நாலஞ்சு பைக்குகள்ல எங்களை சூழ்ந்துக்கிட்டாங்க. ஜஸ்ட் அஞ்சு ரூபாய் கட்டாயமா வசூலிக்கிறாங்க. இந்தப்பணம் பஞ்சாயத்துநிதிக்கு போகுதாம்.  எல்லாத்தையும் சொல்லிட்டு, ரசீதை கொடுத்துடுவாங்க. அதுல கடை நம்பரும் இருக்கும். அதாவது குறிப்பிட்ட கடைக்கான ஏஜெண்ட் அவர். கடைக்குப்போனா, அவங்களே சாமிக்குண்டான எல்லாப்பொருட்களையும் கொடுத்துடுவாங்க.. காவி வேட்டி உட்பட.... ஆனா, எண்ணெய்க்கு தனிச்சீட்டாம். அத பக்கத்துல இருக்கிற அவங்களோட இன்னொரு கடையிலதான் தனியா பணம்கொடுத்து வாங்கணுமாம்..
கோயிலின் முகப்பு.. அந்தப்பக்கம் இருக்கிற நீலக்கூரைதான் நுழையும் வழி..

அர்ச்சனைப்பொருட்கள் இருக்கிற தட்டுல எண்ணையைக்காணோம்ன்னு புகார் பண்ணப்பதான் இதை சொன்னாங்க. அதை மொதல்லயே சொல்லக்கூடாதோ!!.. சொன்னா யாவாரம் எப்படி நடக்கும் :-)). முக்கியமானதொண்ணு... இங்கே ஆண்கள் மட்டுமே மூலவர்கிட்ட போய் கும்பிட அனுமதி உண்டு. அவங்க கொடுக்கிற காவிவேட்டியை கட்டிக்கிட்டு, பக்கத்து கட்டடத்துல வெளியிலயே இருக்கிற ஷவர்ல குளிச்சுட்டு ஈர ட்ரெஸ்ஸோடத்தான் அர்ச்சனைத்தட்டை தொடணும். அதேமாதிரி, பெண்கள் மறந்தும் தட்டையோ, அல்லது ஆண்களையோ தொட்டுடக்கூடாதாம்.

செருப்புக்கு தனியிடமிருக்கு.. டோக்கனெல்லாம் எதுவும் இருக்கிறமாதிரி தெரியலை. பயப்படாதீங்க.. இந்த தலத்துல திருடுனா சனீஸ்வரனின் கோபத்துக்கு ஆளாகிடுவோம்ன்னு ஒரு நம்பிக்கை. கழட்டிப்போட்டுட்டு அப்படியே வலதுபக்கம் திரும்பினா கார்ப்பெட் விரிச்சு வரவேற்புகொடுக்கிறாங்க. பத்தடி நடந்து இடதுபக்கம் திரும்பினா, கோயிலின் முகப்புவாயில். அங்கியே, என்வழி தனீ வழின்னு ஆண்கள் தடுப்புல பிரிஞ்சுடறாங்க. நடுவால ஒரு சூலம். அதுல அர்ச்சனைத்தட்டுல இருக்கிற சின்ன கறுப்புத்துணியை குத்தி மாட்டிட்டு எருக்கிலை மாலையையும் அதுல போடணும். ஆண்கள் வரிசையில் எக்கச்சக்க கூட்டம். மஹாராஷ்ட்ராவில் எருக்கிலை மாலையை,  முக்கியமா அனுமனுக்குத்தான் சாத்துவாங்க. அனுமன் இருக்குமிடத்தில் சனீஸ்வரன் வாலைச்சுருட்டிக்கிட்டு இருப்பாராம்.

இந்த வரிசையில்போய் வலப்பக்கம் திரும்பினா மூலவர்..

இது ரெண்டையும் முடிச்சுட்டு, நாலே படியேறினா ரெண்டு பெரிய பாத்திரங்கள் இருக்குது. ஒண்ணில் தேங்காயையும், இன்னொண்ணில் ஊதுவத்தியையும் போட்டுடணுமாம். மூலவருக்கு அர்ப்பணிக்காம இங்கியே கலெக்ஷன் பண்றதோட ரகசியம் என்னவோ!!.. (ஆனா, சிலர் ஊதுவத்தியை மூலவர் இருக்கும் வளாகத்தில் அங்கங்கே இடைவெளிகளை கண்டுபிடிச்சு செருகிடறாங்க. பார்த்து நடக்கலைன்னா அப்புறம் இங்கே வந்துபோனதுக்கான சூட்டுஅடையாளம் நிச்சயமா கைகால்கள்ல இருக்கும்:-))))

இப்ப படியேறினதும், மறுபடியும் வரிசை நிற்குது மூலவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்றதுக்கு. ரங்க்ஸையும், பையரையும் வரிசையில் விட்டுட்டு ரெண்டே எட்டுல நாங்க மூலவர் இருக்குமிடத்துக்கு வந்துட்டோம். ஆனா, அவங்க அங்கே வர்றதுக்கு ஒருமணி நேரமாவது ஆகியிருக்கும். ரொம்ப பெருசா எதிர்பார்த்துப்போனதுக்கு சின்ன ஏமாற்றம்தான். ஒரு பெரிய வேப்பமரம். அதுக்கடியில ஒரு பத்துக்குப்பத்து அளவுல மேடை. அதுல கருங்கல் ரூபத்துல சனீஸ்வரனும், பக்கத்துல கண்காணிக்கிறதுக்கு அனுமனும்.இதான் மூலஸ்தானம். அதுவும் திறந்தவெளியில்..

இதுக்கு எதிர்க்க இருக்கிற மண்டபத்தில், கிருஷ்ணர், புள்ளையார் மற்றும் இன்னபிற தெய்வச்சிலைகள் வரிசையா இருக்கு. தனிச்சன்னிதிகள் எதுவுமில்லை. அம்புட்டுத்தான் மொத்தக்கோயிலும். புகைப்படம் எடுக்கத்தடை இருக்கு. நாங்க மண்டபத்துல நின்னுக்கிட்டு ஃப்ளாஷ் இல்லாம நாலஞ்சு எடுத்தோம்.

வரிசையா எல்லோரும் எண்ணெய்யால் குளிப்பாட்டிட்டு போறாங்க.  மார்பிள் தரையில் இவ்வளவு எண்ணெய் சிந்திக்கிடந்தா,.. வழுக்காம இருக்கணுமேன்னு ஒருபக்கம் பயமாத்தான் இருக்குது. ஸ்கேட்டிங் பண்றமாதிரி நடந்தேன்னு பையர் அப்புறமா சொன்னார். மேடையிலிருந்து இறங்கி, என்னதான் கார்ப்பெட்ல காலைத்துடைச்சிக்கிட்டாலும் எண்ணெய்வாசம் கோயில்முழுக்க வீசத்தான் செய்யுது. இங்கே நிறைய திருப்பணிகளும் நடக்குது. விருப்பப்பட்டா, பணம் கட்டலாம்.

அந்தப்பாதையின் கடைசியில்தான் பிரசாத ஸ்டால். தேங்காய்பர்பியை பிரசாதமா கொடுக்கிறாங்க. ஒருவேளை முகப்பில் வசூலிக்கப்படும் தேங்காய்கள் இங்கேதான் வருதோ என்னவோ?.. பிரசாதம் வாங்கியாச்சு.. அப்புறம்?.. நடையைக்கட்டவேண்டியதுதான். கோயிலின் ஒருபக்கத்தில் நீளமான ஒரு ஹால் இருக்குது. அன்னதானக்கூடமாம். இப்போ காலியாத்தான் இருக்குது. அப்படியே வலம்வந்து திரும்பினா கோயிலின் முகப்பு வந்துருது.

அன்னதானக்கூடம் காலியாக..

பசங்களுக்கு இங்கே ரொம்ப நேரம் இருக்கப்பிடிக்கலை... போலாம்..போலாம்ன்னு தொணப்ப ஆரம்பிச்சுட்டாங்க. லஞ்ச்கூட இங்கே வேணாமாம். 'நல்ல ஹோட்டலே இல்லை.. எல்லாம் ஷிர்டிக்கு போயி பாத்துக்கலாம்'ங்குது ரெண்டும். சரீய்.. ஷிர்டி போறதுவரை பர்பியை வெச்சு சமாளிச்சுக்கிறேன் :-)).

இந்த ஊரின் முக்கியமான சிறப்புகள் என்னன்னா, இங்க வீடுகள், கடைகள்ன்னு எதுக்குமே கதவுகள் கிடையாது. சாமியோட உத்தரவாம்.. இந்த ஊர்ல திருடினா சனீஸ்வரனோட கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்ன்னு ஐதீகம். 'சனி'யோட விளையாடற துணிச்சல் எத்தனைபேருக்கு இருக்கும்!!.  ஆனா, நாங்க போனப்ப சிலவீடுகளில் ஜன்னலுக்கு கதவுகள் வெச்சிருப்பதையும், வாசல்கதவுக்கு பதிலா தடுக்குகள் வெச்சிருப்பதையும் பார்த்தோம். அதேமாதிரி, கோயில்ல அவ்வளவுபெரிய வேப்பமரம் இருந்தும், சிலைக்குமேல் நிழல் விழறதில்லை. தப்பித்தவறி விழுந்தாலும்,.. அந்த குறிப்பிட்ட கிளை கருகி முறிஞ்சுவிழுந்துருமாம்.
கதவில்லாத வீடுகள்..

ஒரு கிராமக்காட்சி..

ஷிங்கனாப்பூரிலிருந்து ஷிர்டி 65 கிலோமீட்டர் தூரத்தில் இருக்குது. சுமாரான பாதைதான். டாபா மாதிரியான சின்னச்சின்ன ரெஸ்டாரண்டுகள் இருக்குது. எக்கச்சக்கமா கார்கள் நின்னுக்கிட்டிருந்த ஒரு டாபாவில் 'இங்கே க்வாலிட்டி நல்லாருக்கும்'ன்னு நம்ம்ம்பி நுழைஞ்சோம். ஆர்டர் கொடுத்துட்டு, வெயிட்செஞ்சுட்டிருந்தப்பதான் பக்கத்து டேபிள்லேர்ந்து ஒரே கூச்சல்..

'கூப்பிடு.. மேனேஜரை..' .. என்னவாம்!!.. சாப்பாடு வந்த ப்ளேட் சுத்தமில்லை. சரியா கழுவாம கொண்டாந்திருக்காங்க. அடப்பாவமே!!.. சுதாரிச்சுக்கிட்ட எங்களைமாதிரி நிறையப்பேர் ஆர்டரை கேன்சல் செஞ்சுட்டு வெளியேறிட்டோம். ஷிர்டி நகருக்குள்ளே எக்கச்சக்கமான ரெஸ்டாரண்டுகள், ஹோட்டல்கள் இருக்குது. அங்கே பார்த்துக்கலாம். ஷிர்டிக்குப்போலாம்.. ரைட்..ரைட்...

கொஞ்சம் படங்களை இங்கே வலையேத்தியிருக்கேன்.






LinkWithin

Related Posts with Thumbnails