Friday 22 October 2010

சுட்டாலும் ருசி தரும்...

"கொழு கொழுன்னு நல்ல கலரோட, எவ்ளோ அழகா இருந்திச்சு தெரியுமா?"

"அப்றம்??"

"வீட்டுக்கு கொண்டுவந்து, தீயில வாட்டி, தோலை உரிச்சுட்டேன்"

"ஐயய்யோ!!!.. ஏன்ப்பா?"

"அப்பத்தானே கறி பண்ணமுடியும்"

"என்னாது!!! கறியா?"

"ஆமா.. சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்ப்பா. வீட்டுக்கு கொண்டு வந்ததும், மேல லேசா எண்ணையை தடவி, தணல்ல காட்டி.. நல்லா வாட்டி எடுக்கணும்"

" உசிரோடவா?"

"மார்க்கெட்டுக்கு வந்தப்புறம், ஏது உசிர் இருக்கப்போவுது..வாட்டி எடுத்ததை ரெண்டு நிமிஷம் ஆற வெச்சு, தோலை உரிச்செடுத்துடணும். அப்றம் கையாலயே சின்னச்சின்ன துண்டுகளா பிச்சு வெச்சுக்கணும்"

"எனக்கு அழுகையா வருது"

"வெங்காயம் வெட்டும்போது அழுகை வரத்தான் செய்யும் :-)). ரெண்டு வெங்காயத்தை பொடிப்பொடியா நறுக்கி வெச்சுக்கணும். நாலஞ்சு பல் பூண்டையும், நாலு பச்சைமிளகாயையும், ஒரு இஞ்ச் இஞ்சியையும் சேர்த்து அரைச்சு வெச்சுக்கணும். அப்றம், அடுப்புல எண்ணையை ஊத்தி சூடாக்கணும்"

"அடுத்தது கும்பிபாகமா?"

"கும்பிபாகமோ, நளபாகமோ!!..ஏதோ ஒரு சுயம்பாகம்..சூடாக்கின எண்ணையில ஒரு ஸ்பூன் கடுகையும், ஒரு ஸ்பூன் சீரகத்தையும் போட்டு லெட்சுமி வெடியாட்டம் வெடிக்க விடணும். அதுல வெங்காயத்தையும் போட்டு  பொன் முறுகலா வதக்கணும். அதுல இஞ்சி,பூண்டு,மிளகாய் பேஸ்டை போட்டு பச்சைவாசனை போகிறவரைக்கும் வதக்கணும். அப்றம் பிச்சு வெச்சிருக்கிற கத்தரிக்காயை.."

"என்னாது!! இவ்ளோ நேரம் கத்தரிக்காயை சமைக்கிறதைப்பத்தியா சொன்னே???"

"ஆமா.. வேறென்ன நெனைச்சே.. ஐப்பசி மாசத்துல கொலைப்பசி நேரத்துல, குறிப்பு சொன்னா,..என்ன சமையல்ன்னுகூடவா கேட்டுக்க மாட்டே??.. சரி சரி,.. அப்றம், எங்கே விட்டேன்..."

"அடுப்பிலே கத்திரிக்காயை விட்டே"

"ஆங்.. கத்தரிக்காயை போட்டு லேசா வதக்கி, சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு, மூடிபோட்டு அஞ்சு நிமிஷம் வெச்சுட்டு அப்றம் தட்டு போட்டுடவேண்டியதுதான்"

"தட்டு எதுக்கு?.. அதான் மூடி போட்டிருக்கே!!"

" நாஞ்சொல்ற தட்டு, சாப்பாட்டுத்தட்டு. சூடா கத்தரிக்காய் கறியும், சப்பாத்தியும், கொஞ்சூண்டு பருப்பு சாதமும் என்ன அருமையான காம்பினேஷன் தெரியுமா.. இத சாப்டா.."

"நல்லா ஆரோக்கியமா இருக்கலாம்.. அதானே?"

"ஆமா.. அப்டியே ஒரு இடுகையும் தேத்தலாம்.. ஹி..ஹி..ஹி."

"யம்மாடி!!.. இந்த கலவரத்துல, தேவையான பொருட்கள் என்னன்னு கேக்க மறந்துட்டேன்.. லிஸ்ட் போட்டுக்கொடு, சந்தைக்கு போயி வாங்கியாரேன். நாளைக்கு எங்கூட்லயும் செய்யப்போறேன்ல்ல"

"அப்படியா!!,சரி.. சொல்றேன்"

வேணும்கிற பொருட்கள்:
தேங்காய் சைஸ்ல இருக்கிற கத்தரிக்காய் -1
பெரிய வெங்காயம் - 2
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
எண்ணைய் -கொஞ்சூண்டு
உப்பு - ருசிக்கேற்ப
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
பூண்டு - நாலஞ்சு பற்கள்
இஞ்சி - 1இஞ்ச் அளவு

டிஸ்கி: நான் வீட்ல சுட்டு வெச்சிருந்த கத்திரிக்காய் படம் காணாம போனதுனால கூகிளாண்டவர் கிட்டேர்ந்து சுட்டுட்டு வந்துட்டேன். கத்தரிக்காய் இங்கே இருக்கு. எடுத்துட்டுப்போயி சமைப்பீங்களாம்.. சரியா :-))))))




Friday 15 October 2010

கொலு பார்க்க வாரீரோ...

முன்னெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு செய்ற மாதிரியே, நவராத்திரி வர்றதுக்கும் பத்துப்பதினஞ்சு நாளுக்கு முன்னாடியிருந்தே பரபரப்பு தொத்திக்கும். இந்தவருஷம் என்ன பொம்மை புதுச்சா வாங்கலாம்.. எத்தனை படிகள் அமைக்கலாம், எப்படியெல்லாம் அலங்காரம் செய்யலாம்ன்னு மனசுக்குள்ளயே கணக்குகள் ஓடிக்கிட்டிருக்கும். இப்பல்லாம் படிகள் கட்றதுக்கு கூட மெனக்கெட வேண்டியதில்லை. ரெடிமேடா படிகள் கிடைக்குது. கொலுவெல்லாம் முடிஞ்சு ஏறக்கட்டினதும், அதை ஷெல்பா மாத்திக்கலாம். ஆனாலும், எங்கூட்ல இன்னும் பழைய முறைப்படி, கிடைச்ச பொருட்களைக்கொண்டுதான் படி கட்டுவோம். பசங்களுக்கு க்ரியேட்டிவிட்டியை கத்துக்கொடுக்கிறோமில்ல :-)))). இப்பவும், தையல்மிஷின், புக் ஷெல்ப், அட்டைப்பெட்டிகள்ன்னு சகலமும் படிக்கட்டா மாறியிருக்கு. 



கொலுவின் முழுத்தோற்றம்.
இதுல அந்த தவழும் கிருஷ்ணர், விவேகானந்தர், மற்றும் தாத்தா,பாட்டி பொம்மைகள் எங்க வீட்டுல இருபத்தெட்டு வருஷமா இருந்திட்டிருக்கு.  மத்தவங்களையெல்லாம் அப்பப்ப டூர் அடிக்கும்போது, நவராத்திரியை மனசுல வெச்சிக்கிட்டு வாங்கிப்போட்டுக்கிட்டு வந்தேன்.
வழக்கம்போல் முதல்படியில் புள்ளையாரும் கலசமும்.


பெரிய வூட்டுக்கல்யாணம்..


முளைப்பாரி இப்பத்தான் லேசா தலை காட்டுது..

மும்பையில் நவராத்திரி விழா களை கட்டிடுச்சு. இரவு ஏழுமணியளவில் மக்களெல்லாம் அங்கங்கே கூடி கர்பா(கும்மி) , மற்றும் தாண்டியா(கோலாட்டம்) ஆடி சந்தோஷப்படறாங்க. பத்துமணிக்கு மேல எங்கியும் பாட்டுச்சத்தம் கேக்கக்கூடாது. எங்காவது யாராவது மீறினா, போலீஸ் வந்து லேசா எச்சரிக்கை செஞ்சுட்டு போறாங்க.  அஷ்டமி என்பதால் இன்னிக்கு மட்டும் விதிவிலக்காக, பன்னிரண்டு மணிவரைக்கும் ஆட்டம் போடலாம். பாரம்பரியமான தாண்டியா நடனங்களைப்போலவே 'டிஸ்கோ தாண்டியா'வும் பிரபலமாகிக்கிட்டு வருது. அதாவது ரீமிக்ஸ் பாடல்களுக்கு தாண்டியா நடனம் ஆடுறதைத்தான் அப்படி சொல்றாங்க :-))


தினமொரு சுண்டலும், நாளொரு கர்பாவும், பொழுதொரு பாராயணமுமாக நவராத்திரி நல்லாவே போயிட்டிருக்கு. தீமைகளை அழித்து, நன்மையை நிலை நிறுத்தும் இந்த பண்டிகை எல்லோர் வாழ்விலும் நன்மைகளை கொண்டுவரட்டும்..






Wednesday 6 October 2010

இதெல்லாம் சில்லறை விஷயம்..

விஷயம் என்னவோ சிறுசுதான்.. ஆனா, விஷயமில்லைன்னு ஒதுக்கிடமுடியாது. சிறுதுளி பெருவெள்ளமாச்சே.. இந்தவிஷயத்தில் சில்லறைத்தனமா நடந்துக்கிடறவங்களைப்பார்க்கும்போது பத்திக்கிட்டு வருது. ஆமாம்,.. சில்லறை விஷயத்தில் சில கடைகளிலும், பிற பொது இடங்களிலும் நடக்குற விஷயம்தான் இது.


மும்பையில் நாலணாவை பார்க்கவே முடியறதில்லை.  நான் சின்னப்பிள்ளையா இருக்கச்சே, ஒரு பைசா, ரெண்டு பைசா, மூணுபைசா, அஞ்சு பைசா, பத்துப்பைசா, இருபது பைசால்லாம் வழக்குல இருந்திச்சு. அப்பல்லாம் சில பத்துபைசா நாணயங்கள் பித்தளையில் இருக்கும்.இப்ப ஐந்துரூபாய் நாணயம் இருக்குதில்லியா.. அதுமாதிரி!!.  அப்ப சேர்த்து வெச்சிருந்த ஒரு சில நாணயங்கள் இன்னும் எங்கிட்ட ஒரு ஞாபகார்த்தமா இருக்கு. பசங்களுக்கு அதைப்பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.


சின்னசின்ன கடைகளிலோ, அல்லது டி-மார்ட் போன்ற அங்காடிகளிலோ என்ன பண்றாங்கன்னா, பொருட்கள் வாங்கினபிறகு, நமக்கு ஐம்பது காசு மீதி தரவேண்டியிருந்தா, அதுக்குப்பதிலா எட்டணா மதிப்பிலுள்ள சாக்லெட்டை கொடுத்துடறாங்க. தமிழ் நாட்டில் இப்பல்லாம் நாலணான்னு பேச்சுவழக்கில் சொல்லப்படற இருபத்தஞ்சு காசு வழக்கொழிய ஆரம்பித்துவிட்டது. அங்கியும் இப்படித்தான் நடக்குதாம். கிட்டத்தட்ட இந்தியா முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமா நடந்துக்கிட்டிருந்தது, இப்ப பரவலா நடக்க ஆரம்பித்துவிட்டது.


நம்மூர்ல பஸ்ஸில் பாக்கி சில்லறையை கரெக்டா வாங்கினவங்க அதிர்ஷ்டசாலி. அதேமாதிரி இங்கியும் நடக்க ஆரம்பிச்சாச்சு. நேத்திக்கு பக்கத்து ஊருக்கு போகவேண்டியிருந்தது. வழியில் ரெண்டு இடங்களில் டோல் கட்டிட்டு, பாக்கியை வாங்கி எண்ணிப்போட்டுக்கிட்டு பறந்துட்டோம். ரெண்டாம் இடத்தில் பாக்கியை வாங்கும்போது லேசா கணக்கு உதைச்சமாதிரி இருந்தது. வண்டியை ரங்க்ஸ்தானே ஓட்டுறார். நாம, சும்மா இருக்கிறதுக்கு கணக்கை பார்க்கலாமேன்னு ரசீதுகளை எடுத்து சரிபார்த்தேன். நினைச்சது சரிதான்.. ஒவ்வொரு இடத்திலும் பாக்கி ஐம்பது பைசாவை கொடுக்கலை. ஆட்டைய போட்டுட்டாங்க :-))


புத்தம்புதுசா மும்பை-பூனா நெடுஞ்சாலை இருந்தாலும், பழைய மும்பை-பூனா நெடுஞ்சாலையான இதுவும் உபயோகத்தில் இருக்கு. கனரக வாகனங்கள், நாலுசக்கர வாகனங்கள்ன்னு, ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வாகனப்போக்குவரத்து நடைபெறும். சிங்கிள், ரிட்டர்ன்ன்னு நமக்கு வேண்டியபடி சுங்கவரி கட்டி ரசீது வாங்கிக்கலாம். நம்ம ஒருத்தர்கிட்டயே ஒரு ரூபாயை சுட்டுருக்காங்கன்னா, ஒரு நாளைக்கு மொத்த வசூல் எவ்வளவு ஆகும்.. புள்ளிவிவரமெல்லாம் சொல்ல நான் கேப்டன் இல்லை, அதனால நீங்களே கணக்குப்போட்டுக்கோங்க :-)))


கடைகளிலோ இவங்க பாக்கியை கணக்குப்போடுறவிதமே தனி. இப்ப, பொருட்கள் வாங்கினதுக்கான பில் 45 ரூபா அம்பது காசு, நாம ஐம்பது ரூபாய் நோட்டை கொடுக்கிறோம்ன்னு வெச்சிக்கோங்க. அம்பது காசை நம்ம கிட்ட வாங்கிக்கிட்டு அஞ்சு ரூபாயை மிச்சம் கொடுப்பாங்க. இல்லைன்னா,.. நாலு ரூபா அம்பது காசை திரும்ப கொடுப்பாங்க. இப்பல்லாம் என்ன செய்றாங்கன்னா, நாலுரூபாயை கொடுத்துட்டு அம்பது காசுக்கான சாக்லெட்டை கொடுத்துடறாங்க.  சாக்லெட்டை விற்பனை செய்றதுக்கு, இந்த மறைமுகமான வழியை கண்டுபிடிச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலை. 


நானும் கொஞ்ச நேரம் புலம்பிக்கிட்டே இருந்தேன். கடைசியில ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். இனிமேல் நானும் கைப்பையில் நிறைய சாக்லெட்டுகளை வெச்சுக்கப்போறேன். கடைகளில் ஐம்பது பைசா கேட்டாலோ, டோல் கட்டுமிடத்தில் தேவைப்பட்டாலோ, ஒரு சாக்லெட்டை எடுத்து கொடுத்துடப்போறேன். அவங்க கொடுக்கும்போது , நாம வாங்கிக்கிறோம்.. நாம கொடுத்தா, அவங்க வாங்கிக்க மாட்டாங்களா என்ன?? என்ன ஒரு சிக்கல்ன்னா??, அந்த சாக்லெட்டுகளை நான் முழுங்காம விட்டு வெச்சிருப்பேனா இல்லையான்னு தெரியலை :-))








Sunday 3 October 2010

பூமிக்கு வந்த புதிய மனிதன்..எந்திரன்.



ரஜினி..ரஜினி..ரஜினி..... படம் முழுக்க இந்த மூன்றெழுத்து காந்தத்தின் கவர்ச்சியே நிறைந்திருக்கிறது. வசீ, சிட்டி, இன்னும் கட்டக்கடைசி க்ளைமாக்சின் சண்டைக்காட்சிகளில் வரும் ரோபோக்கள் வரை எங்கும் எதிலும் ரஜினியே... 


ஐஸ்வர்யா ராய் இனிமேல் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இனிமேல் ரஜினிக்கு வயசாகிவிட்டது, எனவே அவர் வயசுக்குத்தகுந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்... டீல் ஓகேயா :-)))))). 


புதிய மனிதன் பூமிக்கு வரும் முதல் காட்சியில் ரஜினியின் பிரம்மாண்டமான அறிமுகக்காட்சி இல்லை... பஞ்ச் டயலாக் இல்லை.. ஹீரோவா லட்சணமா, கதாநாயகியை காப்பாற்ற நூறுபேருடன், கைகால் உதைத்து சண்டை போடவில்லை.. சண்டை போடக்கிடைத்த ஒரு வாய்ப்பிலும், கலாபவன் மணியின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.. இப்படி படத்தில் நிறைய இல்லை, இல்லைகள் இருப்பதால் சில சமயங்களில் இது ரஜினி படம்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது.. சிட்டி வந்து காப்பாற்றுகிறார் :-))


சிட்டியை பார்க்கும்போது வருங்காலத்தில் நிஜமாகவே இப்படிப்பட்ட ரோபோக்கள் உருவானால் எப்படியிருக்கும் என்ற பயங்கலந்த ஆர்வம் தோன்றுகிறது.. மாமூல் வெட்டுவது என்றால் என்னவென்று செய்துகாட்டியிருப்பது அட.. அட.. அட!! போட வைக்கிறதென்றால், ஐஸ்வர்யாவின் டாய்ஃப்ரெண்டாக அறிமுகமாகி, பாய்ஃப்ரெண்டாக ஆசைப்படும் கட்டம் அழகு. பர்த்டே பார்ட்டிக்குபோக தயாராகும்போது சிட்டியிடம் தென்படும் ஆர்வமும், தன்னை அலங்கரித்துக்கொள்வதில் காட்டும் ஆசையும், அதனால் வசீகரனிடம் உருவாகும் பொஸஸிவ்னெஸ்ஸும்.. படம் இப்படித்தான் போகப்போகிறது என்று லேசாக கோடிகாட்டி விடுகிறது. அதையே கடைசிவரை நகர்த்திச்சென்றிருப்பது இயக்குனரின் திறமைக்குச்சான்று.


ரோபோக்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேற்றுமையே ஆறாம் அறிவான பகுத்தறிவுதான். அது இருந்தால், மனிதனுக்குண்டான உணர்ச்சிக்கலவையாக ஒரு இயந்திரம் இருந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும் அழகான ஐஸ்வர்யாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, சிட்டி என்னும் இயந்திரத்தை மனிதனாக்க, ரஜினி முயற்சித்திருக்க வேண்டாம்.. தன் வினை தன்னையே சுட்டுவிடுகிறது :-))))


1989-ல் அஜ்னபி என்ற சீரியலில் பார்த்ததுபோலவே இப்பவும் டேனி டெங்க் சோ பா இருக்கிறார்... என்ன!! கொஞ்சம் வயசாகிவிட்டது அவ்வளவுதான். மற்றபடி குறை சொல்ல முடியாத நடிப்பு. ரோபோ பிரசவம் பார்த்ததை சிலாகித்துப்பேசிக்கொண்டிருக்கும் ரஜினியிடம் பேசிக்கொண்டே, 'இனிமேல்தான் எல்லாமே ஆரம்பமாகப்போகிறது' என்று போகிற போக்கில் எச்சரித்தாலும், அந்த ஆரம்பத்துக்கு வித்திட்டவர் அவர்தானே.. வழக்கமான வில்லன்களைப்போலவே அழிவுஆயுதங்களை தயாரித்து, வித்தியாசமாக பாதிப்படத்தில் மண்டையைப்போடுகிறார்.


 சந்தானமும், கருணாசும்... சிட்டியை ஒவ்வொரு முறையும் கலாய்த்து, ரஜினியிடம் திட்டுவாங்குவதைத்தவிர உருப்படியாக வேறொன்றும் செய்யவில்லை. அந்தக்குறை சிட்டி செய்யும் கலாட்டாக்களால் மறைந்துவிடுகிறது. சைக்கிள்செயின் மாலையணிந்து அவர் துர்க்காதேவியாக அவதாரமெடுக்குமிடத்தில், தமிழ்நாடாக இருந்திருந்தால் தியேட்டர் அதிர்ந்திருக்கும்..  நண்பனாக இருந்து, காதலுக்காக எதிரியாக மாறி க்ளைமாக்ஸில் க்ராபிக்ஸ் துணையுடன், தன்னைப்படைத்தவனுக்கெதிராக ஆடும் அதிரடி ஆட்டமும், அதை முறியடிக்க சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதன் போனிடெயிலைப்பிடித்து உலுக்கும் ரஜினியுமாக எங்கெங்கு காணினும் ரஜினியடா.. (சண்டையின் நீளத்தையும், சத்தத்தையும் கொஞ்சம் குறைச்சிருந்தா இன்னும் ரசித்திருக்கலாம் :-)))). தன்னைத்தானே டிஸ்மேண்டில் செய்து கொள்ளும் காட்சி சூப்பர்.


பொதுவா, தமிழ்ப்பட ஹீரோயின்களுக்கு,  படத்தில் முக்கியத்துவம் இருக்காது. ஆனா,.. இந்தப்படத்தில், ஹீரோவை விட ஐஸ்வர்யாவுக்கே முக்கியத்துவம் அதிகம்.. சந்தேகமா இருந்தா, கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.. ஐஸ்வர்யா மேலுள்ள காதலால்தானே சிட்டி, வசீகரனுக்கெதிராக திரும்புகிறான். படமே நகருது.. இல்லைன்னா ரோபோ பிரசவம் பார்த்த கையோட, டேனியிடம் போய் 'நீ நல்ல ரோபோதான்' அப்படீன்னு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு இந்தியப்படையில் இல்ல போயிசேர்ந்திருக்கும் :-)))


டிஸ்கி : பாடல்களுக்கும், ஏ. ஆர். ரஹ்மானின் இசைக்கும், ஐஸ்வர்யா மற்றும் ரஜினியின் டான்சை பார்த்ததுக்கும், மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக்குமே கொடுத்தகாசு செரிச்சுப்போச்சு. அதால இன்னொருக்கா எந்திரனை தமிழில் பார்க்கப்போறேன். ஏன்னா.. நேத்து பாத்துட்டு வந்தது இந்தி வெர்ஷன். என்ன பண்றது!! தமிழ்ல பார்க்கணும்ன்னா நவிமும்பையில் இருக்கும் வாஷிக்கு போகணும். எப்படியோ ரஜினி படத்தை முதல் நாளே பார்த்தாச்சு :-))












Saturday 2 October 2010

வைஷ்ணவ ஜனதோ...

ஹாய்..ஹாய்..ஹாய் மக்கள்ஸ்.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோமில்ல.. இன்னும் ஆளைக்காணலைன்னா அப்பாவியக்கா இட்லி அனுப்பிடுவாங்களோன்னு பயமார்ந்தது.. அதான் வந்துட்டேன். (இவ்வளவு நாளா ஆளைக்காணோம்ன்னதும் 'அப்பாடா'ன்னு நிம்மதியா இருந்திருப்பீங்க. அப்படி விடமுடியுமா??)


அது ஒண்ணுமில்லை.. என்னோட புது இடுகைகள் எதையும் தமிழ்மணம் இணைச்சுக்க மாட்டேங்குது. பிடித்தமான இடுகைகளுக்கு ஓட்டுப்போட்டாலும் , "யார் நீ???" அப்படீன்னு கேக்குது. பாஸ்வேர்டு கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது. தமிழ்மணத்துக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுட்டு, அம்மா கை சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு உக்காந்திருக்கேன் :-)))). உங்கள் யாருக்காவது இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருந்தா எப்படி சமாளிச்சீங்கன்னு சொன்னா புண்ணியமா போவும். (பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு நாலு நல்ல ஓட்டும் பத்து கள்ள ஓட்டும் போடறேன், அல்லது நேத்து முதல் நாள் முதல் ஷோவா பார்த்த, எந்திரன் படத்தின் டிக்கெட்டின் ஜெராக்ஸ் அனுப்பப்படும்:-))


நம்ம பிரச்சினை அப்புறம்... இன்னிக்கு பாபுஜி,.. அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.... அதாவது காந்தி தாத்தாவோட பிறந்தநாள். அதனால அவருக்கு ரொம்ப பிடிச்ச இந்த பஜனைப்பாடலை அவருக்கு பிறந்தநாள் பரிசா வழங்குகிறேன்.. வேறெதுவும் எழுதத்தோணலை.. 

இப்போதெல்லாம், பெரிய தலைவர்களின் பிறந்தநாட்கள், வெறும் விடுமுறை நாட்களாக மாறிவிட்டன. அதுவுமில்லாம காந்தியடிகளைப்பத்தி புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு??...  அதனால இந்தப்பாட்டைக்கேட்டுக்கிட்டே அவரை நினைவு கூர்வோம்....






LinkWithin

Related Posts with Thumbnails