Tuesday 14 September 2010

பிள்ளையார் சதுர்த்தி..

ராக்கி கட்டி, நாரியல் பூர்ணிமா கொண்டாடி.. 'ஆலா ரே ஆலா.. கோவிந்தா ஆலா' என்று கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடங்கும் பண்டிகைக்காலம், எங்க ஊர் பிள்ளையார் சதுர்த்தியின்போது களை கட்டிவிடும். வீட்டுக்கு வீடு பிள்ளையார் வந்து ஜம்முன்னு உக்காந்துடுவார். ஹாஸ்டல்லேர்ந்து வீட்டுக்கு லீவுக்கு வந்த மகனைப்போல, ராஜ உபச்சாரம்தான் அவருக்கு :-)))


சதுர்த்திக்கு ஒன்றிரண்டு மாசத்துக்கு முன்னாலேயே.. அதாவது வெய்யில் காலத்துலயே, ஏற்பாடுகளெல்லாம் ஆரம்பிச்சுடும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் வடிவமைப்பதும், வர்ணமடிச்சு அழகுபடுத்துவதுமாக தொழிலாளர்களெல்லாம் பிஸியோபிஸியாகிடுவாங்க... இப்பல்லாம் காகிதக்கூழில் செஞ்சு, வாட்டர் கலர் அடிச்ச eco friendly புள்ளையார் மார்க்கெட்டுக்கு வந்துட்டார். நிறையப்பேர் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க.. ஆனாலும், ஜிகுஜிகுன்னு பெயிண்டில் ஜொலிக்கிற பிள்ளையாருக்கு ஒரு சில மக்கள் மத்தியில இன்னும் வரவேற்பு இருக்குது..


நம்மூர்ல பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்றது மாதிரிதான் இங்கியும் புள்ளையார வீட்டுக்கு கூட்டிட்டு வரமுன்னாடி வீட்டை சுத்தம் செய்வோம். அவரை உட்கார வைக்க சின்னதா மண்டபம் கட்டி, அலங்காரமெல்லாம் செஞ்சு..  ரெடியா வெச்சு, புள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு, 'கண்பதி பப்பா.. மோரியா!! மங்கள்மூர்த்தி மோரியா' என்ற கோஷத்தோட அவரை கூட்டிட்டு வந்து உட்கார வெச்சு, பத்து நாளும் உபச்சாரமெல்லாம் செய்வோம். தினம் ரெண்டுதடவை அவருக்கு ஆரத்தி நடைபெறும். வீட்டுல உள்ளவங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுப்போம். அபார்ட்மெண்ட்களில், எல்லோருக்கும் பொதுவான பிள்ளையார் வெச்சு,.. கூட்டு வழிபாடு நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவங்க வீட்டுல இருந்து பிரசாதமா, ஷீரா, கரஞ்சி,மோதகம், லட்டுன்னு செஞ்சு கொண்டு வருவாங்க.


பிள்ளையார் வந்ததும், 'சத்ய நாராயண பூஜை' கண்டிப்பா நடக்கும். அபார்ட்மெண்டின் மிக மூத்த தம்பதியோ அல்லது, புதிதாக திருமணமான தம்பதியோ இந்த பூஜையை தம்பதி சமேதரா செய்வாங்க. அன்னிக்கு, லஞ்ச் அல்லது டின்னர் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. இதை மஹாபிரசாதம்ன்னு சொல்லுவாங்க. தமிழ்க்குடும்பங்கள் நிறைய இருக்கும் இடங்களில் கணபதி ஹோமம் நடக்குறதுண்டு.


பொதுவா, இங்கே 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையாரை கரைக்கும் நிகழ்ச்சி, சதுர்த்திக்கான மறு நாள்(ஒன்னரை நாள்ன்னு கணக்கு), மூணாம் நாள், ஐந்தாம் நாளான 'கௌரி கண்பதி' , ஏழாம் நாள், மற்றும் ஒன்பதாம் நாள்.. அதன்பின் பத்தாம் நாளான ஆனந்த சதுர்த்தி அன்று நிறைவு பெறும். 'கௌரி கண்பதி' அன்னிக்கு மகனைப்பார்க்க பார்வதி தேவி வருவதாக ஐதீகம். அன்னிக்கு சிலவீடுகளில், கௌரிபூஜையும், விருந்துச்சாப்பாடும் நடக்கும்.அது முடிந்தபின், கௌரி, மற்றும் கண்பதியை விசர்ஜன் செய்வார்கள். விசர்ஜன் செய்யப்படும் நாட்களில் சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுவிடும். ஊரிலுள்ள எல்லாப்புள்ளையார்களையும் அன்னிக்கு ஆர அமர பார்த்து.. 'பை..பை' சொல்லிட்டு வரலாம்.


ஆனந்த சதுர்த்தி அன்னிக்கு ரோட்டுல எள் போட்டா விழ இடமிருக்காது!!!(எள்ளை ஏன் போடணும்ன்னு சொல்றாங்கன்னே புரியலை.. இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன் :-))). அவ்வளவு நாள் பயபக்தியா ஆராதிச்ச புள்ளையார்களை அன்னிக்கு க்ரேன்ல கட்டி ஆழமான கடல்ல தூக்கிப்போட்டுடுவாங்க. (அம்பூட்டு உசரமா இருப்பாருங்க). ஆனாலும், கரைச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் மனசுக்கு ஒரு வெறுமை வருமே... அதை சொல்லத்தெரியலை.


எங்க ஊர்ல புள்ளையார் ஆரத்திக்குன்னே ஸ்பெஷல் பாட்டு இருக்குது. இங்கே புள்ளையார் சதுர்த்தி பிரபலமானதுக்கும்.. இந்திய விடுதலைப்போருக்கும் சம்பந்தமிருக்குது. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல, கூட்டம் கூட தடை போடப்பட்ட காலத்துல...நம்ம பாலகங்காரதர திலகர் கண்டுபிடிச்ச வழிதான் இது. 1892 -லிருந்து இது சமூகவிழாவா கொண்டாடப்பட ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி, மராட்டிய பேஷ்வாக்கள் மட்டுமே, சிறிய அளவில் கொண்டாடியிருக்காங்க.. பேஷ்வாக்களின் அழிவுக்குப்பின்னால, க்வாலியர் மற்றும் குஜராத் அரசர்கள் இதை சாதாரண மக்களிடம் கொண்டு வந்தாங்க.


இங்கெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்த திலகருக்கு, இது மக்களை ஒருங்கிணைக்கும் வழியாக தோன்றியது. கடவுளைக்கும்பிட்ட கையோட, அங்கிருந்த கூட்டத்துக்கிட்ட விடுதலை தாகத்தை உண்டாக்க, புள்ளையார் சதுர்த்தி, திலகருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. இப்பவும், மக்களெல்லாம் ஆரத்தி முடிஞ்சதும், 'பாரத் மாதா கீ... ஜெய்' ன்னு கோஷம் எழுப்ப தவறுவதில்லை. மும்பையில் 'லால்பாக்' என்னும் இடத்துல வைக்கப்படும் புள்ளையார் ரொம்பவே பிரபலமாயிட்டார். திருப்பதி மாதிரியே அங்கியும் வரிசையில நின்னுதான் தரிசனம் செய்யணும். விலையுயர்ந்த நகைகள், பொருட்களெல்லாம்கூட காணிக்கையா கொடுக்கப்படுதாம். இங்கே வந்து போகாத மும்பை வி.ஐ.பிக்களே இருக்கமுடியாது. அவர்கிட்ட கேட்கும் வேண்டுதல்களெல்லாம் நிறைவேறுதுன்னு ஒரு புதுப்பேச்சு கிளம்பியிருக்கு.  'லால்பாக்ச்சா ராஜா' ன்னுஅவருக்கு செல்லப்பேரும் உண்டு. இந்தப்பேருக்கு பேடண்ட் எடுத்திருக்காங்கன்னா அவரு எவ்வளவு பிரபலம்ன்னு பாத்துக்கோங்க.


மஹாராஷ்ட்ராவில் பிரபலமானஆரத்திப்பாட்டு இது.....



இது எங்கவீட்டு புள்ளையார்...


டிஸ்கி: எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. இவர் எங்க குடியிருப்பின் பொதுவான புள்ளையார்.கௌரி கண்பதி வரைக்கும் இருப்பார் :-)))))))












Tuesday 7 September 2010

மழைத்துளிகள்...

ஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா!!! என்ன வெயில்.. என்ன வெயில்!!. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே!!!. ஒரு மழை வந்தா எவ்ளோ நல்லாருக்கும்'ன்னு ஏங்க வைக்கத்தான் செய்கிறது இந்த மழை. லேசாக மாறும் தட்பவெப்பமும், காற்றின் போக்கும், திடீர் புழுக்கமும் சொல்லிவிடும்.. மழை வரப்போவதை..




லேசான காற்றுடன், 'சொட்'டென விழுந்ததும், அப்படியே கம்ம்ன்னு எழுமே மண்மணம். ஆஹாஹா!!!. இதுக்காகவே எப்போடா மழை வரும்ன்னு இருக்கும் :-). முதல் மழையில் நனைஞ்சா, நல்லதாம். வெய்யிலினால் வந்த வேர்க்குரு, இன்னபிற சரும பிரச்சினைகளெல்லாம் ஓடிப்போயிடுமாம். இந்த ஊர்ல சொல்லிக்குவாங்க. அதனால மழைத்துளி விழுந்ததுமே,'ஹே...'ன்னு கூப்பாடோட, பசங்களெல்லாம் ஓடிப்போயி.. மழையில ஆட ஆரம்பிச்சுடுவாங்க. ஆட்டம் மட்டுமல்ல.. பாட்டும் உண்டு :-))


"யே..ரே, யே..ரே பாவுஸா,
துலா தேத்தோ பைஸா;
பைஸா ஜா(zha)லா கோட்டா,
பாவுஸ் ஆலா மோட்டா".


இது குழந்தைகளுக்கான ஒரு மராட்டிப்பாடல். இதுகளை பார்க்கும்போது, நமக்கே உற்சாகமாக இருக்கும். நாமளும் சின்னப்புள்ளையா இருக்கச்சே இப்படித்தானே மழையில் நனைஞ்சு விளையாடியிருப்போம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கு புறப்படும்போதுதான், கரெக்டா மழை வரும். வகுப்புக்கு லேட்டா போறதுக்கு ஒரு சாக்கு சொல்லலாம் :-)). பள்ளி விட்டு வரும்போது மழை வந்தா, இன்னும் ஜாலி. வீட்டுக்கு நனைஞ்சுக்கிட்டே வந்து, திட்டெல்லாம் வாங்குறதும் ஒரு இனிய அனுபவம்தானே. நமக்கு ஜூரம் வருதோ இல்லியோ, அம்மாக்களுக்கு டென்ஷன் ஜூரம் விறுவிறுன்னு ஏறும். ஆனா..அவங்க கொடுக்கிற சுக்குக்காப்பிக்காகவே அடிக்கடி மழையில் நனையலாம் :-))


எப்போடா வரும்ன்னு ஏங்க வைக்கிற மழைதான், சிலசமயம்.. ஏன்தான் இப்படி பழிவாங்குதோன்னு தோணவைக்கும். தேவையான அளவு பெஞ்சாத்தானே நல்ல முறையில விவசாயம் செய்ய முடியும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. மழைக்கப்புறம், பச்சைப்பசேல்ன்னு சுத்துவட்டாரமும், பூத்துக்குலுங்கும் பெயர்தெரியா காட்டுச்செடிகளுமா, ஒரே அமர்க்களமாத்தான் இருக்கு. காத்துல மிதந்து வர்ற சுட்ட மக்காச்சோள வாசனை , மும்பையின் மழைக்காலத்துக்கே இன்னும் அழகைக்கூட்டும்...


இந்த வருஷம், மும்பையில் ஓரளவு மழை பெஞ்சிருக்கு. ரொம்பவும் அடிச்சிப்பெஞ்ச மாதிரியே எனக்குத்தெரியலை. இந்தத்தடவை , மழையில் வெளியில் சுத்த அதிகம் வாய்ப்பு கிடைக்காததும் ,  அப்படி நினைக்கிறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம் :-))). "ரெண்டு மூணு நாள் விடாம பெஞ்சாத்தான், மழைக்கு அழகு :-)))). இந்தத்தடவை அப்படி ஒண்ணும் பெஞ்ச மாதிரியும் தெரியலை"..   இப்படி சலிச்சுக்கிட்டது அந்த மழைக்கே கேட்டிருச்சோ என்னவோ,.. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தின நாள் காற்றும், மழையுமா கொட்டோ கொட்டுன்னு கொட்டித்தீர்த்துட்டது.. கண்ணன் பிறந்தப்ப, இதேமாதிரிதான் புயலும் மழையுமா இருந்திச்சாம். அதனால, கிருஷ்ண ஜெயந்தி சமயம், மழை இப்படித்தான் பெய்யும்ன்னு இங்கே வந்தப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன் :-))


ஜூனில், மழை ஆரம்பிக்கும்போதே மழைக்காலத்துக்கான ஷாப்பிங்கும் ஆரம்பிக்கும். பள்ளிகளில் கறுப்பு நிற ரெயின் சேண்டல்கள்தான் கட்டாயம் போடணும். யூனிபார்ம் ஷூ போட்டுக்கிட்டுப்போனா, அபராதம் கட்டச்சொல்லும் பள்ளிகளும் உண்டு. மழையில் ஷூக்களின் உள்ளே, ஊறிப்போன கால்களுடன், கஷ்டப்பட்டுக்கொண்டு குழந்தைகள் இருப்பது இதனால் தவிர்க்கப்படுது. 


எங்கூர்ல 'நாரியல் பூர்ணிமா' வந்தாச்சுன்னா மழைக்காலம் முடியப்போவுதுன்னு அர்த்தம். மழைக்காலத்தில் கடலின் சீற்றம் அதிகமா இருப்பதால், மீன்பிடித்தொழிலுக்கு போகமுடியாம இருக்கிற மீனவ சகோதரர்கள், மறுபடியும் தொழிலுக்கு போகும்முன் கொண்டாடும் பண்டிகை இது. அனேகமா, ரக்ஷா பந்தனும், நாரியல் பூர்ணிமாவும் ஒரே தினத்தில்தான் வரும். அன்னிக்கி மேளதாளத்தோட, சொந்தபந்தம் சூழ கடற்கரைக்கு போவாங்க. அங்கே மழையின் அதிபதியான வருணதேவனுக்கு பூஜை செஞ்சுட்டு, கடலில் ஒரு தேங்காயை காணிக்கையா விட்டுட்டு வருவாங்க.  அதுக்கப்புறம் அவங்க தொழிலுக்கு போக ஆரம்பிச்சுடுவாங்க.


வினாயகர் சதுர்த்தியின் கடைசி நாளை, ஆனந்த சதுர்த்தின்னு சொல்லுவாங்க. அன்னிக்குத்தான் மிச்சம் மீதியிருக்கிற புள்ளையார்களையும் கரைப்பாங்க. அத்துடன் மழையும் முடிஞ்சுடும்ன்னு ஐதீகம். இந்த வருஷம் இப்பவே மழை முடியறதுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சாச்சு. போன வாரம் ரெண்டு நாளா காலையில ஒரே பனிமூட்டம். பனி வர ஆரம்பிச்சாச்சுன்னா, மழை பொட்டியை கட்ட ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அணையப்போற விளக்கு கட்டக்கடைசியா சுடர்விட்டு எரியுற மாதிரி, ஜன்னலுக்கு வெளியே இடியும் மின்னலுமா வெளுத்துக்கட்டிக்கிட்டு இருக்கு. பெய்யும்போது அலுத்துக்கிட்டாலும், இனி இந்த மழையை ரசிக்க, சுட்ட சோளம் சாப்பிட.. அடுத்த வருஷம் வரை காத்திருக்கணுமேன்னு ஏக்கமா இருக்கு. சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-)). அடுத்த வருஷமும் வரணும்ன்னு சந்தோஷமா சொல்லிக்கிறோம்...




Thursday 2 September 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.

ரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கிப்பெருகி, merozoites ஆக வெளிவருகின்றன. இவற்றில், ஒரு பாதி மறுபடியும் ரத்தத்தில் கலந்து சிவப்பணுக்களை கபளீகரம் செய்ய ஆரம்பிக்குது. மீதிப்பாதி gametocytes ஆக உருமாறுது. ஏன் இப்படி இதுகள் உருமாறுதுன்னு.. இன்னும் யாராலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த gametocytes தான் கொசுவின் உடம்பில் புகுந்து, மறுபடியும் மலேரியா கிருமிகளா வெளிவருது.

ஒவ்வொரு வகை மலேரியா கிருமியின் gametocyte-ம் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். உதாரணமாக,
Plasmodium falciparum - நீள்வடிவமாக சாஸேஜ் போல இருக்கும்.
Plasmodium malaria - நீள்வட்ட வடிவமாக,
Plasmodium vivax - உருண்டையாக இருக்கும்.

இரத்தப்பரிசோதனையின் போது, நம்மை எந்த கிருமி தாக்கி இருக்கக்கூடும்ன்னு, இந்த வடிவத்தை வச்சுத்தான் சுமாரா கண்டுபிடிக்கிறாங்க.

gametocytes-ல் ரெண்டு வகைகள் இருக்குது. micro gametocytes,மற்றும் macto gametocytes. முதல் வகையில் உள்ள கரு பெரிதாகவும், பின்னதில் சிறிதாகவும் இருக்கும். இவற்றில் மைக்ரோ, ஆண் அணுவாகவும், மேக்ரோ பெண் அணுவாகவும் பங்கு வகிக்கின்றன.இதுவரைக்கும் மனுஷ உடம்பில் வளர்ந்த இவை இதுக்கு மேல வளரணும்ன்னா கட்டாயம், கொசுவின் உடம்புக்கு போயே ஆகணும். மலேரியாவால பாதிக்கப்பட்ட ஒருத்தரின் ரத்தத்தை கொசு உறிஞ்சும்போது இவை, கொசுவின் வயிற்றுக்குள்ளே போகின்றன.

கொசுவின் உடம்புக்குள்ளே போன இந்தக்கிருமிகளில், மைக்ரோவின் கரு,செல்பிரிதல் என்னும் நிகழ்ச்சி மூலம் ஆறு கருக்களா மாறுது. அவற்றுக்கு வாலும் முளைச்சு, நல்லா வளர்ந்தப்புறம் இவை gametocyteக்கு வெளியே வந்து பிரிஞ்சு போயிடுது.

மேக்ரோ முதிர்ந்து, கருவுறுதலுக்கு தயாராகுது. மைக்ரோவும், மேக்ரோவும் இணைஞ்சதால கரு உண்டாகி, வளருது. இது மொதல்ல உருண்டையாத்தான் இருக்கும். மெதுவா இது புழுவின் வடிவத்துக்கு மாறுது. இது கொசுவின் வயிற்றுப்பகுதியை துளைச்சிக்கிட்டு வெளியேறி, வயிற்றுக்கும்.. கொசுவின் மேல்தோலுக்கும் இடைப்பட்ட இடத்துல ரெஸ்ட் எடுக்குது. ரெஸ்ட் காலத்துல வேணுங்கிற ஊட்டச்சத்தை கொசுவிலிருந்தே எடுத்துக்குது. இதை 'oocyst'ன்னு சொல்லலாம்.

வளரும்போதே, கரு மறுபடியும் நிறைய தடவை பிரிஞ்சு, தனித்தனி உயிர்களாகுது.இவைதான் 'sporozoites'ன்னு சொல்லப்படற கிருமிகள். வளர்ச்சிப்பருவம் முடிஞ்சதும், 'oocyst' உடைஞ்சு, sporocytes கொசுவின் வயிற்றுப்பகுதி திரவத்துல கலக்குது. கொசுவோட உடம்புல புகுந்ததிலிருந்து, இந்த வளர்ச்சிப்பருவம் வர்றதுக்கு மொத்தம் 10 ,12 நாட்களாகும்.

கொசுவின் உடம்புல, ஒரு டூர் அடிச்சிட்டு.. கடைசியா இவை கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வந்து சேருதுகள். பிறகென்ன.. இப்போ, கொசு யாரையாச்சும் கடிக்கும்போது, எச்சிலும்.. அதோட சேர்ந்து கிருமிகளும் உடம்புக்குள்ள போயிடும். மறுபடியும் ஆட்டம் ஆரம்பம்......

ஒருத்தருக்கு மலேரியா அட்டாக் ஆகியிருக்குன்னு சில அறிகுறிகளை வெச்சு தெரிஞ்சுக்கலாம். கடுமையான காய்ச்சல், நடுக்கம், குளிர்தல்,அளவுக்கு மீறிய வியர்வை, கடுமையான உடல்வலி, மற்றும் தசை வலி, வாந்தி, மற்றும் கடுமையான அசதி இதெல்லாம் இருக்கும். சிவப்பணுக்களை இதுகள் தாக்குவதால இரத்தத்தில் ப்ளேட்லட்ஸின் எண்ணிக்கை ரொம்பவே குறையும். சிலசமயம் ஆபத்தான நிலைக்கும் கொண்டுபோயிடும். மருந்து கொடுத்தும் சரியாகலைன்னா,.. அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சு ரத்தம் ஏத்த வேண்டி வந்துடும். என் பையருக்கும் மலேரியா வந்தப்ப ப்ளேட்லட்ஸ் வெறும் 35,000 த்துக்கு போயிட்டது. நல்ல வேளையா மருந்து கொடுத்ததில் கூடுதலாக ஆரம்பிச்சதால, பயமில்லாம போச்சு. ஆனாலும் பக்க விளைவாக உடம்புவலி ரொம்ப நாள் இருந்தது.

இந்தக்கொசுக்களால மலேரியா மட்டுமல்ல.. யானைக்கால் வியாதி,டெங்கு போன்ற வியாதிகளும் பரவுது. கொசுக்களை நம்மால முடிந்தவரை கட்டுப்படுத்தலாம். 

விடியற்காலை, மற்றும் மாலைக்கருக்கல் நேரங்களில்தான் இவை ரொம்பவே உலாத்தும். இந்த நேரங்களில் வெளியே சுத்துறதை குறைச்சிக்கலாம்.

சுத்துனாலும், உடம்பு முழுக்க மூடியிருக்கிற மாதிரி உடை அணிஞ்சிக்கலாம். முக்கியமா சிறு குழந்தைகளுக்கு..

 நல்ல தரமான கொசுவிரட்டி, கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

இப்பல்லாம் கொசுவலை அடிச்ச ஜன்னல்கள் புழக்கத்துக்கு வந்துட்டது. அவற்றை உபயோகப்படுத்தி, வாசல் கதவுகளை சாயந்திரங்களில் இறுக்க மூடி வைக்கலாம்.

எல்லாத்தையும்விட முக்கியமானது, தண்ணீரை தேங்க விடக்கூடாது. அங்கேதான் கொசுப்பண்ணையே இருக்கும். வீடுகளிலோ, அக்கம்பக்கங்களிலோ உடைஞ்ச டப்பா, டயர், குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதை பார்த்தா அப்புறப்படுத்தலாம். சிலபேர் அதில் மண்ணெண்ணெய் விடுவாங்க. எதுக்குன்னா,.. கொசுக்கள் செத்துடுமாம்.

அப்படியும் கொசு கடிச்சால் என்ன ஆகும்.. இங்கே வாங்க..

இன்னும் விளக்கமா புரியணும்ன்னா,.. வீடியோவா பாருங்க.






LinkWithin

Related Posts with Thumbnails