Thursday 29 April 2010

விவேகானந்தர் நினைவுச்சின்னம் ஓர் வரலாறு-3


விவேகானந்தர் பாறை.. ஒரு பறவைப்பார்வை.

கரையிலிருந்து பார்த்தாலே.. கம்பீரமா காட்சி தரும் விவேகானந்தர் பாறையையும் , திருவள்ளுவரையும், கிட்டக்க போய் தரிசிக்கணும்ன்னு ஆசைப்படாதவங்க யாரும் இருக்கமுடியாது. கடலில் வெறுமனே இருந்த ரெண்டு பாறைகளுக்கும், இவங்களாலே இப்போ மவுசு கூடிப்போச்சு. பல்வேறு தடைகளையும் கடந்துதான் விவேகானந்தருக்கான நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கு. ஸ்ரீ ஏக்நாத் ரானடே அவர்கள் இதற்கான முழு முயற்சியையும் எடுத்துக்கொண்டு செய்து முடிச்சிருக்கார்.

ஆனந்தரும், வள்ளுவரும் வருவதற்கு முன்பு...

ஜனவரி 1963 முதல், ஜனவரி 1964 வரையிலான அந்த ஆண்டு முழுவதும் ,சுவாமி விவேகானந்தரின் நூறாவது பிறந்த நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சுவாமிஜி சிகாகோ போகும்முன்பு, கன்யாகுமரி வந்து கடலின் நடுவே இருக்கும் பாறையொன்றில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதும், தன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று கண்டு கொண்டதும், அதன்பின் ,அவர் சிகாகோவில் ஆற்றிய உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவும் ,நமக்கெல்லாம் தெரிந்ததுதான். அந்தப்புண்ணிய பூமியில், அவருக்கொரு நினைவுச்சின்னத்தை எழுப்புவதே, அவருடைய நூற்றாண்டை நன்முறையில் பொருத்தமாக கொண்டாடுவதாகும் ...என்று முடிவு செய்யப்பட்டது.

தேவி கன்னியாகுமரி, சிவபெருமானின் கரம் பற்றுவதற்காக, தன் பாதம்பதித்து கடும்தவம் செய்ததால் 'ஸ்ரீ பாதப்பாறை' என்று அழைக்கப்பட்ட பாறையைத்தான் சுவாமிஜி தானும் தவம் செய்வதற்காக தேர்ந்தெடுத்தார் என்று அறிந்ததும், நாமும் அங்கே சென்று அந்த புண்ணியபூமியை தரிசிக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் வந்தது. குமரி மக்கள் பாறையின் அருகாமையில் இருந்ததாலும், பாறை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்ததாலும், இத்திட்டத்தை அவர்களே முன்னின்று நிறைவேற்றி வைக்க முனைந்தனர். குழு ஒன்று அமைக்கப்பட்டது.அவர்கள் நினைத்ததெல்லாம் ஒரு நினைவுச்சின்னமும், பாறைக்கு சென்றுவர ஒரு பாதையும் வேண்டும் என்பதுதான்..

கன்யாகுமரிக்குழுவினரும், சென்னை அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஆலோசனை தொடங்கியதும், விவேகானந்தப்பாறையில், நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருக்கும் செய்தி எங்கும் பரவியது. சில எதிர்ப்புகளும் அங்குள்ள மக்களிடமிருந்து வந்தது. அதே நேரத்தில், கன்யாகுமரி தேவியின் பாதச்சின்னம் அந்தப்பாறையில் இருந்ததால், அந்தப்பாறை தங்களது சொத்து என கன்யாகுமரி தேவஸ்வம் போர்டும் உரிமை கொண்டாடியது. ஆகஸ்ட் மாதத்தில் அமைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டக்குழு , முதல்வேலையாக பாறையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கும், கரையிலிருந்து பாறைக்கு ஒரு பாலம் அமைப்பதற்கும் அனுமதி வேண்டியும், தற்காலிகமாக இலவச படகுப்போக்குவரத்து ஆரம்பிப்பதற்கும், தேவஸ்வம் போர்டுக்கு விண்ணப்பித்தது.

போர்டும் அனுமதி வழங்கியது. இப்பணிகள் முடிந்தபின் எல்லாவற்றையும் தேவஸ்வம் போர்டுக்கு கொடுத்து விடவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தனர்.கமிட்டியும் இதை ஏற்றுக்கொண்டது .கமிட்டியினர் படகுப்போக்குவரத்தை ஆரம்பிக்க, தூரத்திலிருந்து பார்த்து திருப்தி பட்டுக்கொண்டு,நம்மால் அங்கு செல்ல முடியாது என்று ஒதுக்கிவைக்கப்பட்ட பாறையை ,தினந்தோறும் மக்கள் சென்று பார்க்க ஆரம்பித்தனர்.

ஸ்ரீ ஏக்நாத் ரானடே, நினைவுச்சின்ன கமிட்டியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதி திரட்டுவதிலிருந்து, எதிர்ப்புகளை சமாளிப்பதுவரை அவர் பல நிலைகளை கடந்து வரவேண்டியிருந்தது. கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைத்துக்கொள்ளலாம். பாறையில் தேவையில்லை. அது இயற்கை அழகை கெடுத்து விடும் என்று அரசு தரப்பில் முதலில் ஆட்சேபணை கிளம்பினாலும், பிற்பாடு ஆட்சேபித்தவர்களே, ஆதரவும் காட்டினார்கள். நினைவுச்சின்னத்துக்கான கற்கள், பல நூற்றாண்டுகள் வரை தாக்குப்பிடிக்குமா என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன. சாம்பல் நிறக்கற்கள் அம்பாசமுத்திரத்திலிருந்தும், சிவப்பு நிறக்கற்கள் தூத்துக்குடியிலிருந்தும்... கொண்டு வரப்பட்டன. காந்திமண்டபத்துக்கு முன்னாலிருந்த மைதானத்தில் ,கற்கள் மண்டபத்துக்கு வேண்டிய வகையில் செதுக்கப்பட்டு, படகில் கொண்டு செல்லப்பட்டன. பின்பு, அவை ஒன்றின்மீது ஒன்று அடுக்கப்பட்டு, நினைவாலயமும், ஸ்ரீ பாத மண்டபமும் கட்டப்பட்டன.

ஸ்தபதி திரு எஸ்.கே. ஆச்சாரி அவர்கள் இந்த நினைவாலயத்தை வடிவமைத்தார். ஸ்ரீ சோனா வாடேகர் அவர்கள், விவேகானந்தரின் திருவுருவச்சிலையை வடிவமைத்திருக்கிறார்.லட்சியத்தை அடைந்திட, தியானத்திலிருந்து எழும் சுவாமிஜியின் தோற்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இரண்டு சிலைகள் செய்யப்பட்டனவாம். இப்போது இருக்கும் சிலையில் உள்ள சுவாமிஜியின் கண்பார்வை ஸ்ரீபாதத்தில் விழும்படியாக வடிவமைக்கப்பட்டது. இன்னொரு சிலை சற்றே உயரம் கூடிப்போனதால் , பொருத்தமற்றுப்போனது. பின்னாளில் அது விவேகானந்தபுரத்தில் நிறுவப்பட்டது என்று செய்தி.

மிகுந்த உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் துவக்கவிழா 2-9-1970 அன்று நடைபெற்றது.

இவ்வளவு சிறப்புள்ள நினைவு மண்டபத்தை பாக்கத்தான் இப்போ போய்க்கிட்டிருக்கோம். கரையிலிருந்து 400 மீட்டர்கள் தொலைவுதான். மோட்டார்படகுகள் இல்லாத சமயத்தில் கட்டுமரத்தில்தான் வந்திருக்காங்க. எவ்வளவு த்ரில்லிங்கா இருந்திருக்கும்... சின்னப்புள்ளையில நானும், சும்மா ஜாலிக்காக இங்கே கட்டுமர சவாரி செஞ்சுருக்கேன். சும்மா.. மூணு, நாலு கட்டைகளை சேர்த்துக்கட்டுன படகுதான் அது.


விவேகானந்தர் பாறைக்கு பயணம். ரொம்ப கஷ்டப்பட்டு அப்லோட் செஞ்சது.

படகுலேர்ந்து இறங்கி, லைஃப் ஜாக்கெட்டை வீசிட்டு நுழைவுச்சீட்டு எடுக்கப்போனோம். பக்கத்துச்சுவரில் தினந்தோறும் சூரியஉதயம், அஸ்தமனம் ஆகும் நேரத்தை கடிகாரம் காட்டுது.

சூரிய உதய, அஸ்தமன நேரங்கள்.

காலணிகளை ஒப்படைச்சுட்டு, படியேறினா, இடதுபக்கம் விவேகானந்தர் மண்டபம், வலது பக்கம் ஸ்ரீபாத மண்டபம். இதன் ரெண்டு பக்கமும் ஹெலிபேட் இருக்கு. விவேகானந்தர் மண்டபம் கொஞ்சம் உயரமான பகுதியில் இருக்கு. இதன் பின்பகுதியில்தான் தியானமண்டபம் இருக்கு. முதலில் விவேகானந்தர்.......

Saturday 17 April 2010

இருக்குமிடம் தேடி... - 2.

திருவனந்தபுரத்திலிருந்து, கன்னியாகுமரிக்கு..நாமபோற நேரத்தில் நேரடியா பஸ் இல்லைன்னா, நெல்லை, மதுரை, சென்னை, இப்படி நாகர்கோவில் வழியா போகும் பஸ்ஸில் ஏறி, வடசேரி பஸ் ஸ்டாண்டில் இறங்கிக்கலாம். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஏகப்பட்ட பஸ்வசதி இருக்கு. நாங்களும் அப்படியே, வடசேரி பஸ்நிலையத்திலில் இறங்கி, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு போகும் பஸ்ஸில் ஏறிக்கிட்டோம்.

வடசேரி பஸ் நிலையம், ஒரு காலத்துல குளமா இருந்து, தூர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதுக்கு பின்னால்தான் புகழ்பெற்ற கனகமூலம் சந்தை இருக்கு. வாரத்தின் எல்லா நாட்களிலும் கூடுவது இதன் சிறப்பம்சம். நாகர்கோவிலில் ரெண்டு பஸ் நிலையங்கள் இருக்கின்றன. ஒண்ணு இது. இன்னொண்ணு குளத்து பஸ்டாண்டுன்னு சொல்லப்படற மீனாட்சிபுரம் பஸ்டாண்டு. லோக்கல் பஸ்ஸெல்லாம் இங்கிருந்துதான் புறப்படும். வடசேரி பஸ்டாண்டு தொலைதூர பஸ்களுக்கானது. இங்கிருந்து புறப்படும் லோக்கல் பஸ்களும், மீனாட்சிபுரம் வந்து அப்புறம்தான் அவை போகவேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும்.

நாகர்கோவிலின் புகழ்பெற்ற கம்பளம் மார்க்கெட். ரயில் நிலையத்துக்கு செல்லும் வழியும் இதுதான்.


சுசீந்திரத்துக்கு கொஞ்சம் முன்னாலேர்ந்து பழையாறு எங்க கூட வர ஆரம்பிச்சது. கோடைங்கிறதால தண்ணி இல்லேன்னாலும்,பழைய கம்பீரம் போய் பாழடைஞ்சு கிடக்கு. நிறைய இடங்களில் தரை தட்டிப்போய்... செடியெல்லாம் வளர்ந்து, இன்னும் கொஞ்ச நாட்களில், ஆறே மறைஞ்சுபோயிடுமோ என்னவோ!!! முந்தியெல்லாம் கோடைன்னாலும் ஆத்துல ஓரளவு தண்ணி இருக்கும். இப்போ தலைகீழா நின்னா கழுத்தளவு தண்ணி இருக்கும் போலிருக்கு.

பழையாறு,.. சுசீந்திரம் பாலத்திலிருந்து.


கேரளாவைப்போல் நாஞ்சில் நாட்டிலும் அழகான நீர்நிலைகள் நிறைய உண்டு.
நல்ல மழை முடிஞ்சதும் பாத்தா, கடல் மாதிரி தண்ணி நிரம்பிக்கிடக்கும். இப்போ என்னதான் கோடைன்னாலும், நிறைய இடங்களில் கோரை வளர்ந்து, தரையெல்லாம் மேடுதட்டி.. பார்க்கவே பரிதாபமா இருக்கு. என்னதான் மழை பெஞ்சாலும்,ஆழமில்லாத குளத்தில், எவ்வளவு தண்ணீர் நிறையமுடியும்?.ஆறு, குளங்களையெல்லாம், சுத்தப்படுத்தி,.. தூர்வாரி ஆழப்படுத்தி வெச்சாத்தானே, ஓரளவு தண்ணீர் பஞ்சமில்லாம இருக்கமுடியும்.

தாமரைக்குளத்தில் இப்போதான் சீசன் ஆரம்பிக்கப்போகிறது.

கன்னியாகுமரியில் நுழைஞ்சதும் 'ஹோட்டல் சங்கமம்' பேரைப்பாத்ததுமே பஸ்ஸை ஸ்டாப்பச்சொல்லி, ரங்க்ஸ் பஸ்ஸிலிருந்து கடகடன்னு இறங்கிட்டார். வேறவழியில்லாம நாங்களும் இறங்கினோம்.ரூமிலிருந்து கடற்கரைக்கோ,.. கோவிலுக்கோ போகணும்ன்னா ஆட்டோவைத்தான் நம்பணும். கொஞ்சம் தூரம்தான். கடல்பக்கத்துல ரூம் எடுத்தா, காலாற நடக்கலாம்ன்னு நினைச்சதில் மண்.


ரூம் என்னவோ வசதியாத்தான் இருக்கு. ஏ.சி யும் சைலண்டாத்தான் இருக்கு. அப்ப.. அந்த 'கடகட' எங்கிருந்து வருது. பின்பக்கம் பால்கனிக்கு போய்ப்பார்த்தா.. ரோட்டுல வேலை நடக்குது. தார்காய்ச்சும் வாசனை,ஆட்களோட சத்தம், ஜல்லியில் ரோடு ரோலர் ஓடும்போது 'கடகட'. மத்த மிஷின்களின் உய்ய்ங். கடல் வேற தெரியலை. சும்மா, சுத்திலும் கட்டிடங்களை பாக்கிறதுக்கா கன்னியாகுமரி வந்தோம்?!!!. பின்பக்கம் ரோட்டுக்கு அப்பால் தெரியுது 'ஹோட்டல் ஸீவ்யூ, ஹோட்டல் மாதினி' etc. துளசி டீச்சரோட பதிவுல ஏற்கனவே படிச்சிருந்ததால ரங்க்ஸிடம் சொல்லி, சம்மதிக்க வைத்து, நினைப்பில் விழுந்த மண்ணை, தட்டி விட்டுக்கிட்டேன்.

இப்போ சீசன் என்கிறதால் அங்கே இடம் இல்லை. பக்கத்து ஹோட்டல் எங்க சிஸ்டர்தான்...அங்கே இடம் இருக்குன்னாங்க. அதுவும் ஸீவ்யூதான். கடலைப்பாத்தமாதிரி ரூம் கிடைச்சது. விவேகானந்தரையும், திருவள்ளுவரையும் பாத்துக்கிட்டே ரங்க்ஸ் பால்கனியில் உக்காந்து ரசிக்க ஆரம்பிச்சுட்டார். இந்த அழகான காட்சியையும், கடல் காத்தையும் மிஸ் பண்ணப்பாத்தீங்களேன்னு பசங்க அவரோட காலை வார ஆரம்பிச்சிட்டாங்க. குளிச்சு ஃப்ரெஷ்ஷாகி, ஆனந்தரையும், வள்ளுவரையும் பாக்கப்போறதா அப்பாயிண்ட்மென்ட்.

ஆனந்தரும், வள்ளுவரும்.

சன்னிதித்தெருவில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் சவுத் & நார்த் இண்டியன் சாப்பாடு நல்லா இருக்கும். அங்கியே டிபன் முடிச்சிட்டு விவேகானந்தர் பாறைக்கு போக கிளம்பினோம். வழியெங்கும் கைவினைப்பொருட்களுக்கான கடைகள். விவேகானந்தர் பாறைக்கான படகு போக்குவரத்தை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடத்துது, 20 ரூபாய் டிக்கெட். படகுக்கு போக காத்திருக்கும் நேரத்தில்,வெய்யிலில் கிடந்து வாடாம இருக்க ஒரு சின்ன கட்டிடம் கட்டிவிட்டிருக்காங்க.டைம்பாஸுக்கு அங்கங்க எழுதப்பட்டிருக்கிற ஆட்டோகிராப்களை படிச்சிட்டிருக்கலாம்.

காலை நேரம்ங்கிறதால கூட்டம் இல்லை. எங்களுக்காக காத்திருந்த பொதிகைக்கு வந்தோம். குகனும் இருக்கார். முன்னொரு காலத்துல தாமிரபரணியும் இருந்துச்சி. வயசாயிட்டதால அதை ரிட்டயர் பண்ணிட்டாங்க. அதென்னவோ.... கன்னியாகுமரி வந்துட்டாலே ஏகப்பட்ட, இருவது, முப்பது வயசான கொசுவத்தியெல்லாம் சுத்த ஆரம்பிச்சுடுது.

பொதிகையில் லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு உக்காந்தோம். நம்மூர் ஆட்கள் நிறைய பேர் அதை பொக்கே மாதிரி கையில் வெச்சிக்கிட்டு உக்காந்திருக்காங்க.



Friday 16 April 2010

எதிர்பாராதது..ரொம்ப லேட்டாக ஆரம்பம்- 1.



இப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்குமுன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. கிடைச்சா நல்லாத்தான் இருக்கும், இல்லைன்னாலும் பரவாயில்லைன்னுதான் இருந்தோம். பழம் நழுவி,பாலில் விழுந்து.. அது நழுவி, வாயில் விழுந்ததுபோல் ஆயிட்டுது.

'வருவீயா... வரமாட்டியா!!!.. வரலேன்னா உம்பேச்சு,..கா'..ன்னு பிறந்து ஆறே நாள் ஆன தம்பியின் பையன் கூப்பிடும்போது,.. ஊருக்கு போகாம இருக்கமுடியுமா? எப்படி!!! இப்பத்தான் ரெண்டுமாசம் முன்னாடிதானே போயிட்டு வந்தோம். 'போகலாம்.. போகலாம்'ன்னு ரங்க்ஸும், பசங்களும் அவரவர் ஒத்தைக்காலில் நிக்கிறாங்க.பசங்களுக்கு குட்டிப்பெண் 'சார்மிஷா'வை இன்னொருக்கா பாக்கலாம், வெளையாடலாம்ன்னு நப்பாசை.ஆனா, டிக்கெட் கிடைக்கணுமே!..

பெண்ணுக்கும்,ரங்க்ஸுக்கும் ராஜ்தானியில் போகணும்ன்னு ஆசை. ஏற்கனவே நான் போயிட்டு வந்து, ஆஹா!!..ஓஹோ..ன்னு எக்கச்சக்கமா வயித்தெரிச்சலை
கிளப்பி விட்டிருந்தேன். ஆனா,..இப்போ திடீர்ன்னு எப்படி ஏற்பாடு செய்யமுடியும். தத்காலுக்குமே வாய்ப்பில்லாத விடுமுறைக்காலம். வலையோடு விளையாடி, ..தேடி, கடைசியில் ரெண்டு டிக்கெட் கிடைச்சது. இன்னும் ரெண்டு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கு. எதுக்கும் இருக்கட்டும்ன்னு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பார்த்தா.. ஆஹா!! இருக்கு. திரும்பிவரவும் அதிலேயே டிக்கெட் புக் ஆயிருச்சு. அதெப்படி!!.. ராஜ்தானிலதான்னு.., சாமியாடுறதுக்கு பசங்க கொடியேத்தியாச்சு.. ஜஸ்ட் பத்துப்பதினஞ்சு நாளுக்குள்ள கன்ஃபர்ம்ன்ட் டிக்கெட் கிடைச்சதே அபூர்வம். இதுல ராஜ்தானி, நாலுடிக்கெட்டும் கன்ஃபர்ம்ன்ட் ஆனா, ஊருக்கு போலாம். இல்லைன்னா ப்ரோக்ராம் கேன்சல்ன்னு, பசங்களுக்கு ஸ்ட்ரிக்டா சொல்லப்பட்டு விட்டது.

ஒருவாரமா, அப்டேட்ஸ் பாத்துக்கிட்டே இருந்து, கடைசியில் கிளம்புறதுக்கு முந்தின நாள் ராத்திரி எட்டு மணிவாக்கில் நாலுபேரோட டிக்கெட்டும் கன்ஃபர்ம் ஆகிட்டுது. மறு நாள் விடியற்காலை அஞ்சு மணிக்கு ரயில். தீப்பிடிச்ச வீட்டிலுள்ளவங்க மாதிரி பரபரப்போட, பேக் பண்ண ஆரம்பிச்சோம். எல்லாம் ரெடியா இருக்கணும். ஜஸ்ட் பேக் பண்றதுதான் பாக்கி என்ற விழிப்போட, ஒரு வாரமா இருந்ததால, பத்துப்பதினஞ்சு நிமிஷத்துல பேக்கிங், எல்லாம் முடிஞ்சுட்டுது.

ரயிலில் ஏறியதும், அவரவர் இருக்கையை தேடி அமர்ந்தோம். ரங்க்ஸுக்கும், பெண்ணுக்கும், இருக்கைகள் எங்ககிட்டேயிருந்து ரொம்பதூரத்தில் அலாட் ஆகியிருந்தது. அவங்க அந்தக்கோடி.. நாங்க இந்தக்கோடி.. மத்தியானத்துக்கப்புறம் எங்க பக்கத்துல இருக்கைகள் காலியானதுனால, பிரிஞ்ச குடும்பம் மறுபடியும், குடும்பப்பாட்டெல்லாம் பாடாமலேயே ஒண்ணு சேந்துட்டோம்.(பாடியிருந்தா ரயில விட்டே இறக்கிவிட்டிருப்பாங்க என்பது சொல்லப்படாத ரகசியமாக்கும்).

ரயில் ஜிகுஜிகுன்னு வேகமா போயிட்டிருக்கு. மஹாராஷ்ட்ரா பகுதியிலிருந்து கொங்கண் பகுதிக்கு நுழைஞ்சாச்சு. இந்த கொங்கண் ரயில்வே ஆரம்பிச்சதிலிருந்து பயண நேரம் நிறைய மிச்சப்படுது. மங்களூரையும், மும்பையையும் இணைக்கிறதுக்காகத்தான் முதலில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மனோகர் ஜோஷி, மதுதண்டவதே,ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்ற பெரியவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த திட்டம்.

1966-ல் மும்பையின் திவா, மற்றும் ராய்கட் மாவட்டத்தின் அப்டாவுக்கு இடையே பாதை போடப்பட்டு,பின் ரோஹா வரை தொடரப்பட்டது.அக்டோபர் 1984-ல் Mangalore-ல் இருந்து Madgaon வரையிலான 325 கி.மீ ல இருப்புப்பாதை போடுறதுக்கான களஆய்வு செய்யப்பட்டு, மார்ச் 1985-ல் Madgaon-ல் இருந்து ரோஹா வரையிலான மேற்கு கடற்கரை வழியும் சேர்த்துகொள்ளப்பட்டது. இப்படி Mangalore-Roha வரையிலான இந்த ப்ரொஜக்ட், இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு, "கொங்கண் ரயில்வே' என்று காரணப்பெயரிடப்பட்டு, 1988-ல் ரயில்வே அமைச்சரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொங்கண் ரயில்பாதை.

ஜுலை 19, 1990-ல் இந்த ப்ரொஜக்டுக்காகவே தனியா, Konkan Railway Corporation Limited (KRCL) ஆரம்பிக்கப்பட்டு, திரு.E. ஸ்ரீதரன் அதனுடைய முதலாவது chairman + Managing director ஆக நியமிக்கப்பட்டார்.அஞ்சு வருஷ ப்ரொஜக்டான இதுக்கு ரோஹாவில் வெச்சு செப்.15, 1990-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த ப்ரொஜக்டுக்கு எதிர்ப்புகளும் இல்லாமலில்லை. கோவா மாநிலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் konkan railway re alignment committee(KRRAC) என்ற அமைப்பை உருவாக்கி, போராடினார்கள். இந்த ப்ரொஜக்ட் மேற்கு கடற்கரையை ஒட்டி வர்றதால, சதுப்பு நிலக்காடுகள், Mandovi,Zuari நதிகளின் கழிமுகங்கள், அப்புறம்.. விளை நிலங்களுக்கு பாதிப்பு வரும்ன்னு சொல்லி, அதுக்கு தீர்வா மாற்றுப்பாதை ஒண்ணை பரிந்துரைச்சிருக்காங்க. ஆனா, அந்த மாற்றுப்பாதையால் இன்னும் 25 கி.மீ. கூடுதல் ஆகும், மேலும் முக்கியமான நகரங்களை இணைக்கமுடியாதுன்னு விளக்கம் கொடுத்து, KRCL அந்த ஆலோசனையை நிராகரிச்சிட்டாங்க. இது தொடர்பா போடப்பட்ட வழக்கிலும் ஹைகோர்ட் KRRAC-யின் மனுவை தள்ளுபடி செஞ்சிட்டாங்க.

நிறைய சிரமங்களை கடந்துதான் இந்த ப்ரொஜக்ட் முடிஞ்சிருக்கு. மஹாராஷ்ட்ராவின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள், இருப்புப்பாதைக்காக குடைஞ்ச டன்னல்கள் நொறுங்கி விழுதல், பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துறதுல சிக்கல், காட்டுமிருகங்களால் ஆபத்து, வெள்ளம்ன்னு எல்லாத்தையும் கடந்துதான் வரவேண்டியிருந்தது.

zuari நதி மீது கட்டப்பட்ட பாலம்.

ஆசியாவின் உயரமான பாலம்.
(படங்கள் உதவி கூகிளாண்டவர்.)

கடைசியா மும்பையிலிருந்து மங்களூர் வரையிலான இந்தப்பாதையில், பயணிகள் போக்குவரத்து மே மாசம் 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 738 கி.மீ. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ஓடும் ரயில்களுக்கேத்தவாறு அமைக்கப்பட்டிருக்கு. இப்ப, இதில் ஓடும் மிகவேக ரயில் 'திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்'. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ஓடுது. இது ஏப்ரல் 1,1998 -லேர்ந்து இந்த பாதை வழியா திருப்பிவிடப்பட்டிருக்கு. இந்தப்பாதையால் கணிசமான அளவு நேரம் மிச்சப்படுறதால மும்பையிலிருந்து, கேரளா போற அநேக ரயில்கள் இந்தப்பாதை வழியாத்தான் போகுது. வெறும் 24 மணி நேரத்தில் திருவனந்தபுரத்துக்கு போயிடலாம்.

சாயந்திர டீக்கு அப்புறம் சதியாலோசனை ஆரம்பிச்சது. கைவசம் நாலே நாள். அதுல ஒரு நாள்(21-3-10) குட்டிப்பையனோட பேர்சூட்டுவிழாவுக்கானது. மீதி மூணே நாள் இருக்கு. லீவ் எஞ்சாய் செய்ய எங்கே போகலாம். திருவனந்தபுரம் ஊரை சுத்தலாமா, அல்லது கன்னியாகுமரி போகலாமா??.. கன்னியாகுமரிக்கே போலாம்ன்னு ரயிலை விட்டு இறங்கி, ச்சாய் குடிக்கும்போது முடிவெடுத்து, ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் பஸ் ஸ்டாண்டுக்கு போனோம். நாகர்கோவில் பஸ் ஒண்ணு ரெடியா நின்னுட்டு இருந்தது.

Thursday 15 April 2010

தால்பீட்.

பிக்னிக் போறதுக்கு முன்னால சத்தான சாப்பாடு சாப்பிட்டு தெம்பா புறப்படலாம். கம்பு, கேழ்வரகு, சோளம் மாதிரியான தானியங்கள் இப்போல்லாம் மறக்கப்பட்டு வருது.களி, கூழ்ன்னு செஞ்சு கொடுத்தா, பசங்களை சாப்பிடவைக்க முடியறதில்லை. தால்பீட் செஞ்சு கொடுத்தா, தானாவே சாப்பிடுவாங்க. இது ஒரு மஹாராஷ்ட்ரியன் சாப்பாடு.

தேவையான பொருட்கள்:

கலந்த பயிறு வகைகள் -1 கப்.

கோதுமை மாவு - 4 கப்.

கடலை மாவு-1 கப்.

பச்சரிசி மாவு-1 கப்.

சோளமாவு+ராகி அல்லது ஏதாவது ஒரு தானியமாவு-1கப்.

பெரிய வெங்காயம்-2.

பச்சைகொத்துமல்லி- 1கட்டு.

மிளகாய்த்தூள்-காரத்துக்கேற்ப (சுமார் 2 டேபிள் ஸ்பூன் அளவு போதும்)

உப்பு- சுவைக்கேற்ப

முதலில் அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.

கலந்த பயிறுவகைகளை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் ஏற்றி, மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து,பின் மிக்ஸியில் நல்லா பவுடராக அரைச்சுக்கோங்க.



வெங்காயத்தையும், கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கி வெச்சிக்கோங்க.

ஒரு அகன்ற பாத்திரத்தில், கோதுமை மாவு, கடலைமாவு, அரிசிமாவு எல்லாவற்றையும் போட்டுக்கொள்ளவும். (முதலில் சல்லடையில் சலிக்கவும்ன்னு சொல்லவேண்டாம்தானே)

பின் பயிறுமாவை அதில் கலக்கவும்.

அதன்பின் வெங்காயம்,கொத்துமல்லி இலைகளை அதில் போடவும்.

கடைசியாக மிளகாய்த்தூள், உப்பு போட்டு அதன் தலையில் ரெண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றவும்.

முதலில் மாவுகள்+வெங்காயம்+கொத்துமல்லி இலை+etc கலவையை நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் வேண்டிய அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசைந்து கொண்டு ,சாத்துக்குடி அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.




தோசைக்கல்லை சூடாக்கி,ஒரு ஸ்பூன் எண்ணையை அதில் விடுங்க. இப்பத்தான் உங்க வீரதீர பராக்கிரமத்தை காட்டவேண்டிய சந்தர்ப்பம் வருது. மாவு உருண்டையை தோசைக்கல்லில் வைத்து,அதிலேயே அடைபோல் கொஞ்சம் கனமா தட்டணும்.கொஞ்சம் தண்ணீரை தொட்டுக்கிட்டா மாவு கையில் ஒட்டாது. தால்பீட்டை ஈஸியா தட்டலாம்.

இப்ப, தால்பீட்டை சுற்றியும் அதுமேலாகவும் எண்ணெய் விட்டு, ஒரு மூடியால் மூடி, சிறு தீயில் வேகவிடுங்க. ரெண்டு நிமிஷம் கழிச்சி, திறந்துபார்த்தா.. லேசாக நிறம் மாறியிருக்கும். இப்ப, தால்பீட்டை திருப்பி போட்டு, சுத்திலும் எண்ணெய் விட்டு மூடி வையுங்க.இன்னொரு ரெண்டு நிமிஷம் கழிச்சு திறந்து செக் பண்ணிக்கோங்க.ரெண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து, தேங்காய் சட்னி, ஊறுகாயுடன் பரிமாறலாம்.


வறுத்த பயிறுவகைகள், சோளம், ராகி அல்லது ஏதாவது தானியங்கள் கலவையை மிஷினில் கொடுத்து,அரைச்சு வெச்சிக்கிட்டா, மற்ற பொருட்களை சேர்த்து சீக்கிரமே இதை தயார் செஞ்சிடலாம். கொஞ்சம் ஹெவியான சாப்பாடு இது.விரும்பினால் இஞ்சியையும் நறுக்கி சேர்க்கலாம்.கொஞ்சம் மெல்லிசா தட்டி, மொறுமொறுன்னு சுட்டு பேக் பண்ணிஎடுத்துக்கிட்டா, ஒரு நாள் பிக்னிக்குகளுக் கு தாங்கும்.ரொம்ப நேரத்துக்கு பசிதாங்கும்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். சத்தானது. (சமையல் குறிப்புன்னா இதெல்லாம் சொல்லணுமாம்).

Wednesday 14 April 2010

புதுவருஷம் பூத்தாச்சு..வாழ்க வளமுடன்...


அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....

விரோதியை வழியனுப்பிவிட்டு விக்ரதி ஆண்டு பிறந்திருக்கிறது. எங்க வீட்டில் எப்பவும் தமிழ்ப்புத்தாண்டை விஷுக்கனி பார்த்துதான் கொண்டாட ஆரம்பிப்போம். முதல் நாளே, பூஜை அறையில், அல்லது சாமிபடத்துக்கு அருகில் முகம் பார்க்கும் கண்ணாடியை வெச்சி, அது முன்னால, பணம், காசு, நகைகள்,சரக்கொன்றைப்பூ, பழங்கள் எல்லாம் வெச்சிடுவோம். இருள் பிரியாத விடியற்காலையில் எழுந்து கண்ணை மூடிக்கிட்டேவந்து ,முதலில் தீபதரிசனம், அப்புறம் சாமி தரிசனம். அப்புறம் அப்படியே கண்ணாடியில முகத்தை பாத்துக்கிடுவோம்.அதன்பின் கண்ணாடிமுன் இருக்கும் பொருட்களை பார்ப்போம். இது எதுக்குன்னா,... வருஷம் முழுக்க இதுமாதிரி 'நல்ல' பொருட்களின் தரிசனம் எப்பவும் கிடைக்கும்ன்னு ஐதீகம். (காலைல யார் மூஞ்சில முழிச்சனோன்னு மத்தவங்களை திட்டவேண்டாம் பாருங்க :-))))))

இந்த வருஷம், அலங்கார ஏற்பாடு என்னுடைய மேற்பார்வையில் ரங்க்ஸ் செய்தது. அசத்தலா இருக்குதில்ல.....



விஷுக்கனி பார்த்துட்டு, குளிச்சு முடிச்சு அப்புறம் பூஜை நடக்கும். அவலுடன், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் எல்லாம் போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடிச்சு வெச்சு நைவேத்தியம் நடக்கும். அப்புறம், சின்னவங்களுக்கு பெரியவங்க ஆசிர்வாதம் செஞ்சு கைநீட்டம் கொடுப்பாங்க. கை நீட்டம்ன்னா காசு, பணம்தான். அன்னிக்கு நிறைய வசூல் நடக்கும். அப்புறமா கோவிலுக்கு போய்ட்டு வந்து செஞ்சு வெச்ச டிபனை வெட்ட வேண்டியதுதான்.

உங்களுக்கும் கை நீட்டம் இதோ இருக்கு.

இன்னிக்கி டிவி பொட்டி முன்னாடி முடங்கிடாம ஃப்ரெண்ட்ஸை,பெரியவங்களை போய்ப்பாருங்க, குடும்பத்தோட வெளியே,வாசல்ன்னு போயிட்டு வாங்க. குழந்தைகளோட சிரிச்சிப்பேசி சந்தோஷமா இருங்க . பண்டிகைங்கிறதே சந்தோஷமா இருக்கத்தானே.

பண்டிகையையும் கோடையையும் சேர்த்துக்கொண்டாட சின்ன பிக்னிக் போயிட்டு வரலாம். ரெடியா இருங்க.(இப்பத்தான் எழுத நேரம் வந்திருக்கு)

நேத்து இரவு 11.59 இருக்கும். படபடன்னு பட்டாசு வெடிக்கற சத்தம். தவுசண்ட்வாலாவோ என்னவோ!!!. அதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகள். ஆங்கிலப்புத்தாண்டோன்னு ஒரு நிமிஷம் நினைப்பு ஜனவரிக்கு ஓடுது.பேண்ட்வாத்தியம் முழங்குனதை பார்த்ததும்தான் புரிஞ்சது.... ஒரு கல்யாண ஊர்வலம் போகுதுப்பா.. நல்லா கிளப்புறாங்க!!!!


மறுபடியும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday 13 April 2010

கலாட்டா கல்யாணம் -பாகம் 2

அறுபதாம் கல்யாணத்துக்கு வேணும்ன்னு பொத்திப்பொத்தி வெச்சிருந்த ஒரு பொக்கிஷத்தை இப்போவே வெளிய எடுத்தாச்சு. பொழச்சிக்கெடந்தா அப்போ ஃப்ளாஷ்பேக்கா எழுதி உங்களையெல்லாம் டரியலாக்கலாம்ன்னு ரகசியமா வெச்சிருந்தேன். ம்ம்ம்.... விதி யாரை விட்டது?.. இப்பவே நாங்க டரியலாக தயார்ன்னு நீங்க சொன்னப்புறம்,..

அது ஒரு அழகிய எண்பதுகளின் பிற்பகுதி. அப்போ நாங்க எங்க படிப்புக்காக,.. நாகர்கோவிலில் இருந்தோம். எங்கேன்னு கேக்காதீங்க சொல்லமாட்டேன்.ஏன்னா இப்போ,..நாங்க நாகர்கோவிலை விட்டுவந்து ரொம்பவருஷம் ஆகிட்டுது,avvvvvvvvvvvvv.நான் படித்த கல்லூரியின் இன்னொரு வி.ஐ.பி. நம்ம எழுத்தாளர் ஜெயமோகன்.அவரோட நல்ல காலம், எங்களுக்கு பத்துவருஷம் முந்தியே அவர் காலேஜை விட்டு போயிருந்தார்.

டிகிரி கடைசி வருஷம்,..கடைசி செமஸ்டர்.. ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சி ரொம்ப மும்முரமா படிச்சிக்கிட்டிருந்தேன். கேரளா யூனிவர்சிட்டியில் வேலை என்பதில் இருந்து முன்னேறி, M.Sc., Phd. எல்லாம் பண்ண வேண்டும், ஆராய்ச்சி லேபில் வேலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். அப்படியிருக்கும்போது, வீட்டில் கல்யாணப்பேச்சை எடுத்தா ஒத்துக்கொள்வேனா?....இவ்வளவுக்கும் அம்மா, 'படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்தான்' என்று மட்டும்தான் சொல்வார்கள்.வெறும் பேச்சுக்கே அடிக்கடி பனிப்போர் நடக்கும்.கடைசியில் அம்மாவும்,..'சரிதானே' என்று நினைக்கும் அளவில் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன்.

அப்போது பரீட்சைகள் நடந்துகொண்டிருந்தன.கடைசி பரீட்சைக்கு இன்னும் ஒரு நாள்தான் இடையில் இருந்தது. அப்போதுதான் பெரியப்பா, சாவகாசமாக'நாளைக்கு பெண் பார்க்க வருகிறார்கள்' என்று சொன்னார். அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்புதான் தெரிந்தது,.. இது ஆச்சியின் ஏற்பாடு என்று. ரங்க்ஸின் அண்ணிதான், என்னுடைய பெரியமாமாவின் கொழுந்தியார்(மனைவியின் தங்கை). அவர்கள் மூலமாக, துப்பு கிடைத்து, என் மாமியார் என்னுடைய ஆச்சியை அப்ரோச் செய்தார்கள். எனக்கு பரீட்சை நடப்பதால், இப்போது ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தி அதனால் எனக்கு கவனக்குறைவு வந்துடக்கூடாதுன்னு ஒத்திப்போட்டு வெச்சிருந்திருக்காங்க.
இப்போதான் பரீட்சை முடிஞ்சுபோச்சேன்னு ஏற்பாடு ஆகிடுச்சு.இதுக்கிடையில் லீவ் முடிஞ்சு ரங்க்ஸ் மும்பை திரும்ப வந்திட்டார்.

'பெரியப்பா,.. இன்னும் ஒரு பேப்பர் இருக்கு'ன்னு பலவீனமா சொன்ன என்குரலை
'நான் வரச்சொல்லி, நாளும் நேரமும் கொடுத்திட்டேனே.. இப்ப மாத்த முடியாதும்மா'ன்னுட்டார். 'இப்ப என்ன சும்மா பார்க்கத்தானே வர்றாங்க?.. கல்யாணமா உறுதி ஆயிடுச்சு'ன்னு அம்மா அவங்க பங்குக்கு சொல்லிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிட்டாங்க.

மறு நாள் அவங்க வீட்டிலிருந்து வந்து பாத்திட்டு, 'பிடிச்சிருக்கு'ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அம்மாவை நெனச்சா பாவமா இருக்கு. அவங்களுக்குன்னு நான் கொடுக்க முடிஞ்ச சந்தோஷம், அவங்க ஏற்பாடு செய்ற கல்யாணம்.என் அம்மா எனக்கு நல்லதுதான் செய்வாங்க.சரி,.. நடப்பது நடக்கட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டேன். மாப்பிள்ளையை மாமாவுக்கு தெரியும். இரண்டொருதடவை நேரில் பார்த்திருக்கார், அதுபோதும்ன்னு அம்மா சொல்லிட்டாங்க.ஒரு வழியா, ஆரம்பகால கட்டங்களெல்லாம் கடந்து நிச்சயதார்த்தம் என்ற நிலைக்கு ஒரே வாரத்தில் வந்துவிட்டது.

திருமணத்துக்கு நாலு நாள் முன்னாடிதான் ரங்க்ஸால் வரமுடிந்தது. வந்த அன்னிக்கு, என் மாமியார் 'பொண்ணை பாத்துட்டு வாயேன்'ன்னு சொல்ல அதுக்கு அவர்,' என்னம்மா நீங்க!!.. இப்ப போயி'..ன்னு நீட்டி முழக்கி கடைசியில் வர ஒத்துக்கொண்டார். வரப்போற தகவல் அறிந்ததும் எனக்கும் அப்படியே தோணியது.அப்பவே முடிவு செஞ்சுட்டேன், கல்யாணம் முடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்ன்னு. எங்க அத்தை காப்பி கொண்டுபோய் கொடுக்க, எங்கிட்ட கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து அனுப்பினாங்க.கொண்டுபோறதுக்கு முன்னால அதுல ஒன்னை ஆட்டைய போட்டு, 'இது எனக்குத்தான், வேற யாருக்கும் கிடையாது'ன்னு ரிசர்வ் செஞ்சுட்டு போனேன்.இதுக்கிடையில, வாசல்ல மாப்பிள்ளைய பாக்க கூட்டம் கூடிட்டுது. வெக்கப்பட்டுக்கிட்டு இவர் நல்லா பின்னால சாஞ்சு உக்காந்துக்கிட்டார். நானும் தலைகுனிஞ்ச மாதிரிக்கே போய்,
கூல்ட்ரிங்க்ஸை கொடுத்துட்டு, அப்படியே திரும்பிட்டேன். பாக்கவேயில்லை. அவரும் அப்படித்தானாம்,.. வெக்கப்பட்டுக்கிட்டு என்னை பாக்கவேயில்லையாம். இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தெரியவந்ததும்,.. 'ஜாடிக்கேத்த மூடி'தான்னு நினைச்சுக்கிட்டோம்.

அப்புறம் எப்ப பாத்துக்கிட்டோம்ன்னு கேக்கிறீங்களா?... ரிசப்ஷன் டைம்ல என் உறவுக்கார தாத்தா ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கும்போதுதான்.... நம்புங்கப்பா!!!..



Saturday 10 April 2010

கலாட்டா கல்யாணம்...

உங்க வாழ்க்கைத்துணையை எப்போ?..எப்படி சந்திச்சீங்கன்னு, ... கொசுவத்தி ஏத்தச்சொல்லி, நம்ம புதுகைத்தென்றல் கேட்டுருந்தாங்க.. நம்ம கதையைவிட சுவாரஸ்யமான சம்பவம் இருக்கவே இருக்கு.. எங்க குடும்பத்துல இன்னிக்கும், கலாட்டா செய்யப்படுற சம்பவம் இது..

அது கறுப்பு வெள்ளையிலிருந்து ,நிறங்களுக்கு புகைப்படங்கள் மாறிக்கிட்டிருந்த காலம்.என்னுடைய கடைசி தாய்மாமா(இருக்கிறதே ரெண்டு பேர்தான்..)அப்போ டிகிரி முதல் வருஷம் சேர்ந்திருந்த காலம். திடீர்ன்னு ஒரு நாள்.. தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமபோய், ஆஸ்பத்திரியும் வீடுமா அலைஞ்சு... ஒரு மாசத்துக்கப்புறம் தேறி வந்தார்.உடனே எங்க ஆச்சி .."டேய்.. உங்க அப்பா உசிரோட இருக்கும்போதே ஒனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு போடணும்ன்னு நினைக்கிறோம்"ன்னு ...அஸ்திரத்தை கையில் எடுத்துட்டாங்க.மாமாவோட எதிர்ப்பை பொருட்படுத்தாம,பொண்ணும் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பல்லாம், கிராமங்களில் வீட்டுல உள்ளவங்க பாத்துட்டு வந்து,பிடிச்சிருந்தாதான்.. மாப்பிள்ளை, பொண்ணை பாக்க முடியும்.

ஒரு நாள் எங்க அம்மா,மற்றும் பக்கத்து வீட்டு அக்காவோட, நாங்களும் படம் பாக்க போயிருந்தோம்.பாதி படத்துல, பக்கத்து வீட்டு அண்ணன் வந்து, 'அக்கா.. உங்க ஊர்ல இருந்து உங்க தம்பியும் இன்னும் ரெண்டு பேரும் வந்து, வீட்டுத்திண்ணையில் ஒக்காந்திருக்காங்க.. முகமே சரியில்லை"ன்னு சொல்லவும், ஒடனே வீட்டுக்கு கிளம்பிட்டோம். அம்மாவுக்கு மனசுல என்னன்னவோ பயத்தோட கூடிய குழப்பங்கள் ஓடுது.. வீட்டுக்கு வந்ததும்.. தாத்தாவுக்கு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதும் வந்த ஆசுவாசம், அடுத்த வினாடியே புயலாய் வந்த செய்தியால் குலைஞ்சிடுச்சு.

'தம்பியை காணோம்.. எல்லா இடங்களிலும் தேடியாச்சு.. எல்லா சொந்தக்காரங்க வீடுகள், அவன் சினேகிதர்கள் வீடுகள் எல்லா இடங்களுக்கும் போய் பார்த்தாச்சு."

"வயக்காட்டுல போய் பாத்தீங்களா??" அம்மா கேட்டாங்க. ரெண்டு மாமாக்களும் தாத்தாவுக்கு உதவியா விவசாயத்தையும் கவனிச்சிக்கிடதுண்டு.

"மொதல்ல அங்கதான் போய் பாத்தோம்.. ஏன் இவன் இப்படி செஞ்சான்?.. அதுவும் இந்த நேரத்துல?.."

அப்பதான் விஷயம் வெளிய வந்துச்சு. தாத்தாக்கள் சும்மா.. ஒரு பொண்ணை விசாரிக்க போயிருக்காங்க. போன இடத்துல பொண்ணை பிடிச்சு போயிட்டுது. அவங்களுக்கும் நல்ல சம்பந்தம்ன்னு சந்தோஷம். நிச்சயதாம்பூலம்ன்னு ஊரைக்கூட்ட வேண்டாம். வரதட்சிணைன்னு எதுவும் வேண்டாம்ன்னு அங்கியே முடிவெடுத்து, பக்கத்துகடையில வெத்திலை பாக்கு வாங்கி, மாத்திக்கிட்டு சம்பந்திகளாயாச்சு. மறு நாள் மாப்பிள்ளை வீடுபாக்க ,அவங்க அண்ணன் வர்றதா இருந்திச்சு. இதான் சந்தர்ப்பம்ன்னு,மாமா எஸ்ஸாகிட்டார்.

எங்கூருக்கு பக்கத்து ஊர்லதான் சித்தி வீடு. அங்க போய் பாக்கலாம்ன்னு கிளம்பினாங்க. .. ஆப்டுக்கிட்டார் மாமா. ஏண்டா இப்படி செஞ்சன்னு கேட்டப்ப,

"பொண்ண அப்பாவும், சித்தப்பாக்களும் பாத்தா போதுமா?.. நான் பாக்க வேண்டாமா.. அதுவுமில்லாம என் சொந்தக்கால்ல நின்னப்புறம்தான் கல்யாணமெல்லாம்"

"இப்ப மட்டுமென்ன வாடகை கால்லயா நிக்கிற?.. எல்லாம் இருக்கிற சொத்தை பாத்துக்கிட்டா போதும்"

அப்புறமா எல்லோரும் சமாதானப்படுத்தி, பொண்ணை பாக்க சம்மதிச்சாங்க.மாமா அதுக்கும் ஒரு கண்டிஷன் போட்டார். நான் மட்டும் தனியா போய், இன்னாருன்னு காட்டிக்காமலேயே பாத்துட்டு வருவேன்னார்.அவரு விருப்பப்படியே, பொண்ணு வீட்டுக்கு நெருக்கமான ஒரு அண்ணா, மாமாவை தன்னோட ஃப்ரெண்டுன்னு சொல்லி பொண்ணுக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். அப்ப.. பேச்சுவாக்குல மாமா ஒரு பேனாவை கொடுத்து, "இது புது பேனா, இப்பத்தான் வாங்கினேன்.. சரியா எழுதுதான்னு கொஞ்சம் எழுதிப்பாத்து சொல்லுங்க"ன்னு பொண்ணு கிட்ட கொடுக்க, பொண்ணு தன்னோட பேர எழுதிப்பாத்துட்டு, நல்லா இருக்குன்னாங்க.

"மொதமொத எழுதறீங்க ஏதாச்சும் சாமி பேர எழுதுங்க"ன்னு புள்ளையாரோட இன்னொரு பேரான, தன்னோட பேரச்சொல்ல... அவங்களும் வெள்ளந்தியா எழுதினாங்க. "அடடா.. நம்ம கல்யாணபத்திரிகையிலும் இதே மாதிரி எழுதச்சொல்லிடலாம்"ன்னு குட்டை உடைக்கவும் அப்பத்தான் விஷயம் தெரிஞ்சு, பேனாவை தூக்கிப்போட்டுட்டு பொண்ணு ஓரே ஓட்டமா வீட்டுக்குள்ள ஓடிட்டாங்க. அப்புறமென்ன!!!.. கல்யாணமாகி,அவங்க எங்க அத்தையா வர்றதுவரையும், வந்தபின்னாடியும் இதையே சொல்லித்தான் ஓட்டுவோம். அத்தை கூட சிலசமயங்களில்," இவரை ஏன் மறுபடியும் கண்டுபிடிச்சி கூட்டி வந்தீங்க?.."ன்னு எங்க கூட சேர்ந்துகிட்டு வாருவாங்க.


Friday 9 April 2010

வெட்ட வெட்ட துளிர்க்கும்.



இப்போ கொஞ்ச காலமா, உலகை உலுக்கிவரும் பிரச்சினைகளில் ஒன்று..சுற்றுப்புற சூழல் மாசடைதல், அதன் காரணமாக பூமி வெப்பமடைதல். இதற்கு நிரந்தரத்தீர்வாக மக்களுடைய விழிப்புணர்வோடு, நெடுங்காலத்தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை, அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம் என்றே தோன்றுகிறது. இருக்கும் மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக,, வெட்டிச்சாய்த்து வருகிறோம்..ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு பதிலாக இரண்டு மரங்களையாவது நட்டு வைக்கவேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எவ்வளவு முயற்சி எடுத்திருக்கும்!!!

ஒரு வீட்டின் முன்..ஒன்றிரண்டு மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், ஏர்கண்டிஷன் பயன்பாடு குறையும்.மின்கட்டணம் மிச்சமாகும்.குளுமையான வேப்பமரத்துக்காத்து யாருக்குத்தான் பிடிக்காது!!. மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும்,கரியமில காத்தை உறிஞ்சிக்கொள்வதன் மூலமும் , சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும்,நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

நாகர்கோவிலில் இருந்து திரு நெல்வேலி செல்லும் பாதையில், முப்பந்தல் என்று ஒரு இடம் வரும். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று உண்டு அங்கே. அந்த இடத்தில்,காவல்கிணறுவிலக்கு வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருக்கும் மரங்கள், ரோட்டில் வெய்யில் விழாதவாறு அடர்த்தியாக வளர்ந்திருக்கும்.வாகனங்கள் செல்லும்போது, பசுமைக்குகை ஒன்றில் செல்லும் உணர்வு ஏற்படும். குளுமையாக இருக்கும். இருசக்கரவாகனங்கள் செல்வதற்கே தடுமாறும் அளவு காற்று வீசும்.இப்போது அந்த இடம் தன்னுடைய முகத்தை தொலைத்துவிட்டது.. சின்ன செடிகள் கூட இல்லை. என்னுடைய அந்த பிரியமான சினேகிதியை, என்னால் மறக்கமுடியவில்லை.

இளைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு வருகிறது என்றே சொல்லவேண்டும். செடிகொடி வளர்ப்பதிலும், மரம் நட்டு பராமரிக்கவேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஏற்கனவே இருக்கும்
மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இவர்களே துடிப்புடன் இருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களில், மரங்களை வெட்டிச்சாய்த்து குடியிருப்புகள்,ரிசார்ட்ஸ் போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது.சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான பிரதேசங்கள் இப்போது வெப்பமடைந்து வருகின்றன.ஊருக்கே ஏசி போட்டமாதிரி இருந்த இடங்களில் இப்போது ஏசி வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவை, குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் ஒருவித வாயு, சுற்றுப்புற சூழலை வெப்பமடையச்செய்வதில் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழல் வெப்பமடைவதால், பருவ நிலை மாற்றங்கள், காலம்தப்பிய மழை,துருவப்பிரதேசங்களில் பனி உருகுவதால், கடற்கரையோர நகரங்களுக்கு ஆபத்து ஆகியவை ஏற்படுகின்றன. எங்க ஊரில்,. மழைக்காலத்துக்கு அப்புறம் ஒரு துளி கூட பெய்யாது. குளிரை முடித்து வைக்க சிறுதூறல், அப்புறம் அடுத்த சீசனுக்குதான் வருணபகவான் எட்டிப்பார்ப்பார். நேற்று, இடி,மின்னல், அப்புறம் லேசாக பூமி நனைதல் என்று விசிட் அடித்தார்.இன்னும் மேகமூட்டம் இருக்கிறது .வெக்கை கொஞ்சம் குறைந்தாலும், நேரங்கெட்ட நேரத்தில் வந்துவிட்டு,வரவேண்டியசமயத்தில் வராமல் ஏமாற்றிவிடுவாரோ என்று ஐயப்பாடு எழத்தான் செய்கிறது. நேற்றைய மழை இங்கே இருக்கிறது.

மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். விளை நிலங்களெல்லாம் ப்ளாட் போடப்பட்டு,வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திடீர் நகர்கள் பல இரவோடிரவாக முளைத்து வருகின்றன. நீர்வளம் மிகுந்த நாஞ்சில் நாட்டிலும் இது பரவிவருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால்,உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் பயிரிடவேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச்செல்லப்போகிறோம்?..எல்லாச்செல்வங்களையும் சுரண்டியபின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப்போகிறோம்?..

மக்கள்தொகை பெருக்கத்தின் ஒரு தேவையாகவும், நகரமயமாக்கலின் விளைவாகவும் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. காற்று, நிலம், நீர் என்று எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் மாசுபடுத்த இந்த அரக்கனால் மட்டுமே முடியும். மும்பையில் அங்கங்கே தொழிற்பேட்டைகள்(இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுகள்)உண்டு. அதில் ஒன்று தலோஜா. தொழிற்பேட்டையை தாண்டியவுடன், சும்மா பச்சைப்பசேலென்று வயல்வெளிகளும் மரங்களுமாய் இருக்கும். பயிர்பச்சைகளின் மணம் முகத்தில் காற்றுடன் வந்து மோதும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் உணர்வு வரும்.இப்போது அந்தப்பகுதியில் முக்கால் பாகத்தை தொழிற்பேட்டை தன்னுடைய கரங்களால் அணைத்துக்கொண்டு விட்டது. இனி அங்கேயும் அமிலக்காற்றுதான் வீசும்.


விளை நிலம் சமப்படுத்தப்படுகிறது.

பக்கத்திலுள்ள நிலங்களில் மரங்களை எரித்து காலி செய்யும் வேலை நடக்கிறது.
இன்னும் சில மாதங்களில் அங்கே ஒரு தொழிற்சாலை, ware house,ஏதாவது கட்டப்படலாம்.

பாதி எரிந்த நிலையில் நிற்கும் இந்த மரத்தைப்பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?..

எனக்கு இதுதான் தோன்றியது......

விருட்சங்களாய்
நிமிர்ந்து நின்றவை;
விறகுகளாய் நிற்கின்றன.

இந்த இடத்தில்தானே இருந்தது?
எனக்கு நிழல் கொடுத்த,
அந்த
பெயர் தெரியா மரம்.

உபயோகமற்றுப் போய்விடவில்லையே?!!
உயிர் நீப்பதற்கு;

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்,
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை;
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.

உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பில்,
எங்கோ ஓரிடத்தில்..


மரங்களின் முக்கியத்துவத்தை நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு மீட்டெடுத்துச்செல்வோம். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள், இப்போது கோடையும் வந்து விட்டது. இந்த சமயத்தில், நம்முடைய பதிவுகளில் இது பற்றிய இடுகை இட்டு, விழிப்புணர்வை பரவச்செய்வோம்.

இதை தொடர நான் அழைப்பது,







இன்னும் விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்.

Tuesday 6 April 2010

யோசிப்போர் சங்கம்...

மாடுபோல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?


அது கன்னுக் குட்டி! கடவுளே!!! ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!

போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆன்ட்டி பேரு என்னம்மா?

சரோஜா!... ஏன் கேக்குற?

அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேஷண்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்ல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? ------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப்போய்ட்டாங்க!!

கொடூர மொக்கை!!!

என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்' வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...


டிஸ்கி: மக்களே.. கொலைவெறியோட ஆட்டோ அனுப்பிடாதீங்க. இது சத்தியமா நான் எழுதலை.. ஈ.. கொண்டு வந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails